சமீபத்திய செய்தி
சமயாசாரியர் வரலாறுகள்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சோழ நாட்டிலே, சீகாழிப் பதியிலே, அந்தணர் குலத்தில் கௌணியர் கோத்திரத்தையுடைய சிவபாதவிருதயருக்கும் மனைவியார் பகவதியாருக்கும் தவப்புதல்வராய் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்து நாயனார். இவர் மூன்றாம் வயதிலே தந்தையாருடன் தோணியப்பர் திருக்கோயிலுக்குப் போய், தந்தையார் திருக்குளத்திலே மூழ்கி நீராடும்பொழுது அவரைக் காணாமல், “அம்மே அப்பா” என்று அழ, சிவபெருமான் உமாதேவியாரோடு தோன்றி, உமாதேவியாரைக்கொண்டு (ஞானப்) பாலூட்டுவித்து ஆட்கொண்டமையால் ஆளுடையபிள்ளையார் என்றும், திருஞானசம்பந்தர் என்றும் திருப்பெயர் வழங்கப்பெறுவாராயினார். “உனக்கு எச்சில் மயங்கப் பாலூட்டியவர் யார்?” எனத் தந்தையார் கடிந்தபொழுது, “தோடுடைய செவியன்” என்றெடுத்துத் தேவாரத் திருப்பதிகம் பாடியருள, தந்தையாரும் அடியார் பிறரும் ஆச்சரிய வசத்தராய் அகமகிழ்ந்தனர்.
மற்றைநாள் தந்தையார் தோளிற் சுமந்துசெல்லத் திருக்கோலக்கா என்னும் திருத்தலத்தையடைந்து, “மடையில் வாளை” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளி, இறைவன் பொற்றாளம் அருளப்பெற்றனர்.
சிலநாளின்பின் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் தம் மனைவியார். மதங்கசூளாமணியுடன் நாயனாரைக் கண்டு வணங்கி அவரது அநுமதி பெற்று, அவர் அருளிச் செய்யும் தேவாரங்களை யாழிலே அமைச்து வாசிக்குந் திருப்பணியை மேற்கொண்டார்.
நாயனார் அதன்பின் பல திருத்தலங்களையும் தரிசித்துத் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு சிதம்பரத்தையடைந்து நடராசப் பெருமானைத் தரிசித்து “கற்றாங்கெரியோம்பி”, “ஆடினாய் நறுநெய் யொடு பால்” என்னும் திருப்பதிகங்களைப் பாடியருளிஞர்.
தந்தையாராற் சுமந்துசெல்லப்பட்டுத் தருத்தலயாத் திரைசெய்து வந்த நாயனார், அங்ஙனம் செல்வதை விரும்பாமல் திருவரத்துறை என்னுந் திருத்தலத்துக்கு நடந்துசென்றார். அதனாற் கால் நோவ, மாறன் பாடி என்னும் பதியிலே தங்கினார். திருவரத்துறைப் பெருமானது திருவருளால் அந்தணர்கள் கொண்டுவந்து, கொடுத்த முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் என்பவற்றைப்பெற்று, இறைவன் திருவருளை வியந்து, “எந்தையீசன் எம்பெருமான்” என்னும் திருப்பதிகத்தைப் பாடி சிவிகையிலே திருத்தல யாத்திரை செய்வாராயினார்.
மீண்டும். சீகாழிக்கு வந்து, உபநயனம் செய்யப்பெற்றபோது, அங்கு வந்திருந்த அந்தணர்க்குத் திருவைந்தெழுத்தின் பெருமையை விளக்கி, “துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்தினும்” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளிஞர்.
சீகாழியில் இருக்கும் நாளில் திருதாவுக்கரசுநாயனார், இவரைக்காண விரும்பி வந்து தரிசித்து நண்பராய் மீண்டார்.பின்னர் தலயாத்திரை செய்யப் புறப்பட்ட நாயனார், திருப்பாச்சிலாச்சிரமத்தையடைந்து கொல்லிமழவன் மகனை வருத்திய “முயலகன்” என்னும் தோயை, “துணிவளர் திங்கள்” என்னும் திருப்பதிகம் பாடி நீக்கியருளினார்.திருச்செங்குன்றூருக்கெழுந்தருளிச் சுவாமி தரிசனஞ் செய் திருக்கும் நாளிலே அங்கு பரவிய குளிர் சுரத்தை, ‘அவ்வினைக்கவ் வினை” என்னும் பதிகம் பாடிப் போக்கியருளினார்.
திருவாவடுதுறையில் எழுந்தருளி இருந்தபொழுது தம்மைக் காணவந்த தந்தையார், செய்யவிருக்கும் வேள்விக்குப் பொன் கொடுக்க விரும்பி, “இடரினும் தளரினும்” என்னும் பதிகம் பாடி இறைவனிடம் பொன் பெற்றுக் கொடுத்தருளினார்.
திருத்தருமபுரம் என்னும் திருத்தலத்தை அடைந்து, திருநீல கண்டத்து யாழ்ப்பாண நாயனாரது வேண்டுகோளின்படி. திருப்பதிக இசை யாழிலே அடங்காவகையை யாவரும் உணர “மாதர் மடப் பிடியும்” என்றெடுத்து யாழ்முரிப் பதிகம் பாடியருளிஞர்.
திருச்சாத்த மங்கை என்னும் பதியை அடைந்து, திருநீலநக்க நாயனாரது விருந்தினராய்ச் சிலநாளிருந்து பின் திருச்செங்காட்டங் குடியை அடைந்து சிறுத்தொண்ட நாயனாரால் உபசரிக்கப்பெற்றார்.
பின்னர் திருமருகலுக்கெழுந்தருளி, “சடையாய் எனுமால்” என்னும் திருப்பதிகம் பாடி இறந்த வாணிகனுயிர்பெற்றெழச் செய்து திருமணமுஞ் செய்துவைத்தருளினார்;.
திருப்புகலூருக்குச் சென்று சுவாமிதரிசனஞ்செய்து, முருகநாயனாரது திருமடத்திலே, எழுந்தருளி இருக்கும் நாளிலே, திருநாவுக்கரசு நாயனாரும். அவ்விடம். வந்து சேர, இருவரும் பல தலங்களுக்கும் யாத்திரைசெய்து வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டு திருவீழிமிழலையை அடைத்தனர்.
திருவீழிமிழலையிலே பஞ்சம் உண்டாக, அடியவர்களுக்கு அன்னதானஞ் செய்தற்பொருட்டு இறைவனிடம் படிக்காசு பெற்று, அது வாசி தீரவேண்டி, “வாசி தீரவே காசு நல்குவீர்” என்று பதிகம் பாடியருளினார்.
பின் திருநாவுக்கரசு நாயனாருடன் வேதாரணியத்தை (திருமறைக்காட்டை) அடைந்து, வேதங்களாற் பூட்டப்பெற்ற திருக்கதவைத் திருநாவுக்கரசு நாயனார் திறக்கப் பாடியருளியபின், அது திறக்கவும் அடைக்கவும் தக்கதாக அமையுமாறு, “சதுரம் மறைதான்” என்னும் பதிகம் பாடி அடைத்தருளி, அங்குச் சிலகாலம் சுவாமி தரிசனஞ் செய்திருந்தார்.
அந்நாளிலே, மதுரையில் இருந்து மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் அனுப்பிய வேண்டுகோளை ஏற்று, நாயனார் அங்குப் புறப்பட்டபோது அப்பர் தடுத்தருள, “வேயுறு தோளிபங்கன்” என்னும் பதிகம் பாடி. அவரை உடன்படவைத்தனர்.
பின்னர் மதுரையை அடைந்து, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் எதிர்கொண்டு வணங்கி அழைக்க, திருவாலவாய்ப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயில் எங்குளது என வினவி, அவர் காட்ட அப்பெருமான்மீது, “மங்கையர்க்கரசி” என்னும் பதிகத்தைப் பாடியருளினார். அந்தத் தருமடத்திலே நாயனார் எழுந்தருளியிருத்தலைப் பொருமல் சமணர் மடத்துக்குத் தீ வைத்தபோது, “செய்யனே திருவாலவாய் மேவிய” என்னும் பதிகத்தைப் பாடியருள, அத்தீ பாண்டியன்பால் வெப்புநோயாய் அமைந்து வருத்தியது, அந்நோய் சமணரது மருந்து மந்திரங்களால் நீங்காமல் அதிகரிக்கவே மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின்படி, அதனை நீக்கியருளும்படி நாயனார் அரண்மனைக்கு எழுந்தருளினார். சமணர் சமயவாதம் புரிதற் பொருட்டு ஆர்ப்பரித்தெழுந்தனர். மங்கையர்க்கரசியார் அதைக் கண்டு, அஞ்சினார்; அவரது அச்சத்தை, நீக்கியருளும் பொருட்டு, “மானினேர்விழி மாதராய்” என்னும் பதிகத்தைப் பாடியருளினார்; பின் பாண்டியனுக்குத் திருநீறு சாத்தி, “மந்திரமாவது நீறு” என்று பதிகம் பாடியருள வெப்புநோய் நீங்கிற்று. வாதம்புரிய முற்பட்ட சமணருடன், “தளிரிளவளரொளி” என்ற பதிகமெழுதிய ஏட்டைத் தீயிலிட்டுப் பச்சையாய் எடுத்து அனல்வாதமும், “வாழ்க அந்தணர்” என்ற பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றிலிட்டு எதிரேறச் செய்து புனல்வாதமும் புரிந்து, சமணரை வென்று, சைவசமயத்தின் பெருமையை நிலைநாட்டியருளினார். பாண்டியன் மனக்கோட்டமும் கூனும் நிமிர்ந்து சைவனானான்.
பின் நாயனார் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கே அப்பர் சுவாமிகள், நாயனாரது சிவிகை தாங்குவோருடன் தாமும் சேர்ந்து தாங்கிவர, அதனை அறிந்த நாயனார் சிவிகையினின்றும் இறங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்து, அவ்வூரிற் சிலநாளிருந்தனர்.
திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட்ட நாயனார் சீகாழிக்கு மீண்டும் வந்து, பின் தொண்டைநாட்டுத் தலங்களைத் தொழுது, திருவோத்தாருக்குச் சென்று, அங்குள்ளோரது வேண்டுகோட்படி, “பூத்தேர்ந்தாயன” என்று பதிகம்பாடி ஆண்பனைகளைப் பெண் பனைகளாக்கியருளிஞர்.
திருமயிலாப்பூரை அடைந்து, சிவநேசச்செல்வர் மகள் பூம்பாவையின் வெந்த எலும்பையும் சாம்பரையும், “மட்டிட்டபுன்னை” என்னும் பதிகம்பாடி மீண்டும் உயிர்பெற்றெழும்படி செய்து சீகாழிக்கு மீண்டார்.
நாயனார் அப்பொழுது பதினாறு வயதடைந்திருந்தமையால், தந்தையார் திருமணநல்லூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிமகளை மணமகளாகத் தேர்ந்து திருமண நிகழ்ச்சிகளை நடத்தினார். நாயனார் அக்கினியை வலம்வரும்போது சிவத்தியானம் மேலிடத், திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். மணப்பெண்ணும் சுற்றத்தாரும் அவருடன் சென்றனர். அங்கே நாயனார் “நல்லூர்ப் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடியருள, இறைவனருளால் ஒரு சோதி தோன்றியது. யாவரையும் சோதியுட்புகுமாறு அசரீரி கூறிற்று. நாயனார், “காதலாகி” என்ற பதிகத்தைப் பாடி மணமகளுடனும் மணங்காண வந்தவர்களுடனும் சோததியுட்புகுந்து சிவபதமடைந்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரின் குருபூசைத் தினம், வைகாசி மூலம்.
திருநாவுக்கரசு நாயனார்
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாள மரபிலே, புகழனாருக்கும் அவர் மனைவியார் மாதினியாருக்கும் மகளாகத் திலகவதியாரும், மகனாக மருணீக்கியாரும் அவதரித்தனர். மருணீக்கியாரின் தமக்கையாரான திலகவதியார் மணப்பருவம் அடைந்தபொழுது, கலிப்பகையாரை அவருக்கு மணஞ்செய்வதெனப் பெற்றோர் தீர்மானித்திருந்தனர். சிலகாலஞ் செல்லப் பெற்றோர் சிவபதமடைந்தனர். மணமகனான கலிப்பகையாரும் யுத்தகளத்திலே இறந்தார். திலகவதியார் தம்பியார் பொருட்டு உயிர் தாங்கி இருத்து திருவதிகைப் பெருமானுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்தார்.
தமக்கையாரது பாதுகாப்பிலே வாழ்ந்த மருணீக்கியார் இளமையிலேயே கல்வி கேள்விகளிற் இறந்து விளங்கினார். அவருடைய மனம் துறவு நெறியில் நாட்டங்கொண்டது. அதனால், பாடலிபுரமென்னும் திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமணப் பள்ளியிலே சேர்ந்து சமணத் துறவியானார். சமண நூல்களைக்கற்றுப் பாண்டித்தியமடைந்து பௌத்தர்களை வாதில் வென்று, தருமசேனர் என்னும் பெயரோடு சமணசமய குருவாய் விளங்கினார்.
திலகவதியார் தம்பியாரின் நிலைகண்டு வருந்தி, அவரை மீண்டும் சைவசமயியாக்கியருள வேண்டுமெனத் திருவதிகைப் பெருமானிடம் விண்ணப்பித்து வந்தார். பெருமானுடைய திருவருளால் தருமசேனருக்குச் சூலநோயுண்டாயிற்று. தமது மருந்தினாலும் மத்திரத்தினாலும் அந்நோய் நீங்காமைகண்ட சமணர், அவரைக் கைவிட்டனர். தருமசேனர் தமக்கையாரைத் தம்மிடம் அழைக்க முயன்றும் அது கைகூடாமற் போகவே, அவரிடம் வந்து வணங்கித் தம்மைக் காத்தருளும்படி வேண்டினர். திலகவதியார் அவருக்கு விபூதி சர்த்தி, அவ் உடல்நோயை மாத்திரமன்றி உயிர் நோயையும் நீக்கியருளவல்ல வைத்தியநாதரான சிவபெருமானை வணங்கும்படி உபதேசித்து, திருவதிகை வீரட்டானேசுவரர் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.
மருணீக்கியார், பெருமானது சந்நிதியை அடைந்த மாத்திரத்திலே பாடும் வல்லமையுண்டாக, ‘கூற்றாயினவாறு” என்று தொடங்கித் தேவாரத் திருப்பதிகம் பாடி வணங்கினார். அவரது சூலைநோய் நீங்கற்று, அவர் இறைவனாலே “திருநாவுக்கரசு” என்னும் திருப்பெயர் சூட்டப்பெற்றார். சூலைநோய் தந்து தம்மையாட்கொண்ட இறைவனின் பெருங்கருணையை எண்ணியெண்ணி மனமுருகிய அவர் அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்தோறும் சென்று வணங்கித் தேவாரப்பதிகம் பாடி வருவாராயினார்.
தருமசேனர் சைவராய்த் திருநாவுக்கரசு என்னுந் திருப்பெயரோடிருத்தலை அறிந்த சமணர், அவரை அழைத்துத் தண்டிக்குமாறு தம் அரசனான மகேந்திரப் பல்லவனை வேண்டினர். அரசன் நாயனாரை அழைத்துவரும்படி மந்திரிமாருக்குப் பணித்தான். மந்திரிமார் நாயனாரிடம் வந்து அரசனாணையை விண்ணப்பித்தபொழுது, அதனை மதியாத நாயனார், “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் திருக்தாண்டகத்தைப் பாடி மறுத்தருளீனார். பின்னும் அவர்கள் பணிந்து வேண்டி “இறைவனருளால் ஆவன ஆகுக” என்றெண்ணி மகேந்திர பல்லவனிடம் சென்றார்.
அங்கே சமணர்கள் அரசனது உடன்பாட்டோடு நாயனாரைச் சுண்ணாம்பறையிலே (ஏழுநாள்) அடைத்துவைத்தபொழுது “மாசில் வீணையும்” என்ற பதிகம்பாடி ஒரூனமுமின்றி விளங்கினார்; நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்பித்தபொழுது “நஞ்சுண்ட பெருமானது நடியார்க்கு நஞ்சும் அமுதாம்” என உண்டு, அதனாலும் ஊறுபடாதிருந்தார்; யானையை ஏவியபொழுது “சுண்ணவெண் சந்தனச் சாந்தும்” என்று பதிகம் பாட, அவ்யானை அவரைப் பணிந்து சென்றது. கல்லோடு கட்டிக் கடலிலே போட்டபொழுது, “சொற்றுணை வேதியன்” என்னும் பதிகம் பாட, கல்லே தெப்பமாக மிதந்து நாயனாரை திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலின் பக்கத்திலே கரைசேர்ந்தது. நாயனாரிடத்து விளங்கிய சைவசமய மகிமையை உணர்ந்த பல்லவ மன்னன் சைவசமயத்தைத் தழுவினான். சைவசமயமே மெய்யென உணர்ந்த காடவன் என்பவனும் பாடலிபுரத்துச் சமணர்களது பள்ளிகளையும் பாழிகளையும் அழித்து, அவற்றின் கற்களைக் கொண்டு திருவதி கையிலே “குணரத வீச்சரம்” என்னும் கோயிலைக் கட்டினான்.
நாயனார் பின் பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு திருப்பண்ணா கடத்தையடைந்து, திருத்தூங்கானை மாடத் திருக்கோயிலிலே “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” என்னும் பதிகம் பாடித் தமது உடம்பிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பெற்றார்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரது பெருமையை அறிந்த நாயனார், அவரைத் தரிசிக்க விரும்பிச் சீகாழிக்குச் சென்று அவரடி பணிந்த பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவரைத் தூக்கு “அப்பரே” என்றழைத்து, அன்பு பாராட்டி வணங்கப் பெற்றார்.
பின்னர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் சென்று சீகாழி திருக்கோலக்கா – என்னும் தலங்களைத் தரிசித்து வணங்கினார். சம்பந்தப் பிள்ளையாரிடம் விடை பெற்றுப் பல தலங்களையும் தரிசித்து வணங்கிக்கொண்டு திருச்சந்திமுற்றம் என்னும் தலத்தையடைந்து, “கோவாய் முடுகி” என்னும் பதிகம் பாடித் தமது தலைமேல் திருவடி சூட்டியருளுமாறு வேண்டினார். அவரது வேண்டுகோள் திருநல்லூர் சேர்ந்தபொழுது நிறைவேறிற்று.
திங்களூரில் இருந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசுநாயனாரின் மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேல் அளவிறந்த அன்பினராய், அவர் பெயராலே தான தருமங்கள் செய்து வந்தார். அங்கு எழுந்தருளிய அப்பர் சுவாமிகள் அவரது அன்புடைமையை அறிந்து, அவரது இல்லத்திலே திருவமுது செய்ய உடன்பட்டார். அமுதளித்தற்கான வாழைஇலை அரியச் சென்ற தம் புதல்வன் பாம்பு கடித் இறக்கவும் அதன் பொருட்டு வருந்தாமல் அப்பூதியடிகளும் மனைவியாரும் நாயனாரை அமுது செய்தருளுமாறு வேண்டினர். அங்கு நிகழ்ந்ததைத் திருவருளாலுணர்ந்த நாயனார், “ஒன்று கொலாம்” என்னும் பதிகம் பாடி விடத்தாலிறந்த புதல்வனை உயிர்பெற்றெழச் செய்தருளினார்.
