சமீபத்திய செய்தி
நாயன்மார் வரலாறு
பன்னிரண்டாம் திருமுறை
சேக்கிழார் நாயனார் வரலாறு
தருமை ஆதீனப் புலவர்,
வித்துவான் வி. சா. குருசாமிதேசிகர் எம். ஏ.
அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம்.
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி
-சேக்கிழார் புராணம், பாயிரம், 7
சேர, சோழ, பாண்டிய மண்டலங்களோடு கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றுடன் ஐந்து மண்டலங்களாகப் பண்டைத் தமிழகம் விளங்கிற்று. இதனைத் திருமூலர் `தண்டமிழ் மண்டலம் ஐந்து` (தி.10 பா.1624) எனக் கூறியருள்கின்றார்.மண்ட லம் = நாடு எனவும் வழங்கப்பெறும்.
தொண்டை மண்டலம்
இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட பகுதி தொடங்கி, சித்தூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து விளங்கியது. சோழமன்னர் ஆட்சியில் சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பெற்றது. பாலாறு பாய்ந்து வளம்பெருக்கும் இந்நாடு சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருபத்துநான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட் டிருந்தது. சோழமன்னன் கரிகாற்பெருவளத்தான் தொண்டை மண்ட லத்தை வளப்படுத்த நாற்பத்தெண்ணாயிரம் வேளாளர் குடும்பங் களை இந்நாட்டில் குடியேற்றினான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய முப்பத்திரண்டு தேவாரத் திருத்தலங்கள் இம்மண்டலத்தில் உள்ளன.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் சேக்கிழார் குறித்தருள்கின்றார். காஞ்சிபுரம், திருவாலங்காடு, திருக்காளத்தி, திருவொற்றியூர், மயிலாப்பூர், திருக்கழுக்குன்றம் முதலிய புகழ்மிக்க தலங்கள் தொண் டைநாட்டிலுள்ளன.
காமாட்சியம்மை
இமவான் மகளாகிய பார்வதிதேவி தொண்டை நாட்டில், காஞ்சி மாநகரில், கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். பெருமான் அவரோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுவருமாறு செய் தருளினார். அம்பிகை அதனைக் கண்டு சிவலிங்கம் கரைந்து சிதை யாமலிருத்தற்பொருட்டு அச்சிவலிங்கத்தைத் தம் இரு கைகளாலும் மார்போடு தழுவினார். பெருமான் மனங் குழைந்தவராய் அம்மை யின் தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் தன்மீது தோன்ற வெளிப்பட்டு அருள் புரிந்ததோடு அம்பிகையிடம் இரு நாழி நெல் லளித்து, அதனைக் கொண்டு அனைத்து அறங்களையும் செய்து கொண்டு இத்தலத்தில் இருக்க எனக் கூறி மறைந்தார். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் அளித்து, விளைத்துப் பல்வகை அறங்களையும் பாங்குறச்செய்து வந்தாள் எனக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
சேக்கிழார் நாயனார் புராணத்திலும் உமாபதி சிவாசாரியார் இவ்வரலாற்றைக் குறித்தருள்கிறார்.
வேளாளரின் வாய்மை
தொண்டை மண்டல வேளாண் குடியினர் ஏரால் எண்டிசை யிலும் புகழ்வளர்த்ததோடு வாய்மையிலும் வழுவாது வாழ்ந்து வந்தனர். இதனைத் திருவாலங்காட்டுப் பழையனூர் நீலி வரலாறு இனிதுணர்த்தும்.
முற்பிறப்பில் தன் மனைவியை வஞ்சித்துக் கொன்ற அந்தணன் ஒருவன், இப்பிறப்பில் வணிகனாய்த் தோன்றி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தான். இறந்த அவன் மனைவி தன்னைக் கொன்ற கணவனை வஞ்சித்துக் கொல்லும் நோக்கோடு பேயாய் அவனைப் பின் தொடர்ந்து வந்தாள். வணிகன் பழையனூரை அடைந்தபோது, அப்பேய், அழகிய பெண் உருவத்தோடு அவன் முன் தோன்றி, அவன் மனைவியாய் அவனோடு உடனுறைய முற்பட்டது. வணிகன் ஐயுற்று அவளை ஏற்க மறுத்தான்.
