சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங் கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும் அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. 1
செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும் வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும் மந்தமாம் பொழிற் பழனை மல்கிய வள்ளல் போலும் அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே. 2
கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும் எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும் பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய அண்ணலார் எம்மை யாளும் ஆலங்காட் டடிக ளாரே. 3
காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந் தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலுங் கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய ஆறிடு சடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. 4
பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங் கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும் பேர்த்துமோ ராவ நாழி அம்போடுங் கொடுப்பர் போலுந் தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே. 5
வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங் காட்டில்நின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலும் பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார் ஆட்டினார் அரவந் தன்னை ஆலங்காட் டடிக ளாரே. 6
தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும் நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலுங் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய ஆளுடை யண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே. 7
கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே. 8
வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் பெற்றமே உகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும் அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. 9
மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்க ஒத்தினார் திருவி ரலால் ஊன்றியிட் டருள்வர் போலும் பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய அத்தனார் நம்மை யாள்வார் ஆலங்காட் டடிக ளாரே.
சுவாமி : ஊர்த்ததாண்டவேசுவரர்; அம்பாள் : வண்டார்குழலியம்மை. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.