சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்

ஈழத் திருநாட்டில் நாற்றிசையும் பழைமையும் மகிமையும் வாய்ந்த பாவம் வினை அறுக்கவல்ல திருப்பதிகள் சூழ் நீராடு துறைகள்-தீர்த்தங்கள் பல உள.

வடக்கே கீரிமலையும்-நகுலேசார் ஆலயமும், கிழக்கே கன்னியா நிரூற்றும்-கோணேசர் ஆலயமும், தென்வரையில் மாணிக்க கங்கையும்- கதிரை வெற்பும், மேற்பரப்பில் பாலாவியும்-திருக்கேதீச்சரநாதர் கோவிலும். மாயவனாறும், முன்னைநாதா கோவிலும் இயற்கையாகவே ஈழத்தை அரண் செய்கின்றன. இவை ஐந்தும் காலத்தால் முற்பட்டவையாகவும், ஈழத்தின் வரலாற்றுக்கு முன்பே இடங்கொண்டனவாகவும் இருக்கின்றமையினால், இவை இலங்கையைக் காவல் செய்யும் ஐம்படை வீடுகளென நாம் கூறிக்கொள்ளலாம்.

தமிழ் கூறும் தொல்லுலகமாகிய குமரிக்கண்டத்தை, கால வெள்ளமாகிய கடல் கொண்டதென்பது கீழைத்தேச மேலைத்தேச அறிஞர் பலரின் தேற்றமாகும். அக்குமரிக்கண்டத்தின் கூறே ஈழமுமாகும். அந்நேரம் இப்பிரதேசத்தைக் கடலால் விழுங்கப்படவிடாது ஒரு சிறுதீவாக இறைவன் விளங்க வைத்ததும் இங்கு முன்னர் கூறப்பட்ட ஐம்பெரும் தலங்களதும்-தீர்த்தங்களதும் மகமையையும் பெருமையையும் அழியவிடாது பாதுகாத்தற் பொருட்டே என நாம் ஊகிக்க இடமுண்டு. இத்திற மாண்பு பெற்ற நீராடு துறைகளில் ஒன்றாகிய கீரிமலைத் தீர்த்த மடமையினை ஒட்டி எழுந்த திருத்தலமே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆகும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாணப் பட்டணத்தில் இருந்து காங்கேசன்துறை செல்லும் நெடுஞ்சாலையில் 10 ஆவது கல் தொலையில் அமைந்திருக்கிறது. காங்கேசன்துறைப் பட்டினசபை, தெல்லிப்பழை, மயிலிட்டி ஊராட்சிமன்றங்கள் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டிருப்பது. இதற்கு இரும்புப் பாதைக் தொடர் வண்டி. மூலமும், தெருவண்டிகள் மூலமும் செல்லலாம். தெல்லிப்பழையை அடுத்த மாவிட்டபுரம் இதன் தொடர்வண்டி நிலையம். கிழக்கே இரண்டு கல் தொலையில் பலாலி விமானத்திடல் அமைந்திருக்கின்றது. காங்கேசன்துறை வடக்கே ஒரு கல்தொலையிலும், கீரிமலை நன்னீரூற்று மேற்கே ஒன்றரைக் கல் தொலையிலும் அமைந்திருக்கின்றன.

எங்கள் நாட்டில் இருவகையில் அமைந்த கீர்த்தி வாய்ந்த முருகன் திருக்கோயில்கள் உள. சிவாகம சிற்ப நூல் அமைவு பெற்றவை ஒரு வகை, அவ்வமைவு பெருதவை இன்னொருவகை. இவை மடாலயங்களெனப்படுபவை,

மாவிட்டபுரம், கந்தவனக்கடவை, இணுவில், நீர்வேலி, அநுராதபுரம் போன்ற இடங்களில் உள்ள கோவில்கள் சிவாகம சிற்பமுறையில் அமைந்தனவாகும்.

கதிர்காமம், மண்டூர், வெருகல், செல்வச்சத்நிதி, நல்லூர் போன்ற ஆலயங்கள் மடாலய வகுப்பினவாகும், இவற்றுள் சிவாகம, சிற்ப நூல் அமைவுபெற்ற வரிசையில் சரித்திரப்பிரசித்தி மிக்க பெருங்கோயில் மாவிட்டபுரமாகும். பல ஊர் மக்களுக்கு வழிபடு கோயிலாகவும், குல தெய்வமாகவும் விளங்குவது மாவிட்டபுரம். வரலாற்றின்படிக்கு கி.பி. 9ஆம்நூற்றாண்டில் இசைஉக்ரசோழன் என்னும் வளவன் ஒருவன் சோழநாட்டில் இருந்தான். அவனுக்கு ஒரு மகள், பெயர் மாருதப்புரவிகவல்லி, இவள் தோற்றம் குதிரைமுகமும் மானுட உடலும் கொண்டிருந்தது.