அப்பெண் அவ்வூர் வேளாண் அவையினரைக் கூட்டி முறையிட்டாள். வேளாளர், வணிகனைச் சமாதானப்படுத்தி, அவளால் ஏதேனும் தீங்கு நேரின் நாங்கள் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறப்போம் என வணிகனைத் தெருட்டி உடனுறையச் செய்தனர். அன்றிரவு பேய்ப்பெண் வணிக னைக் கொன்று மறைந்தாள். மறுநாள் காலை வணிகன் பேய்ப் பெண்ணால் இறந்த செய்தி அறிந்து, தாங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர்.
தொண்டை நாட்டு வேளாண்குடியினர், வாய்மையில் வழுவா தவர் என்பதற்கு இவ்வரலாறு சேக்கிழார் புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது.
சேக்கிழாரின் தோற்றம்
வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்துப் – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து.
-ஔவையார், தனி. பா. திர.
தொண்டைநன்னாடு அருளாளர்களையும் அறிஞர்கள் பலரை யும்தமிழுலகத்திற்குத் தந்த பெருமையுடையது. சேக்கிழாரைத் தந்த சிறப்புடையது. தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர். இவ்வூர் சென்னை யைச் சார்ந்த போரூருக்கு அருகிலுள்ளது. பல்லாவரத்திலிருந்தும் குன்றத்தூர் செல்லலாம். `செல்வம்மலி குன்றத்தூர்` என்பதற்கேற்ப நீர்வளம், நிலவளம் பொருந்தியதாய்த் திகழ்கிறது.
குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக் கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவா யரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழ னின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.
சேக்கிழாருக்கு அவர்தம் பெற்றோர் வைத்த பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த கார ணத்தால் அவர் சேக்கிழார் எனவே வழங்கப்பெற்றார்.
சேக்கிழாரின் தந்தையின் பெயர் வெள்ளியங்கிரி முதலியார் என்பதும் தாயாரின் பெயர் அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாகும் என்பதும், சேக்கிழார் என்ற பெயர் சேவூர்க்கிழார் என்பதன் மரூஉவாகும் என்பதும் திருப்பனந்தாள் ஷ்ரீ காசிமடத்தின் பதிப்பில் (1950) காணப்படும் குறிப்பாகும்.
திருமழபாடியிலுள்ள இரண்டாம் இராஜராஜ சோழனின் கி. பி. 1162ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் `ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தமசோழப்பல்லவராயன்` எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அருண்மொழித்தேவர் என்ற பெயரோடு சேக்கிழாருக்கு இராமதேவர் என்பதும் பிள்ளைத் திருப்பெயராக வழங்கியுள்ளது எனக் கருதப்படுகின்றது.
அமைச்சுரிமை ஏற்றல்
அருண்மொழித்தேவரும் பாலறாவாயரும் இளமையில் கல்வி நலம் பெற்றுச் சிறந்தனர். பக்தி உணர்வுடன் நல்லொழுக்கத்திலும் மேம்பட்டு விளங்கினர். அக்காலத்தில் ஆட்சி புரிந்த சோழமன்னன், அருண்மொழித்தேவரின் சிறப்பியல்புகளால் கவரப்பெற்று அவரைத் தன் அமைச்சர்களின் தலைமை அமைச்சராக நியமித்து, `உத்தம சோழப்பல்லவன்` என்ற பட்டம் வழங்கி ஆட்சி உரிமைகள் பலவற்றை யும் அவருக்கு அளித்தான்.
அமைச்சுரிமை ஏற்ற அருண்மொழித்தேவர் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் தங்கி, அங்கு விளங்கும் திருநாகேச் சரத்து இறைவனிடம் பேரன்புகொண்டவராய் நாடோறும் `மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி` வழிபட்டு வந்தார். நாகேச்சரத்து இறைவர்பால் வைத்த பேரன்பினால் சோழநாட்டுத் திருநாகேச்சரம் திருக்கோயிலைப் போலவே தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேச்சரம் என்ற பெயரால் ஒரு திருக்கோயில் கட்டுவித்து அங்கு நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் இனிதே நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.
