சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சேரமான்பெருமான் நாயனார்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

சேரமான்பெருமான் நாயனார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசுரிமை ஏற்றது

தமிழகத்தில் முடியுடை வேந்தர்களாகத் திகழ்ந்த மூவருள் சேரர் குடியில் தோன்றியவர் இவர். குடபுலமாகிய மலை நாட்டில் திருவஞ்சைக் களத்தில் சேரர்குலம் செய்த சிவபுண்ணியங்களின் பயனாய்த் தோன்றியவர். பெற்றோர் பெருமாக்கோதையார் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இளமை முதல் இந்நாயனார் திருஅஞ்சைக் களத்து இறைவர்பால் பேரன்புடையவராய் விளங்கினார். உலகின் இயல்பும் அரசியலும் உறுதியல்ல எனத் தெளிந்து புலர்வதன் முன் எழுந்து ஆலயத்தைத் திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார். அந்நாட்டை அரசு புரிந்த செங்கோற் பொறையன் என்பான் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொண்டு சென்றதால் அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர்.

பெருமாக்கோதையார் தவம் செய்துவரும் சிவத்தொண்டுக்கு இடையூறாகுமே என எண்ணி அஞ்சைக்களத்து இறைவரை வழிபட்டு அவர் திருவுளம் அறியும் குறிப்புடன் நின்றார். சேரநாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்குமாறு திருவருள் உணர்த் திற்று. இறையருளால் மக்களுயிர்க்கே அன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து அவர் ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலையும் தறுகண்மை, படைவன்மை, கொடைவண்மை முதலானவற்றையும் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு வழங்கலாயிற்று.

திருவுலா

அரசுரிமை ஏற்றல் இறைவன் திருவுள்ளம் என்பதை உணர்ந்த கோதையார் சேரமன்னராய் மணிமுடி சூடி திருவஞ்சைகளத் திறைவனை வழிபட்டு யானை மீது இவர்ந்து அரசமாளிகைக்கு திருவுலாப் போந்தார். அவ்வாறு அவர் எழுந்தருளும்போது ஏதிரே ஒரு வண்ணான் உவர்மண் பொதி சுமந்து வந்தான். அதுபோது மழைபெய்தது. மழை நீரில் நனைந்ததால் உவர் மண் கரைந்து உடல் முழுதும் வழிந்தும் வெயிலில் அம்மண் காய்ந்ததால் வெண்ணிறமாகியும் அவன் முழுநீறு பூசிய அடியவர் போலக் காட்சி அளித்தான். அவனைக் கண்ட சேரர்கோ சிவனடியார் ஒருவர் எதிரே வருகிறார் எனக் கருதி யானையினின்றும் கீழே இறங்கி வந்து அவனை வணங்கினார். அவன் அச்சம் மீதூர்ந்தவனாய் `அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான்` என்று கூறக்கேட்டு` அடியேன் அடிச்சேரன் அன்புகெழுமிய சிவவேடத்தை நினைப்பித்தீர், வருந்தாது செல்லும்` என்று கூறி வழியனுப்பி வைத்து மீண்டும் யானைமீது இவர்ந்து அரண்மனையை அடைந்தார். இதனை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருஅந்தாதியில்,

மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறி நீறார்

தன்னர் பிரான்தமர் போலவருதலும் தான் வணங்க

என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்எனும்

தென்னர் பிரான்கழறிற்றறி வான்எனும் சேரலானே.(44)

எனக்கூறியுள்ளார்.

கழறிற்றிவார் தமிழகத்தின் ஏனைய மன்னர்களோடும் நட்புக் கொண்டழுகி நல்லாட்சி புரிந்தார். நாள்தோறும் தில்லை நடராசப் பெருமானை நினைந்து சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது அன்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித் தருளி வந்தார்.

