சமீபத்திய செய்தி
நாயன்மார் வரலாறு
பதினொன்றாம் திருமுறை
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.
இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.
சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.
ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.
திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி வள நாட்டின் தலை நகராகிய மதுரையில் விளங்கும் `திருஆலவாய்` என்னும் திருக் கோயிலில் எளிவந்த கருணையோடு எழுந்தருளி அன்பர்கட்கு நல்லருள் வழங்கும் இறைவர் திருஆலவாயுடையார் எனப் பெறுவார்.
இறையனார் களவியல்
ஆலவாய் இறைவர் தண்டமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் தமிழ்ச்சங்கத்தில் தலைமைப் புலவராய் எழுந்தருளி யிருந்ததோடு அப்பாண்டி நாட்டில் பன்னீராண்டு வற்கடம் ஏற்பட்டு மீண்டும் வளம் உற்றபோது பொருள் அதிகாரம் வல்ல புலவர்களைத் தலைப்பட்டிடிலமே என மன்னன் மனங் கவலத் தாமே இறையனார் களவியல் என்ற அகப்பொருள் நூல் ஒன்றைத் தமிழில் எழுதி அம் மன்னனுக்கு அளித்து அவனது மனக்கவலையைப் போக்கியதை இறையனார் களவியல் உரையால் நாம் அறியலாம்.
கொங்குதேர் வாழ்க்கை
அப்பெருமான் தம்மைப் பூசிக்கும் பெருவிருப்புடைய தருமி என்னும் வறிய ஆதிசைவ இளைஞர்க்கு அவர் விரும்பியவாறு பாடல் ஒன்றை எழுதி அளித்தருளிய வரலாறு திருவிளையாடற் புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னன் தன் மனத்தில் எழுந்த ஐயத்தைத் தெளிவு செய்வோர்க்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கிறேன் என அறிவித்து நிறுத்திய பொற்கிழியை அத்தருமி பெறுமாறு `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் அகப்பாட்டொன்றை எழுதி அளித்து உத்தம மகளிர் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு எனத் தெரிவித்து நக்கீரரோடு வாதிட்டு நிகழ்த்திய வரலாறு திருவிளையாடற் புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ் வரலாற்றை அப்பர் பெருமான் `நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்` எனப் பாராட்டிப் போற்றுகின்றார்.
சீட்டுக்கவி
இவ்வாறே தில்லைப்பெருமானும் உமாபதி சிவாசாரியார் திருமடத்துக்கு விறகு அளித்துப் பணி செய்த பெத்தான் சாம்பானுக்கு முத்தி அளிக்குமாறு அவர்க்கு,
அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதிய கைச்சீட்டு – படியின்மிசைப்
பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி அளிக்க முறை
என்னும் சீட்டுக்கவி அளித்தருளிய வரலாறு சந்தானாசாரியர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழறியும் பெருமானாக அம் மொழியோடு பிணைந்து செந்தமிழ்த்திறம் வல்லவராய் விளங்கிய ஆலவாய் இறைவன் தம் சந்நிதியில் இசைப் பாடல் பாடிப் போற்றிய பாண பத்திரரின் வறுமையைப் போக்க அவருக்கு திருமுகப் பாசுரம் அளித்து சேரமான் பெருமாள் நாயனாரிடம் போக்கிய வரலாறும், சேரர்கோ பாணபத்திரரைப் போற்றிப் பரிசில்கள் வழங்கிய வரலாறும் தமிழ் மொழியில் அப்பெருமானுக்கு இருந்த ஆராக்காதலை வெளிப் படுத்துவன ஆகும்.
திருமுகப்பாசுரம்
பாணபத்திரர் திருவாலவாய் இறைவரிடம் திருமுகப் பாசுரம் பெற்றுச் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பரிசில் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் கழறிற்றறிவார் புராணத்தில் பன்னிரண்டு செய்யுட்களில் விரித்துரைத்துள்ளார்.
சேரமான் பெருமாள் நாயனார் கொடுங்கோளூராகிய வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியுங் காலத்தில் மதுரை யம்பதியில் பாண்டிய மன்னரால் நன்கு மதிக்கப் பெற்ற இசைப்பாணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆலவாய் இறைவற்கு இசைத் தொண்டு புரியும் கடமை பூண்ட அப் பாணபத்திரர் வறுமையுற்றார்.