நாயனார் அங்கிருந்து புறப்பட்டு, தலயாத்திரை செய்துவரும் போது, திருப்புகலூரிலுள்ள முருகநாயனாரின் திருமடத்திலே சம்பந்தப் பிள்ளையாரை மீளவும் சந்திக்கப் பெற்றார். பின் அவருடன் சேர்ந்து திருவீழிமிழலையை அடைந்து அங்குப் பஞ்சத்தால் அடியார் உணவின்றி வருந்துவதை நீக்கும்பொருட்டு இறைவனை வேண்டிப் படிக்காசு பெற்று, அன்னதானஞ் செய்தருளினார். வேதாரணியத்தையடைந்து சம்பந்தப் பிள்ளையாரது வேண்டுகோட்படி, “பண்ணினோர் மொழியாள்” என்ற பதிகம் பாடி, வேதங்களாலே பூட்டப்பட்டிருந்த திருக்கதவைத் திறக்கும்படி செய்தருளினார். இருவரும் நேர்வாயிலிற் சென்று மறைக்காடரைத் தரிசித்தபின், அப்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சம்பந்தப் பிள்ளையார் அத்திருக்கதவு (அடைக்கவும் திறக்கவும் தக்கதாக) அடைக்கப்பாடியருளினார்,
பல தலங்களையும் தரிசித்துப் பதிகம் பாடிக் கொண்டு தென்கயிலையான திருக்காளத்தியை அடைந்த அப்பரடிகளுக்கு, இமயமலையை அடுத்துள்ள வடகயிலையைத் தரிக்கும் விருப்பம் உண்டாயிற்று. அதனால் காசி முதலிய வடநாட்டுத் தலங்களையும் தரிசித்துக்கொள்ள வடகயிலையை நோக்கி நடந்தார், மலைச்சாரலிலே நெடுந்தூரம் நடந்து கால்கள் புண்பட்டுத் தளர்வெய்தினவாயினும், மனந்தளராமல் தவழ்ந்தும் உருண்டும் சென்றார். அவரது துன்பத்தை தீக்கியருளத் திருவுளம் கொண்ட பெருமான் தாம் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைத் திருவையாற்றிலே காட்டியருளுவாரெனவும், அங்குள்ள வாவியிலே மூழ்கித் திருவையாற்றை அடையுமாறும் பணித்தருளினார். நாயனார் அவ்வாவியிலே மூழ்கித் திருவையாற்றை அடைந்து கயிலைக் காட்சியைத் தரித்தார்.
திருநாவுக்கரசு நாயனார் மீண்டும் திருஞானசம்பந்தப் பெருமானைச் சந்தித்துக் கொண்டு பாண்டிநாட்டை யடைந்து பல தலங்களைத் தரிசித்து வணங்கித் திருப்புகலூருக்கு வந்து, அங்கே ஒவ்வொரு நாளும் உழவாரத் திருத்தொண்டு செய்து வருவாராயினா இறைவன் நாயனாரது பற்றற்ற தன்மையை ‘உலகினருக்குக் காட்டும் பொருட்டு அவர் புல் பூண்டுகளைச் செருக்கும் இடந்தோறும் பொன்னும் மணியும் தோன்றச் செய்தருளினார்; நாயனார் அவற்றை வெறுங் கற்களாக மதித்துப் புறத்தே எறிந்தார்.
இங்ஙனம் திருத்தொண்டு செய்திருந்த நாயனார் ஒரு இனம் இறைவன் திருவடி சேரவேண்டு மென்னும் விருப்பம் மீதூர “எண்ணுகே னென்சொல்லி எண்ணு கேனோ” என்று தொடங்கித் திருப்பாட்டின் இறுதிதோறும், “உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே என்று பாடித் திருவடிநீழலை அடைந்தார். திருநாவுக்கரசு நாயனார் முத்தயடைந்த தினம் சித்திரைச் சதயம்.
சுந்தரமூர்த்தி நாயனார்
திருக்கயிலாயத்திலே சிவபெருமானுக்குப் பூமாலை தொடுத்தல் முதலிய திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்த ஆலாலகசுந்தரர் ஒருநாள் பூவெடுக்கப் பூங்காவிற்குப் போனபோது, அவ்விடத்திலே பூக்கொய்துகொண்டிருந்த அநிந்திதை, கமலினி என்னும் உமையம்மையாரின் சேடியரிடத்திலே விருப்புற்று நின்றமையாலும், அம்மாhதர்களும் இவரிடத்திலே மனங்கொண்டமையாலும், அவர்களைப் பூமியிலே பிறக்கும்படியும் அவர்களது விருப்பம் நிறைவுற்றதும் மீண்டும் கைலையை அடைந்து தொண்டு செய்யும்படியும் இறைவன் அருள்செய்தார். அதனால் ஆலாலசுந்தரர் திருமுனைப்பாடி நாட்டிலே திருவாரூரிலே சடையனார் என்னும் ஆதி சைவ அந்தணருக்கு இசைஞானியாரிடத்திலே அவதரித்து நம்பியாரூரர் என்னும் திருப்பெயர் பெற்றார்.
நம்பியாரூரரை அந்நாட்டரசராகிய நரசிங்கமுனையர் கண்டு சடையனாரிசைவுடன் கொடுக்கத் தமக்குப் புத்திரராகப் பெற்றுத் தமது குலத்திற்குரிய வில்வித்தை முதலியவற்றையும் அந்தணர் குலத்துக்குரிய வேதாகம சாத்திரங்களையும் கற்பித்துச் சிறப்புடன் வளர்த்தார்.
பெற்றோரும் நரசிங்கமுனையரும் நம்பியாரூரர் மணப்பருவம் எய்தியபோது புத்தூர்ச் சடங்கவி சிவாசாரியரின் மகளை மணமகளாக நிச்சயித்து மணவினை நடாத்தத் தொடங்கினர். நம்பியாரூரர் மணக்கோலத்தோடு மணமகளில்லத்திலே மணவறையிலே இருந்தார். அப்பொழுது சிவபெருமான் கிழப் பிராமண வடிவந் தாங்கி வந்து திருமணம் நிறைவேரறாதபடி ஆவண ஓலை காட்டி வழக்காடித் தடுத்து, நம்பியாரூரரைத் தமது அடியவராகக் கொண்டார்.
அடிமைகொண்ட சிவபெருமான் அவரைத் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச் சென்றார். அங்கே. நீ நம்மோடு வன் சொற்களைச் சொல்லி வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றனை. ஆவண ஓலை காட்டியபொழுது என்னைப் “பித்தன்” என்றாய். பித்தனென்றே தொடங்கி என்னைப் பாடு. பாடலே நீ எனக்குச் செய்யும் அர்ச்சனையாம் என்று இறைவன் அருள்செய்ய, வன்றொண்டர் “பித்தா பிறைசூடி” என்ற தேவாரப் பதிகத்தைப் பாடியருளினார்.
பின்னர், தலயாத்திரை செய்து திருவதிகைப்பதியை அடைந்தார். அது திருநாவுக்கரசர் அருள்பெற்ற திருத்தலமாதலால் அங்கே கால் மிதித்துச் செல்ல அஞ்சி, அத்தலத்தின் புறத்திலே உள்ள சித்த வட மடத்திலே தங்கி அன்றிரவு துயில்கொண்டபொழுது இறைவன் அவருக்குத் திருவடி தீட்சை செய்ய தம்மானை அறியாத சாதியார் உளரே என்றெடுத்துப் பதிகம் பாடியருளினார்.
தம்பியாரூரர் தில்லைப்பதியை அடைந்து சுவாமி. தரிசனஞ் செய்தபொழுது சிவபெருமான், “கந்தரா நம்மை ஆரூரிலே வணங்க வருக” என்று அருள்புரிந்தார்.
சுந்தரமூர்த்திநாயனார் திருவாரூரை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டு அங்கே தங்கியிருந்தார். அங்கே கமலினி என்பவர் பரவையார் என்னும் பெயரோடு உருத்திர கணிகையர் குலத்திலே அவதரித்து இறைபணி செய்து வந்தார். ஒரு நாள் சுந்தரரும் பரவையாரும் திருக்கோயிலிலே ஒருவரையொருவர் கண்டு முன்னைத் தொடர்பால் விருப்புற்று இறைவனருளால் மணஞ்செய்தனர். திருமணக் கோலத்துடனிருந்த நாயனாரிடத்திலே இறைவன் “நாம் உனக்குத் தோழரானோம். நீ கொண்ட மணக்கோலத்துடன் எப்பொழுதும் இருப்பாய்” என்று அருள் செய்தனர். அன்று தொடக்கம் தம்பிரான் தோழர் என்னுந் திருப்பெயர் அவருக்கு வழங்குவதாயிற்று.
பரவையர் மாளிகையிலே தங்கியிருந்த சுந்தரர் திருவாரூர்த் தியாகராசப்பெருமானை நாள்தோறும் தரிசித்து வணங்கிப் பதிகம் பாடி வருநாளில், ஒருநாள் அத்திருத்தலத்திலே தேவாசிரியர் மண்ட பத்திலிருந்த அடியார்களை வணங்கி “தில்லைவாழந்தணர்தம்” என்று தொடங்கும் திருத்தொண்டத்தொகையைப் பாடியருளினார்;. மேலும், தம் பொருட்டுக் குண்டையூர்க் கிழாருக்கு இறைவன் கொடுத்தருளிய நெல்மலையை “நீளநினைந்தடியேன்” என்னும் பதிகம் பாடி இறைவனருளால் திருவாரூரிலே சேர்ப்பித்தார்.
திருநாட்டியத்தான் குடியிலே வாழ்ந்த கோட்புலிநாயனார் ஒரு முறை சுந்தரரை அழைத்து உபசரித்துத் தம் புதல்விகளாகிய சிங்கடி, வனப்பகை என்போரை அடிமை கொண்டருளுமாறு வேண்ட நாயனார் அவர்களைத் தம் மக்களாக ஏற்றுச் சிறப்பித்துப் பாடிவருளினார். இதனால் சிங்கடியப்பன், வனப்பகையப்பன் என்னுந் திருப் பெயர்களும் இவருக்கு உண்டாயின.
பரவையார் பங்குனி உத்திர விழாச் செலவுக்குப் பொன் வேண்ட, அதன் பொருட்டுத் திருப்புகலலூரை அடைந்த நாயனார், செங்கட்டிகளைப் பொன்கட்டிகளாகப் பெற்று “தம்மையே புகழ்ந்து” என்னும் பதிகம் பாடியருளினார்.
