சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சைவ சித்தாந்த தத்துவம்

எமது சைவ சமயத்தின் பொதுப்பிரமாண நூல் வேதம்; சிறப்புப் பிரமாண நூல் சிவாகமம் என்பர், அந்தச் சிவாகம நூல்கள் கூறுஞ் சாரமான உண்மையைப் பிழிந்தெடுத்துக் கூறும் நூல்களே சித்தாந்தசாத்திரங்கள் இவை மெய்கண்ட சாத்திரங்கள் எனவும் அழைக்கப்படும்.

வேதம் பசு, அதன் பால் ஆகமம் அதிற் கடைந்தெடுத்த நெய் சித்தாந்தம் எனவும்; வேதம் ஒரு கற்பகதரு, அதில் உயர்ந்தோங்கிய உச்சக்களை வேதாந்தம், அதிற் பழுத்த நறுங்கனியே சைவ சித்தாந்தம் எனவும் கூறுவர் அறிந்தோர்,

வேதாந்த நூல்களில் இரு வேறு கொள்கைகள் உண்டு. ஒன்று சற்பிரபஞ்சவாதம், மற்றையது நிஷ்பிரபஞ்சவாதம். இறைவனும் உயிர்களும் மலங்களும் உள்ள பொருள்கள் என்பது சற்பிரபஞ்சவாதிகள் கொள்கை. இறைவன் ஒருவனே உள்ள பொருள். ஏனைய எல்லாங் கடலிலே தோன்றுந் திரைநுரைக் குமிழி போல வெறும் தோற்றமேயாம். இவை உண்மையில் பொருளல்ல என்பது நிஷ்பிரபஞ்சவாதிகள் கொள்கை. இவ்விரண்டு வகைகளில் சைவபரமாக உள்ளவை சற்காரியவாதக் கோட்பாடுடைய உபநிடதங்களேயாம். குறித்த சற்காரியவாதக் கோட்பாடுகளை அத்திவாரமாகக் கொண்டவையே சிவாகமங்களும், மெய்கண்ட சாத்திரங்களுமாம்.

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களையும் உள்ள பொருள்களென நிலைநாட்டி, அவற்றின் இயல்புகளை விளக்குவதே சற்காரியவாதம். இதுவே சைவ சித்தாந்தம், ரைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களின் இயல்பையும் நோக்குவாம்.

பதி

அனைத்துலகுக்கும் உயிர்களுக்கும் தனி முதல்வனாயிருப்பவன் எவனோ, அவனே பதியாம். அவ்விறைவனது இயல்பு சொரூபலக்கணம், தடத்தலக்கணம் என இரு வகையாகும்.

சொரூபலக்கணம் உருவம், குணம், குறி, செயல். எவையும் இல்லாததாய், நிமலமாய், ஒன்றாய், என்றுமுள்ளதாய், உயிர்களுக்குள்ளுணர்வாய், விகாரமில்லாததாய், எல்லைக்குள் அடங்காததாய், நித்தியானந்தமாய்; என்றும் எவற்றையும் விட்டு நீங்காததாய், எல்லாவற்றுக்கும் புகலிடமாய், சிறியதிற் சிறியதாய், பெரியதிற் பெரியதாய் விளங்குவதே பரசிவத்தின் சொரூபலக்கணமாகும். இவ்வியல்புகளையெல்லாம் அடக்கித் தன்வயமுடைமை, இயற்கை உணர்வு முற்றுமுணாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசமின்மை, பேரருளுடைமை, வரம்பிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என எண்குணங்களுடையான் என்பர். அவற்றையும் சுருக்கி, சச்சிதானந்தமூர்த்து என்றுங் கூறுவர். என்றுமுள்ள அறிவே வடிவாள ஆனந்தமூர்த்தியாயிருப்பது இறைவனது இயற்கையாகும்.

தடத்தலக்கணம் : பேரருளாளனும் அநாதிமுத்தனுமான சிவபிரான், அநாதியே பாசபந்தத்தோடு, கிடைக்கும் ஆன்மாக்களை, அப்பந்தத்தனின்றும் விடுவித்து உய்விக்கவேண்டுமென்ற கருணையால் அவ்வுயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களையுஞ் செய்தருளுகின்றான். அந்த நிலையில் ஐந்தொழில்களையுஞ் செய்வதற்குரிய வகையில் தனது திருவருளையே திருமேனியாகச் கொண்டு, ஐவராய் நின்று, அவற்றை இயற்றும்போது, உருவும் – குணமும் – குறியும் – செயலும்- உடைய மூர்த்திகளாக இருப்பன், இதுவே இறைவனது தடத்த நிலையாகும்.

