சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால் பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே. 1
பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ் செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே வெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே. 2
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார் வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள் தம்மருங் கிற்கிரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார் விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே. 3
மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்ற தியானுடைச் சில்குறை ஒன்றுள தால்நறுந் தண்ணெருக்கின் தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழுங் கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே. 4
ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச் சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகை வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே. 5
படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ் சுடலைப் பொடியு மெல்லா முளவேயவர் தூயதெண்ணீர்க் கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார் நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே. 6
காளங் கடந்ததொர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில நாளங் கடிக்கொர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. 7
சுவாமி:வீரட்டானேஸ்வரர்;அம்பாள்:திரிபுரசுந்தரி. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.