சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட் படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல் உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ் சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 1
விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்கு சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும் அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ் சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 2
வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்கு சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும் பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல் தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 3
வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்கு வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும் நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்டலை தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4
வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்கு காலற் கடந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை மாலைப் பிறையும் மணிவா யரவும் விரவியெல்லாஞ் சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 5
வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்கு சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும் ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடுந் தாழிட் டிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 6
விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதங் கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத் தண்டார் இருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 7
விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 8
வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங் குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 9
வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்கு சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும் பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல் சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 10
விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல் சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 11
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.