சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஈழத்தில் சைவம்

ஈழத்தில் சைவம் வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே வேரூன்றி வளர்ச்சிபெற்ற சமயமாகும். ஈழத்தில் இன்று நிலவும் ஏனைய சமயங்கள் இந் நாட்டிற்கு வந்த காலத்தை வரையறை செய்யலாம்;. ஆயின், சைவத்தின் காலத்தை அவைபோல் வரையறை செய்துகாட்ட முடியாது. இந் நாட்டின் அதிதொன்மையான சமயம் சைவம் ஆகும்.

ஈழநாட்டின் பூர்விகக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் நாகரும் இயக்கரும் ஆவர். இவர்கள் வழிபடு கடவுள் சிவன் ஆவர். நாகர் ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்தவர்களாவர். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சிவ வழிபாட்டுக்காரராகவே இருந்து வந்திருக்கின்றனர். திருக்கேதீச்சரம் அவர்களது பிரதான வழிபடு கோயிலாகவும், இருப்பிடமாகவும் விளங்கியதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இங்கு வாழ்ந்தவர்களாகக் கூறப்படும் மாதுவட்டா, விசுவகர்மா, மயன், குபேரன், இராவணன், மண்டோதரி முதலியோர் சிறந்த சிவபத்தி உடையவர்களாகத் திகழ்ந்திருக்கின்றனர்.

பூவும் புகையும் கொண்டு கடவுளை வழிபடுதலே பண்டைத் தமிழர் மரபு. பூ இதயத்தையும், பூகை அது உருகுவதையும் குறிப்பிடுவன. தென்னாட்டவனாகிய இராவணன் சிவபூசை புரிபவனென்றும், அவன் செல்லுமிடங்களெல்லாம் பொன் இலிங்கத்தை எடுத்துச் சென்று, பூவும் புகையுங் கொண்டு வழிபட்டானென்றுஞ் சொல்லப்படுகின்றது.

மயனின் மகளும், இராவணனின் மனைவியுமாகய மண்டோதரி திருக்கேதீசரத்திற்றான் வளர்ந்து வழிபாடு செய்து வந்தவளாவாள். இன்னும், இவள் கன்னிகையாக இருந்து நோற்று வரம்பெற்ற வரலாற்றை

“ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய
ஆர்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோ தரிக்கு
பேரருள் இன்ப மலித்த பெருந்துறை மேய பிரானை
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்”

என்ற குயிற் மத்திலும், மண்டோதரி மனதில் தியானித்த மாத்திரையில் சிவபிரான் அவளுக்குக் காட்சி கொடுத்ததை,

“வந்திமையோர்கள்…….. எனத் தொடங்கி
……..பெருந்துறை யாதி அந்நாள்
உந்து திரைக்கடலைக் கடந. தன்(று)
ஓங்கு மதிலிலங்கை யதனிற்
பந்தணை மெல்விரலாட் கருளும்
பரிசறிவா ரெம்பிரா னாவாரே”

என்ற இருவார்த்தையிலும் மணிவாசகர் சிறப்பித்துப் பாராட்டிப் பாடியமை இங்கு கருதற்பாலதாகும்.

இராவணனும், அவன் மனைவி மண்டோதரியும், சிவன் மாட்டு ஆழ்ந்த பக்தியுடையோராய்ப் பஞ்சாட்சர செபஞ் செய்தவர்களாதலினாலன்றோ, பஞ்சாட்சர மகிமை பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் கூறும்போது

“வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி யுய்ந்தன”

என்றும், விபூதி பற்றிக் கூறும்போது,

“இராவணன் மேலது நீறு” என்றும் பாடியிருக்கின்றார். இதிலிருந்து ஈழத்தில் அக்காலச் சிவபக்தி எவ்வளவு ஆழமாக இருந்ததென்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இராவணன் தன் தாயின் அபரக்கிரியைகள் செய்தற்காக அமைக்கப்பெற்றதே திருக்கோணமலையிலுள்ள கன்னியாய் தீர்த்தம் என தட்சண சைலாய புராணம் கூறுகின்றது.

