சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருக்கோவில் விளக்கம்

வழிபாட்டு முறை முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வழிபடுஞ் சமயம் சைவ சமயம் எனப்படும். சிவபெருமானை வழிபடுபவர்கள் சைவசமயிகள் எனப்படுவர். சைவ சமயிகளுக்கு ஆலய வழிபாடு மிகவும் இன்றியமையாதது. சிவபெருமான் எழுந்தருளி அருள்புரியும் இடம் கோயில் எனப்படும். இத்தகைய கோயில்களுக்கு நாள்தோறுஞ் சென்று முறைப்படி வழிபாடு செய்தல் வேண்டும். நாள்தோறுஞ்
செல்ல முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளிலும், வேறு விரத நாட்களிலுமாவது தவறாது சென்று தரிசனஞ் செய்தல் வேண்டும். திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, பிரதோஷம் பூரணை, அமாவாசை, திருவாரதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசட்டி என்பன சிவாலய தரிசனத்திற்குரிய சிறப்பான
புண்ணிய காலங்களாகும். கோயில் பரிசுத்தமான இடம். ஆதலால் அங்கு செல்வோர் தம் உடலையும், உள்ளத்தையுந் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்கு உள்ளத்தையும் அழுக்காக்குவதோடு ஆலயத்தின் புனிதத்தையுங் கெடுக்கும். ஆசௌசம் உடையவரும், அசுத்தமான. பொருளைத் தீண்டியவரும்,
நீராடாதவரும், ஆசாரமில்லாதவர்களாவர். ஆசையால் இவர்கள் கோயிலுக்குள்ளே செல்லுதல் தகாது.

திருக்கோயில் வழிபாட்டு முறை: கோயிலுக்குக் செல்வோர் உணவு கொள்ளுமுன்னரே நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடைகளைத் தரித்து, விபூதியும் உருத்திராக்கமும். அணிந்து, சந்தியாவந்தனம் முதலியன முடித்துச் சில நாமங்களை உச்சரித்துக்கொண்டு மெல்லமெல்ல நடந்துசெல்ல வேண்டும், திருக்கோயிலைச் சமீபித்ததும் கை கால் கழுவி, ஆசமனம் பண்ணி, தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்து வணங்கி, சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அங்கே கொடித்
தம்பத்தையும் பலிபீடத்தையும் நந்திதேவரையும் வணங்கிக் கொடித்தம்பத்திற்கு இப்பால் ஆண்கள் அட்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்தல் வேண்டும். அட்டாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதலாகும். இங்ஙனம் வணங்கும்போது பூமியிலே சிரசை வைத்து மார்பு பூமியிற்
படும்படி வலக்கையை முன்னும், இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதை முன்னும், இடக்காதைப் பின்னும் பொருந்தச்செய்தல் வேண்டும். பஞ்சாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்த வணங்குதலாம். இவை தவிரத் திரயாங்கவணக்கமும் செய்யப்படுதல் உண்டு. திரயாங்க வணக்கமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்து. வணங்குதலாம். இது ஆண், பெண் இருபாலாருக்கும் உரியது. இவ்வணக்கங்களும், வீதீவலம் வருதலும் ஒருதரமேனும், இருதரமேனும் செய்தல் குற்றமாம். மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பதுதரமாயினும் பன்னிரண்டு தரமாயினும் செய்தல் வேண்டும். கொடித்தம்பத்திற்கு இப்பால் வணங்கிய பின் இரண்டு கைகளையும் குவித்துத் திருவைந்தெழுத்தை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்லமெல்ல வைத்துக் குறைந்தது மூன்றுதரமாயினும், கூடியது இருபத்தொருதரமாயினும் வீதிவலம் வருதல் வேண்டும். அங்ஙனம் வந்து மீண்டும் சந்நிதியிலே வணங்குதல் வேண்டும். ஆலயத்திலுள்ள மூர்த்திகளை வணங்குங்கால் முன்பு துவாரபாலகரை
வணங்கிப் பின்பு திரு தந்திதேவரை வணங்கு, “பகவானே உம்முடைய திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்துப் பயன் பெறும் பொருட்டு அநுமதி தந்தருளும்” என்று பிரார்த்தித்துக்கொண்டு உள்ளே போய், முன் விக்கினேசுவரரைத் தரிசித்தல் வேண்டும். பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து அர்ச்சனை செய்வித்து விபூதி வாங்கித் தரித்துக்கொள்ள வேண்டும். அதன்பின் முறையே சபாபதி, (நடராசர்) தட்சணாமூர்த்தி,
சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் சுப்பிரமணியர் முதலியோரையும் சமயகுரவர் நால்வரையும் வணங்குதல் வேண்டும்.