பரமபதியாகிய பரசிவத்தினது மேலாகிய கருணை பராசத்தி எனப்படும். அப்பராசக்தியினின்றும் இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்பன தோன்றும். பரமசிவன் அச்சத்துகளைப் பொருந்தி நின்று அருட்டிருமேனியாகக் கொண்டு, சுத்தமாயையோடு பொருந்தி வேதாகமம் முதலிய கலைகளைத் தோற்றுவிப்பான். அசுத்தமாயையினின்று உலகங்களைத் தோற்றுவிப்பாள். உரியகாலம்வரை உலகை நிலை நிறுத்திக் காத்துப் பின்னுந் தோன்றி முறையே ஒன்றிலொன்று ஒடுங்கிவரச் செய்து, முடிவில் அனைத்தையும் தன்னிலே ஒடுங்குமாறு செய்து பரமபதியாக இருப்பான்.

இவ்வாறு இறைவன் கொள்ளும் திருமேனிகள் நிஷ்களம், நிஷ்கள சகளம், சகளம் என மூவகையாயுள. பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கும் சகளத்திருமேனிகள், “உருவத்திரு மேனிகள்” சதாசிவம்-நிஷ்கள சகளத் திருமேனி, “அருவுருவத் திருமேனி” அதற்கு மேலுள்ள சத்தியோடு கூடிய சிவம்-நிஷ்கள திருமேனி – அருவத் திருமேனி” இந்த மூவகைத் திருமேனிகளும் தடத்த நிலையாகும், இவற்றுக்கெல்லாம் மேலாகிய சுத்தபரசிவமே சொரூபநிலையாகும்.

பரிபூரணனான இறைவன் குறையொன்றும் இல்லாதவன். ஆதலால் தடத்தநிலையில் நின்று உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளலாகிய ஐந்தொழில்களையும் தன்பொருட்டுச்செய்ய வேண்டியதும் இல்லை. அவற்றைச் செய்வதால் அவன் விகாரமடைவதுமில்லை. உயிர்களை உய்விக்கும் பெருங் கருணையாலேயே இவற்றைச் செய்கின்றான்;. அகரவுயிர் ஏனைய எழுத்துக்கள் எல்லாவற்றிலுங் கலந்திருப்பது போலவும், வெந்நீரில் வெப்பம் போலவும் இறைவனும் எங்கும் எல்லாவற்றிலும் வியாபித்து அனைத்தையும் இயக்குபவன்; ஆன்மாக்களை மலம் நீக்கிச் சிவத்தன்மை அடையச்செய்யும் சத்தியோடு பிரியாதிருப்பவன்;| பெருமை, நுண்மை, பேரருளுடைமை, பெறுதற் கருமைகளில், ஒப்பிலியாயுள்ளவன் ஐந்தொழிலும் செய்பவன்;| அருவம், உருவம், அருவுருவம், அறிவுருவம் ஆகிய திருமேனிகளுடையான்;| உணர்த்த உணரும் உயிர்கள் போலன்றி, இயல்பாகவே எல்லாம் அறிபவன்;| அடியவர்பால் அறிவாய் நீங்காதிருப்பவன்| விருப்பு வெறுப்பின்றி எவ்வுயிர்க்குஞ் சுகம் செய்வதால் சங்கரன் என்னும் நாமமுடைய சிவன், நண்ணினர்க்கு நல்லவனாயும், நண்ணாதவர்க்கு நல்லவனல்லன் போலவும் இருப்பவன்; பிறவிப்பிணிக்கு மருந்தாகய இறைவன் உள்ள பொருளே. இதில் ஐயமில்லை. ஆதலால், இறைவனை அன்பு செய்து வழிபடுக எனத் திருவருட்பயன் பதியைப் பற்றிக் கூறும்.