திருமுதுகுன்று நோக்கித் தலயாத்திரை செய்தபொழுது, நாயனாருக்கு வழிகாட்டிச் சென்ற இறைவன் அவரைக் கூடலையாற்றூருக்கு அழைத்துப்போய் மறைந்தருள, “வடிவுடை மழுவேந்தி” என்னும் பதிகம் பாடியருளினார்.
பின்னர் திருமுதுகுன்றூரைத் தரிசத்தப் பன்னீராயிரம் பொன்பெற்று, அங்குள்ள மணிமுத்த நதியிலிட்டுத் திருவாரூர்த் திருக்குளத்திலே. பரவையாரோடு போய்த் தடவியபோது அது கிடைக்கப் பெருமை கண்டு, “ஆற்றிலிட்டுக் குளத்திலே தடவுகிறீரா” என்று பரவையார் நகைக்க, “பொன் செய்த மேனியினீர்” என்னும் பதிகம்பாடி அப்பொன்னைத் திருக்குளத்திலே எடுத்தார்.
மேலம் தலயாத்திரை செய்து வந்த நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவதரித்த சீகாழிப் பதியைக் காலால் மிதிக்க அஞ்சி அப்பதியை வலம் வந்து வணங்கித் திருக்கருகாவூருக்குப் போகும் போது பசியினால் வருந்த, இறைவன் வழியிலே தண்ணீர்ப் பந்தல் அமைத்துப் பொதிசோறும் தண்ணீரும் கொடுத்து மறைந்தருளினார். நரயனார் இறைவனின் பெருங் கருணையை வியந்து, “இத்தனை யாமாற்றை அறிந்திலேன்” என்று பதிகம் பாடியருளினார்.
திருக்கச்சூர்த் திருத்தலத்தைத் தரிசித்த பின் உணவின்றிப் பசியோடிருந்த நாயனாருக்கு இறைவன் பிச்சையெடுத்து அன்னங் கொடுத்தருளினார். நாயனார் அதனை வியந்து, “முதுவாயோரி கதற” என்றெடுத்துப் பதிகம் பாடித் துதித்தார்.
சுந்தரமூர்த்திநாயனார் பல திருத்தலங்களையும் தரித்துக்கொண்டு திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். அந்நாளில், நாயிறு என்னும் ஊரிலே நாயிறுகளார் என்பவருக்கு அநிந்துதையார் புத்திரியாராக அவதரித்துச் சங்கிலியார் என்னும் பெயர் பூண்டு திருவொற்றியூர்ப் பெருமானுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். அவரை நாயனார் கண்டு விருப்புற்று, இறைவனருளியபடி அவரைப் பிரிவதில்லை என்று சபதம் செய்து கொடுத்து மணஞ்செய்திருந்தார்.
சில நாட்செல்ல, திருவாரூர்ப் பெருமானைத் தரிசிக்க விரும்பித் தாம் செய்த சபதந் தவறிப் புறப்பட்டுத் திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததும், நாயனாரது கண்ணிரண்டும் குருடாயின. அவர் அடியார் வழிகாட்டத் திருவெண்பாக்கத்தை அடைந்து “கோயில் உள்ளீரோ” என்று பதிகம்பாட, இறைவன் “உளோம் போகீர்” என்று ஊன்றுகோல் கொடுத்தருளினார்.
திருக்கச்சியேகம்பத்தை அடைந்து இறைவனருளால் இடக்கண்பார்வை பெற்று, “ஆலந்தானுகந் தமுதுசெய்தானை” என்னும் பதிகம் பாடியருளினார். பின் திருத்துருத்தி என்னும் தலத்திலே தீர்த்தமாடி உடல் நோய்கள் நீங்கப்பெற்றார்.
திருவாரூரை-அடைந்து “மீளா அடிமை” என்றெடுத்துப் பதிகம்பாடி, வலக்கண் பார்வையும் பெற்றார். பின்னர் பரவையாரிடத்திலே எம்பெருமானைத் தூதாக அனுப்பி அவரூடல் தணித்து அங்கு சிலநாள் எழுந்தருளினார்.
ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர், சுந்தரர் இறைவனைத் தூதனுப்பியது தகாது என்று சுந்தரர் பாற் கோபித்திருந்தார். அவரைச் சுந்தரருடன் நட்புப் பூணும்படி செய்தருளத் திருவுளங் கொண்ட இறைவன், அவருக்குச் சூலைநோயைக் கொடுத்தருளினார். அது தீர்க்கும் பொருட்டுச் சுந்தரர் அவரிடம் செல்லுதலும் அதனை விரும்பாத கலிக்காமர் உடைவாள் கொண்டு தம் வயிற்றைக் கிழித்திறந்தார். அது கண்ட சுந்தரர் தாமும் அவ்வாறிறக்கத் துணிந்து வாளை எடுத்தலும், இறைவனருளாற் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து சுந்தரரைத் தடுத்து நண்பராயினார்.
பின்னர் சேர நாட்டரசரான சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரரிடம் வந்து வணங்க நட்புப் பூண்டனர். சேரமான் தோழரான சுந்தரர் சேரமானுடன் மலை நாட்டுக்குப் புறப்பட்டார். வழியிலே, சேரமான் பெருமாள் திருவையாற்றைத் தரிசிக்க விரும்பி நாயனாரிடம் விண்ணப்பித்தார். அப்பொழுது காவேரி ஒடஞ் செல்லமுடியாதபடி பெருக்கெடுத் தோடிற்று. நாயனார், “பரவும் பரிசொன் றறியேன்” என்று பதிகம் பாடியருள ஆறு பிரிந்து வழிவிட்டது. திருவையாற்றைத் தரிசித்து வட நாட்டுக்குப் போய் மீளவும் சேரமானைக் காணும் பொருட்டுப் புறப்பட்டார்.
நாயனார் செல்லும் வழியிலே திருப்புக்கொளியூரிலே பல ஆண்டுகளுக்கு முன் முதலையால் விழுங்கப்பட்ட பிராமணச் சிறுவனை முதலை வாயினின்றும் மீட்டுக் கொடுத்தருளினார்.
பின் சேரமானிடஞ் சென்று திருவஞ்சைக்களத்துப் பெருமானைத் தரிசித்திருந்தார். ஒருநாள் கயிலை நாதரின் ஆஞ்ஞைப்படி தேவர்கள் கொண்டுவந்த வெள்ளையானையிலேறிச் சேரமான் பெருமானை நினைத்தபடி திருக்கயிலைக்குப் புறப்பட்டார். அதனை உணர்ந்த சேரமான் பெருமாள் – குதிரையிற் சென்று சுந்தரரோடு சேர்ந்து கயிலையை அடைந்தார். அங்கே நாயன்மாரிருவரும் சிவகணங்களுக்குத் தலைவராயினர். சிலகாலஞ் செல்ல பரவையாரும் சங்கிலியாரும் உமையம்மையார் பாலடைந்து சேடியராயினர். சுந்தரமூர்த்தி நாயனாரின் குருயூசைத்தினம் ஆடிச்சோதி.
மாணிக்கவாசக சுவாமிகள்
பாண்டி நாட்டிலே திருவாதவூரூரிலே ஆமாத்தியப் பிராமண குலத்திலே. சம்புபாதாசிரியர் என்பவருக்குச் சிவஞானவதியார்பால் சற்பித்திரர் ஒருவர் அவதரித்தார். பெற்றோர் அவருக்குத் திருவாதவூரர் என்னுந் திருநாமந் தரித்தார்கள். அவர் இளமையிலேயே சகல கலைகளையுங் கற்று அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்கினார். அவரது மகிமையை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து முலன் மந்திரிப் பதவி நல்கித் “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டமும் வழங்கினான்.
வாதவூரர் முதன் மந்திரிக்குரிய கடமைகளைக் குறைவின்றிச்செய்தாராயினும் இறைவனை அடைந்து பேரின்பம் அனுபவிக்கும் வேட்கை உடையவராய் “கூத்தினர் தம்மை வேறு கோலம் வேரறாகுமாபோல்” வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரை அழைத்து, அளவற்ற திரவியத்தைக் கொடுத்து, அதற்குக் குதிரைகள் வாங்கிவரும்படி கூறினார். அவர் அதன் பொருட்டுப் புறப்பட்டுச்செல்லும் வழியிலே திருப்பெருந்துறை என்னுந் திருத்தலத்தை அடைந்தார். அங்கே சிவபெருமான் அவருக்கு அருள் செய்யும்பொருட்டு ஒரு குருந்தமர நீழலிலே அடியார் புடைசூழக் குருமூர்த்தமாய் எழுந்தருளியிருந்தார். திருவாதவூரடிகள் அப்பரமாசாரியரைக் கண்டு திருவடிகளிலேவீழ்ந்து வணங்கி, தமக்கு ஞானோபதேசஞ்செய்தருளும்படி பிரார்த்தித்தார். பிரமாசாரியர் அவருக்குத் தீட்சைசெய்தருள, அவர் “அனலிடைப்பட்ட நெய்போல மனமுருகிப் பரமாசாரியரை வணங்கப் பழுதில்லாத சொற்களாகிய மணிகளை அன்பாகிய இழையினாற் போர்த்;து திருவாசகமாகிய பாமாலையைச் சூட்டினார். அதனாற் பரமாசாரியா அவருக்கு “மாணிக்கவாசகர்” என்னுந் திருநாமஞ் சூட்டியருளினார். மாணிக்கவாசக சுவாமிகள் தமது ஆபரணங்களையும் பாண்டியன் கொடுத்த திரவியத்தையும் பரமாசாரியரது திருமுன்னிலையிலே வைத்து வணங்கினார். பரமாசாரியர் அவைகளைச் சிவ புண்ணியங்களுக்கு உபயோகமாகும்படி செய்தருளினார்.