கைலைமலையின் கீழ் அழுந்திய இராவணன் பரமசிவனை இரங்க வைப்பதற்காக இரங்கற்பண்ணாகிய விளரி பாடி உய்ந்தனன் என வரலாறு கூறுகின்றது. இராவணனுடைய தகப்பனார் “சிவதாசன்” என்று இராவணனுக்கும், “பரமன்” என்று கும்பகர்ணனுக்கும், “பசுபது” என்று விபீடணனுக்கும், “உமையம்மை” என்று சூர்ப்பனகைக்கும் பெயரிட்டிருந்தார் என்றும் இவர்களுடைய பகைவர்களே இராவணன், கும்பகர்ணன், விபீடணன், சூர்ப்பனகை என்ற பெயர் கொண்டு இவர்களை அழைத்தனர். என்றும் “அகத்தியர் இலங்கை” என்ற நூலில் புத்தூர் வாசியாகிய திரு. வ. நாதர் கூறியிருக்கின்றார்.

சூரபன்பனது மனைவியுடைய பாட்டனார் பெயர் துவட்டா. இவர் நெடுங்காலம் பிள்ளைச்செல்வம் இல்லாதிருந்தவர். ஈற்றில் திருக்கேதீச்சரத்தில் தவம் செய்து புத்திரப்பேறு பெற்று, அங்கேயே வாழ்ந்தவர். அவரால் அந்நகரம் உண்டாக்கப்பட்டபடியால் அது மகரதுவட்டா எனப்பட்டு, பின் மாதோட்டம் ஆனது என்பர் அறிஞர்.

பண்டைக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த மக்கள் கல்வியிலும் கடவுள் பத்தியிலும் சீர்திருத்தத்திலும் மிகவும் சிறந்து விளங்கினர். இன்று இந் நாட்டில் நிலவுஞ் சமயங்கள் இங்கு வருவதற்கு முன்பு, இந் நாட்டில் வாழ்ந்த. மக்களுக்குரிய சமயம் சைவமாக இருந்தது, சிவனே அவர்களது கடவுள் ஈழத்து அரசனாகிய இராவணனும் அவனுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்களும் சைவ சமயத்தவர்களாகவே இருந்தார்கள் என்று இதில் முன்பு கண்டோம்; இவர்கள் ஈழத்தின் பல பகுதிகளிலும் பல சிவன் கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தார்கள்.

காங்கேசன்துறையில் “காங்கேயனீசுவரம்” என்னும் பெயர் கொண்ட சிவன் கோவிலை “கைதன்” என்னும் மறுபெயர் கொண்ட “முருகன்” என்ற சேனைத் தலைவன் ஒருவன் கட்டி, அக்காலத்தில் ஊர்கள் தோறுமுள்ள சிவாலயங்களில் சைவப்பிரசங்கங்களைச் செய்வித்துச் சனங்களுக்குச் சைவ அறிவை ஊட்டினான் என வரலாறு கூறுகின்றது.

இலங்கைச் சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேனாட்டறிஞர்களும், இலங்கையின் பூர்விகம் பற்றிக் கூறிமிடத்து சைவசமயமே எல்லாச் சமயங்களுக்கும் முன்னர் இலங்கையில் விளங்கிற்றென்பதை வலியுறுத்துகின்றனர்;.

போரத்துக்கேய வரலாற்றாசிரியராகய “குவிறோஸ்” என்பவர் தான் எழுதிய இலங்கைச் சரித்திரம் பற்றிய நூலில், கி.மு. 1300ஆம் ஆண்டில் திருக்கோணேசுரக் கோயில் கட்டப்பட்டதெனக் கூறுங்கல்வெட்டொன்று இருந்தது எனக் கூறுகின்றார்;.

விசயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் இந்நாட்டிற் சைவம் செழிப்புற்றிருந்தகென வண. வலபொல இராகுல என்பவர் எழுதிய “இலங்கையில் பௌத்த வரலாறு” என்னும் நூலில் கூறியுள்ளார்.

