சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும் மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே. 1
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னி ஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம் நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே நீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே. 2
சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்குஞ் சென்னி உடையனா ருடைத லையில் உண்பதும் பிச்சை யேற்றுக் கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே அடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 3
பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னி மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச் செய்யெரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே. 4
ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப் பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம் நாதனார் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே காதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே. 5
ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப் பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரம மூர்த்தி காரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே பேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே. 6
முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி மதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகும் மதத்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே கதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே. 7
மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா எறிக்குஞ் சென்னி இறைவனார் எம்பி ரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே அறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 8
விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா எறிக்குஞ் சென்னி நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக் கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே. 9
பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்குஞ் சென்னி காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறி ஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே நீலஞ்சேர் கண்ட னார்தாம் நீண்டெரி யாடு மாறே. 10
மதியிலா அரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி நெதியன்றோள் நெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி : மூலத்தானநாதர், சபாநாதர்; அம்பாள் : சிவகாமியம்மை. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : கொல்லி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.