சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

பன்னிரு திருமுறைகள்

செந்தமிழ் மொழியிலுள்ள சைவ நூல்களெல்லாம் மூவகையில் அடங்குவன. அவை சாத்திரம், தோத்திரம், காப்பியம் என்பன. சைவ சமயத்திலுள்ள பதி, பசு, பாச உண்மைகளை, நியாய சாத்திர முறையில் நிலைநாட்டிக் கூறும் நூல்கள் (மெய்கண்ட சாத் திரங்கள் சாத்திரங்களெனப்படும். இறைவனையும் அடியார்களையும் போற்றித் துதிப்பனவாகிய பாடல்கள் தோத்திரங்களாம். இறைவன் அருட்செயல்களையும், அடியார் வரலாறுகளையும் கதை வடிவில் எடுத்துக்கூறும் புராணம் முதலான நூல்கள் காப்பியங்களாகும். இம் மூவகையில் இருமுறைகள் தோத்திரங்களாகும். இவற்றுள் பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணம் காப்பியமாகவும் விளங்குகிறது.

திருமுறை என்ற பெயர் திருமுறை என்ற தொடரில், “திரு” என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது, “முறை” என்ற சொல்லுக்கு நூல், ஒழுங்கு, வரிசை, உறவு முறையீடு முதலிய பல கருத்துக்கள் உள. எனவே திருமுறை என்பது தெய்வத்தன்மை பொருந்திய நூல், உயிர்களைச் செம்மையான ஒழுங்கு முறையில் இறைவனிடம் சேர்ப்பிக்கும் நூல், தொகுத்து வரிசைப்படுத்தப்பட்ட தெய்வீகப் பாடல்களைக் கொண்ட நூல், இறைவனுக்கும் ஆன்மாக்களுக்குமுள்ள உறவை விளக்கும் நூல், மெய்யடியார்கள் உள்ளம் உருகி இறைவனிடம் செய்துகொண்ட முறையீடுகளைக் கொண்ட நூல் எனப் பலவசையிற் பொருள் கொள்ளக் கூடியதாயுள்ளது.

திருமுறை கண்டது : திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரை வழிபட்டு, அவரருளால் சகல சாத்திர ஞானமும், மெய்ஞ்ஞானமும் பெற்று விளங்கியவர் நம்பியாண்டார் நம்பிகள் என்னும் சிவ வேதியர், அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட அபயகுலசேகர சோழ மகாராசா என்பவர் தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களிலே சிற்சிலவற்றைச் சிவனடியார்கள் ஓதக் கேட்டு, அவற்றையெல்லாம் முற்றாகத் தேடித் தொகுத்துச் சைவ மக்கள் பாராயணஞ்செய்யத் தர வேண்டுமென்று நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டார். ஒருநாள் அரசன் நம்பியாண்டார் நம்பிகளிடம் வந்து, பொல்லாப் பிள்ளையாருக்கு விசேட பூசைகள் செய்வித்து, அருட்பாக்களைப் பெறுவதற்குரிய உபாயத்தைப் பிள்ளையாரிடம் வேண்டியறியும்படி இரந்து கூறினார். நம்பியாண்டார் நம்பிகளும் விநாயகப் பெருமானிடம் அரசனின் குறைதீர அருளும்படி வேண்டினார். பிள்ளையாரும், நம்பிகளுக்குத் திருமுறைகள் தில்லையில் சிற்றம்பலத்தையடுத்துள்ள மண்டபத்திலுண்டென்று அருளியதோடு, அருட்பாக்களின் பெருமையையும், அவற்றைப் பாடியருளிய மெய்யடியார்களின் வரலாறுகளையும் அருளிச் செய்தார். நம்பிகள் அதனை அரசருக்குக் கூறியருளினார். அரசர் நம்பிகளையும் அழைத்துக்கொண்டு, சிதம்பர தலத்திற்குச்சென்றார்.