சாந்தலிங்கன் என்னும் சந்நியாசி ஒருவனின் கூற்றுப்படி இப்பெண் கீரிமலைக்கு வந்தனள். அங்கு தவ சிரேட்டராக விளங்கிய நகுல முனிவரிடம் உபதேசம்பெற்று, கீரிமலைக்குன்றருகே உவர் நீர்மத்தியில் நன்னீரும், அருவி நீரும் கலந்த இடமொன்றில் நாள்தோறும் சிவ சிந்தையுடன் நீராடிவந்தாள். நாளடைவில் இந்நீராடலால் அவளது குதிரை முகம் மாறி குமரிமுகம் ஆயது, அந்நாளில் அவள் தன் சேடியருடன் தங்கியிருந்து தீர்த்தமாடிய இடம் “குமாரத்தி பன்ளம்” என்றழைக்கப்பட்டது. (இன்றைய காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை வாயிலுக்கு நேரே கிழக்கு முகமாக இருக்கும் குமார கோயிலடிதான் குமாரததி பள்ளம் என்று கூறப்படுகின்றது.)

நீராடிய பின்னர் வழிபாடாற்றிய கோயில் கதிரையாண்டவர் கோயில்; அக்கோயில் இருந்த இடம் கோயிற் கடவை. (இன்று இவ்விடம் வளவுடை என வழங்கப்படுகிறது,) இதன் அருகில் இன்று அழிந்த நிலைக் கேணி ஒன்று இருக்கக் காணலாம். இன்றைய கோயிலில் இருந்து மேற்கே 200 யார் தொலையிற் காணப்படுவது கதிரையாண்டவர் கோயில்.

குதிரை முகம் நீங்க அருள்பாலித்த இறைவன் பதியாக அது இருந்ததினால் கோவிற் கடவை, பின்னர் “மாவிட்டபுரம்” என மறுபெயர் கொண்டதாகக் கூறப்படும். மா-குதிரை, விட்ட-நீங்கய, புரம்-இடம், குதிரை முகம் நீங்கிய இடம்- மாவிட்டபுரம். இக்காரணப் பெயரே பெருவழக்கில் இன்று பேசப்படுகின்றது. ஆயின், மாருதப் புரவிகவல்லியோடு வந்த தளபதி பெயர் ‘மகாவிட்டன்” என்றும், பின்னாளில் கோயில் ஆட்சிப்பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து அவனை இருக்க வைத்த இடம் இன்றைய மாவிட்டபுரம் என்றும், மகாவிட்டன் வத்த இடமாதலின் அப்பெயர் மருவியே மாவிட்டபுரம் ஆயிற்று எனவும் யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் “நாவலர்கோட்டம்” ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் கூறுவர்

மேலும் சூரசங்காரத்தின் பின் முருகப்பெருமான் கதிரைமலைக்கு எழுந்தருளிச் செல்லுங்காலை, இங்கு தங்கிச் சென்றாரென்ற ஐதீகம் இருப்பதால், இவ்விடம் முருகன் அருள்பெற்ற இடமாகவும் கூறப்படுகின்றது. இக்கருத்தை ஏற்போர் “மா” என்றால் மாமர வடிவாகிய சூரன் என்றும், “விட்ட” என்றால் அவ்வடிவினைவிட்ட என்றும், “புரம்” என்றால் இடம் என்றும் கூறி மாமர வடிவாக நின்ற சூரன் அவ்வடிவினை விட்டேகிய இடமாதலின், இவ்விடம் “மாவிட்டபுரம்” எனக் கூறப்படுவதாகக் கூறுவர், இவர்கள் கூற்றை ஏற்போர் இவ்வாலயத் தலவிருட்சமாக மாமரமும், அண்மையில் கடலும் இருப்பதைச் சான்று காட்டி உறுதி செய்கின்றனர்;.

தனக்கு வாழ்வளித்த கதிரைஆண்டவன் கோயிலை மாருதப்புரவிகவல்லி கட்டுவித்தாள் எனவும், அதற்கு வேண்டிய பொருளையும், திருவடிவங்களையும், பெரியமனத்துளார் எனும் இல்லைத்தீட்தர் மரபு அர்ச்சகரையும், ஏனைய ஏவல்களையும் சோழ வளவன் . அனுப்பிவைத்தான் எனவும் வரலாறு கூறும்காங்கேசப் பெருமானாகய கந்தப் பெருமானின் கோயிற் திருப்பணிகளுக்கு வேண்டிய திருவடிவங்களும், ஏனைய பிறவும் வந்திறங்கியதுறை அன்றுதொட்டு காங்கேசன்துறை என்று அழைக்கப்பட்டுவருகின்றன.

