சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன் வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செலலு மஞ்சிப் பாதமே சரண மென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே. 1
வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடு கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபல் தேவ ரஞ்சி அடைந்துநும் சரண மென்ன அருள்பெரி துடைய ராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே. 2
அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன் வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித் தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே. 3
அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று உரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ் சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவி னாரே. 4
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத் தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே. 5
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்து பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக் கூர்மழு வொன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத் தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே. 6
மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமில் லமர ரேத்த ஆயிர முகம தாகி வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே. 7
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே. 8
நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா தொக்குமென் மலர்க்கண் ணென்றங் கொருகணை யிடந்து மப்பச் சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே. 9
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச் சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச வியன்பெற எய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
சுவாமி:சாயவனேசுவரர்;அம்பாள்:குயிலின்நன்மொழியம்மை.10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.