பசு

ஆன்மா, பாசத்தாற் கட்டுண்டிருத்தலால் பசு எனப்படும். ஆன்மா எண்ணில்லாதன, என்றுமுள்ளன. அநாதியே ஆணவமாகிய இருளால் மறைக்கப்பட்டிருப்பவை. ஆணவமுனைப்பால் திருவினை புரிவன. தாம்புரிந்த திருவினைப் பயனை அனுபவித்தற்கேற்ற உடம்பை இறைவன் தரம்பெற்று பிறந்து பவவினையை நுகரும்போது புதுவினைகளையும் பெருக்கிப் பிறப்பிறப்பாரிய போக்குவர வைப் பொருந்துவன. இப்படி எண்ணிறந்த பிறவிகளை எடுத்து உழலும்போது கல்வி, கேள்வி, அறிவு பொருந்திச் சிவபுண்ணியங்கள் புரிவதாலே திருவினை ஒப்பும் மலபரிபாகமும் பொருந்தும் காலத்தில் திருவருள். பதியப்பெற்றுக் குருதீட்சை பெற்று, மெய்ஞ்ஞானம் விளங்குவதால் சிவகதி சோர்வனவாகும்.

இவ்வான்மாக்களில் முத்திபெற்றவையும் எண்ணில்லாதன. முத்தி பெற இருப்பவையும் எண்ணில்லாதன, முத்திபெற உள்ள உயிர்கள் மூம்மலமுடைய சகலரும், ஆணவமும் கர்மமும் உள்ள பிரளயாகலரும், ஆணவம் ஒன்றே உடைய விஞ்ஞானகலரும் என மூவகையாம், நனவிலே கண்டதைக் கனவிலே மாறுபடக் காணுதலால், ஆன்மாவுக்குச் சுதந்திரமில்லை. பிறரொருவரது ஆணைவழி நடப்பதாகும். ஐம்பொறிகளின் துணைகொண்டு உணர்த்த உணர்வதால் ஆன்மாவுக்குத் தானே அறியும் ஆற்றல் இல்லை. குருடனுக்கு இருள், ஒளி, பொருள் என்பவற்றைப் பகுத்தறிய முடியாது. ஆன்மாவுக்கு உணர்த்த உணரும் தன்மை உண்டு. ஆகவே இறைவன் தனது அருளொளியால் அவற்றைப் படைத்து அறிவு பெறச் செய்கிறான். சத்தாகிய சிவம், அசத் தாகிய மலங்களைப் பொருந்தாது, அசத்தாகிய மலமும் ஒன்றையும் அறியமாட்டாது. சத்தைச் சாரும்போது சத்தாயும், அசத்தைச்சாரும்போது அசத்தப் போன்றும் இருப்பதால், ஆன்மா சதசத்து எனப்படும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாயிருப்பது. இறைவனருள் காட்டாவிடின் கோட்டானின் கண்போல ஒளியையும் இருளாகவே காணும் எனத் திருவருட்பயன் கூறும்.

பாசம்

இது ஆன்மாக்களைக் கட்டிய கயிறுபோலப் பற்றியிருப்பதால் பாசம் எனப்படும். இதனை மலம், பந்தம், தளை எனவும் அழைப்பர், பாசம் மூன்று வகை அவை ஆணவம், கர்மம், மாயை எனப்படும். இவற்றை மும்மலம் என்பர்.

ஆணவம் : இது மூலமலம், சசசமலம், அருண்மலம் எனவும் சொல்லப்படும், செம்பிலே களிம்பும், நெல்லில் உமியும் போல ஆன்மா என்றுள்ளதோ, அன்றுமுதல் அதனோடு உள்ளது. ஆன்மாவின் அறிவை அணுவாயடக்கி மறையும்படி இருட்படலம் போல் மறைத்து நிற்பதனால் இதனை ஆணவ இருள் என்று கூறுவர். ஆணவமலம் ஒன்று. அது பல சக்திகளை உடையதாய்ப் பல உயிர்களையும் பற்றி நிற்கிறது. இந்த ஆணவத்தின் செயலே யான் எனது என்னுஞ் செருக்காக ஆன்மாவில் விளங்குவது.