அரசர் தில்லையை அடைந்து, தில்லைவாழ் அந்தணர்களைக் கொண்டு நடராசப் பெருமானுக்கு – விசேட பூசை செய்வித்து, தேவாரம் அருளிச்செய்த நாயன்மார் மூவரையும் திருவுலா எழுந்தருளச் செய்வித்து, அவர்களது திருக்கர முத்திரை பொறித்தமண்டப வாயிலை அடைந்து, திருக்கதவத்தைத் திறப்பித்துத்திருமுறை ஏடுகளை எடுத்த பொழுது, அவற்றில் பெரும்பகுதி கறையானால் அழிக்கப்பட்டிருப்பது கண்டனர்அதனால் அரசர் பெருங் கவலையுற்றார். அப்போது இறைவனருளால் ஓர் அசரீரி வாக்கு “இக்காலத்துக்கு வேண்டுவன இருப்ப ஏனையவைகளை நாமே அழியும்படி செய்தோம். கவலை ஒழிக் பெற்றவற்றைப் பேணிப் பயனடைக” என்று கூறியது. பின் மனந்தெளிந்த அரசர், அவ்வேடுகளைச் செம்மை – செய்து, அவ்வருட்பாக்களை ஓதும் முறைப்படி தொகுத்தும் வகுத்தும் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளிடம் வேண்டினர்.

திருமுறை வகுத்தமை: அரசனது வேண்டுகோளுக்கு இசைந்த தம்பிகளும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரங்களில் கிடைத்தவற்றை முதலாம், இரண்டாம், மூன்றாந் திருமுறைகளாக வகுத்தார். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளிய தேவாரங்களிலே கிடைத்தவற்றை நான்காம், ஐந்தாம், ஆறாந் திருமுறைகளாக வகுத்தார். சுந்தரமூர்த்து நாயனார் தேவாரங்களை ஏழாந் திருமுறையென வைத்தார். ஆகவே தமிழ்மறையாகிய மூவர் தேவாரங்களும் முதலேழு திருமுறைகளாயின. இவ்வேழையும் அடங்கன் முறை என்பர். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார். ஆகிய இரண்டையும் எட்டாந் திருமுறையென வைத்தனர். திருமாளிகைத் தேவர் முதல், சேதுராயர் வரையுள்ள மெய்யடியார் ஒன்பதின்மர் அருளிச்செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன ஒன்பதாந் திருமுறையாயின. திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திர நூல் பத்தாந் திருமுறையாயிற்று. (இது தலைசிறந்த மந்திர சாத்திர நூலாகவும் போற்றப்படுவதாகும்.) திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் முதலாகப் பட்டினத்தடிகள் பாடல்வரை உள்ளவை பதிலோராந் திருமுறையாக வகுக்கப்பட்டன. பொல்லாப்பிள்ளையார் அருளால் நம்பியாண்டார் நம்பிகள் விநாயகப் பெருமானையும், திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், திருநாவுக்கரசு சுவாமிகளையும், திருத்தொண்டத் தொகையிலுள்ள அடியார்களையும் போற்றி செய்த பாடல்களையும் பதினோராந் திருமுறையில் சேர்த்து வைக்குமாறு அரசர் வேண்டிக்கொண்டபடி அவ்வருட்பாக்களும் அத்திருமுறையில் அடங்க, இவ்வாறு நம்பிகள் வகுத்த திருமுறை பதினொன்றும்.

பண்ணமைமப்பு: இத்திருமுறைப் பாடல்களின் பண்களையும், ஒதும் வகையையும் அறிவித்தருளுமாறு அரசரும், நம்பிகளும் நடராசப்பெருமானிடம் வேண்டினர். பெருமான் அருளிச்செய்தபடி திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மரபில் வந்த, பண்முறைகளைத் தெரிந்திருந்த பெண்ணை அரசர் அழைப்பித்து, நடராசப்பெருமான் சந்நிதியிலே அவ்வவற்றின் பண்முறைகளையும் அமைத்துக்கொண்டார்.

திருமுறைகளைப் பேணிச் சேமித்தமை பின்னர், அரசர் திருமுறைப் பாடல்களையெல்லாம் செப்பேடுகளில் எழுதுவித்துப் பாதுகாப்பாக அழியாதிருக்கும்படி செய்தார். அக்காலம் முதல் தமிழகத்துச் சைவக்கோயில்களிலைல்லாம் ஓதுவார்களை நியமித்துத் திருமுறைப் பாடல்களைப் பண்ணோடு பாராயணஞ் செய்துவருமாறு அரசர்கள் நியமனஞ் செய்தனர். இன்றுவரை அது தொடர்ந்து நடந்து வருகிறது.