திரு. ஜே. டபிள்யூ. ரெனற் என்பவர் எழுதிய இலங்கைச் சரித்திர நூலில் இலங்கையில் ஆதியில் குடியேறியவர்கள் சைவர்களே எனக் கூறுகின்றார்.

19ஆம் நூற்றாண்டில் புகழ்வாய்ந்த கல்விமான்களுள் சேர்வில்லியம் ஜோன்ஸ் ஒருவர் ஈழத்துப் பல்வேறு குடிகளினதும் மொழி, இலக்கியம், சமயம், தொல்பொருட்கள் முதலானவற்றை நன்கு ஆராய்ந்தவர்; ஈற்றில் முடிந்த முடிபாக இப்பெரியார் கூறுவது, “எமது எண்ணத்திற்கு எட்டாத காலந் தொடக்கம் ஈழத்தில் சைவமக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்” என்பதாகும்.

உருகுணைத் தேசியப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட கிறீத்துவுக்கு முற்பட்ட காலத்ததெனக் கணிக்கப்படும் கல்வெட்டொன்றில் “சிவநகர்” என்ற இடப்பெயர் குறிக்கப்பட்டிருக்கக் காணலாம்.

விசயன் இலக்கைக்கு வந்து. அரசாட்சியை ஏற்றதும், பழைய சிவாலயங்களைத் திருத்தினான் என்றும், பாதுகாப்பிற்காக நாலுதிக்கிலும் நாலு புதிய சிவாலயங்களை அமைத்தானனென்றும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது,

அநுராதபுரகாலம் :

விசயனுக்குப்பின் அரசாண்ட பாண்டுக வாசுதேவன், அபயன், பாண்டுகபாயன் முதலியோர் சைவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

திசனுக்கு முற்பட்ட அரசர் பலர் “சிவன்” என்ற பெயருடன் இருந்திருக்கின்றனர். கிரிகண்ட சிவன், மூத்தவன் (கி. மு. 307-267) மகாசிவன் (257-205) போன்ற பெயர்கள் இதற்கான எடுத்துக்காட்டுக் குரியனவாகும்.

அநுராதபுரதில் வேதசவாகமங்களில் வல்ல அந்தணர் பலர் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர். பாண்டுகபாயன் அநுராதபுரத்தை நிருமாணிக்கும் பொழுது அந்தணார்களுக்கென ஒரு பகுதியை வகுத்தானென்றும் சிவன் கோயில் ஒன்றை நிறுவினான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது,

கி. மு. 145-101 வரையான காலத்தில் எல்லாளன் என்னுந்தமிழ் மன்னன் அநுராதபுரத்திலிருந்து அரசுபுரிந்தான். இவன் ஒருசைவன், இவன் காலத்தில் சைவம் இங்கு நன்கு பரவியிருக்கின்றது. ஆயின் எல்லாளனும் அவன் போன்றோரும் அக்காலத்தில் சைவத்துற்காற்றிய அருந்தொண்டுகளை எடுத்துக்காட்டக்கூடிய நூல்கள் இல்லா தொழிந்தமை எமது தவக்குறையேயாம்;.

கி. பி. 4ஆம் நூற்றாண்டில் அரசு செலுத்திய மகாகேனன் பௌத்தந் தவிர்ந்த ஏனைய சமயங்கள் பரவுவதைத் தடுக்க முயன்ற போது சிவாலயங்கள் தகர்த்தெறியப்பட்டதாகக் கூறப்படுவதனால்; அவன் காலத்திலும் – அவனுக்கு முற்பட்ட காலத்திலும் சைவம் இந்நாட்டில் நன்கு வளர்ந்திருக்க வேண்டும் என யாம் நம்பலாம்,

கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஈழத்திற்கு வந்த குளக்கோட்டன் என்ற சோழ அரசன் திருக்கோணேசுவரம், முன்னேசுவரம் ஆகிய திருத்தலங்களுக்குத் திருப்பணிகளைச் செய்ததோடு, நித்திய நைமித்திய பூசைகள்சிறப்புற நடைபெறத்தக்க அதிகாரிகளையும் அவ்விடங்களில் நியமித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

