சமீபத்திய செய்தி
இலங்கையின் வடபகுதியில் தமிழர்களின் இராசதானியாகவும், 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இடம் நல்லூர் ஆகும்.
இந்த ஆலயம் 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகனால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 15ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது. அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையையொட்டிய பகுதியில் பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர். மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள் பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறுவதில், நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.
இதன் வருடாந்த மகோற்சவம் ஆடி ஆமாவாசையிலிருந்து 6ஆம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது. அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா, கற்பூரத்திருவிழா, தைப்பூசம், சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிடேகக் கந்தன் எனவும், செல்வச்சந்நிதி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன. மிக முக்கியமாக நல்லூரான் ஆலயத்தின் பற்றுச்சீட்டு இன்றுவரை ஒரு ரூபாவிற்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ஆம்ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டது. முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலங்களில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டிய நடனங்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் என்பன நடைபெற்றுகின்றன. பஜனை படிக்கம் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.