சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நல்லூர் கந்தசுவாமி கோவில்

சைவ உலகில் “கோயில்” என்றால் சிறப்பாகக் கருதப்படுவது “சிதம்பரம்” என்னுந் திருத்தலமேயாம். அதேபோன்று இன்று ஈழத்தில் கோயில் என்றால் சிறப்பாகக் கருதத்தக்கது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலேயாம்.

நல்லூர் யாழ்ப்பாணப் பட்டனத்திலுள்ள ஒர் ஊர். ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழ் அரசரின் அரசிருக்கையாகப் பன்னெடுங்காலம் பேர் புகழுடன் விளங்கிய ஊர். ஆரியச்சக்கரவர்த்துகள் சைவசமயிகள், இவர்களது அமைச்சர்களும், குடிமக்களும் சைவசமயிகளாகவே இருந்தனர். இதனால் இம்மன்னர்கள் தங்களதும், தங்கள் மக்களதும் சமயக் கடமைகளை நிறைவேற்றுதற்காகத் தங்கள் அரணச் சுற்றியும், சுற்றுப்புற ஊர்களிலும் பல சிவாலயங்களைக் கட்டுவாராயினர். வெயிலுகந்த பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், சட்டநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், நீர்வேலி 1அரசகேசரிப் பின்ளையார் கோயில் போன்றவை இவர்கள் கட்டிய கோயில்களுட் சிலவாகும். இவ்வாறு இவர்களினால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் பரிவார தேவகோட்டங்களும், சிறந்தயாக மண்டபங்களும், களஞ்சியம், மடைப்பள்ளி, திருக்குளம் முதலியனவும் சித்திரக் கோபுரங்களோடு மதில்களும், நந்தவனம், 2அக்கரகாரம், வேதாத்தியயன மண்டபம், அன்னதான சத்திரங்கள், தேரும் தேரோடும் வீதிகளும் அமைந்திருந்தனவாம். இவற்றோடு நான் மருங்கும் தாமரைத் தடாகங்களும், அவைகளைச் சுற்றிச் சிறந்த படித்துறைகளும், அவைகளுக்கு அருகே தோரண மண்டப மேடைகளும், இடையிடையே சிறந்த மரக்காக்களும் அமைப்பித்துத் தேவநகராக நல்லூரை எழில்பெற இவர்கள் அக்காலத்தில் வைத்திருந்தனர். இப்படியாக மன்னார்களினால் எடுக்கப்பட்ட. மனம் நிறைந்த அருள் அலை வீசும் சிவாலயங்கள் நிறைந்த கோட்டமாகிய நல்லூருக்கு இன்று அணியாக விளங்குவது அங்குள்ள கந்தவேள் கோயிலாகும்.

தமிழுக்கும் சைவத்திற்கும் அருந் தொண்டுகள் ஆற்றிய யாழ்ப்பாணத்தரசர்கள்து நேரடிப் பரிபாலனத்தில் இருந்துவந்ததும், அவர்களது முக்கிய வணக்கத்தலங்களுள் ஒன்றாகவிருந்ததும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும், இக்கோயில் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய புவனேகவாகு என்பவனால் கட்டப்பட்டதென்பர் ஒரு சாரார். இன்னொரு சாரார், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய செண்பகப்பெருமாள் என்னும் புவனேகவாகுவினால் 1454இல் கட்டப்பட்டதென்பர். எது எப்படியாயினும், புவனேகவாகு என்பவனது பெயர் மகோற்சவங்களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் இவ்வாலயத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டை நல்லூரில் 64 வீதிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் கந்தவேள் கோவிலுக்கு நியமப்படி தொழும்பு செய்பவர்கள் வாழ்ந்து வந்தனர். பலதலைமுறைகளும், பல அரசமுறைகளும் உருண்டோடி விட்டன. ஆயினும், இக்கோயிற் தொழும்பு முறையால் ஏற்பட்ட இவ்வாலய அயல் இடங்களினது பெயர்கள் இன்றுவரையும் மாற்றமடையாது நின்று நிலவி வருகின்றன. அவ்விடங்களில் வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாகத் தொன்று தொட்டுச் செய்துவரும் தொழும்புகளை மறவாது உரிமையோடு செய்துவருகின்றனர். இவை இவ்வாலயத்தின் பண்டைப் பெருமையை நினைவுகூர வைத்து, இப் பெருமான் மீதும் மக்களுக்கு இருந்துவரும் பக்தியையும் எடுத்துக்காட்டுகின்றன.

