சமீபத்திய செய்தி
நாயன்மார் வரலாறு
ஒன்பதாம் திருமுறை
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
சோழ வளநாட்டில் காவிரியின் தென்கரையில் திருவை யாற்றுக்கு அருகிலுள்ளது, திருப்பூந்துருத்தி என்னும் பாடல்பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் ஆத்திரேய கோத்திரத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர், நம்பிகாடநம்பி. நம்பி என்னும் பெயர், அந்தணர் குலத்தில் தோன்றியவர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக்கொள்ளும் சிறப்புப் பெயர். காடவர் என்ற சொல் இவர் பெயருடன் இணைந் திருத்தலை நோக்கி இவர் பல்லவர் மரபில் தோன்றியவர் என்பர். இவர்தம் திருவிசைப்பாப் பதிகங்களை நோக்கும்போது இவர் சிறந்த சிவபக்தர் என்பதும், சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவுவதில் பெரிதும் விருப்புடையவர் என்பதும், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை இடைவிடாது ஓதி இன்புறுபவர் என்பதும், கண்ணப்பர், கணம்புல்லர், சேரமான்பெருமாள் முதலிய நாயன்மார் களைப் போற்றுவதில் விருப்புடையவர் என்பதும் நன்கு புலனாகும்.
இவர் திருவாரூர் சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார். திருவாரூர்த் திருப்பதிகத்துள் இரண்டு பாடல்களே உள்ளன. கோயில் திருப் பதிகத்தைத் தேவாரத் திருப்பதிகங்களில் காணப்பெறாத சாளரபாணி என்ற ஒரு பண்ணில் இவர் பாடியுள்ளார்.
காலம்
முதல் இராஜாதிராஜனுடைய (கி.பி.1018 – 1054) 32 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவையாற்றுக் கல்வெட்டில் `ஒலோகமாதேவீச்சரத்து ஸ்தானமுடைய கே்ஷத்திர சிவபண்டிதர்க் காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி` என்று காணப்படுவதால் பூந்துருத்தி நம்பிகாட நம்பியின் காலம் கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனலாம்.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.