சமீபத்திய செய்தி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எழில் கொஞ்சும் இயற்கை அரண்களுடன் அமைந்த அழகிய நகரமான திருகோணமலையில் உள்ள சுவாமி மலையில் திருக்கோணஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அதுமட்டுமின்றி சைவர்களின் முதன்மையான மன்னனாக கருதப்படும் இராவணன் வழிப்பட்ட தளமாகவும் இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. அதற்கு சான்றாக அங்குள்ள இராவணன் வெட்டு இன்று வரை பார்வையிடக் கூடியதாகவுள்ளது. அத்துடன் அதற்கருகில் இராவணன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் 18 மகா சக்தி பீடங்கள் உள்ளமை விசேட அம்சமாகும். இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குவதுடன், உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான ஆலயமாகவும் கருதப்படுகிறது. இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் இக்கோயிலைக் கட்டினான் என சான்றுகள் கூறுகின்றன.
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்தழித்ததாக கூறப்படுகிறது. மேலும் பழைய திருத்தலம் அன்றைய நாட்களில் ஏற்பட்ட கடற்கோள் ஒன்றினால் கடலுக்குள் சென்றுவிட்டது என்றும், போர்த்துக்கேயரிடம் இருந்து மீட்க நினைத்த சில விக்கிரகங்களை பூசகர்கள் கடலுக்குள் இட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இன்று வரையில் மூல விக்கிரருக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்படட்டதன் பின்னர் கடலுக்குள் இருப்பதாக நம்பப்படும் பழைய கோயிலுக்கும் பூ தூவி தீபாராதனை காட்டப்படுவது வழக்கமாகவுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு குளக்கோட்டன் மன்னனால் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
திருக்கோணேச்சர ஆலய மூர்த்தி கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது என்பதாகும். தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.
இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. ஆலய மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.