1478இல் அரசகட்டிலேறிய சிங்கை பரராசசேகரன் இவ்வாலயத்திற்கண்மையில் பகரவடிவிலான திருமஞ்சனக் கேணி ஒன்றை அமைப்பித்தான். புண்ணிய நதியான யமுனையிலிருந்து தீர்த்தம் தருவித்து இவ்வேரியில் சொரிவித்தான். அதனால் அவ்வேரியை “யமுனையேரி” என்றழைப்பாராயினர் ; “யமுனாரி” என இன்று அழைக்கப்படுவதும் இவ்வேரியேயாம்.

400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாணவரசு 2.2.1621 இல் அந்நியரான போர்த்துக்கேயரின் கைப்பட்டது. யாழ்ப்பாணவரச வீழ்ச்சியுடன் சைவ ஆலயங்கள் பல போர்த்துக்கேயரினால் இடித்தழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அப்படியாக. அழிக்கப்பட்ட சைவக்கோயில்களுள் மகோன்னத நிலையிவிருந்த நல்லூர் கந்தசுவாமி கோவிலும் ஒன்றாகும். இதனை அழித்தவன் ‘ஒலிபறா’ என்னும் பறங்கித் தளபதியாம். கோவிலை அழித்துச் சூறையாடியதோடு நிற்காது, அஃது இருந்த இடமும் தெரியாதபடி அத்திவாரத்தையுமே கிளறியெடுத்துவிட்டதாம் பறங்கப்படை,போர்த்துக்கேயரிடமிருந்து 21-6-1658இல் யாழ்ப்பாணவரசு ஒல்லாந்தர் கைக்கு மாறியது. அப்போது அவர்கள் தங்கள் மதவணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் பழைய கந்தசுவாமி கோவில் இருந்த இடத்தில் கட்டிக்கொண்டனர். பழைய நல்லூர் கந்தப்பெருமான் கோவில் இருந்த யமூனா ஏரிக்குப் பக் கத்தில் இன்று இருப்பது ஒல்லாந்தர் காலத் திருச்சபைத் தேவாலயமாகும்.

இப்படியாகப் புறத்தோற்றத்தில் இருந்த நல்லூர்க் கோவிலை அந்நியரால் அழிக்கமுடிந்ததே தவிர, அவனடியாரது அகக்கோயில் வழிபாட்டை அவர்களால் அழிக்கவோ, அகற்றவோ, அசைக்கவோ முடியவில்லை. எனினும் மனத்தகத்தவனாகய முருகப்பெருமானுக்குப் பழைய கோவிலுக்கு அண்மையில், ழூ1734இல், புதிய ஒரு சிறு மடாலயம் அமைத்தனர், ஆரம்பத்தில் இம்மடாலயம் கந்தபுராணம் படிக்கும் இடமாகவே பெரிதும் பயன்பட்டு வந்தது, இம்மடாலயத்தில் வேல் ஒன்றையே வைத்து வழிபட்டும் வந்தனர். மடாலயமாக இது இருந்ததினாற்றான் தூபி எதுவும் இல்லாது இருந்து வந்தது. அக்கால ஒல்லாந்தர் ஆட்சியில். சிறாப்பராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இம்மடாலயத்தைக் கற்களாலும், செங்கற்களாலும் கட்டுவித்து ஒட்டால் வேயப் பட்ட கோயில் ஆக்கினார். அவர் பரம்பரையில் வந்தோரே அன்று தொடக்கம் ஆலயத்தை நிர்வகித்து வரும் அறங்காவலர்களாக இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இக்கோயிலைக் சருங்கற்களாற் கட்டவேண்டும் எனவும், மூலத்தானத்தில் வேலுக்குப் பதிலாகத் தேவப்பிரதிட்டை செய்யப்பட வேண்டுமெனவும் கூறி வந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஆவார். இதற்காக அவர் மூவாயிரம் ரூபாவரை பணமும் திரட்டிக் கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது. ஆயின் இவர் காலத்தில் இவை நிறைவேறவில்லை.

மூலத்தானத் தளவேலைகள் கருங்கற்றிருப்பணியாக 1902இல் நிறைவேறி ஆலயப் பிரதிட்டை செய்யப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்றது. 1909இல் சுற்றுப்பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டன, ஆயின் இவற்றுக்கு முன்னதாக 1899இல் மணிக்கூட்டுக் கோபுரம். ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது, இதற்குச் சான்று அதிலுள்ள செப்பேடாகும்.