கோயிற்றிருப்பணிகள் – நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலை உக்கிரசிங்கன் என்ற இளவரசன் மாருதப்புரவிகவல்லியை மணந்து கொண்டதாயும், அவனது அரசிருக்கை கதிரைமலையாக இருந்ததெனவும். மாருதப்புரவிகவல்லியை மணந்த பின்னர் தன் அரசிருக்கையோடு இருந்த இடத்தை நெல்வயல்களாக்க, அவற்றை அவளால் கட்டுவிக்கப்பட்ட கந்தசுவாமிகோவில் நித்திய நைமித்திய பூசைகளின் பொருட்டும், ஆலய அர்ச்சகர்களுக்காகவும் பிரமதாயமாக வழங்கிவிட்டுத் தன் அரசிருக்கசையை யாழ்ப்பாணத்தின் வடகீழ்ப் பகுதியில் உள்ள சங்கை நகருக்கு வல்லிபுரக் குறிச்சிக்கு மாற்றினான் எனவும் கூறப்படுகின்றது. கந்தசுவாமிகோவில் வழிபாட்டிற்காக விடப்பட்ட இடமான படியினாலே பண்டைய இராசதானியாக இருந்த “கதிரைமலை” கந்தரோடை எனப் பெயர் மாற்றம் பெற்றதாகவும் வரலாறு கூறும், (கந்தர் – கந்தசவாமியார், ஒடை – குளவெளி) இன்றைய கந்தரோடையை உள்ளடக்கி இருக்கும் சுன்னாகத்தில் எழுந்தருளியுள்ள கதிரைமலைச் சிவன்கோவிலுக்கும், பண்டைநாட் கதிரைமலைக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது ஈண்டு கவனத்திற் கொண்டு ஆராயற்பாலதாகும்.

இன்னும் மாருதப்புரவிகவல்லி தன் குன்மநோய் நீங்கி, இளமையும் அழகும் உடையவளாய் விளங்கிய காலத்தில் தங்கிய குறிச்சியை உள்ளடக்கிய ஊர் “தல்லிப்பள்ளி” எனப்பட்டதாகவும், தல்லிப் பள்ளி மருவியே, “தெல்லிப்பளை” ஆயதாகவும் கூறப்படும் கருத்தும் இவ்விடத்தில் உற்றுநோக்கற்பாலதாகும். (தல்லி–இளமை உடையவள், பள்ளி – சிற்றூர்). இன்று கடலருகல் காணப்படும் சடையம்மா மடத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே நகுலமுனி, மாருதப்புரவிகவல்லி போன்றோர், நீராடி நன்மை பெற்ற “அந்தர்வாவி” எனும் கண்ட தீர்த்தமாகும்.

ஆன்மாக்களை ஆட்கொள்ளும்பொருட்டு இறைவன் கொள்ளும் வடிவங்களுள் கருணை வடிவான தீர்த்தமும் ஒன்றாகும். இதனால் அன்றோ “தீர்த்தன்” என்று சிவபெருமான் பேசப்படுகின்றான். இறைவன் தீர்த்தவடிவு அவனது அனுக்கிரகத்தைக் குறிப்பதாகும். மெய்யன்புடன் கீரிமலையில் நீராடுவோர்க்கு அநுக்கிரகம் சித்திக்கும் என்பதனை நிலைநாட்டி வற்புறுத்திக் காட்டுவதே, ஆர்த்த பிறவித்துயாரகெட மாருதப்புரவிகவல்லி ஆர்த்தாடி வழிபாடாற்றி வந்த பேறாகிய முகமாற்றமாகும்.

இவ்வாறு மாருதப்புரவிகவல்லியினால் எடுக்கப்பட்ட இருக்கோயில் காலத்துக்குக் காலம் வளர்ச்சிபெற்றுப் பிரசித்தமான பெருங் கோயிலாக இருக்கும் நாளில், போர்த்துக்கேயர் இந்நாட்டைக் கைப்பற்றினர். அவர்களது ஆட்சிக்காலத்தில் தகர்க்கப்பட்ட சைவ ஆலயங்களின் எண்ணிக்கைகளில் மாவிட்டபுரமும் ஒன்றாகும். அந்நேரம் கோயிற் பொருட்களையும் திரு உருவங்களையும் கிணற்றுள் போட்டு வைத்துக் காப்பாற்றியவர், அக்காலத்தில் கீரிமலையைச் சார்ந்த ஆலயங்களில் ஆட்சிப்பொறுப்பாளராக இருந்த சிவஸ்ரீ பாலசுப்பிரமணியக் குருக்களாவர். போர்த்துக்கேய ஆட்சி ஒழிந்து ஒல்லாந்தர் ஆட்சியின் கடைக்கூறாகிய 1782இல் சிவஸ்ரீ சபாபதி ஐயர் என்பவரினால் மாவிட்டபுரம் புனர்திர்மாணம் செய்யப்பெற்றுப் பண்டுபோல் விழாக்கள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டன. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இவ்வாலயம் காலத்துக்குக் காலம் ஆட்சிப்பொறுப்பேற்ற மரபுவழிப் பரிபாலக அறங்காவலர்களாலும், அடியவர்களாலும் மேலும் மேலும் விரிவுபடுத்தியும் செப்பனிட்டும் பெருங் கோவிலாக்கப்பட்டதாகும்.