ஆன்மாவுக்குப் பிறவித்துன்பமும், அதற்குக் காரணமான மலமும், வீட்டின்பமும், அதனைக் கொடுக்கும் திருவருளும் ஆகிய இவற்றை இல்லை என்பது முடியாது. எல்லாவற்றையும் மறைத்துத் தன் மயமாக்கி இருள் போலக் கிடைக்கச் செய்வது இருண்மலமே. இருள் பிறபொருளை மறைத்தாலும், இருளாகிய தன்னையாவது காட்டும். ஆணவ இருளோ பிறவற்றை மறைப்பது போலவே, தன்னையும் காணவொட்டாது மறைக்கும், அதனால் அது இருளிலும் கொடியது. இஃது ஆன்மாவினுள் உள்ள சிவத்தைச் சாராது ஆன்மாவை மாத்திரம் புறத்தே பற்றி உள்ளது. ஆணவம் பல ஆன்மாவோடு கூடிநின்றும், அவற்றால் அறியப்படாமல் மறைந்திருக்கிறது. ஆன்மாவுக்கு அறியும் தன்மையைத் தெரியவொட்டாது மறைப்பது ஆணவமே. சிலர் ஆணவம் என ஒன்றில்லை என்பர்; சிலர் அது ஆன்மாவின் குணமென்பர்; சிலர் அது ஆன்மாவை இடையிலே பற்றிய தென்பர்;| இக்கூற்றுக்கள் பொருந்தா ஏனெனில் ஆணவமில்லையாயின் பிறவித் துன்பமுண்டாகாது, ஆன்மா பிறவித்துன்ப முறுதலால் அதன் காரணமான ஆணவமும் உள்ளதே. அது ஆன்மாவின் குணமாயின் குணத்தை நீக்கவே குணியாகிய ஆன்மாவும் அழியும். ஆணவம் நீங்கு பின்னும் ஆன்மா இருத்தலால் ஆணவம் ஆன்மாவின் குணமுமன்று. அசத்தாகியே ஆணவம் தானே உயிரைப்பற்றாது, உயிரும் தானே அத்துன்பத்தைச் சேராது இறைவனும் சேர்க்கமாட்டான். இடையிலே அது பற்றுமாயின் முத்திபெற்ற ஆன்மாவையும் பற்றவேண்டும்; அப்படிப் பற்றுவதில்லை. ஆகவே இக் காரணங்களால் அது இடையில் பற்றியதன்று. அநாதியாகவே உள்ளது எனத் திருவருட்பயன் கூறும்;.

கர்மம் : மருத்துவன் நோயாளிக்குப் பரிகாரஞ் செய்து குணப்படுத்துவான். அது போலவே ஆணவ நோயுள்ள ஆன்மாவைக் குணப்படுத்தும் பொருட்டு வைத்தியநாதனாகிய இறைவன் உலகைப் படைத்து அங்கு பிறவியைத் தருகிறான்;. பிறவி எடுத்த உயிர் ஆணவத்தின் முனைப்பினாலே யான் எனது என்ற செவிக்கோடு நல்வினை தீவினைகளைப் புரிகிறது. இவ் இருவினைகளே கர்மம் எனப்படும். இந்த நல்வினை தீவினை இரண்டும் சிவதல்வினை, பசுநல்வினை, சிவத் தீவினை, பசுச்தீவினை என நான்காகப் பகுக்கப்படும். அவற்றுடன் வெறுவினை, பற்றில்லாதவினை என இரண்டும் சேர்த்து வினை ஆறுவகை எனவும் கூறுவர். வினை எல்லாம் இருவினையுள் அடங்கும். இவ்வினை பிறிதொருவகையால் பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்றாகக் கூறப்படும். பிராரத்தம் என்பது முன்பிறவிகளில் செய்த வினைகளினால் எடுத்த இவ்வுடம்பில் அனுபவிக்க என அளந்து தரப்பட்டது. இதனை விதி, ஊழ், தெய்வம், நியதி எனவும் கூறுவர். எடுத்த உடம்பில் பழவினையை அநுபவிக்குப்போதே புதிய வினைகளையும் புரிகிறோம். அதுவே ஆகாமியம், இந்த ஆகாமியத்திலும் ஒரு பகுதி உடனுக்குடனே அனுபவத்துக்கு வரும். அதுவும் பிராரத்தமாய்க் கழியும். முன்னைப் பிறவியிற் செய்த வினைகளிலும், இப்பிறவியிற் செய்த வினைகளிலும் அனுபவத்துக்கு வராமல் ஏனைப் பிறவிகளுக்கு என எஞ்சிக்கிடக்கும் வினை சஞ்சிதமாகும். இவை, வரும் பல பிறவிகளில் பிராரத்தமாய் அனுபவத்துக்கு வரும் வினைகள் செய்யப்படும்போது மனம் வாக்குக்காயம் என்ற மூன்றாலும் செய்யப்படும். நினைப்பது சொல்வது செய்வது எல்லாம் வினைகளே. வினை அனுபவத்துக்கு வரும்போது தெய்விகம், ஆன்மிகம், பௌதிகம் என மூவகையாய் வரும். பிறப்பு, இறப்பு முதலியன தெய்விகமாய் வருவன, புயல், மழை, பஞ்சம் முதலியன பௌதிகமாய் வருவன. விடந்தீண்டல் முதலானவை ஆன்மிகமாய் வருவன. ஆன்மாக்கள் தாந்தாம் முன்செய்த வினையைத் தாமே அனுபவிக்க வேண்டியன் தவிர்க்க முடியாத பல பிறவிகளை எடுத்து திருவினை புரிவதும், வினைப்பயன் அனுபவிப்பதுமாய் நிகழ்ந்துவரக் காலகதியில் ஆணவமும் மெலிந்து வலிகெட, திருவினைகளும் ஒழிய, சிவபுண்ணியத் தொடர்பால் திருவருள் குருவாகி வந்து தீட்சை செய்து ஆட்கொண்டு முத்தி நெறியில் சேர்க்கும்;