இவ்வாலயம் குமார தந்திர முறையில் பூசை நடைபெறும் தலமாகும். ஈழத்தில் இம்முறையில் பூசை நடைபெறும் தலம் இது ஒன்றேயாம் இன்று இவ்வாலயத்தில் நாள் தோறும் ஆறுகாலப் பூசைகள் நேரம் தப்பாது குறித்தபடி நடைபெற்றுவருகின்றன. மற்றும் சிறப்பு விழாக்களும் இதே ஒழுங்கிற்றான் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் திருவனந்தற் பூசைக்கு முன்னதாகப் பூந்தோட்டத் திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இங்கு மாதந்தோறும் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறுவதுடன், சஷ்டி தோறும் செல்வ முத்துக்குமார சுவாமிக்குத் திருமஞ்சனமும் நடைபெறுகின்றது.

இவ்வாலய மகோற்சவம் இருபத்தைந்து நாட்கள் நடைபெறும் இவ்வாலயக் கொடியேற்றச் சீலையை ஆண்டுதோறும் நல்லூரில் வாழ்ந்துவரும் செங்குந்த மரபினரே அழகிய தேரில் வைத்துக் கொண்டுவந்து கொடுப்பர். ஆவணி மாத அமாவாசையன்று தீர்த்தமூம், முதல்நாள் தேர்த் திருவிழாவும் நடைபெறும். இக்காலத்தில் செந்துவர் வாயார் சேவடி சிந்திக்கவரும் பக்தார்கள் கூட்டம் பல்லாயிரமாக இருக்கும். இக்காட்சி அப்பர் பெருமான் “முத்துவிதானம்” என்ற திரு ஆரூர்ப் பதிகத்தில் காட்டும் ஆதிரைநாட் காட்சியையும் சிறப்பையும் எண்ணச் செய்யும்.

தேர்த் திருவிழாவன்று மாலை தேர்முட்டியில் சண்முகப் பெருமானுக்குப் பச்சை சாத்தி நடைபெறும் அர்ச்சனையும், அப்பொலிவோடு பெருமான் ஆலயத்துற்குத் இரும்பும் கோலமும் நெஞ்சை நெகிழ்விப்பதாகும். பச்சைசாத்து எழுந்தருளுவதன் நோக்கம் “எல்லாச் சீவராசிகளுக்கும் எல்லா அநுக்கிரகங்களையும் செய்யும் கருத்தாவாகய சதசிவமூர்த்தியாக உள்ளவர் தானே என்பதையும், வேண்டுவார் வேண்டுவதையும் தன்மையும் தனக்கே உணடையதென்பதையும் காட்டி, எல்லா நலன்களையும் பெற்று வாழுங்கள் என்று அருள் செய்யும் குறிப்பை உணர்த்தும் கோலம் என்பதுதான்.

இங்கு ஒவ்வொரு மூர்த்திக்கும் விலையுயர்ந்த தங்க, வைர, இரத்தினங்களால் ஆசிய ஆபரணங்கள் உள. அதே போன்று வெள்ளி தங்க வாகனங்களும், சிங்காசனமும் உள.

கோயிலின் கிழக்கு வாயிலைச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஐந்தடுக்குக் கோபுரமும், அதன் இருமருங்குமுள்ள அழகிய மணிக்கூட்டுக் கோபுரங்களும் அணிசெய்கின்றன. தெற்கு வீதியில் இன்னொரு கோபுரம் கோயிலை அழகு செய்கிறது. இதற்கு நேராகத் தெற்குப் புற வெளிவீதிக்குத் தெற்கே அழகிய (தீர்த்தக் கேணியும், தண்டாயுதபாணி கோவிலும் இருக்கின்றன. இத்திருக்கேணியிற்றான் மகோற்சவகாலத் தீர்த்தம் நடைபெறுகிறது. கோயிலைச் சுற்றிவரப் பல மடங்கள் இருக்கின்றன. அவற்றுள் தோர்முட்டிக்கு அண்மையில் உள்ள அறுபத்து மூவர் குருபூசை மடம் பிரபல்யமானது. இதுவே சடையம்மா மடம் எனப்படுவதாகும். இதன் காலம் 1892, படமாடும் இக்கோயிற் குமரனிடம், நடமாடும் கோயில்களாக விளங்க யாழ்ப்பாணச் சித்தர் பரம்பரையில் வந்த செல்லப்பாச்சாமி, யோகர்சாமி போன்ற ஞானவான்கள் வந்து தரிசனஞ்செய்து நடமாடி இருக்கின்றனர்.

இவ்வாலயம் இன்றிருக்கும் காணியின் பெயர் குருக்கள் வளவு, தோம்பு உறுதியின்படி கோயிற் காணிக்கு உரிமையுடையவர் அம்பலவாணர் கந்தப்பச் செட்டியார். (அம்பலவாணர் – இவன் கந்தப்பச் செட்டியார் – சிவன் மகன் முருகன்.)

இவ்வாலயத்தின்மீது 45க்கு மேற்பட்டோர் பாமாலை பாடியுள்ளனர்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.