பன்னிரண்டாந் திருமுறை : சில ஆண்டுகளின் பின். அநபாயசோழ அரசரின் வேண்டுகோளின்படி, அவரது முதன் மந்திரியாகிய சேக்கிழார் நாயனார், நடராசப். பெருமானே “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுக்கப் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் ஆகிய பெரியபுராணம், சைவப் பேரறிஞர்கள் சபையில் அரசர் முன்பு அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது அறிஞரும், அரசரும் அந்நூலின் சிறப்பை நோக்கி அதனைப் பன்னிரண்டாந் திருமுறை நூலென ஏற்றுப் போற்றினர். இவ்வாறே சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் அமைந்தனவாம்.

திருமுறைகள் அருளியோர் :

முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள் – தேவாரம் – திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்

நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் – தேவாரம் – திருநாவுக்கரசுநாயனார்

ஏழாந் திருமுறை – தேவாரம் – சுந்தரமூர்த்தி நாயனார்

எட்டாந் திருமுறை திருவாசகம் – திருக்கோவையார் – மாணிக்கவாசக சுவாமிகள்

ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு – திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திகாடநம்பி, கண்டாராதித்தர், வேனாட்டடிகள், திருவாலிய மூதனார், பருடோத்தம நம்பி, சேதிராயர்.

திருப்பல்லாண்டு – சேந்தனார்

பத்தாந் திருமுறை திருமந்திரம் – திருமூலநாயனார்

பதினோராந் திருமுறை – அருளியோர் பன்னிருவர்

(1) திருமுகப் பாசுரம் – திருவாலயவாயுடையார் (சிவபிரான்)
(2) திருவாலங்காட்டு மூத்திருப்பதிகம் – காரைக்கால் அம்மையார்
(3) மூத்திருப்பதிகம் – காரைக்கால் அம்மையார்
(4) திருவிரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்
(5) அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்
(6) ஷேத்திரத் திரவேண்பா – ஐயடிகள் காடவர்கோன்
(7) பொன்வண்ணத்தந்தாதி – சேரமான்nருமான் நாயனார்
(8) திருவாரூர் மும்மணிக்கோவை – சேரமான்nருமான் நாயனார்
(9) திருக்கயிலாய ஞான உலா – சேரமான்nருமான் நாயனார்
(10) கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி – நக்கீரதேவ நாயனார்
(11) திருவீங்கோய்மலை எழுபது – நக்கீரதேவ நாயனார்
(12) திருவேழுகடற்றிருக்கை – நக்கீரதேவ நாயனார்
(13) பெருந்தேவபாணி – நக்கீரதேவ நாயனார்
(14) கோபப்பிரசாதம் – நக்கீரதேவ நாயனார்
(15) காரெட்டி – நக்கீரதேவ நாயனார்
(16) போற்றித்திருக்கலி வெண்பா – நக்கீரதேவ நாயனார்
(17) திருமுருகாற்றப்படை – நக்கீரதேவ நாயனார்
(18) திருக்கண்ணப்பதேவர் திருமறம் – நக்கீரதேவ நாயனார்
(19) திருக்கண்ணப்பதேவர் திருமறம் – கல்லாடனார்
(20) மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை – கபிலதேவர்
(21) சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை – கபிலதேவர்
(22) சிவபெருமான் திருவந்தாதி – கபிலதேவர்
(23) சிவபெருமான் திருவாந்தாதி – பரணதேவர்
(24) சிவபெருமான் திருமம்மணிக்கோவை – இளம்பெருமானடிகள்
(25) மூத்தபிள்ளையார் திருமம்மணிக்கோவை – அதிராவடிகள்
(26) கோயில் நான்மணிமாலை – பட்டினத்தடிகள்
(27) திருக்கழுமல மும்மணிக்கோவை – பட்டினத்தடிகள்
(28) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை – பட்டினத்தடிகள்
(29) திருவேகம்பமுடையார் திருவந்தாதி – பட்டினத்தடிகள்
(30) திறாவொற்றியூர் ஒருபா ஒருபது – பட்டினத்தடிகள்
(31) திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை – நம்பியாண்டார் நம்பி
(32) கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் – நம்பியாண்டார் நம்பி
(33) திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
(34) ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
(35) ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் – நம்பியாண்டார் நம்பி
(36) ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை – நம்பியாண்டார் நம்பி
(37) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை – நம்பியாண்டார் நம்பி
(38) ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் – நம்பியாண்டார் நம்பி
(39) ஆளுடையபிள்ளையார் திருத்தொகை – நம்பியாண்டார் நம்பி
(40) திருநாவக்கரசுநாயனார் திருஏகாதச மாலை – நம்பியாண்டார் நம்பி