வணங்கும்போது, இரண்டு கைகளையும் மார்பிலேனும் சிரசிலேனும் குவித்துக்கொண்டு, தேவார திருவாசகம் போன்ற திருமுறைகளை மனங்கசிந்துரு ஓதுதல் வேண்டும். விக்கனேசுவரரைத் தரிசிக்கும்போது முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்றுமுறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு மூன்றுமுறை தாழ்ந்து எழுந்து
கும்பிடுதல் வேண்டும். இப்படிக் குட்டுவதனால் அவ்விடங்களிலுள்ள நரம்புகளில் அமிர்தம் சுரப்பதாகவும், தாழ்ந்தெழுவதினால் அவ்வமிர்தம் உடல் முழுவதும் செல்வதாகவும் பெரியோர் கூறுவர். இவ்வணக்கம் தோப்புக்கரணம் அல்லது தோப்புக்கண்டம் என வழங்கும். இறுதியாகச் சண்டேசுரரைத் தரிசித்துக் கும்பிட்டுத் தோத்திரஞ் செய்து மூன்றுமுறை கைகொட்டிச் சிவதரிசல பலனைத் தந்தருளுமாறு பிரார்த்தித்து, வலப்பக்கமாக வந்து சிவசந்நிதியை அடைந்து, இடபதேவருடைய
கொம்பின் நடுவாகச் சிவலிங்கப்பெருமானைத் தரிசித்துப் பலிபீடத்திற்கு இப்பால் மும் முறை வணக்கஞ் செய்து எழுந்து, அமைதியான ஓரிடத்தில் இருந்து திருவைந்தெழுத்தை இயன்றமட்டும் உருச்செபித்துக்கொண்டு சிவ சிந்தனையோடு அமைதியாக வீட்டிற்குச் செல்லுதல் வேண்டும்.

திருக்கோயிலிலே செய்யத்தகாத குற்றங்கள்: ஆசாரமில்லாது போதல், கால்கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல் மூக்குநீர் சிந்துதல், பாக்குவெற்றிலை உண்டல், போசனம் பண்ணுதல், ஆசனத்திருத்தல், நித்திரை செய்தல், கால்களை நீட்டிக்கொண்டிருத்தல், மயிர்கோதி முடிதல், சூதாடுதல்,
சிரசிலே ஆடை தரித்துக்கொள்ளல், தோளிலே சால்வை இட்டுக்கொள்ளுதல், பாதரட்சை
இட்டுக்கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், தூபி, கொடித்தம்பம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவற்றின் நிழலைமிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், சண்டையிடுதல், விளையாடுதல் சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் இடையே வணங்குதல், திரையிட்டபின்
வணங்குதல், அபிடேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல், முற்பக்கத்தும், பிற்பக்கத்தும் வணங்குதல், திருவிளக்கு அணையக் கண்டும் தூண்டாதிருத்தல், திருவிளக்கு இல்லாதபோது வணங்குதல், மருட்பாக்களை ஒதுதல் முதலியனவாம்.
இருக்கோயில் வழிபாட்டால் வரும் பலன்கள்.

1) திருவீதியை வலம்வருவதனால் ஆன்மாவில் தங்கியிருக்கும் பாவங்கள் தேய்ந்து சிவ வியாபகம்
உண்டாகும்.
2) நிலத்தில் வீழ்ந்து வணங்குவதனால் ஆன்ம தற்போதம் நீங்கி, எண்குணம் விளங்கச் சிவத்தோடு
அத்துவிதக்கலப்பு உண்டாகும்,
3) காலையில் திருவீதியை வலம் செய்வதால் நோய் நீங்கும். உச்சிப்பொழுதில் வலம் வந்தால்
விரும்பிய சத்து உண்டாம். சாயங் காலத்தில் வலம் செய்வதால் சர்வ பாவநீக்கம் உண்டாம்.
அர்த்த சாமத்தில் வலம் செய்வதனால் – வீடுபேற்றுச் சித்தி உண்டாம்.
4) அங்கப்பிரதட்சணம் செய்வதனால் தீவினைகள் எல்லாம் நீங்கப்பெற்று முத்தி சித்தியாகும்.
5) அர்ச்சனை செய்வித்தல்: ஆன்மாவைப் பிடித்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆய
மும்மலங்களையும் அழித்தற் பொருட்டு அவற்றின் இயல்பைக் குறிக்கும் நிவேதனப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து, ஞானாசாரியராகிய அர்ச்சகரினால் ஓதப்படும் வேதமந்திரங்களினால் திருவருட்சத்தி தோன்றி இவற்றை அழிக்க, நிவேதனப் பொருட்களில் சிவஞானம் தோன்றம், அந்த ஞானப்பிரகாசத்தில் சிவத்தைக் காணலாம். அர்ச்சனைப் பொழுதில் காட்டப்படும் கர்ப்பூர தீபக் காட்சி இதனைக் குறிப்பதேயாம். இவ்வாறு திருவருள் பதிக்கப்பட்ட நிவேதனப் பொருட்களையே பிரசாதமாக வழங்குவர். அப்பிரசாதத்தை யாம் வாங்கி அணிவதனாலும், உட்கொள்வதனாலும் எம்மில் திருவருளைப் பதித்துக்கொள்கின்றோம் என்பது
பொருளாம்.
6) சிவாசாரியரை வணங்கி விபூதி பெறுதல்: இறைவனிடமிருந்து பிரிந்து திருவருளைப்
பெறுதலுக்குச் சமமாம்.