இன்று இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், தம்பமண்டபம், நிருத்தமண்டபம், வசந்தமண்டபம், தட்டிமண்டபம், வில்லுமண்டபம், வேட்டைமண்டபம், யாகசாலை, பாகசாலை, களஞ்சியம் ஆகியவை முறையாகக் கட்டப்பட்டுள்ள ஒரு பெருங்கோவில் முறையில் அமைந்துள்ளது. கருவறை தொடங்கி அர்த்தமண்டபம் வரையான கோவில் கருங்கற்றழிக் கோயிலாக 1927இல் கட்டி முடிக்கப்பட்டு, அவ்வாண்டு ஆனி சுவாதியில் திருக்குடத் திருமஞ்சனம் நடைபெற்றது. கருவறையில் கோலமாமஞ்ஞை தன்னில் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை உடன் கூறுமடியார்கள் வினைதீர்க்கும் முகபாவனையில், கருணை நெறிபுரியு மன்பர்க் கெளியோனாக அருளொடு விளங்குகின்றார். இங்கு பிரதிட்டை செய்யப்பட்டவும், எழுந்தருளச் செய்யப்பட்டவுமான ஏனைய மூர்த்திகள் விவரம் : விநாயகர், நடேசர், சந்திரசேகரர், ஆறுமுகசுவாமி, முத்துக்குமாரசுவாமி, சுப்பிரமணியர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, வைரவர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பனவாகும். இங்குள்ள சிவகாமி பங்கராகிய நடேசர் திருவுருவம் சிதம்பரத்திலிருந்து தருவிக்கப்பட்டதாகும்.

இவ்வாலயத்தின் மேற்குப்புறத்தே காட்சிகொடுக்கும் இராசகோபுரத்தின் திருஉருவங்கள் கோயிலின் வரலாற்றைத் தெளிவுபடுத்துவதுடன், இக்கோவிலுக்கு மட்டுமன்றி ஈழநாட்டுக்கே பெருமை கொடுக்கும் பெருங்கோபுரமொன்றுகவும் மிளிர்கின்றது. இதனைக் கட்டிமுடிப்பதற்கு வேண்டும் பொருளுதவி புரிந்தவர் இரங்கூன் பண்டாரம் எனக் கூறப்படும் அருட்திரு நாகலிங்க தேசிகராவர். இதனைப் பரிபாலிப்பதற்கென அப்பெரியாரால் ஏற்பாடு செய்யப்பட்ட அறக்கட்டளை ஒன்றுண்டு. காங்கேசன்துறையிலுள்ள நாகலிங்கேசுவர மடாலய பரிபாலன அறக்கட்டளையே அதுவாகும்.

இன்று நாளாந்தம் இங்கு ஆறுகாலப் பூசைகள் நன்றாக நடைபெற்று வருன்றன. கிழமைதோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை, மாலையிலும், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்திலும், சித்திரை, தை மாதப்பிறப்பு நாட்களாகிய சங்கிராந்திகளிலும் முத்துக்குமாரசுவாமிக்குச் சிறப்பான மஞ்சன நீராட்டும் பூசைகளும் நடைபெறுகின்றன. இப்பெரு நாட்களில் உற்சவ மூர்த்தியாகிய முத்துக்குமாரசுவாமி உள்வீதி எழுந்தருளுவார்.

விசேட உற்சவங்கள் :

இவ்வாலய மகோற்சவம் பூர்வபக்கச் சஷ்டித் திதியோடு கூடிய ஆனி உத்தர நாளன்று கொடியேற்றமும், ஆடி அமாவாசையன்று தீர்த்தமும், அதற்கு முதல்நாள் தேருமாக இருபத்தைந்து நாட்களுக்குத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். இந் நாட்களில் நடைபெறும் ஆறுமுகசுவாமி திருநடனத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, வேட்டைத்திருவிழா, பட்டுககுடைத் திருவிழா, சப்பரத் திருவிழாப் போன்றவை சிறப்பான திருவிழா நாட்களாகும். உற்சவகால ஆறுமுகசுவாமி திருநடனத் திருவிமாவைத் தொடக்கிவைத்தவர்கள். நாட்டுக்கோட்டை நகரத்தவார்களாவர், உற்சவகால ஐந்தாம் திருவிழா நாள் இதுவாகும். இவ்வுபயத்திற்கென காங்கேசன் துறையில் ஒரு கட்டங்கியை அவர்கள் எழுதிவைத்துள்ளனர் நாட்டுக் கோட்டைச் செட்டிகளினால் வழங்கப்பட்ட தேர் வடிவான விளக்கு ஆலயத்திற்கு இன்றும் ஒளியூட்டிக் கொண்டிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