சுவாமிகள் இவ்வாறிருத்தலை ஏவலர் மூலம் அறிந்த பாண்டியன் அவரை உடனே வருமாறு திருமுகமெழுதி அனுப்பினான். மாணிக்கவாசக சுவாமிகள் அத்திருமுகத்தைப் பெற்றுப் பரமாசாரியருக்குக் காட்டினர். பரமாசாரியார் பாண்டியனுக்குக் கொடுக்கும்படி மாணிக்க மணி ஒன்றை அவரிடங் கொடுத்து, குதிரைகள் ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலன்று வரும் என்று பாண்டியனுக்கு அறிவிக்கும் படி கட்டளையிட்டருளினார். சுவாமிகள் அரசனிடம் போய் அவ்வாறே கூறித் தமது கடமைகளை முன்போலச் செய்து வந்தார்.
சிலநாட்கள் செல்ல, அரிமார்த்தன பாண்டியன் திருப்பெருந்துறையிலும் அதற்கு அயலிடங்களிலும் குதிரைகள் வராமையை அறிந்து கோபங் கொண்டு மாணிக்கவாசக சுவாமிகளைச் சிறையிலிட்டு வருத்தினான். சுவாமிகள் சிவபெருமானைத் தியானித்தார். அன்பர்க்கு இரங்கியருளும் பெருமான் ஆவணி மூலநாளிலே காட்டிலுள்ள நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்குக் கொண்டு வந்தருளினார். பாண்டியன் குதிரைகளின் வரவு கண்டு, மகிழ்ந்து மாணிக்கவாசக சுவாமிகளைச் சிறையினின்றும் நீக்க, அவரையும் அழைத்துப்போய் அக்குதிரைகளை ஏற்றுப் பந்தியிலே கட்டுவித்தான்.
அன்றிரவு அக்குதிரைகளெல்லாம் நரிகளாகிப் பந்தியில் நின்ற குதிரைகளையுங் கடித்துக்கொன்று நகரெங்கும் ஊளையிட்டுத் திரிந்தன. அதனாற் கோபங் கொண்ட பாண்டியன், “இஃதெல்லாம் திருவாதவூரரின் சூழ்ச்சியே” என்று எண்ணி, அவரை மீளவும் சிறையிலிட்டு வருத்தினான்.
அடியார்க்கெளியவரான சிவபெருமான் மாணிக்கவாசகர் படுத்துன்பத்தை நீக்கெருளவும், வந்தியென்னும் செம்மனச் செல்வியாரின் சிவபக்தியை உலகத்தாருக்குக் காட்டியருளவும் திருவுளங்கொண்டு, வைகையைப் பெருகும்படி செய்தருள, அது மதுரையை அழிப்பது போலக் கரைபுரண்டு பாய்ந்தது, பாண்டியன் சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டும் வைகையின் பெருக்குத் தணியவில்லை. அதனால், தான் மணிக்கவாசக சுவாமிகளுக்குத் துன்பஞ் செய்தமையே வைகைப் பெருக்குக்குக் காரணமென்றறிந்து அவரைச் சிறை நீக்கு வைகைப்பெருக்கை வற்றச்செய்து கரையை அடைப்பிக்குமாறு வேண்டினான். சுவாமிகள் சிவபெருமானைத் தியானிக்க வைகையின் பெருக்கு வற்றியது. அவரின் ஆணைப்படி நகரமக்கள் நதிக்கரையிலே தத்தமக்கு அளந்துவிடப்பட்ட பங்குகளை அடைத்தனர்.
சிவபெருமானிடத்திலே பேரன்புடையவரும், பிட்டு விற்றுச் சீவனஞ் செய்பவருமான வந்தியென்னும் மூதாட்டியாரின் பங்கு மட்டும் அடைக்கப்படாமற்கிடந்தது. இம்மூதாட்டியார், தம்பங்கை அடைக்க ஆளில்லையே என்று சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட, பெருமான் கூலியாளராய் வந்து அவரளித்த பிட்டையே கூலியாகப் பெற்றுக் கரையை அடைப்பவர்போலச் சென்று ஆடியும் பாடியும் குதித்தும் திரித்தும் விளையாடிக் கொன்றை மர நிழலிலே நித்திரை செய்தார். வந்தியம்மையாரின் பங்கு அடைக்கப்படாமலிருப்பதைக் கண்ட பாண்டியனின் காரியதரிசி ஒருவன் அப்பெருமானுக்குப் பிரம்பினாலடித்தான். அவ்வடி எல்லாச் சீவராசிகள் மேலும் பட்டது. பெருமான் உடனே மறைந்தருளினார். அடிபட்ட பாண்டியனும் வாசகரும் இறைவனின் திருவிளையாடலையறிந்து துதித்தனர். பாண்டியன் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடாத்துமாறு வாசகரை வேண்டினான். அவர் அதற்கு உடன்படாமல் எல்லாத் தொடர்புகளையும் துறந்து, பாண்டியனிடம் விடைபெற்று, மீண்டும் திருப்பெருந்துறையை அடைந்து பரமாசாரியரைச் சேவித்து உபதேசம் பெற்றிருந்தார்.
ஒருநாள் பரமாசாரியர், அடியவர் எல்லோரையும் திருப்பெருந்துறையிலே இருக்குமாறு பணித்து மறைந்தருளினார். சிலநாட் செல்ல இறைவனருளால் அங்குள்ள தடாகத்திலே ஒரு சோதி தோன்ற, வாசகருடன் இருந்த அடியாரெல்லோரும் அதனுட்புகுந்துசவலோகஞ் சேர்ந்தனர். வாசகர் இறைவனாணைப்படி திருவுத்தரகோசமங்கை, இருவிடை மருதூர், இருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் முதலிய இருத்தலங்களைத் தரிசித்துத் திருவாசகம் பாடிக்கொண்டு சிதம்பரத்தை அடைந்தார்.
மாணிக்கவாசக சுவாமிகள் சிதம்பரத்தில் எழுந்தருளியிருந்த நாளிலே, சோழதேசத்துச் சிவபக்தர் ஒருவர் தலயாத்திரை செய்து இலங்கைக்கு வந்தார். அவர் அடிக்கடி பொன்னம்பலம் “நீடூழி வாழ்க” என்று சொல்லித் திரிந்தார். அவர் அப்படிச் சொல்வதை அறிந்த புத்த அரசர், அவரை அழைத்துச் சிதம்பரத்திலுள்ள பொன் பொன்னம்பலத்தின் சிறப்பை அறிந்தான். சிதம்பர சிவாலயத்தை அழித்து அங்கே பௌத்தாலயம். அமைக்க விரும்பினான்;. அதனால் பௌத்த குருமாரோடும் தன் ஊமைப் புதல்வியோடும் சிதம்பரத்துக்குப் போய்த் தில்லைவாழந்தணர்களைச் சமயவாதஞ் செய்ய அழைத்தான்.
தில்லைவாழந்தணர் இறைவன் அருளியபடி, மாணிக்கவாசக சுவாமிகளைப் பௌத்தருடன் வாதம் புரியும்படி வேண்டினர். சுவாமிகள் அதற்கணெங்கிப் பௌத்தர்களுடன் வாதிட்டு அவர்களை ஊமைகளாக்கியும், ஊமைத்தன்மை நீக்கியும் வென்றதுமன்றி, அவர்கள் வினாவிய வினாக்களுக்குப் பௌத்த அரசன் மகளான ஊமைப்பெண்ணைக்கொண்டு விடையும் சொல்லுவித்தார். (இந்த வினாவிடைகளை, சுவாமிகள் திருச் சாழலிலே அமைத்துப் பாடியருளியிருக்கின்றார்கள்.) பௌத்தரெல்லாரும் சைவ சமயத்தின் உண்மையை உணர்ந்து சைவராயினர்.
சிவபெருமான் மாணிக்கவாசக சுவாமிகளின் : திருவாசகத்தை எல்லோருக்கும் அறிவித்தருளவேண்டும் என்னும் பெருங்ககருணையினால் ஒருநாள், பிராமண வேடத்தோடு அவரிடம் வந்து, திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சொல்லச்செய்து, ஏட்டிலே எழுதித் தமது கைச்சாத்திட்டு, அவ்வேட்டுப் பிரதியைக் கனகசபை வாயிற் படியில் வைத்தருளினார். மறுநாள், பூசை செய்ய வந்த அந்தணர் அவ் வேட்டுப் பிரதியைக் கண்டு வியந்து, அடியார், எல்லாருக்கும் சொல்லி அவர்களையும் அழைத்துக்கொண்டு, மாணிக்கவாசக சுவாமிகளிடம் சென்று, அதன் பொருளைக் கூறுமாறு வேண்டினார்கள். சுவாமிகள் அவர்களைப் பொன்னம்பலத்துக்கு அழைத்துப்போய்த் தம் நூலுக்குப் பொருள் இவரே என்று நடராசப் பெருமானைச் சுட்டிக் காட்டி. அவர்களெல்லோருங் காணக் கனகசபையுட் புகுந்து பெருமானோடு இரண்டறக் கலந்தார். மாணிக்கவாசக சுவாமிகளின் குரு பூசைத் தினம் ஆனி மகம்.
சமயாசாரியர் முத்தி அடைந்த நாள்
சித்திரைச் சதயம் அப்பர் சிறந்தவை காசி மூலம்
அத்தரைப் பணிசம் பந்தர் ஆனிமா மகத்தி லந்தம்
முத்தமிழ் வாத வூரர் முதியநல் லாடி தன்னில்
சுத்தமாஞ் சோதி நாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.
சமயாசாரியர் வயசு
அப்பருக் கெண்பத்தொன் றருள்வாக வூரருக்குச்
செப்பிய நாலெட்டில் தெய்வீகம் – இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி.
சந்தானாசாரியர் வரலாறுகள்
மெய்கண்ட தேவர்
திருமுனைப்பாடி நாட்டிலே திருப்பெண்ணாடகம் (திருக்கடந்தை) என்னுந் திருப்பதியிலே அச்சுதகளப்பாளர் என்னும் சைவ வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடத்தும் சிவனடியாரிடத்தும்மெய்யன்பு பூண்டவர். கல்வி அறிவொழுக்கங்களிற் சிறந்தவர்; பெருஞ் செல்வர். எனினும், புத்திரப்பேறில்லாத குறையுடையவராயிருந்தார்.
