சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் அந்தம் இல்லா அடிகள் அவர்போலும் கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் ஆவ ரென்னும் அடிகள் அவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. 2
பங்க யங்கள் மலரும் பழனத்துச் செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் மிறையாரே. 3
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் உரையின் நல்ல பெருமா னவர்போலும் விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. 4
பவழ வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர் அழக ரென்னும் அடிகள் அவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. 5
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 6
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் ஆர நின்ற அடிகள் அவர்போலும் கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. 7
மலையத னாருடை யமதில் மூன்றும் சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த் தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. 8
நாட வல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் ஆட வல்ல அடிகள் அவர்போலும் பாட லாடல் பயிலும் பரமரே. 9
குண்டு முற்றிக் கூறை யின்றியே பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே. 10
மாட மல்கு மதில்சூழ் காழிமன் சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் நாட வல்ல ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பரவி வாழ்மினே.சுவாமி : சிவலோகநாதர்; அம்பாள் : சொக்கநாயகி. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : புன்கூர்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.