பன்னிருவர் பாடிய நாற்பது பிரபந்தங்கள் பதினோராந் திருமுறையிலுள்ளன.

பன்னிரண்டாந் திருமுறை திருத்தொண்டார் புராணம்; – சேக்கிழார் நாயானர்

திருமுறைகளின் காலம்: பத்தாந் திருமுறை அருளிய திருமூல நாயனாரும், பதினொராந் திருமுறைப் பாடல்கள் அருளியவர்களில் காரைக்காலம்மையார், நக்கீரதேவர், கபிலதேவர், பரணதேவர், கல்லாடதேவர் என்பவர்களும், எட்டாந் திருமுறை அருளிய மாணிக்கவாசக சுவாமிகளும் காலத்தால் முற்பட்டவர்களென ஆராய்ச்சியாளர் கூறுவார். காலங்களை இன்னும் அறுதியாக முடிவுசெய்யவில்லை. ஆளுடைய பிள்ளையாரும், திருநாவுக்கரசு நாயனாரும் சம காலத்தவர்கள் இவர்கள் காலம் கி. பி, ஏழாம் நூற்றாண்டென்பர். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஒரு காலத்தவர்கள். அவர்கள் காலம் கி. பி. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டென்பர். ஐயடிகள் காடவர்கோன் சுந்தரமூர்த்திநாயனாருக்கு முற்பட்டவர். பட்டினத்தடிகள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், நம்பியாண்டார் நம்பிகளுக்கும் இடைப்பட்ட காலத்தவர். நம்பியாண்டார் நம்பிகள் வாழ்ந்த காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு, இக்காலமே திருமுறைகள் கண்டெடுத்துத் தொகுத்து வகுக்கப்பட்ட காலம். சேக்கிழார் பாடியருளிய பெரியபுராணம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் அருளப்பட்டது.

திருமுறைகளின் பெருமை : சிவபெருமானது திருவருள், கைவரப் பெற்ற, முனிசிரேட்டர்கள் ஓதியருளிய மந்திரங்களும் தோத்திரங்களும் வடமொழியில் வேதம் எனப்பட்டன. அங்ஙனமே சிவபிரானது அருள் பெற்ற மெய்யடியார்களால் திருவருள் வழிநின்று பாடியருளியபக்திப் பாடல்களாகய அருட்பாக்கள். தமிழ் வேதம் என அழைக்கப்படுகின்றன. வேதசாரமே தேவார திருவாசகங்கள் என்பதைச் சைவப் பேரறிஞர் பலரும் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். காசிவாசி செந்தி நாதையர் இதை நன்கு ஒப்பிட்டுக்காட்டி விளக்கியுள்ளார். இத்தமிழ் வேதமாகிய திருமுறைப் பாடல்கள் பத்தி உணர்ச்சி மேலிட்டுப் பாடியவை இவற்றைப் பாராயணஞ் செய்பவர்களுக்கு அப்பண்பை உண்டாக்குவன. நாயன்மார்கள் இப்பாடல்களை இறைவன் திருவருள் துணை தூண்டவே பாடினர். இப்பாடல்கள் பல அற்புதங்களை நிகழச் செய்தமை நாயன்மார் வரலாறுகளால் அறியலாம். சுருங்கச் சொன்னால், வேத மந்திரங்களைக் கொண்டு பல சாதனைகளை மாந்திரிகர்கள் செய்வதுபோல, இத் தமிழ்வேதப் பாடல்களைப் பாராயணஞ் செய்து. பல சாதனைகள் புரிகிறார்கள். திருமுறைப் பாடல்கள் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லன். தெய்வீக சக்தி உடையன. அவற்றை மெய்யன்போடு பொருளழுணர்ந்து பண்ணமைய வழுவின்றி ஓதவேண்டும். அங்ஙகனமின்றி ஓதுவோர் பூரணமான பயனை அடையார்.