அறுவகை வினைகள் : சிவநல்வினையாவது சிவதொண்டும், சிவனடியார் தொண்டும் முதலியனவாம், சிவத் தீவினையாவது சிவனையும் சிவனடியாரையும் நிந்தை செய்தல் முதலாயின, பசு நல்வினையாவது உயிர்களுக்குச் செய்யும் பலவகை உபகாரங்கள் பசுத் தீவினையாவது உயிர்களுக்குச் செய்யும் பலவகை அபகாரங்கள். வெறுவினையாவது தும்முதல், கொட்டாவி விடுதல், துரும்பு கிள்ளுதல் போல்வன. பிறர் யாருக்கும் எவ்விதத்திலும் இன்ப துன்பங்கள் விளைவியாதவை வெறு வினைகளாம். பற்றில்லாத வினையென்பது இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் ஆகிய பக்குவ நிலை அடைந்தோர் “என்செயலால் ஆவதொன்றுமில்லை எல்லாம் அவன் செயலே”, என்ற நிலையில் தம்வசமிழந்து திருவருள் செலுத்தச் செய்யும் வினைகளாம். இப்படிச் செய்யப்படும் பற்றற்றவினை, இருவினையில் எவ்வினையாயினும் அதன் பயன் செய்தோரைச் சாரர் அவற்றைக் திருவருளே வாங்கிக் கொள்ளும். “எடுத்துச் சுமப்பான்” என்று திருவருட்பயன் குறிப்பிடுவது இதனையேயாம். வெறு வினைக்குப் பயன் இல்லை. ஏனைய பசு நல்வினை தீவினைகளுக்கு உலகியலாகிய இன்பமும் துன்பமும் பயனாகும். சிவநல் வினை, தீவினைகளுக்குப் பதமுத்தி முதலியனவும், நரக துன்பம் முதலியனவும் பயனாக வருவனவாம்.

இவ்வாறு வினை செய்வதால் ஆணவம் மெலிவுறும்; வினைப்பயனை நுகர்வதால் கர்மமும் கழியும், இந்நிகழ்ச்சிகள் மாயாகாரியமாகிய உடம்பையும் உலகையும் பொருந்தி தின்று கூயிர்களால் திகழ்த்தப்படுவன.

மாயை : இறைவனுடைய அளவிறந்த சத்திகளில் மாயையும் ஒன்றாகும். இம்மாயையை இறைவனுடைய பரிக்கிரக சத்தி என்பர், இறைவனது அருட் சத்தியைத் தாதான்மிய சத்தி என்பர். தாதான்மிய சத்தி நெருப்பும் சூடும் போலப் பிரிவிலாத சத்தி, பரிக்கரகசத்தி முருகனும் அவனுடைய ஊர்தியாகிய மயிலும் போல, வேண்டும்போது கையாளவும், வேண்டாதபோதுபிரித்து வைக்கவும் கூடிய சத்தி. இம்மாயை சுத்தம், சுத்தாசுத்தம், அசுத்தம் என மூவகையாம். சுத்தமாயை சிவதத்துவம் எனவும், சுத்தாசுத்த மாயை வித்தியாதத்துவம் எனவும், அசுத்த மாயை ஆன்மதத்துவம் எனவும் கூறப்படும். சுத்தாசுத்தமாயை மிச்சிரமாயை எனவும், அசுத்தமாயை பிரகிருதிமாயை எனவும் சொல்லப்படுகின்றன. இந்த மூவகை மாயாகாரியமாக அமைந்ததே உயிர் நிலையாகிய உடம்பு. இவ்வுடம்பைப்போல மாயாகாரியமாய் உள்ளதே உலகம். சிவதத்துவம் ஐந்தும் வித்தியாதத்துவம் ஏழும், ஆன்மதத்துவம் இருபத்துநாலும் ஆக முப்பத்தாறு தத்தவங்களைக் கொண்டது உடம்பு இம் முப்பத்தாறு தத்துவங்களையும், தொண்ணூற்றாறு தத்துவமாக விரித்துக் கூறுவதுண்டு. இவ்வாறமைந்த உடம்பும் (தநுவும்). இவ்வுடம்பிலுள்ள கருவிகளும் (கரணமும்), வரிக்கும் உலகமும் (புவனமும்), இவ்வுடம்பில் நின்று உயிர் அனுபவிக்கும் சுகத்துக்க அனுபவங்களும் (போகமும்) ஆக நான்கு வடிவங்களாய் மாயை நின்று. உயிர்களுக்கு உதவுகின்றது. சூரிய ஒளி வரும்வரை இருளில் நிற்பவனுக்கு விளக்குச் சிறிதளவு ஒளிதந்து உதவுவது போலவே, ஆணவ இருளில் நிற்கும் உயிர்களுக்குத் இருவருளாகிய பேரொளி வந்து சேரும்வரை மாயாகாரியங்களாகிய தநு, கரண, புவன, போகங்கள் சிறிதளவு அறிவு விளக்கம் செய்வன.