தேருக்கு வரும் பஞ்சமூர்த்திகள் விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர், ஆறுமுகர், சண்டேசுரர் ஆகியோராவர். தேர்த்திருவிழா அன்று மாலை தேர்முட்டியடியில் நடைபெறும் சண்முகார்ச்சனையின் பின்னர் பஞ்சமூர்த்திகள் இருக்கைக்கு எழுந்தருளும் போது மலர்மாரியுடன் வேத ஒலியும், திருமுறை ஓசையும், நாதகானமும் முழங்க, பத்தித் திருமுகமாறுடன் பன்னிரு கைகளுமாய்த் தித்தித்திருக்கும் திருஅமுது கண்டேன் என அருணகிரி கூறும் ஆறுமுகப் பெருமானுக்கு நடைபெறும் பன்னீராட்டு, இந்நாட்டில் வேறெங்கும் காணாக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

“கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என அப்பர் பெருமான் கூறும் திருக்கைலைக் காட்சியை, கைலாசபதியாகிய எம்பெருமான் அப்பர் பெருமானுக்கு திருவையாற்றில் காட்டிய நாள் ஆடி அமாவாசை நாளாகும். கூறுமடியார்கள் வினை தீர்த்தருள மாவைக்கந்தன் தீர்த்தம் கொள்ள எழுந்தருளும் பெருநாளும் அப்புண்ணிய நன்னாளேயாம்.

இவை தவிர, தைப்பூச நாளன்று ழூஆறுமுகசுவாமி தேரில் திருவீதி உலா வருதலும், மார்கழி ஆருத்ராதரிசனத்துக்கு முதல்நாள் நடேசர் தேரில் திருவீதி உலாவருதலும் இவ்வாலய வழக்கமாகும்.

ஆண்டுதோறும் கந்தபுராணப் படிப்பு வைகாசி மாதத்தில் ஆரம்பித்து, மகோற்சவ இரண்டாம் நாள் முடிவடையும். ஐப்பசி மாதக் கந்தசட்டி காலத்தில் திருச்செந்தூர்ப் புராணம் படித்துப் பயன் சொல்லப்படும், சூரன்போர் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்,

இவ்வாலயத்திற்குச் சொந்தமான சுவடிச்சாலை ஒன்று உண்டு. அதில் பன்னூரற்றுக்கணக்கான சமயச்சார்புள்ள கிரந்த கால்களும், தமிழ் நூல்களும் இருக்கக் காணலாம்.

புரட்டாதி மானம்பூவன்று முருகப்பெருமான் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு அடியார் புடைசூழ எழுந்தருளி வருவது பல்லாண்டுகால வழக்கம். இவ்வாலய அர்ச்சகர்கள் ஆதி சைவ மரபில் வந்தவர்கள். கோயில் நிர்வாக பரிபாலன உரிமை மரபு வழியாக அவர்களுக்கே உரியது. கோயில் மூன்று திருச் சுற்று வீதிகளை உடையது. கோயிலைச்சூழ நாற்புறமும் பல மடங்கள் உள்ளன. கோயிலுக்கெனத் தனியான நந்தவனம் ஒன்றும் உண்டு. இவ்வாலயத் தொழும்புக்குரியோர் பழைமையும், மரபுரிமையும் பேணியே நடந்து வருகின்றனர்.

கோயிலிருக்கும் வளவுப்பெயர் கொவ்வங்கட்டுவளவு. கோயிலுக்குரிய நட்சத்திரம் சுவாதி, தலவிருட்சம் மா. தீர்த்தம் கீரிமலைக் கடல், உறுதியின்படி கோயிற் காணிக்கு உரியவர் அம்பலவாணர் கந்தர். இன்று ஆட்சிப்பொறுப்புக்குரிமை யுடையவர் சிவஸ்ரீ சண்முகநாதக் குருக்கள்.

இவ்வாலயத் திருப்பணிகளைக் கவனிப்பதற்காக “மாவைக் கந்தன் ஆலயத் திருப்பணிச் சபை” என்ற பெயரில் 7-6-75இல் சபையொன்று அங்குரார்ப்பணஞ் செய்து வைக்கப்பட்டது. இச்சபை இன்று பல நல்ல கைங்கரியங்களைச் செய்து வருகின்றது. இவ்வாலயம் படிப்படியாக முன்னேறிப் பழையகால உன்னத நிலையை விரைவில் எட்டிப்பிடிக்கும் என்பது அடியார்களது பெருநம்பிக்கையாகும்.