அரசர்க்கு அறவுரை
அந்நாளில் சைவம் சார்ந்த அன்பர்கள் பலரும் தங்கள் சமய மெய்நூல்களைப் பயிலாது சமணர்கள் புனைந்துரைத்ததும் சிற்றின்பச் சுவை மிகுந்ததும் ஆகிய சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி, அக்காவியச் சுவையில் ஈடுபட்டு, தம் சமயப்பெரியோர்களின் வரலாறுகளை அறியாது, பொழுது கழித்து வந்தனர். சோழமன்னனும் சிந்தாமணிக் கதையைச் சுவைபடக் கேட்டு, மனமகிழ்ந்து பாராட்டிக் களிப்புற்று வந்தான்.
அது கண்ட அருண்மொழித்தேவராம் சேக்கிழார், அரசனை நோக்கி `வேந்தர் பெருமானே, தாங்கள் சைவமெய்ச் சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங் களையும் தரும் சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது சமணர்கள் புனைந்துரைத்த பொய்க்கதையாகிய சிந்தா மணிக் கதையை மெய்யெனக் கருதிக் கேட்டல் தகுதியுடையதன்று என இடித்துரை கூறினார்.
அமைச்சரின் அறிவுரையைக் கேட்ட மன்னன், `நீவிர் கூறும் சிவகதை யாது? அதனை விளங்க உரைப்பீராக` எனக் கேட்டனன்.
சேக்கிழார் அரசனை நோக்கி, `திருவாரூரில் விளங்கும் தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார்களின் பெருமைகளை விரித்துரைத்துப் போற்றுக எனக் கூறி, `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` எனத் தாமே அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்னும் திருப் பதிகத்தால் சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்துப் போற்றி னார். அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரில் விளங்கும் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்று அவர் உணர்த்திய வகையில் அத்திருத்தொண்டத் தொகையில் குறிப்பால் உணர்த்திய வரலாறு களைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்றதொரு நூலை அருளிச் செய்துள்ளார்.
இவ்வரலாறு களைக் கேட்ட இராஜராஜமன்னர், சிவாலய தேவர் முதலாகவுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ந்து இவைகளே மெய்நூல்கள் எனப் பாராட்டியுள்ளார்கள்` எனக் கூறினார்.
அதனைக் கேட்ட சோழமன்னன், திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி வாயிலாகச் சேக்கிழார் கூறக்கேட்டு மகிழ்ந்து திருத்தொண்டர் வரலாறுகளைத் தெளிவாகவும் விரிவாக வும் அமைத்து ஒரு விரிநூல் செய்து தருமாறு சேக்கிழாரைக் கேட்டுக் கொண்டான்.
திருத்தொண்டர் புராணம் அருளல்
மன்னன் வேண்டுகோளை ஏற்ற சேக்கிழார், நடராசப் பெரு மான் அருள்துணையோடு அதனை நிறைவேற்ற முற்பட்டு தில்லை யம்பதியை அடைந்து. சிவகங்கையில் நீராடி, அம்பலவாணரைத் தொழுது, சிவபெருமான்பால் அன்புமிக்க அடியவர் வரலாறுகளை விரித்துரைக்க அடியெடுத்துக் கொடுத்தருளுமாறு நடராசப் பெரு மானை வேண்டி நின்றார். அந்நிலையில் அங்குள்ளார் யாவரும் கேட்க, `உலகெலாம்` என்றொரு வானொலி எழுந்தது. சேக்கிழார் நடராசப் பெருமானின் தடங்கருணையை வியந்து நின்றார்.
தில்லை வாழந்தணர்கள் நடராசப் பெருமானின் பிரசாதமாகத் திருநீறு, திருமாலை, பரிவட்டம் அளித்தனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரை யும் சேக்கிழார் வணங்கிப் போற்றி, ஆயிரங் கால் மண்டபத்தை அடைந்து, ஆங்கே அமர்ந்து, தில்லைப் பெருமான் அருளிய `உலகெ லாம்` என்ற சொல்லையே முதன் மொழியாகக் கொண்டு திருத்தொண் டர் புராணம் என்னும் தெய்வத் தமிழ்ப் பெருங்காவியத்தைப் பாடத் தொடங்கினார். இறைவன் அருளிய அவ்வருள்வாக்கு நூலின் முதலி லும் இடையிலும் முடிவிலும் அமையுமாறு அப்புராணத்தை இலக் கியச் சுவையும் பக்திச் சுவையும் இனிதே அமையப் பாடி முடித்தார்.
