சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி யாரையு மேலு ணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப் பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக் காரிகை அஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே. 1
முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே. 2
மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி அகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன் உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே. 3
அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி உந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன் பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச் சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே. 4
தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக் கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும் எடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்க அடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே. 5
நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று நீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான் தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே. 6
பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக் கத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார் முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே. 7
பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப் புக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான் மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே நக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே. 8
நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு பாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகி நீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்று ஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே. 9
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத் தென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையை முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட அங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே.
சுவாமி:மறைக்காட்டுமணாளர்;அம்பாள்:யாழைப்பழித்தமொழியம்மை.10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : மறைக்காடு
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.