மாவைக்கந்தன் மீது செஞ்சொற்பாமாலை பாடியோர்
பெயர் விவரம்:

பாடியவர்பாடல் பெயர்
1.முத்துக்குமார கவிராயர்மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்
2.இருபாலை சேனாதிகவிராயர்மாவைப்பதிகம், மாவைக ஊஞ்சல்
3.சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர்மாவைப் பதிகம், மாவை இரட்டை மணி மாலை, மாவைக் கலி வெண்பா
4.வறுத்தலைவிளான் க.மயில்வாகனப் புலவர்மாவைப் பதிகம், மாவைக் கந்தரகவல், மாவை கந்தர் சிங்காரம்
5.க. சரவணமுத்துப் புலவர்மாவைப் பதிகம், மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் மாவை ஊஞ்சல் பாக்கள்
6.ம. சரவணமுத்துப் புலவர்மாவை ஊஞ்சற் பாக்கள்
7.வே. அப்பாக்குட்டிமாவிட்டபுரம் கந்தசுவாமி பேரில் பதிகம்
8.பூநகரி முருகேசர்கனகசபை போற்றித் திருவகவல், மாவைப் பதிகம்
9.கரணவாய் தி.செவ்வந்திநாத தேசிகர்மாவை மும்மணிமாலை
10.சபாபதி நாவலர்மாவை அந்தாதி
11.தா.மூ.பூ. பொன்னம்பலபிள்ளைமாவை யமகவந்தாதி, மாவை திருவிரட்டை மணிமாலை ஆறெழுத்துப்பத்து
12.மாவை குமாரசுவாமிக் குருக்கள்மாவை புராணம், மாவைப் பதிகம்
13.பொ.சபாபதிப்பிள்ளைமாவிட்டபுரம் தோத்திரப் பாமாலை
14.க. சச்சிதானந்தம்மாவை முருகன்
15.நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்மாவை நகர முருகவேள் பதிகம்
16.ஆசுகவி வயாவிளான் கல்லடி வேலுப்பிள்ளைமாவை தோத்திர விருத்தம், மாவை கந்தரஞ்சலி
17.மயிலிட்டி சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயர்மாவைக் கீர்த்தினைகள், மாவைப் பதிகம்
18.மகாவித்துவான் சிவஸ்ரீ சி. கணேசையர்மாவை சுப்பிரமணியர் தோத்திர விருத்தம்
19.ந. சிவப்பிரகாசன்மாவை முருகன் கீர்த்தனைகள்
20.அருட்கவி சீ. விநாசித்தம்பிமாவிட்டபுரம் தண்டபாணிக் கந்தன் திருப்பதிகமும், தோத்திரப் பாமாலையும்
21ஏழாலை பண்டிதர் மு. கந்தையாமாபை பிள்ளைத் தமிழ்
22.விசுவாத சாத்திரியார்மாவைக் குறவஞ்சி
23.இ.சி.கந்தையா ஆச்சாரிமாவைக் கந்தர் தோத்திரமாலை

மாவைக்கந்தன் வரலாறு கூறும் நூல்கள்.

ஆசிரியர் பெயர்நூற் பெயர்
1.முத்துராச கவிராயர்கைலாயமாலை
2. —வையா பாடல், ஈழமண்டல சதகம்
3.திருமலை மாசிலாமணி முத்துக்கமாருப்
புலவர்
திருக்கோணாசல புராணம்
4.நா. கதிரைவேற்பிள்ளைசுப்பிரமணிய பராக்கிரமம்
5.மாதகல் ஏரம்பையர்நகுலாசர புராணம்
6.கா. அப்பாசாமி ஐயர்நகுலகிரப் புராணம்
7.மயில்வாகனப் புலவர்யாழ்ப்பாண வைபவமாலை
8.வட்டுக்கோட்டை விசுவநாத சாத்திரியார்நகுலமலைக் குறவஞ்சி
9.கல்லடி வேலுப்பிள்ளையாழ்ப்பாண வைபவ கௌமுதி
10.செ. இராசநாயக முதலியார்யாழ்ப்பாணச் சரித்திரம்
11.ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையாழ்ப்பாணச சரித்திரம்
12.வண. ஞானப்பிரகாசர்யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
13.எஸ்.டபிள்யு. குமாரசுவாமிஇடப்பெயர்ச்சி ஆராய்ச்சி
14.கா. மதியாபரணம்யாழ்ப்பாண பூர்விக வைபவம்

திக்குத் திசைகெட்டு, இடத்துக்கிடங்கிடந்த மேற்கூறிய புலவோர் பாடல்களையும், வரலாற்ற நூல்களையும், ஏனைய குறிப்புக்களையும் அரிதில் முயன்று தேடி எடுத்து “மாவை முருகன் கவிப் பூங்கொத்து” என்ற பெயரில் தொகுப்பு நூல் ஒன்றை 1977இல் பதிப்பித்துள்ளார் இளவாலை மயிலங்கூடல் வாழ் சைவப்புலவர் 
சி. அப்புத்துரை, இந்நூலுக்கு அரும்பதக் குறிப்புக்கசோடமைந்த உரையொன்று செய்யப்பெறின் இவ்வாலயத்தினதும் நூலினதும் சிறப்புக்கள் மேலும் பெருமை பெற்றோங்கும் என்பதுறுதி.

