சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல் தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல் அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே. 1
சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங் கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே. 2
கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை நம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார் வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே. 3
மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ் செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப் பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக் கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே. 4
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்த தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார் வரிவரால் உகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலி அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே. 5
புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின் சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத் துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை அள்ளலைக் கடப்பித் தாளும் அதிகைவீ ரட்ட னாரே. 6
நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர் கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்குங் கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால் ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே. 7
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார் ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்க லாகார் நாணிலார் ஐவ ரோடும் இட்டெனை விரவி வைத்தார் ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே. 8
தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிர லதனை யூன்றிச் சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.
சுவாமி:வீரட்டானேஸ்வரர்;அம்பாள்:திரிபுரசுந்தரி.10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : நடுநாடு
தலம் : அதிகை வீரட்டானம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.