அவர் ஒருநாள் திருத்துறையூருக்குப் போய், தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் தமது குறையைத் தெரிவித்தார்.
சகலாகம பண்டிதர் இறைவனைப் பூசித்து, தேவாரத் திருமுறைக்கு மலரிட்டு வணங்கி, அத்திருமுறையிலே கயிறு சாத்தும் படி அச்சுதகளப்பாளருக்குக் கூறியருளினார். அச்சுதகளப்பாளர் அத் திருமுறையை வணங்கித் திருக்கயிறு சாத்தியபொழுது,
“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினே டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குள்நீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.”
என்னுந் திருவெண்காட்டுத் திருப்பதிகப் பாடல் வந்தது. சகலாகம பண்டிதர் அதன் பொருளை விளக்கி, அத் திருப்பதிகத்தின் மேன்மையையும், அத்திருப்பதியிலுள்ள திருக்குளங்களிலே முழுகி இறைவனை வழிபடும் முறைமையினையும் அறிவுறுத்தித் திருவெண்காட்டுக்குப் போகும்படி ஆணையிட்டருளினார்.
அச்சுத்களப்பாளர் அங்கனமே மனைவியாருடன் திருவெண் காட்டையடைந்து வழிபட்டு வந்தார். ஒருநாள் இறைவன் அவருடைய கனவிலே தோன்றி, அன்பனே, உனக்கு இப்பிறவியில் மக்கட்பேறு அரிதாயினும், எமக்கு மிகவும் விருப்பமுடையதாயும் மெய்யன்போடு தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பேறுகளையுந் தருவதாயுமுள்ள தேவாரத் திருப்பதிகத்தையே உண்மையாக நம்பி வந்து வழிபாடு செய்கின்றாய். ஆதலின், அத் தேவாரங்களைப் பாடிய ஞானசம் பந்தன்போலவே அத்தேவாரங்களின் மெய்ப்பொருளை விளக்கி மெய்ந் நெறியாகிய சைவசித்தாந்தத்தை நிறுவவல்ல நற்புதல்வன் ஒருவனை தாம் உமக்குத் தந்தோம்” என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். அதனால், அச்சுதகளப்பாளரும் மனைவியாரும் மிக்க மகிழ்ச்சயுடையராய், திருவெண்காடரை வழிபட்டு வருவாராயினர். சில காலஞ் செல்ல மனைவியார் இறைவனருளாலே திருவயிறு வாய்க்கப்பெற்று புதல்வர் ஒருவரைப் பயந்தார். தந்தையார் அப்புதல்வர் திருவெண்காடரின் அருளினால் அவதரித்தமையால், அவருக்குத் திருவெண்காடர் என்றே திருப்பெயரிட்டார். பின்பு மனைவியாரோடும் அருமைப் புதல்வரோடும் இறைவனை வணங்கி விடைபெற்றுத் திருப்பெண்ணாகடத்தை அடைந்தார்.
திருவெண்காடரின் நன்மாமனார் ஒருவார் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள், திருப்வெண்ணாகடத்துக்கு வந்து திருவெண்காடரைப் பார்த்து, பெருமகழ்வெய்தி, அவரைத்தம் இல்லத்துக்கு எடுத்துச் சென்று அன்போடு வளர்த்து வருவாராயினார்.
அங்கே அவர் இரண்டாண்டு நிறைவுற்று மூன்றாம் வயதை எய்தியபொழுது, மெய்ஞ்ஞானத்தை உணரும் பக்குவ நிலை உடையவராய் விளங்கினார். அக்காலத்தில், பொதிய மலையிலிருந்த அகத்திய முனிவரைக் காணும் பொருட்டு திருக்கயிலையினின்றும் புறப்பட்டுவந்த பரஞ்சோதி முனிவர், திருவெண்காடரைக் கண்டு, அவரது பரிபக்குவ நிலையை அறிந்து அவருக்குச் சைவத்தாந்த மெய்ப்பொருளை உணர்த்தி, “மெய்கண்டார்” என்னுந் திருப்பெயரையும் சூட்டியருளினார்.
பின்பு மெய்கண்டதேவர் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள பொல்லாப்பிள்ளையாரின் திருமுன்பு நிட்டைகூடிச் சைவசித்தாந்த உட்பொருளைத் தியானித்து உணர்ந்து தெளிந்து, தமிழில சிவஞான போதம் என்னும் சித்தாந்த “முதல் நூலை’ அருளிச் செய்தார். தம்மையடைந்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு அந்நூற்பொருளை உபதேசித்து வந்தார்;. ஒருமுறை மெய்கண்டதேவர் தம் மாணவர்களுக்கு ஆணவமல இயல்பு பற்றி உபதேத்துக்கொண்டிருக்கும்போது, அச்சுதகளப்பாளரின் குருவான சகலாகம பண்டிதர் அவரிடம் வந்தார்;. தாம் வந்தது, கண்டும் தம்மிடம் மெய்கண்டதேவர் ஒன்றும் பேசாததனால் உள்ளச் செருக்கோடு “ஆணவமல வடிவம் எவ்வாறிருக்கும்?” என்று வினவினார்;, மெய்கண்டதேவர் வினவினவரையே சுட்டிக் காட்டினார். அக்குறிப்பு விடையின் பொருளுணர்ந்து தம் அறியாமை நீங்கப் பெற்று அவரை வணங்க, தமக்கு மெய்ப்பொருளை உணர்த்தியருளும்படி வேண்டி அவருக்குச் சீடரானார்.
மெய்கண்டதேவர் அவருக்கு “அருணந்தி சிவம்” என்னும் தீட்சா நாமஞ் சாத்தி, சிவஞானபோதப் பொருளை உபதேசித்தருளிஞர்.
அருணந்தி சிவாசாரியர், மனவாசகங்கடந்தார், சிற்றம்பல நாடிகள் முதலான நாற்பத்தொன்பது சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து, சிவநல்வினை இயற்றிய மெய்கண்டதேவர் சிலகாலம் நிட்டை கூடியிருந்து. ஒரு ஐப்பசி மாதத்துச் சோதிநாளிலே முத்திபெற்றனர்.
அருணந்தி இவாசாரியர்
சோழதேசத்து நடு நாட்டிலுள்ள திருத்துறையூரிலே முப்பொழுதும் திருமேனி தீண்டும் ஆதிசைவ மரபிலே, சைவூத்தாந்தந் தழைத் தோங்குமாறு ஒருவர் திருவவதாரஞ் செய்தருளினார். அவர் சமய விசேட, நிருவாண தீட்சைகளும் ஆசாரிய அபிஷேகமும் பெற்று வேத சிவாகமம் முதலிய ஞான நூல்களை ஓதியுணர்ந்து, சகலாகம பண்டிதர் என்னும் சிறப்புப் பெயருடையவராய் விளங்கினார்.
அவர் தமது. ஆணைவழி நின்று அச்சுதகளப்பாளர் பெற்ற மெய்கண்டதேவரின் மகிமைகளைக் கேள்வியுற்று, அவரைத் தரிசிக்க விரும்பித் திருவெண்ணெய் நல்லூரை அடைந்தார். அப்பொழுது மெய்சண்டதேவர் ஆணவத்தின் இயல்புகள் பற்றிக் தம் மாணவர்களுக்கு உபதேசஞ்செய்துகொண்டிருந்தார். அங்குவந்த சகலாகம பண்டிதர், தம் வரவுகண்டும் தம்முடன் மெய்கண்டதேவர் ஒன்றும் பேசா இருந்தமையால், மனச்செருக்கோடு அவர் முன் நின்று, “ஆணவத்தின் வடிவம் எவ்வாறிருக்கும்?” என்று வினவினார். மெய்கண்டதேவர் அதற்கு விடையாக அவரையே சுட்டிக்காட்டியதன்மூலம், “இப்படியிருக்கும்” என்று குறிப்பால் உணர்ந்தருளினார். அதனால் செருக்கு அகன்ற சகலாகம, பண்டிதர் மெய்கண்டதேவரின் மகிமையை உணர்ந்து வணங்கி, தம்மைச் சீடராக ஏற்று ஞானோபதேசஞ் செய்தருளும்படி பிரார்த்தித்தார்.
சகலாகம பண்டிதரின் பக்குவநிலையைக்கண்ட மெய்கண்டதேவர், அவருக்குச் சிவஞான போதத்தை உபதேசித்து, “அருணந்திசிவம்” என்னும் தீட்சாநாமஞ்சாத்தி, ‘நீர் இச்சிவஞானபோத நூற்பொருளை விரித்துப் பிற்காலத்தாருக்கு இனிது விளங்குமாறு ஒரு நூல் செய்வீராக” என்று பணித்தருளினார்.
மெய்கண்டதேவரின் ஆணையைச் சிரமேற்கொண்ட அருணந்திசிவாசாரியார், சிவஞானபோதம் சித்திப்பதற்கு வழிசெய்யும் சிறந்த வழிநாலான சிவஞான சித்தியாரையும், இருபா இருபஃது என்னும் மற்றொரு சைவசித்தாந்த நூலையும் அருளிச்செய்தார்.
பின்னர் சிவஞான போதத்தையும் தாம் அருளிச்செய்த சித்தாந்த நூல்களையும் மறைஞானசம்பந்தர் முதலான தம் சீடர்களுக்கு உபதேசித்திருந்து. ஒரு புரட்டாதி மாசத்துப் பூர நட்சத்திரத்திலே சிவபெருமானது திருவடி நிழலெய்தினார்.
மறைஞான சம்பந்தர்
அருணந்தி சிவாசாரியரின் மாணவருள் ஒருவரான மறைஞானசம்பந்தர் திருப்பெண்ணாகடத்திலே, பிராமண குலத்திலே அவதரித்தவர். வேதங்களையும்-சிவாகமங்களையும் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது என்னும் சைவசித்தாந்த நூல்களையும் நன்கு கற்றுணர்ந்து ஞானியாய் விளங்கியவர். இதனால் மறைஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் வழங்குவதாயிற்று. இவர் உமாபதிசிவாசாரியர் முதலிய சீடர்களுக்கு, ஞானோபதேசஞ் செய்தருளிச் சிதம்பரத்தைச் சார்ந்த திருக்களாஞ் சேரியிலே சிலகாலம் மௌன விரதம் பூண்டிருந்து ஒரு ஆவணி மாதத்து உத்தரத் திருநாளிலே சிவபதம் அடைந்தார். இவர் யாதொரு நூலையேனும் அருளிச்செய்யவில்லை எனக் கூறுவர் ஆயின், சித்தாந்த நூலாகக் கருதப்படும் சதகமணிக்கோவை இவரால் அருளப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர்.