குறிப்பு :
மாவிட்டபுரம் முருகப்பெருமான் வேட்டைத் திருவிழா நாளன்று திருவுலா வருங் காட்சியை, நாமாந்தரிகை என்னும் பிரகேளிகை வகையமைத்து, உடுவிற்பதி வாழ்ந்த முத்துக்குமார கவிராயர் அவர்களினால் பாடப்பட்ட பாடல்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுதல் சாலப் பொருத்தமானதேயாம்.

“பிரகேளிகை” ஆவது சொல்லக் கருதிய பொருளை ஆழ்ந்து இடக்குமாறு மறைத்து, வெளிப்படையில் வேறொன்றுபோற் காட்டிப் புலவர்களை மயக்க விநோதம் புரிதற்குரிய சொற்களால் பாடப்படுவது. “நாமாந்தரிகை” ஆவது வெளிப்படையில் நாமம் வேறொன்றைக் காட்டிக் கருதிய பொருளை மறைத்திருப்பது. பாடல்களின் பாங்கைப் பார்க்கவும்.

  1. “மல்லாக மாதகலான் மருகன் சுன்
    னாகத்தான் மதன்பா வாணர்
    சொல்லாச்சீர் ஈவினையான் துன்னாலை
    யானத்தான் சுரும்ப ரோதி
    சில்லாலை யிருள்வென்ற குறக்கொடிகா
    மத்தானைச் சிகண்டி மாவூர்
    வல்லானை மாவிட்ட புரநகரத்
    திடைப்பவனி வரக்கண்டேனே,”

இங்கே கருதிய பொருளை மறைத்துக்கொண்டு வெளிப்படையிலே வேரொன்றாகத் தோன்றும் பெயர்களாவன: மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் என்னும் ஏழு ஊர்ப்பெயர்களாகும். இவ்வூர்ப்பெயர்களில் மறைந்து நிற்கும் பொருள்கள் ஆவன: மல் ஆகம் மாது அகலான் மருகன் – வலிமை மிக்க திருமார்பிலே திருமகள் நீங்காததிருக்கப் பெற்றவராகிய திருமாலுக்கு மருகரும், (சுல் £ நாகம் – சுன்னாகம்) சுல் – வெள்ளி, நாகம் – மலை, சுன்னாகத்தான் மகன் – வெள்ளியங்கிரியில் வீற்றிருக்கும் பரமேசுவரமூர்த்தியுடைய திருக்குமாரரும், பாவாணர் சொல்லாச்சர் ஈவினையான் – தம்முடைய மெய்யன்பராய் உள்ளவர்களுக்கு யாவற்றிலும் சிறந்ததாகிய முத்தியின்பத்தனை இடையீடின்றிக் கொடுக்குந் தொழிலையுடையவரும், துன்னாலையான் அத்தான் – நெருங்கிய கரும்பு வில்லையுடைய மன்மதனுக்கு மைத்துனரும், சுரும்பர் ஓது ஓல்லாலை ஐ இருள் வென்றான் – வண்டு வீழ்கின்ற கூந்தலில் உள்ள தகட்டணியால் செறிந்த இருளை வெற்றி கொண்ட, குறக்கொடிகாமத்தானை – வள்ளிநாயகியின் மீது இச்சையுடையவரும், சிகண்டிமா ஊர்வல்லானை – தோகைமயில் என்னும் புரவியைச் செலுத்த வல்லவருமாகிய முருகக் கடவுளை, மாவிட்டபுர நகரத் இடைப் பவனிவரக் கண்டேனே மாவிட்டபுர நகரத்திலே திருவுலா வரக் கண்டேன்.

  1. முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
    முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவக்
    தடையை வோர்பெண் கொடிகாமத் தாளசைத்
    தானைக் கோட்டை வெளிகட் டுடைவிட்டாள்
    உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
    உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
    தடைவி டாதணை யென்றுப லாலிகண்
    சார வந்தனள் ஓரிள வாலையே,”

இங்கே சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை ஆகிய பதினொரு ஊர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன.