திருமுறைப் பாடல்கள் இறைவனுடைய பெருமைகளைப் பேசும், போற்றும்; வாழ்த்தும்; ஆன்மாவாகிய நம் குறை தீர்க்கும்படி வேண்டும்; நமக்கு இன்ன இன்ன நற்பேறுகளைத் தருக எனப் பிரார்த்திக்கும்; நம்மிடமுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கும் இப்படிப் பல விதத்தில் இவை அமைந்திருக்கின்றன. நாமாக ஒரு புதிய முறையில் இறைவனைப் போற்றி நமது குறைகளைத் தீர்க்கும்படி வேண்டும்போது, நம்மையறியாமலே நமது சிற்றறிவினால் பல தவறுகளைச் செய்து, நன்மைக்கு மாறாகத் தீமைகளைத் தேடவும் நேரும். ஆதலால், இத்திருமுறைப் பாடல்களில் நமக்கு உகந்தவற்றை நாம் தெரிந்து, அவற்றைப் பாராயணஞ் செய்து வருவது நமக்கு இம்மை, மறுமை, அம்மையாகிய பேறுகளில் ஒன்றும் குறைவின்றி நன்மையாயமைவதற்கு வழியாகுமென்று ஆன்றோர் கூறுவர், இவற்றைப் பாராயணஞ் செய்து பயனடைந்தோரும் எண்ணிலராவர்,

திருமுறைகள் கூறும் பொருள் : பதி, பசு, பாசங்களின் இயல்பும், தொடர்பும், பிறப்பறுக்கும் உபாயமும், (சரியை, கரியை, யோக, ஞான வழிகள் பேரின்ப நிலையமாகச் சைவூத்தாந்தம் கூறும் விடயங்களையாம்இவ்விலக்கியங்களில் கண்ட கருத்தையே சைவ சித்தாந்தம் நெறிப்படுத்தி இலக்கணமாசக் கூறியது. பன்னிரு திருமுறை வகுப்பிற்கும், சிவஞானபோதத்துப் பன்னிரு சூத்திரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென ஆன்றோர் ஒப்பிட்டுக் காட்டுவர். சாத்திரங்களைப் படித்து மெய்யுணர்வு பெறுவதிலும் பார்க்க, திருமுறைப் பக்திப் பாடல்களை ஒதி இறைவனருளைப் பெறுவது எளிதென்பர்.

இத் திருமுறைகளின் ஆசிரியர்களிற் பலரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளது ஏழாந் திருமுறையாகிய தேவாரத்தில் திருத்தொண்டத் தொகையிலே போற்றப்பட்ட மெய்யடியார்களேயாவர். இம் மெய்யடியார்கள் பெருமையை நம்பியாண்டார் நம்பிகள் பதினொராந் திருமுறையில் திருத்தொண்டர் திருவந்தாதியில் வகைப்படுத்தப் போற்றியுள்ளார். அவ்விரண்டையும் ஆதாரமாக வைத்து நாயன்மார் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்திலே விரித்துக் கூறியருளியவர் சேக்கிழார் சுவாமிகள். இந்த மூன்று தொகை வகை விரி நூல்களில், திருமுறைகளின் பெருமையும், அருளியவர் பெருமையும், ஓதுதலின் பயனும் கூறப்பட்டிருக்கின்றன.

சைவ நூல்கள் வேத ஆகம புராணங்கள் என்றமைவது போலவே, முதலிலுள்ள ஒன்பது திருமுறைகளும், வேத மந்திரங்களும், தோத்திரங்களுமாயமைய, பத்தாந் திருமுறையாகிய திருமந்திரம் ஆகம் நூற் கருத்துக்களைக் கூறுவதாக அமைய, பன்னிரண்டாந் திருமுறை புராணமாக அமைந்து நிற்கிறது. பதினொராந் திருமுறையில் தோத்திர வகையோடு, பிரபந்த வகைகளும் இடம் பெற்றுள்ளன.