உமாபதி சிவாசாரியர்
உமாபதி சிவாசாரியர் தில்லைவாழந்தணர்களுள் ஒருவர் சிதம்பரத்தைச் சார்ந்த கொற்றவன் குடியில் வாழ்ந்துவந்தமையால் கொற்றங்குடி முதலியார் எனவும்படுவர். இவர் வேத சிவாகமங்களையும் மெய்கண்டதேவர் அருணந்தி சிவாசாரியார் ஆகியோர் அருளிய சைவத்தாந்த நூல்களையும் கற்றுத் தெளிந்தவர். தமிழிலே புலமையுடையவர். சிவ பத்தியிலும் அடியார் பத்தியிலும் சிறந்தவர்.
ஒருநாள் இவர் சிதம்பர நடராசப் பெருமானுக்குப் பூசைசெய்த பின் சிவிகையிலே ஏறித் தீவர்த்தி முதலான விருதுகளோடு தமது இருப்பிடத்துக்குச் சென்றார்;. அப்பொழுது இவரது ஆடம்பரத்தைக் கண்ட மறைஞான சம்பந்தர் தம் மாணவரிடத்திலே, ‘பட்ட கட்டையிற் பகற்குருடு போகின்றது பாருங்கள்”என்று குறிப்பாகக் கூறியருளினார். மெய்ஞ்ஞானத்தை உணரும் பக்குவநிலை அடைந்தவரான உமாபதி சிவாசாரியர் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே, அதன் குறிப்புப்பொருளை உணர்ந்து சிவிகையை விட்டிறங்கி, மறைஞானசம்பந்தரை வணங்கினார். பின்னர் அவரிடத்திலே ஞானோபதேசம் பெற்றுச் சீடரானார்.
உமாபதி சிவாசாரியரின் அதிதீவிர பக்குவ நிலையை உலகினர்க்குக் காட்ட விரும்பிய மறைஞான சம்பந்தர், ஒரு நாள் உமாபதி சிவாசாரியருடன் நெசவாளர் இருக்குமிடத்தையடைந்து, அங்குள்ளவர் ஒருவரிடம் நெசவுக்கு வைத்திருந்த கூழை வாங்கிப் பருகினார்.அவர் அருகே மிகுந்த பக்தி உடையவராய்நின்ற உமாபதி சிவாசாரியார் தம் குருவின் முழங்கை வழியாக ஒழுகிய கூழைப் பிரசாதமாகக்கொண்டு இரு கையாலும் ஏந்திப் பருகினார்.
உமாபதி சிவாசாரியரின் இச்செயலை அறிந்த தில்லைவாழ்ந்தணர்கள், அவரது உயர்ந்த மனநிலையை உணராமல் அவரைப் பழித்தது மாத்திரமன்றி, நடராசப்பெருமானுக்கு அவர் பூசை செய்யாதபடி தடையுஞ் செய்தனர். அதனால், உமாபதி சிவாசாரியார் கொற்றவன் குடியிலே போய்த் தங்கியிருந்தார்.
அந்நாளில், சிதம்பரத்திலே நிகழ்ந்த கொடியேற்ற விழாவில்; இறைவனருளாற் கொடி ஏறாமல் தடைப்பட்டது. உமாபதி சிவாசாரியார் அங்கு இல்லாமையாலேயே அது தடைப்பட்டதென்பதை அறிந்ததில்லை வாழ்ந்தணர், அவரிடம் சென்று வணங்கி, அவரை அழைத்து வந்தனர். உமாபதி சிவாசாரியர் நடராசப் பெருமானை வணங்கிக் கொடிக்கவி பாடியருள, ஏறுது நின்ற கொடி ஏறிற்று. இதனால், உமாபதி சிவாசாரியரின் மகிமையைக் தில்லைவாழந்தணர் உணர்ந்து, அவரிடத்திலே பக்தியடையவர்களாய் ஒழுகினர்.
உமாபதி சிவாசாரியர் பாடியருளிய கோயிற்புராணம் என்னும் நூல் அரங்கேற்றமுராமற் பேடகத்துள்ளே இருந்தது. அதனை அரங்கேற்றுவித்தருளத் திருவுளங்கொண்ட இறைவன், தில்லைவாழந்தணரின் கனவிலே தோன்றி, தாம் உமாபதியாரின் பேடகத்துட் பூட்டப்பெற்றிருப்பதாகத் திருவாய் மலர்ந்தருளினார்,
தில்லைவாழந்தணர்கள் பேராச்சரியமடைந்தவர்களாய் உமாபதி சிவாசாரியாரிடம் தாம் கண்ட கனவைக் கூறினார். அவர் இறைவனது திருவருளை வியந்து பேடகத்தைத் திறந்து, கோயிற் புராண ஏட்டுப் பிரதியை எடுத்து அதுவே அங்கு பூட்டப்பெற்றிருந்தது என்று காட்டினார். தில்லை வாழந்தணர் இறைவனது திருவருட் குறிப்பை உணர்ந்து அக்கோயிற் புராணத்தை அரங்கேறச் செய்தனர்.
பெற்றான் சாம்பான் என்னும் சிவபத்தர் ஒருவர் உமாபதி சிவாசாரியரின் சிவபூசை, மாகேசுர பூசைசளுக்குத் தேவையான விறகை நாள்தோறும் கொடுத்து வந்தார். ஒருநாள் அவர் விறகு கொண்டுவரக்காலம் தாழ்ந்தமையால் அமுது சமைக்கக் காலம் தாழ்ந்தது. உமாபதி சிவாசாரியர், அங்ஙனம் காலம் தாழ்ந்ததற்குக் காரணமென்னவென்று தம் மாணவரை வினாவினார் சாம்பான் என்பவரது விறகு உரிய நேரத்தில் வராமையே காரணமென்று மாணவர் கூறினார். விறகு தருபவர் மறுநாள் வந்தவுடன் தமக்குத் தெரிவிக்கும்படி உமாபதி சிவாசாரியர் மாணவர்க்குப் பணித்தார்.
பெற்றான் சாம்பானார் மற நாள் விறகு கொண்டு வருவதற்கு முன் இறைவன் பெரியார் வடிவந்தாங்கி வந்து, அவரிடம் ஒரு சீட்டைக்கொடுத்து, உமாபதி. சிவாசாரியரிடம் அதை அளிக்கும்படி கூறியருளினார். அவர் விறகு கொண்டு போனபோது மாணவர்கள் வரவை உமாபதி சிவாசாரியருக்கு அறிவித்தனர். உமாபதி சிவாசாரியார் “நீர் யாவர்” என்று வினவ, அவர் பெரியவரிடமிருத்து பெற்ற சீட்டைக் கொடுத்தார். அந்தச் சீட்டிலே பின்வரும் திருப்பாடல் இருந்தது.
அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப்-படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை.
இத் திருப்பாடலைப் படித்த ஆசாரியர் இறைவன், திருவருளை வியந்து பெற்றான் சாம்பனாருக்கு நயன தீட்சை செய்து முத்து கொடுத்தருளினார். சாம்பனாரது சுற்றத்தாரும் மனைவியாரும் அதனுண்மையை உணராதவராய் அரசனுக்கு முறையிட்டனர். அரசன் அவர்களை அழைத்துச் சென்று சிவாசாரியரை வினாவியபொழுது, அவர் அத்தீட்சையின் மேன்மையை விளக்கி அவர்கள் முன்னிலையிலே, பக்குவமெய்திய ஒரு முல்லைச்செடிக்கு நயனதீட்சை மூலம் முத்தி கொடுத்தருளினார். யாவரும் உண்மையை உணர்ந்து உமாபதி சிவாசாரியரை வணங்கிச் சென்றனர்.
இறைவன் திருவருளால் இவ்வற்புதங்களைச் செய்தருளிய உமாபதி சிவாசாரியர் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிரரகரணம் என்னும் சைவத்தாந்த அட்டகங்களையும், கோயிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருமுறைகண்ட, புராணம், திருப்பதிகக் கோவை, பௌட்கராகம் வியாக்கியானம் முதலிய நூல்களையும் அருளிச் செய்தனர்.
இவரது மாணவர் நமச்சிவாயத் தேவர் மூதவியோராவர். இந்நமச்சிவாயத் தேவரே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தாபித்து, அவ்வாதீனத்தின் முதற் குருவாய் (சந்நிதானமாய்) விளங்கியவர்.
உமாபதி ஏவாசாரியர் முத்துயடைந்த தினம் சித்திரை அத்தம்.