“சுன்னாகம்” என்பதைச் சுல்£நாகம் என்று பிரிக்கலாம் சுல் – வெள்ளி, நாகம் – மலை. சுன்னாகம் – வெள்ளிமலை. வழி-பிள்ளை முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி – ஆதியும் அந்தமுமில்லாத வெள்ளிமலையாகிய கைலாசத்தில் இருக்கின்ற சிவபெருமானுடைய பிள்ளையாகிய கந்தசுவாமி, முந்தித் தாவு (அடிக் கொக்குவில் மீது வந்து அடைய – (கொக்கு என்பது குதிரை) முந்தித் தாவுகின்ற (அடி-கால்) கால்களுடைய குதிரை வாகனத்தில் பவனிவர, ஓர் பெண் கொடிகாமத்தாள் – ஒரு பெண்கொடி (தலைவி) காதல் கொண்டவளாய், அசைத்து ஆனைக்கோட்டை வெளிகட்டு உடை விட்டாள் – தன்நிலையைக் குலைத்து மார்பிற் கட்டிய உடையையும் நெகழவிட்டாள். உடுவிலான் வர – அந்தச் சமயத்திலே, (உடு-நட்சத்திரம், இல்-மனைவி) நட்சத்திரத்தை. மனைவியாகக்கொண்ட சந்திரன் உதயம் ஆனான் ஆக, பன்னாலையான் மிக உருத்தனன் – (ஆலை – கரும்பு) கரும்பு வில்லையுடைய மன்மதன் கோபித்தான்; ஓர் இளவாலை – அந்த ஒப்பற்ற இளம்பெண் கந்தசுவாமியைக் காதலித்தவள் கடம்பு உற்ற மல் ஆகத்தில் – கடப்பமாலை அணியப்பெற்ற மல்யுத்தம் செய்கின்ற மார்போடு, தடைவிடாது அணையென்று – இடையீடு இன்றி அணைத்தருள வேண்டுமென்று, பல ஆலி – பல நீர்த்துளிகள், கண்சார வந்தனள் – கண்ணினின்றும் சொரிய, கந்தசுவாமிக்கு எதிரே – திருவடியே சரணமென்று, வீதியிலே பவனியை எதிர்கொண்டாள். இது பாட்டின் உரைவிளக்கம்;. முருகக் கடவுள் குதிரையில் பவனிவருதலைக் கண்ட பெண்களுள்ளே ஒருத்தி ஆடை சோரப்பெற்றாள் எனவும், மற்றொருத்தி கண்ணீர் உதிர்த்தனள் எனவும், கடவுள் முயக்கம் விரும்பிய மானிடப் பெண்கள் இருவர் கொண்டநலிவு கூறிய பாடாண் திணை இதுவாகும்.

  1. “பன்னி ரண்டு கரகந்தனை எட்டுப்
    பானை யைத்துண் டதரக் குயவனை
    முன்னி ரண்டு குடங்கையில் ஏந்தியை
    முட்டி முட்டிமல் லாய்மாவைச் சாடியைப்
    பொன்னி ரண்டு பெறும்பெருஞ் செட்டியைப்
    போற்று வீர்புல வீர்சக ரந்தனை
    முன்னர் வைத்த கலசம்பத் தும்பெறீஇ
    முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்மையே.”

இங்கு கருதிய பொருளை மறைத்துக்கொண்டு வெளிப்படையில் வேறு பொருளாகத் தோன்றும் பெயர்களாவன : கரகம், பானை, முட்டி, குடம், சாடி, கலசம், சால் என்னும் பாத்திரப் பெயர்கள். இவற்றுள்ளே சில பன்னிரண்டு கரகம், எட்டுக் குடப்பானை, இரண்டு குடம், கலசம் பத்து எனத் தொகை பூண்டும் நிற்கின்றன. செட்டி என்பது வணிகர் மரபில் உதித்த காரணம் பற்றி முருகனுக்கு வந்த பெயர்.

இங்கே மறைந்து நிற்கும் பொருள் பன்னிரண்டு கரகந்தனை பன்னிரு திருக்கரங்களையுடைய கந்தசுவாமியை, எள், தும்பு, ஆனை, ஐதுண்டம், அதரம், சூயம், அனை, முன் இரண்டு குடங் கையில் ஏந்தியை எட்டுப் பூவினையும், பவளத்தினையும், யானையையும் முறையே நிகர்த்த அழகிய மூக்கு, அதரம், முலை என்பவற்றினை உடைய உலக மாதா வாயை உமாதேவியாரால் முன்னரே உள்ளங்கை இரண்டினாலும் ஏந்தி வளர்த்தருளப்பட்டவரை, முட்டி முட்டி மல்லார் மாவைச் சாடியை பலமுறை எதிர்த்துப் போராடி, வலிநிறைந்த மாமரவடிவாக நின்ற சூரபன்மனைக் கொன்றருளியவரை, பொன்னிரண்டு பெறும் பெருஞ் செட்டியை தெய்வானை வள்ளியம்மை என்னும் மகளிரிருவரையும் மனைவியராகப் பெற்றுக்கொண்ட உருத்திரசன்மராகிய முருகப்பெருமானை, புலவீர் போற்றுவீர் புலவீர்காள் போற்றக்கடவீர். இப்படிப் போற்றின்; சகரம் தனை முன்னர் வைத்த கலசம் பத்தும் பெறீடு. கலசம் பத்தும் என்ற சொல்லின் முன் “ச” என்ற எழுத்தை வைத்தால் “சகல சம்ப்த்து” என நிற்கும், சகலசம்பத்து என்பது, வலி, ஆண்மை, கல்வி, பொருள், புகழ் முதலியவாய் இம்மையில் பெறும் பெரும் செல்வங்கள் பெற்று, முதன்மைசால் பெருவாழ்வுறன் மெய்ம்மையே – முதன்மை நிறைந்த பெருவாழ்வை அடைதல் உண்மை என்பதாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.