திருமுறை ஓதுவதன் பயன் : திருஞானசம்பந்தப் பிள்ளையார் இவ் வருட்பாடல்களை, “திருநெறிய தமிழ்” எனக் குறிப்பிட்டுள்ளார். திரு என்பது சைவத் திரு சைவத் திருவாவது பேரின்ப முத்து. அதைப்பெற ஏற்ற வழியே திருநெறியாம். அத் திருநெறியில் நம்மை இட்டுச்செல்ல, வல்லதே திருநெறிய தமிழ்; எனவே திருநெறிய தமிழ் எனப்படும் இத் திருமுறைகள் பாராயணஞ் செய்பவர்க்கு முடிந்த பேறான மோட்சானந்தத்தைப் பெற வழிசெய்வனவாகும். அன்றியும் திருஞானசம்பந்தப் பிள்ளையாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்கடைக்காப்புப் பாடல்களில், ஓதுவாரைத் திவினை சாரர் நோய், வறுமை, அல்லலுறா நல்வினை பெருகும், செல்வமும், அரசும், வாழ்வும் சிறக்கும்; நரக துன்பமடையார். விண்ணவரும், மண்ணவரும் ஏத்த வாழ்வர் என்று கூறியவாறு, இம்மை மறுமை இன்பங்களையும் குறைவின்றிப் பெற்று இனிது வாழ உதவுவனவாகும். திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், நமச்சவாயப்பதிகம் முதலியவற்றைப் பாராயணஞ் செய்து நோய் தீர்த்தல், கரக தோஷங்களினின்று நீங்குதல் முதலிய பயன்களை இன்றும் பெறுவோர் பலருளர். பயனடைய வேண்டுவோர் அன்பும் ஆசாரமும் நியமமும் உடையவராய், திருமுறைப் புத்தகத்தைப் பூசை செய்து பத்தி சிரத்தையோடு திருமுறை ஓதும் முறைகளைக் கடைப்பிடித்து ஓதற்பாலர்.

திருமுறை ஒதும் முறை : பன்னிரு திருமுறைகளையும் முன் பின்முறை மாற்றாது ஓதவேண்டும். தினந்தோறும், குறித்த காலத்தில் ஆசார சீலமுடையவராய், புத்தகத்தைத் தூப தீபம் மலர் முதலியவற்றால் பூசித்து எடுத்துப் பாராயணம் செய்யவேண்டும். திருமுறைப்புத்தகம், பட்டாலே மூடிப் புனிதமான இடத்தில் வைத்துப் போற்றப்படல் வேண்டும். திருமுறைகளை ஒது முன்னும் முடிவிலும் “திருச்சிற்றம்பலம்” என்பதைச் சொல்லவேண்டும் என்ற நியதிகளை மீறலாகாது. திருமுறைப் பாடலோடு பிறபாடல்களைக் கலந்தோதுதல் குற்றமாகும்.

திருமுறைகளின் சிறப்பு : வேதாகமங்களின் வழி நன்று சைவ நெறியினை உலகம் உய்ய இசைத்தமிழாலும், இயற்றமிழாலும் எடுத்தோதுவன இத்திருமுறைகள். வானவெளியில் பன்னிரு இராசிகள் போலப் பன்னிரு திருமுறைகளும் விளங்குகின்றன. இவற்றை அருளிச்செய்த அநுபூதிமான்கள் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு நிகரான இருபத்தெழுவராவர். இவர்களால் சைவ சமயம் அவ்வப்போது சிறப்புப்பெற்று வளர்ந்துள்ளது. வேதாகமங்கள் பிரணவத்தின் விரிவாகும். அங்ஙனமே பன்னிரு திருமுறைகளும் அமைந்துள்ளன எனலாம், இவை ஓகார உயிரொலியில் (தோடுடைய என்று) தொடங்கி, மகர. ஒற்றில் முடிகின்றன. பன்னிரு திருமுறைகளும் உள்ளங்கசிந்துருகி ஓதுதற்குரியன. திருமந்திரம் சாத்திர நூலாகவும், திருத்தொண்டர் புராணம் காப்பிய நூலாகவும் அமைந்திருந்தாலும், அவற்றுள்ளும் தோத்திரப்பாடல்கள் உண்டு. ஓதுவார் உள்ளத்தையும், கேட்பார் உள்ளத்தையும் உயர்த்தி, பக்குவ வெள்ளம் பெருகச் செய்யும் பான்மை பன்னிரு திருமுறைகளுக்கும் உண்டு.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.