சிவ தத்துவம் ஐந்தாவன : நாதம். விந்து, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்பன.

வித்தியாதத்துவம் ஏழாவன : காலம், நியதி. கலை, வித்தை, அராகம், புருடன். மாயை (மூலப்பிரகிருதி) என்பன.

ஆன்ம தத்துவம் இருபத்துநாலாவன: அந்தக்கரணம் நான்கு, தன்மாத்திரை ஐந்து, – பொறி ஐந்து. கர்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து என்பன.

அந்தக்கரணம் நான்காவன: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்?

தன்மாத்திரை (புலன்) ஐந்தாவன : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன.

பொறி (ஞானேந்திரியம்) ஐந்தாவன : மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.

கர்மேந்திரியம் ஐந்தாவன: நா, கை, கால், குதம், குறி என்பன. பூதம் ஐந்தாவனா நிலம், நீர், த, வளி, வான் என்பனவாம்.

சுத்த மாயையாயே சிவதத்துவங்கள் ஆன்மாவுக்கு மெய்யுணர்வு விளக்கத்துக்கு உபகாரமாய் நிற்பன.

சுத்தா சுத்தமாயையாகிய வித்தியா தத்துவங்கள் சமநிலையில் நின்று மெய்யுணர்வு விளக்கத்துக்கு உதவுவதோடு, வினைகளைச் செய்யவும். பயனை நுகரவும் தூண்டுவனவாயும் உதவும். அசுத்த மாயை ஆகிய ஆன்மதத்துவம் ஆணவத்தின் சார்பாய் அறியாமையை விடுவித்து வினைகளைப் பெருக்க உதவும்.

ஆன்மாவை அநாதியே பற்றியுள்ள ஆணவம், அருவமான சத்தியாய் மறைத்து நிற்கும். அதன் வலியால் ஆன்மா செய்யும் கர்மமாகிய இருவினைகளும் அருவமானவையே. அதன் பயனாய் இன்ப துன்பங்களும் அருவமே. மாவை ஒன்றுதான் அருவமும் உருவமுமாகிய இரு நிலைகளிலும் நின்று உயிருக்கு உதவுவது, சிவதத்துவம் வித்தியாதத்துவங்களும், அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகளும் அருவமானவை, பூதங்களும், பொறிகளும், கர்மேத்திரியங்களும் உருவமானவை. மற்றும் உலகும் இன்ப துன்பங்களைத் தரும் பொருள்களும் உருவமாயுள்ளவை. மூலமலமான அழுக்கை நீக்குதற்குப் புதிதாய்ச் சேர்த்த அழுக்கே மாயமலம். ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சேர்த்த சவர்க்காரம் என்னும் அழுக்கைப் போல உள்ளது மாயை, ஆதலால் இது துணை மலம் எனப்படும். இது அழுக்குமாய், மூலமான அழுக்கை நீக்கும் சாதனமுமாயிருக்கிறது. அதனாலேதான் இது ஆன்மாவுக்கு ஆணவத்தின் சார்பாய் நின்று மெய்யறிவு பெருதபடி மயக்குவதும், இருவருளின் சார்பாய் நின்று மெய்யறிவு பெற உதவுவதுமாகிய இரு செயல்களையும் புரிகிறது.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.