அநபாயனின் ஆர்வம்
புராணம் எந்த அளவில் பாடப்பெற்றுள்ளது என்பதை அடிக்கடி விசாரித்து அறிந்துவந்த சோழமன்னன் திருத்தொண்டர் புராணம் பாடி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்து, மிக்க மனமகிழ் வெய்தி தில்லைப்பதியை அடைந்தான். சேக்கிழாரும் தில்லைவாழந் தணர்களும் எதிர் கொண்டழைத்தனர். மன்னன் தில்லையம்பலவனை யும், சிவவேடப் பொலிவுடன் விளங்கிய சேக்கிழாரையும் வணங்கி வலம்வந்து, தில்லையம்பல முன்றிலில் நின்றான். அந்நிலையில் `வளவனே! நாமே உலகெலாம் என அடியெடுத்துக்கொடுக்க, அன்பன் சேக்கிழான் அடியவர் திறத்தை விரித்து நூலாகச் செய்துள் ளான்.
அதனை நீ கேட்பாயாக` என்றொரு அசரீரி வானிடை எழுந்தது.
அதனைக் கேட்ட மன்னன் மனம் மிக மகிழ்ந்து திருத்தொண்டர் புராணத்தைத் தில்லையம்பல முன்றிலில் அரங்கேற்றுவிக்க விரும்பி னான். புராணத்தைக் கேட்க வருமாறு சிவனடியார்கள் பலருக்கும் திருமுகம் அனுப்பினான். திருமுறைகளில் வல்லோரும் வேத சிவாக மங்களைக் கற்றுணர்ந்தோரும், அமைச்சர்களும், தானைத் தலைவர் களும், குறுநில மன்னர்களும், சைவக் குருமார்களும், சைவமடத் தலைவர்களும், இலக்கண இலக்கியங்களில் வல்ல புலவர்களும் அழைப்பினை ஏற்று தில்லையம்பலத்தை அடைந்தார்கள்.
திருவாதிரைத் திருநாள்
நடராசப்பெருமானுக்கு உகந்ததும், திருஞானசம்பந்தர் திருவ வதாரம் செய்ததும், அவருக்கு உமையம்மை ஞானப்பால் அளித்ததும் ஆகிய பெருமைகளை உடையது திருவாதிரை. இது கருதியே சேக்கிழார் பெருமான் தில்லையில் சித்திரைத் திருவாதிரையில் தொடங்கிச் சித்திரைத் திருவாதிரையிலேயே திருத்தொண்டர் புராணத்தை முற்றுவித்தார்.
ஆதலின் திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலையில் நிறை வெய்துமாறு, திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைத் தொகை, வகை நூல்களாகக் கொண்டு பதின்மூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்ற திருத்தொண்டர் புராண விரிவுரையும் சித்திரைத் திருவாதிரையிலேயே தொடங்கப் பெற்றுச் சித்திரைத் திருவாதிரையிலேயே முற்றுவிக்கப்பட்டது. இருந்து கேட்ட மன்னரும் மக்களும் இன்பக்கடலில் திளைத்தனர். பெரியபுராணம் தில்லையில் அரங்கேற்றிய நாள் 20. 4. 1140 என்பர் ஆய்வறிஞர் குடந்தை நா. சேதுராமன்.
தில்லைவாழ் அந்தணர்கள் திருத்தொண்டர் புராணத்தைச் சிவ னெனவே கருதிச் சிவமூலமந்திரத்தால் அருச்சனை செய்து இறைஞ் சினார்கள்.