சித்திரை யத்தம் உமாபதி ஆவணித் திங்கடனில்
உத்திரஞ் சீர்கொள் மறைஞான சம்பந்தர் ஓதுகன்னிச்
சுத்தமெய்ப் பூரம் அருணந்தி ஐப்பசித் சோதிதனில்
வித்தக மெய்கண்ட தேவர் சிவகதி மேவினரே
சமயாசாரியர் – சந்தானாசாரிய அட்டவணை
சமயாசாரியர்
திருப்பெயர் | திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்-1 | திருநாவுக்கரசு நாயனார்-2 | சுந்தரமூர்த்தி நாயனார்-3 | மாணிக்கவாசகர் சுவாமிகள்-4 |
---|---|---|---|---|
1.மறுபெயர்கள் | ஆளுடையபிள்ளையார் காழி வேந்தர், கவுணியர்கோன், சண்பயர்காவலன், முத்தமிழ் விரகர், பரசமயகோளர், காலறாவாயர், சிவஞானக் கன்று, சைவசிகாமணி. | வாகீசர், ஆளுடைய அரசர், தாண்டகவேந்தர், உழவாரப் படையாளி, அப்பர், மருணீக்கியார் | நம்பியாரூரர், திருநாவலூரர், ஆளுடைய நம்பி, வன்றொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருமணக் கோலப் பெருமான், திருந் தொண்டத்தொகையாளி, சிங்கடியப்பன், வனப்பகையப்பன் | திருவாதவூரடிள், மணிவாசகர், கோவை வேந்தர், ஆளுடைய அடிகள் |
2.நாடு | சோழநாடு | திருமுனைப்பாடி நாடு | திருமுனைப்பாடி நாடு | பாண்டி நாடு |
3. ஊர் | சீகாழி | திருவாமூர் | திருநாவலூர் | திருவாதவூர் |
4.குலம் | வைதிகப் பிராமணர் | வேளாளர் | சிவப்பிராமணர் | ஆமாத்தியப் பிராமர் |
5.தந்தையார் | சிவபாவிருதயர் | புகழனார் | சடையனார் | சம்புபாதாசிரியர் |
6. தயார் | பகவதியார் | மாதினியார் | இசைஞானியார் | சிவஞானவதியார் |
7.இல்லாள் | தோத்திரபூரணி | – | பரவை – சங்கிலி | – |
8.முதல் அருள் பெற்ற தலம் | திருப்பிரமபுரம் | திருவதிகை வீரட்டானம் | திருவெண்ணெய் நல்லூர் | திருப்பெருந்துறை |
9.முதற் பாடிய பதிகம் | “தோடுடைய செவியன்” | “கூற்றாயினவாறு” | “பித்தா பிறை சூடி” | – |
10. ஒழுகிய நெறி | கிரியை | சரியை | யோகம் | ஞானம் |
11.அடைந்தமுத்தி | சாமீபம் | சாலோகம் | சாரூகம் | சாயச்சியம் |
12. விளங்கிய அற்புதங்கள் | 1. மூன்றாம் வயதிலே உமாதேவியாரிடம் திருமுலைப் பால் உண்டது 2. சிவபெருமானிடத்திலே பொற்றாளமும் முத்தப் பல்லக்கும் முத்துச் சின்னமும் முத்துக் குடையும் முத்துப் பந்தரும் உலவாக்கிளியும் பெற்றது. 3.வேதாரணியத்தில் திருக்கதவு அடைகப் பாடியது. 4. பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது. 5. பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. 6.சமணரெதிரே தேவாரத் திருலேட்டை அக்கினயிலிட்டுப் பச்சையாய் எடுத்தது. 7.வைகையிலே தேவாரத் திருவேட்டை இட்டு எதிரேறும்படி செய்தது. 8.புத்த நந்நதியின் தலையிலே இடிக்கச் செய்தது 9.ஆற்றிலே தாமும் அடியாரும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்ந்தது. ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கியது. 10. இறந்த பெண்ணினது எலும்பைப் பெண்ணாக்கியது. 11.விடத்தினாலிறந்த செட்டியை உயிர்ப்பித்தது. 12.தமது திருக்கல்யாணந் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையும் அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
|
1. சமணர்களாலே ஏழு நாள் சுண்ணாம் பறையிலே பூட்டப்பட்டிருந்தும் வோகது பிழைத்தது.
2.சமணர் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாகாது பிழைத்தது.
|
1. செங்கற்கள் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
2. சிவபெருமான் கொடுத்துருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்திலுள்ள ஆற்றிலே போட்டுத் திருவாரூரிலுள்ள குளத்திலெடுத்தது. 3. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. 4. முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம் முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது. வெள்ளை யானையில் ஏறிக் கொண்டு திருக் கைலாசத்துக்கு எழுந்தருளியது. |
1. சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படிக்கும் மண் சுமந்து அடிபடும் படிக்கும் நடந்து கொண்டது.
2. புத்தர்களைத் தருக்கத்தல் வென்று ஊமைகளாக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது. 3. பிறபி தொட்டு ஊமையாயிருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர் வினாவிய வினாக்களுக்கு விடை செல்லும்படி செய்தது. 4. தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளிய வந்து எழுதும் படி பெற்றுக் கொண்டது. 5.எல்லாருங் காணக் கனக சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது. |
13.சமகாலத்தில் வாழ்ந்த நாயன்மார் | திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், சிறுதொண்டர், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், குங்குலியக் கலயர், குலச்சிறையார், நின்றசீர்நெடுமாறர். மங்கையர்க்கரசியார் | சம்பந்தர், அப்பூதியடிகள், சிறுத் தொண்டர், நீலநக்கர், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், குங்குலியக்கலயர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியார். | லிறன்மிண்டர், பெருமிழலைக் குறும்பர், ஏயர்கோன் கலக்காமர், சோமாசிமாறர், சேரமான் பெருமாள், நரசிங்க முனையரையர், கோட்புலியார், சடையனார், இசைஞானியார், மானக்கஞ்சாறர். | – |
14.அவராற் பாடப் பெற்றோர் | சண்டேசுரர், கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், நீலநக்கர், முருகநாயனார், சிறுத்தொண்டர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், தில்லைவாழந்தணர், இராவணன், இராமர் | சம்பந்தர், அப்பூதியடிகள், கோச்செங்கட் சோழர், சாக்கியர், இராவணன், இராமர். | ஏனை நாயன்மார் அனைவரும் (திருத்தொண்டத் தொகையில்…) இராணவன், இராமர் | சண்டேசுரர், கண்ணப்பர், மண்டோதர், இராவணன் |
15.பாடிய பதிகத் தொகை | 16000 | 49000 | 38000 | – |
16.(அ) இன்றுள்ள பதிகத் தொகை
(ஆ) இன்றுள்ள பாடங்கள் |
384
4137 |
312
3066 | 100
1036 | 51
திருவாசகம் 658 திருக்கோவையார் 400 |
17. திருமறை வகுப்பு | முதலாம் இரண்டாம் மூன்றாம் திருமறைகள் | நான்காம் ஐந்தாம் ஆறாந் திருமுறைகள் | ஏழாந் திருமுறை | எட்டாந் திருமுறை |
18.இறுதியாகப் பாடிய பதிகம் | “காதலாகி” | “எண்ணுகேனென் சொல்லி” | “தானெனை முன்” | – |
19.முத்தி பெற்ற திருத்தலம் | திருப் பெருமண நல்லூர் | திருப்புகலூர் | திருவஞ்சைக்களம் – (திருக்கயிலை, நொடித்தான்மலை) | தில்லைச் சிற்றம்பலம் |
20.முத்தியடைந்த வயது | 16 | 81 | 18 | 31 |
21.முத்தியடைந்த தினம் | வைகாசி மூலம் | சித்திரைச் சதயம் | ஆடிச் சோதி | ஆனி மகம் |
22.காலம் | கி.பி. 7ஆம் நூற்றாண்டு | கி.பி. 7அம் நூற்றாண்டு | கி.பி. 9ஆம் நூற்றாண்டு | கி.பி. 9 நூ. அல்லது 3 நூ. |
23. நாயனார் வரலாறு கூறும் நூல்கள் | பெரியபுராணம், பதினோராந் திருமுறைப் பிரபந்தங்கள், சீகாழித் தலபுராணம், ஆச்சாபரத் தலபுராணம். | பெரிய புராணம் | பெரியபுராணம், திருநாவலூர்ப் புராணம், திருவாரூர் புராணம், பேரூர்ப் புராணம், திருத்துருத்திப் புராணம், அவிநாசிப் புராணம். | திருவிளையாடற் புராணம், திவாதவூரடிகள் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், திருவுத்தரகோசமங்கைப் புராணம் |
மெய்கண்ட தேவர் | அருணந்தி சிவாசாரியர் | மறைஞானசம்பந்தர் | உமாபதி சிவாசாரியர் | |
---|---|---|---|---|
ஊர் | திருப்பெண்ணாகடம் (கடந்தை) | திருத்துறையூர் | திருப்பெண்ணாகடம் | கொற்றவன் கடி |
குலம் | வேளாளர் | ஆதி சைவர் | பிராமணர் | தில்லைவாழந்தணர் |
வேறு திருப்பெயர் | சுவேதனப் பெருமாள் திருவெண்காடர் | சகலாகமபண்டிதர் | – | கொற்றங்குடி முதலியார், கொற்றங்குடியடிகள் |
குரு | பரஞ்சோதி முனிவர் | மெய்கண்ட தேவர் | அரணந்தி சிவாசாரியர் | மறைஞான சம்பந்தர் |
சீடர் | அருணந்தி சிவாசாரியர், மனவாசகம் கடந்தார், சீகாழிச் சிற்றம்பல நாடிகள் முதலான 49 மாணவர் | மறைஞான சம்பந்தர் | உமாபதி சிவாசாரியர் | – |
விளங்கிய அற்புதங்கள் | – | – | – |
1.பெற்றான் சமாபானுக்கு முத்திகொடுத்தருளியமை
2.முள்ளிச்செடிக்கு முத்தி கொடுத்தரளியமை 3.சிதம்பரத்திலே ஏறாது நின்ற கொடியைக் கொக்கவிபாடி ஏறச் செய்தருளியமை 4.கோயிற் புராணத்தை அரங்கேற்றச் செய்தமை |
அருளிச்செய்த நூல்கள் | சிவஞானபோதம் | சிவஞான சித்தியார் இருபா இருபஃது | – | சிவப்பிரகாசம், தருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், கோயிற் புராணம், பௌட்கராமக விருத்தி, சேக்கிழார் புராணம், திருமுறை கண்ட புராணம், திருப்பதிக்கோவை, சிவநாமக் கவிவெண்பா |
முத்திபெற்ற தினம்
காலம் |
ஐப்பசிச் சுவாமி
12 நூற்றாண்டு |
புரட்டாதிப் பூரம்
13ஆம் நூற்றாண்டு |
ஆவணி உத்திரம்
13ஆம் நூற்றாண்டு |
சித்திரை அத்தம்
14ஆம் நூற்றாண்டு |
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.