பாடுவார் பசி தீர்ப்பவராகிய பரமர் அவரது வறுமை நிலையை நீக்கத் திருவளம் கொண்டார். தாமே பெருஞ்செல்வம் வழங்க வல்லவராயினும் தம்பால் பேரன்பினரான சேரமான் பெருமாளைக் கொண்டு பாண பத்திரரின் வறுமையைப் போக்கத் திருவுளத்தெண்ணினார். பாண பத்திரர் கனவில் தோன்றி `அன்பனே என்பால் நிலை பெற்ற பேரன் புடைய சேரமான் பெருமாள் என்னும் வேந்தன் பொன், பட்டாடை, நவ மணிகள் பதித்த அணிகலன் முதலியவை எல்லாம் உனக்குக் குறைவறக் கொடுப்பான், அதன் பொருட்டு ஒரு திருமுகம் எழுதித் தருகின்றோம், நீ அதனைக் கொண்டு விரைந்து மலைநாடு அடைந்து பொருள் பெற்று வருக` எனப் பணித்து இத்திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத் திருமுகத்தைத் தலைமேற் கொண்டு போற்றியவராய் மலைநாடு அடைந்து அரண்மனை வாயிற் காவலர் மூலம் தம் வருகையைச் சேரமான் பெருமாள் நாயனாருக்குத் தெரி வித்தார். பரமனையே பாடுவாராகிய பாணபத்திரரின் வருகையை அறிந்த மன்னர் விரைந்து வந்து அவரை வணங்கித் `தாங்கள் இங்கு எழுந்தருளியது யான் செய்த தவப்பேறேயாகும்` என முகமன் கூறி அவரை அன்போடு அழைத்துச் சென்று இருக்கை நல்கி உபசரித்தார்.
பாணபத்திரர் தாம் கொணர்ந்த திருமுகத்தை வேந்தர் கையில் கொடுத்த அளவில் அம்மன்னர் ஆர்வமுற வாங்கி முடிமேல் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். மொழி குழறக் கண்ணீர் வாரப் பலமுறை நிலமுறப் பணிந்து எழுந்து மீண்டும் மீண்டும் அத்திருமுகத்தைப் படித்து உளம் உருகி அப்பாசுரத்தைப் படி எடுத்துக் கொள்ளுமாறு செய்து தம் உரிமைச் சுற்றத்தினர் முதலானோரை அழைத்துத் தமது நிதி அறையிலிருந்து பல்வகைப் பொருள்களையும் பொதி செய்து வருமாறு கட்டளையிட்டார். அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பொருள்களின் பரப்பையெல்லாம் பாணபத்திரர்க்குக் காட்டி இப்பொருள்களோடு யானை குதிரை முதலிய சேனைகளையும் இந்நாட்டு ஆட்சி உரிமையையும் ஏற்றருள வேண்டும் என வேண்டி நின்றார்.
சேரமன்னரின் கொடைத்திறத்தைக் கண்டு வியந்த பாண பத்திரர் `வேந்தர்பிரானே என்னுடைய சுற்றத்தவரைப் பேணுதற்குப் போதுமான பொருள்களை மட்டுமே அடியேன் தங்கள்பால் பெற்றுக் கொள்ள வேண்டும்` என்பது இறைவன் ஆணை ஆதலின் ஆட்சி உரிமை யையும் அதற்கு வேண்டுவனவாய படைகளையும் தாங்களே கைக்கொண்டருள வேண்டும் என்று கூறிச் சேரர் கோவை வணங்கி நின்றார்.
சேரமானும் அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சி அவரது வேண்டுகோளுக்கு உடன்பட்டுப் பாணபத்திரரைப் பெரும் பொரு ளுடன் யானை மேல் ஏற்றி வழியனுப்பி வைத்தார். பாணபத்திரர் அப்பெருஞ் செல்வத்துடன் மதுரையை அடைந்து ஆலவாய் இறைவனைப் போற்றி இன்னிசையால் பரவும் திருத்தொண்டினைச் செய்து கொண்டு இனிதே வாழ்ந்து வந்தார்.
இவ் வரலாறு பெரிய புராணத்துட் காணப்பெறுவதாகும்.
பாணபத்திரர் வரலாறு சிற்சில வேறுபாடுகளுடன் பெரும் பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் பாடிய திரு விளையாடற் புராணங்களில் புனைந்து கூறப்பட்டுள்ளது.
பாணபத்திரர் பொருட்டு இறைவனே விறகு வெட்டியாகச் சென்று சாதாரி பாடி வடபுலத்து ஏமநாதன் என்னும் பாணனைத் தோற் றோடச் செய்தார் என்றும், ஒருநாள் இரவு பெய்த பெருமழையில் நனைந்து கொண்டு யாழ்மீட்டித் தன்னைப் பாடிய பாணபத்திரரின் யாழ் நரம்பு நனைந்து கட்டழியாதபடி அவருக்குப் பொற்பலகை அளித்தனன் என்றும், பாணபத்திரரின் மனைவியாகிய பாடினி யார்க்கும் மன்னன் ஆதரவு பெற்ற பாடினி ஒருத்திக்கும் நிகழ்ந்த இசை வாதில் தானே இசைநலம் தெரிந்த ஒருவராக இருந்து உண்மை உரைத் தருளினார் எனவும் கூறுவதோடு பாணபத்திரர் தொடர்புடைய பிற வரலாறுகளையும் திருவிளையாடற் புராணங்கள் விரித்துரைக்கின்றன.
திருமுகம் என்பது பெரியோர் எழுதியனுப்பும் செய்தி தாங்கிய மடலாகும். இதனை மடாலயங்களில் குருமகா சந்நிதானங்கள் தம் சீடர்கட்கு எழுதியனுப்பும் செய்தி பொருந்திய இதழைத் திருமுகம் என வழங்கும் வழக்கால் நாம் நன்கு அறியலாம். இத் திருமுகப் பாசுரம் எழுந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டாகும்.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.