தொண்டர் சீர்பரவுவார்
சோழமன்னன், திருத்தொண்டர் புராணத்தையும் சேக்கிழா ரையும் யானை மீது ஏற்றி, தானும் அவர்பின் அமர்ந்து, தன் இரு கைகளாலும் வெண் சாமரைக் கவரி வீசிக்கொண்டே, திருவீதியை வலம் வரச் செய்தான். யானை, திருவீதி வலம் வந்து கனகசபையின் முன்னே நின்றது. அடியவர் பலரும் சூழ்ந்து நின்று போற்றினர். சேக்கிழார் யானையிலிருந்து கீழே இறங்கி, திருத்தொண்டர் புராணத் திருமுறையைக் கனகசபையின் முன்னே வைத்தார். மன்னர்பிரான் சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப்பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான். அன்பர்களும் தொண்டர்சீர் பரவுவாரைத் தொழுது போற்றினர். அநபாய சோழன் திருத்தொண்டர் புராணத் தைச் செப்பேட்டில் எழுதச் செய்து முன்னுள்ள பதினொரு திருமுறைக ளோடு சேர்த்து இந்நூலைப் பன்னிரண்டாம் திருமுறையாக்கிச் சிறப்பித்தான்.
பாலறாவாயர்
சேக்கிழாரைப் பணி கொள்ள விரும்பாத அநபாய சோழன் அங்கிருந்தவர்களை நோக்கி, சேக்கிழாரின் தம்பியார் பாலறாவாயர் எங்குள்ளார் என வினவினான். அங்கிருந்தவர்கள் பாலறாவாயர் குன்றத்தூரில் திருக்குளம் அமைத்து, திருநாகேச்சுரம் திருக்கோயில் வழிபாடுகளைச் செய்துகொண்டு, குன்றத்தூரில் இருக்கிறார் எனக் கூறினர். அரசன் பாலறாவாயரை அழைத்து வரச்செய்து அவருக்குத் தொண்டைமான் என்ற பட்டப்பெயர் சூட்டி, தன் அமைச்சராக நியமித்துக்கொண்டான்.
அமைச்சர் பதவிபெற்ற பாலறாவாயர், தொண்டை மண்டலத் தில் அரசாணையைச் செயற்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார். தொண்டை நாட்டில் பெரும்பஞ்சம் ஒன்று வந்தபோது உளங்கலங் காமல் அங்குள்ள மக்களுக்கெல்லாம் உணவளித்துப் பசிப்பிணி தீர்த்த அருஞ்செயலால் `தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமான்` என எல்லோராலும் போற்றப்படும் சிறப்பை எய்தினார்.
முத்திப் பேறு
தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.
காலம்
இரண்டாங் குலோத்துங்கன் (கி. பி. 1133 -1150) வேண்டு கோட்படி சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடி அரங்கேற்றியபின், அம் மன்னன் மகன் இரண்டாம் இராஜராஜன் (கி. பி. 1146-1173) சேக்கிழார் துணையோடு தஞ்சைப் பெரியகோயிலமைப்பில், தான் தாராசுரத்தில் கட்டிய பெரியகோயிலில், நாயன்மார்களின் வரலாற்று முறை புடைப்புச் சிற்பங்களை அமைத்தான். மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1178-1218) ஆட்சிக் கால முற்பகுதியில் தில்லையில் சேக்கிழார் முத்திப் பேறெய்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகிய பன்னிரு திரு முறை வரலாற்றில் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் சேக் கிழார் காலம் பற்றிய ஆய்வாளர் பலர் கருத்துக்களையும் தொகுத்து ஆய்வுசெய்து சேக்கிழார் நாயனார் இரண்டாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என முடிவுசெய்துரைக்கின்றார்.
பொதுவாக, சேக்கிழார் நாயனார் காலம் கி. பி. 12ஆம் நூற் றாண்டு எனக்கொள்ளலாம். அண்ட வாணர்தொழு தில்லை யம்பலவர்
அடியெடுத் துலகெ லாமெனத்
தொண்டர் சீர்பரவு சேக்கி ழான்வரிசை
துன்று குன்றைநக ராதிபன்
தண்ட காதிபதி திருநெறித் தலைமை
தங்கு செங்கைமுகில் பைங்கழல்
புண்டரீக மலர் தெண்ட னிட்டுவினை
போக்கு வார்பிறவி நீக்குவார்.
சேக்கிழார் புராணம், 103
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.