சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.092 சிந்திப் பரியன

திருச்சிற்றம்பலம்

சிந்திப் பரியன சிந்திப் 
  பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி 
  கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை 
  தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ 
  யாறன் அடித்தலமே.   1 
  
		
இழித்தன ஏழேழ் பிறப்பும் 
  அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை 
  யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி 
  வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ 
  யாறன் அடித்தலமே.   2 
  
		
மணிநிற மொப்பன பொன்னிற 
  மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் 
  பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் 
  தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை 
  யாறன் அடித்தலமே.   3 
  
		
இருள்தரு துன்பப் படல 
  மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் 
  நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் 
  கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ 
  யாறன் அடித்தலமே.   4 
  
		
எழுவாய் இறுவாய் இலாதன 
  வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன 
  மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன 
  மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   5 
  
		
துன்பக் கடலிடைத் தோணித் 
  தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் 
  திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி 
  செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   6 
  
		
களித்துக் கலந்ததொர் காதற் 
  கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் 
  பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி 
  யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ 
  யாறன் அடித்தலமே.   7 
  
		
திருத்திக் கருத்தினைச் செவ்வே 
  நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத் 
  தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு 
  விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ 
  யாறன் அடித்தலமே.   8 
  
		
பாடும் பறண்டையு மாந்தையு 
  மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ் 
  கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம் 
  நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   9 
  
		
நின்போல் அமரர்கள் நீண்முடி 
  சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் 
  தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட 
  இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ 
  யாறன் அடித்தலமே.   10 
  
		
மலையார் மடந்தை மனத்தன 
  வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் 
  மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன 
  பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ 
  யாறன் அடித்தலமே.   11 
  
		
பொலம்புண் டரீகப் புதுமலர் 
  போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை 
  யாவன பொன்னனையாள்
சிலம்புஞ் செறிபா டகமுஞ் 
  செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   12 
  
		
உற்றா ரிலாதார்க் குறுதுணை 
  யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை 
  யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி 
  வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   13 
  
		
வானைக் கடந்தண்டத் தப்பால் 
  மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் 
  செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே 
  யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   14 
  
		
மாதர மானில மாவன 
  வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு 
  வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன 
  துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   15 
  
		
பேணித் தொழுமவர் பொன்னுல 
  காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் 
  கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் 
  போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ 
  யாறன் அடித்தலமே.   16 
  
		
ஓதிய ஞானமும் ஞானப் 
  பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு 
  மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு 
  மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ 
  யாறன் அடித்தலமே.   17 
  
		
சுணங்கு முகத்துத் துணைமுலைப் 
  பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் 
  வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் 
  பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ 
  யாறன் அடித்தலமே.   18 
  
		
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் 
  போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப் 
  பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ 
  கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ 
  யாறன் அடித்தலமே.   19 
  
		
வலியான் றலைபத்தும் வாய்விட் 
  டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை 
  யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் 
  னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ 
  யாறன் அடித்தலமே.

சுவாமி:செம்பொற்சோதீசுவரர்;அம்பாள்:அறம்வளர்த்தநாயகி.20

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.