சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

கண்டராதித்தர்

நாயன்மார் வரலாறு

ஒன்பதாம் திருமுறை

கண்டராதித்தர்

திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஐந்தா மவர் கண்டராதித்தர். இவர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து புதுப்பித்த முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-953) என்ப வனின் இரண்டாவது திருமகனாராவர்.

கண்டராதித்த சோழர் கி.பி. 950-957 சோழநாட்டைத் திறம் பட ஆண்டவர். சிறந்த சிவ பக்தர், தேவாரத் திருமுறைகளிடத்து மிக்க பற்றுடையவர். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. கண்டராதித்தர் தில்லைப்பதியில் எழுந்தருளிய நடராசப் பெருமானிடத்தும், திருவாரூர்த் தியாகேசப் பெருமானிடத்தும் பெரிதும் ஈடுபாடுடையவர், செந்தமிழ்ப் புலமை சான்ற இம் மன்னர் பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்துள்ளார். புறச்சமயிகளை மதித்துப் போற்றும் உயர் பண்பு இவர்பால் இருந்தது. திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அது இப்போது கண்டிராச்சியம் என வழங்குகிறது.

செம்பியன்மாதேவி

கண்டராதித்தரின் மனைவியார் மழவர்குலத்துத் தோன்றிய செம்பியன் மாதேவியாராவர். இவர் உத்தமசோழன் (மதுராந்தகன்) என்பவனை மகனாகப்பெற்றவர். இவ்வம்மையார் சிறந்த சிவபக்தர். கி.பி. 957-ல் தம் கணவன் சிவபெருமான் திருவடி நிழலையடைந்த போது இவ்வம்மையார் தம் புதல்வனைக்காக்கும் கடமையை மேற் கொண்டு, தாமும் உடன்கட்டை ஏறாது உயிருடன் வாழ்ந்தார். கோனேரிராஜபுரம் (திருநல்லம்) திருவக்கரை முதலிய சிவாலயங் களுக்குத் திருப்பணி புரிந்தவர். சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் இவ்வம்மையார் `மாதேவடிகள்` என்ற சிறப்புப்பெயர் பெற்றார். முதல் இராசராசசோழன் தென்னாட்டைச் சிவனுறை திருநாடாகச் செய்ததற்குச் செம்பியன் மாதேவியார் தூண்டுகோலாக உதவினார். இராஜராஜசோழனின் 16-ஆம் ஆட்சியாண்டில் கி.பி. 1001-ல் இவ்வம்மையார் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

கண்டராதித்தர் தில்லைப் பெருமானைப்பாடிய திரு விசைப்பாப் பதிகம் ஒன்றேயாகும். அப்பதிகத்தின் எட்டாம் திருப் பாடலில் தம் முன்னோர் சிறப்பியல்புகளையும், திருக்கடைக்காப்புச் செய்யுளில் தம்மைக் கோழிவேந்தன் (கோழி – உறையூர்) தஞ்சையர்கோன் என்றும் கூறிக்கொள்கின்றார்.

காலம்

கண்டராதித்தர் கி.பி. 950 முதல் கி.பி. 957 வரை ஆண்டவர். ஆதலின் இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு என்பது தெளிவு.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.