சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

மருதமலை முருகன் ஆலயம்

“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை ஒலிக்கவிடாத ஆலயங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அருணகிரி நாதரால் பாடல் பாடப்பட்ட இந்தியாவின் கோவையில் அமைந்துள்ள மருதமலை முருகன் ஆலயம் உலகளவில் மிகவும் பிரபலமானது. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் இந்த மருதமலை முருகன் ஆலயம்.

மருதமலை முருகன் ஆலயத்தின் பூசைகள் மற்றைய ஆலயங்களிலும் பார்க்க வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றன. அதேபோல ஆலய அமைப்பும் சில மாறுபாடுகளை கொண்டுள்ளன. முருகனின் செயற்பாடுகளுக்கு ஏற்றால் போல அமைந்துள்ளமையினாலும், வித்தியாசங்கள் காணப்படுவதனாலும், முருகனின் அருள் இங்கே கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

மன அமைதி தரும் மருதமலை முருகன் கோவில்

“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது.

அர்த்தஜாம பூஜை

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படும். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

பாம்பாட்டி சித்தர்

மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னிதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடியும் வைத்து இவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் சிவலிங்கம், நாகர் திருமேனி கள் உள்ளன. முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னிதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

பாம்பு முருகன்

பாம்பாட்டி சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் ஒன்று காணப்படுகிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இந்த நாகத்தை முருகப்பெருமானாகவே பாவித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும்.

பஞ்ச விருட்ச விநாயகர்

பொதுவாக அரச மரத்தின் அடியில் தான் விநாயகப்பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்து மரங்கள் இணைந்த ஒரே மரத்தின் அடியில் இருப்பதால் இவரை, ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். இவருக்கு அருகில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்தபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

மருதாச்சல மூர்த்தி

மருத மரங்கள் நிறைந்ததும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருள்பவர் என்பதால், இத்தல முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. மருத மரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருத மரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமியின் அபிஷே கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சோமாஸ்கந்த தலம்

சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, ‘சோமாஸ்கந்த அமைப்பு’ என்பார்கள். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில் தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் (சிவன்) சன்னிதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை (அம்பாள்) சன்னிதியும் உள்ளன.

தம்பிக்கு உகந்த விநாயகர்

மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி இருக்கிறது. இங்கு விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு, உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னிதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது சிறப்பம்சம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

குதிரையில் வந்த முருகன்

முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோவில்களில் அவரை விழாக் காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோவிலில் திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார். அதோடு திருடர்களை பாறையாகவும் மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்’ என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

ஆதி முருகன்

புராதனமான சிவன் கோவில்களில் சிவன், சுயம்பு லிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் ஒரு பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதி மூர்த்தி ஆவார். இவரது சன்னிதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் பக்தர்கள் இவருக்கு அதிகளவில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.