திருக்கோயிலிலே செய்யத்தகும் சிவபுண்ணியத் திருத்தொண்டுகளும் பலன்களும் :

1) இருவலகிடுதல் : திருச்சந்நிதியிலும், திருவீதியிலுமுள்ள குப்பைகளை மெல்லிய துடைப்பத்தினால்
கூட்டி ஒதுக்குவது திருவல கிடுதல் எனப்படும். இது செய்வோர் காமம், வெகுளி, மயக்கம், பொய்
ஆகிய மனமாயைகளை நீக்கப் பரிசுத்தர்களாய் விளங்குவர்.
2) திருமெழுக்கடுதல்: கோபம் முதலிய செத்தைகளை ஒருங்கே நீக்தி, தத்துவஞானம் என்னும் நறுஞ்
சாணத்தைக்கொண்டு, அன்பென்னும் சலத்தோடு கலந்து திருமெழுகிடுபவர் மனக்கோயிலில்
சிவலிங்கம் தோன்றப்பெறும்.
3) அருட்பா ஓதல் : சிவபெருமானது திருமேனி நாதவுருவானதென்று சுருதி கூறுகின்றது.
அவ்வுண்மையை விளக்கவே அவரின் திரு மூன்னிலையில் அருட்பாக்கள் பாடப்படுகின்றன. இது
செய்வோர் உண்மைஞானம் விளங்கப்பெற்று முத்தியடைவர் .
4) தூபந்தாங்குதல்: ஆணவமல நீக்கத்தைப் பெறுவர்.
5) திருவிளக்கேற்றுதலல், தீபந்தாங்குதல் : சிவஞானத்தைப் பெறுவர்.
6) சாமரை இரட்டுதல்: பல நிவாரணமும் திருவருட்செல்வமும் அடைவர்.
7) குடை பிடித்தல்: ஆஞ்ஞாசக்கரத்தையும் பலத்தையும் அடைவர்.
8) வாகனந் தாங்குபவர் : கணநாதராய் திருக்கைலாயத்தை அடைந்து இன்புற்றிருப்பர்.

முக்கிய குறிப்பு :
1.பகல் 15 நாழிகை (12 மணி) யாகிய உச்சவேளைக்குப்பின் சூரியன் மறைவதற்குமுன் தரிசிக்கச் சென்றால், மேற்கே (சூரியன் இருப்பதனால்) காலை நீட்டி வணங்கக்கூடாது. ஆகையால் அட்டாங்க பஞ்சாங்க வணக்கஞ் செய்யாமல், நின்றபடி இரண்டு கைகளையும் குவித்து உச்சிமேல் வைத்துக்கொண்டு வணங்குதலாகிய திரயாங்க வணக்கமே செய்து தரிசனஞ் செய்தல் வேண்டும். சூரிய கிரகணம், மாதசங்கிராந்தி (மாதப்பிறப்பு), மற்றும் புண்ணியகாலங்கள் பிற் பகலில் நேரும்போது ஆலய தரிசனம் பிற்பகலில் செய்ய நேரிடும் என அறிக.

2. வீதிவலஞ் செய்யும் பிரகாரத்திலே (ஆவரணத்திலே) தூபியின் நிழலேனுங் கொடிமரத்தின் நிழலேனும் இருந்தால், அவற்றை மிதியாமற் செல்லுதல் வேண்டும். அஃது இயலாதபோது அந் நிழலில் மூன்று கூறுகள் தலைப்பக்கத்திலே நீக்க, எஞ்சிய ஏனை இரண்டு கூறுகளுள்ள இடத்திலே செல்லல் வேண்டும். ஆனால் சுவாமி உற்சவங்கொண்டருளுங் காலத்திலே சுவாமியுடன் செல்லும் பொழுது அந்நிழலிருப்பினும் அவ்வாறு நீக்காது செல்லலாம். அபிடேக நிவேதன காலத்திலே உட்பிரகாரத்திலே பிரதட்சணம், வணக்கம், தோத்திரம், செபம் முதலானவை செய்தல் ஆகாவாம்.

3. பிரமசாரிகள் வலமாகவும், கிருகஸ்தரும், வானப்பிரஸ்தரும் வலம் இடம் ஆகிய இரு முறையினாலும், சந்நியாசிகள் இடமாகவும் பிரதட்சணஞ் செய்யக்கடவர். பிரதட்சணஞ் செய்யும் பிராகாரத்தில் உள்ள பலிபீடத்தையும் இடபத்தையும் சேர்த்துப் பிரதட்சணஞ் செய்தல் வேண்டும். குறுக்காகச்செல்லக்கூடாது.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.