பாணபத்திரர்க்குப் பரிசில்

ஒருநாள் ஆலவாய் இறைவர் பாணபத்திரர்க்கு மாண் பொருள் கொடுத்துதவுமாறு எழுதியனுப்பிய திருமுகப் பாசுரத்தைக் கண்டு பாணபத்திரர்க்கு அளவற்ற நிதிக் குவைகளை அளித்து மகிழ்ந்தார்.

சிலம்பொலி தாழ்த்தது

சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பால் நாள்தோறும் பூசை முடிவில் கேட்பிக்கும் சிலம்பொலியைக் காலந்தாழ்த்துக் கேட்பித்தருளினார். கழறிற்றிவார் இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற்ற போது தில்லை முன்றிலில் சுந்தரன் நம்மைப் பாடிக் கொண்டிருக்கும் பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்கக் காலந்தாழ்க்க நேர்ந்தது எனக் கூறக்கேட்டு சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு ஆரா இன்பெய்திப் பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாகத் திருச்சிலம்பொலி காட்டியருளினார். பின்னர் சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் திருமும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின்னர் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார்.

தல யாத்திரை

சுந்தரர் சேரமான் பெருமாள் இருவரும் பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி யாத்திரை மேற்கொண்டனர். சேரமான் தனக்குத் திருமுகம் அனுப்பியருளிய பெருமானைக் காணும் பெருவேட்கையோடு சுந்தரருடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனும் அம்மன்னன் மகளை மணந்த சோழ மன்னனும் இவ்விரு பெருமக்களையும் இனிதே வரவேற்று உபசரித்தனர். மூவேந்தர் சூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான் பெருமாள் சுந்தரரோடு சிலநாள் திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ் வித்தார்.

பிரிவும் நினைவும்

சிலநாட்கள் சென்றன. சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமாணிடம் தெரிவித்துப் பிரியா விடை பெற்றார். சேரமான் தம் மாளிகையிலுள்ள பெரும் பொருளைப் பொதி செய்து அளித்துச் சுந்தரரை வழியனுப்பி வைத்தார்.

திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நெடுநாட்களுக்குப் பிறகு சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றார். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

சுந்தரர் கயிலை சென்றது

ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவரை வணங்கி, `தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.

அந்நிலையில் அவரது பாசத்தளையைப் போக்கிப் பேரருள்புரிய விரும்பிய பெருமான் இந்திரன் முதலிய தேவ கணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணிக்கத் தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறை வனது அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்றுச் சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின்மேல் ஏறி `தானெனை முன் படைத்தான்` என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.

அழையாமல் வந்ததேன்

சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக் குதிரையில் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

சுந்தரர் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றினார். சேரமான் வருகையைச் சிவபிரானிடம் விண்ணப்பிக்கப் பெருமான் சேரர்கோனை உள்ளே வரச்செய்து `இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?` எனக் கேட்கச் சேரமான் திருவருள் வெள்ளம் சுந்தரருடன் என்னையும் ஈர்த்துக் கொணர்ந்து இங்கே நிறுத்தியது; அடியேன் தேவரீரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலாப் புறம் ஒன்று பாடியுள்ளேன் அதனைத் திருச்செவி சார்த்தியருள் வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக் கயிலையில் பெருமான் திருமுன்னர் அரங்கேற்றினார். பெருமான் சுந்தரரோடு சேரமானையும் சிவகணத்தலைவராய் நம்பால் நிலைப் பெற்றிருப்பீராக எனப் பணிக்கச் சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்துறைவாராயினர்.

திருக்கயிலையில் சேரமான் பாடியருளிய திருவுலாவைச் செவிமடுத்த மாசாத்துவான் என்ற ஐயனார் சோழநாட்டுத் திருப் பிடவூரில் அந்நூலை வெளியிட்டு அதனை நிலவுலகில் விளங்குபடிச் செய்தருளினார் என்பது பெரிய புராணத்தில் காணப்படும் இந் நாயனார் வரலாறாகும்.

இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.