ஈழத்தில் சேக்கிழார் மரபு:

“சேக்கிழார்” என்ற பெயர் ஒரு குடிமரபுப் பெயராக இருந்துவந்தது, இதைப் போலவே “கூடல்கிழான்” “புரிசைக்கழான்” “குண்டையூர்க்கழான்” போன்ற குடிகளும் இருந்தனர். சங்ககாலத்திலும் “கிழார்” என்ற பெயர் பல இருக்கக் காண்கிறோம், கிள்ளிமங்கலகிழார், கொளியூர்கிழார், நல்லாவூர் கிழார், பெருங்குன்றூர் கிழார், மருதங்கிழார், மாங்குடிகிழார் முதலிய பெயர்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

மேற்கூறிய “கிழார்” விகுதியில் சேக்கிழார் மரபு ஈழநாட்டிலும் ஆதியில் இருந்து வத்திருக்கின்றமையைக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தென்னிந்திய சாசன எண் 1403 பகுதி II இன்படிக்கு, “சேக்கிழான் செட்டி சங்கன், அநுரதபுரம்- இலங்கைக்தீவு என(607{1912B) கல்வெட்டு ஒன்று தமிழில் உள்ளது. சிறிசங்கபோதி மாராயன் 5ஆம் நூற்றாண்டு. இதில் சேச்கிழான் செட்டிசங்கன் என்பவன் குமாரகணத்துப் பேரூர் வாசிகள் வட்டிக்காக 30 ஈழக் காசுகள் பெற்று, நொந்தா விளக்கு, திருவமுது இவைகளுக்காகக் கொடுத்தது கண்டிருக்கின்றது.

மேலும் “சேக்கிழான் – சென்னை”608/2. மேற்கூறிய அதே இடத்தில்; அதே அரசன் 5ஆம் ஆண்டில் சேக்கிழான் சென்னை என்பான் தானஞ்செய்தது காணப்படுகின்றது.

மேலே கூறப்பட்ட இவ்விரண்டு கல்வெட்டுகளும், “சேக்கிழார்” என்ற குடிப்பெயர் ஈழநாட்டிலும் வழங்கி வந்திருக்கிறதென்பதை உறுதி செய்கின்றன.

மகாவம்சத்தின்படிக்கு இச்சாசனத்தில் கூறப்படும் றிசங்கமோதி என்ற சங்கபோது III என்னும் அரசன், கி.பி. 624இல் பட்டத்திற்கு வந்தவன்(1913 E.P.103). இலிருந்து சேக்கிழார் என்ற குடிப்பெயரின் தொன்மையை யாம் மட்டுக்கட்டிக் கொள்ளலாம். இன்னும், திருத்தொண்டர் பெரியபுராணம் அருளிய அருண்மொழித் தேவராய குன்றத்தூர் சேக்கிழார் காலம். 12ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. அப் பெரியவர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஈழத்தில் சேக்கிழார் மரபு இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்காட்டிய மேற்கோள்களிலிருந்து சேக்கிழார் மரபுக் குடிகள் தமிழ்நாட்டுத் தொண்டை நாட்டில் மட்டுமன்றி சோழநாடு, ஈழநாடு ஆகிய நாடுகளிலும் வெகு புராதன காலமுதல் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்றும், அவர்கள் சைவத்தில் சிறந்த பற்றுடையவர்களாக இருந்து ஆலயங்களுக்குப் பல தானங்களைச் செய்துதவியுள்ளனர் என்றும் அறியக்கிடக்கின்றது.

நாவலூர் நந்தாவிளக்கு :

திருநாவலூர் சுந்தரர் திருவவதாரஞ் செய்த ஊர். “நாதணுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயு முரணி நாவலூர்” என சுந்தரரால் போற்றப்பட்ட பெருமான் கோயில் கொண்ட ஊர். இராசாதித்த சோழனது 28ஆம் ஆண்டுச் கல்வெட்டொன்று, இக்கோயிலுக்கு நந்தாவிளக்கெரிக்க வழங்கப்பட்ட நன் கொடை ஒன்று பற்றிக் கூறுகின்றது. கூற்று “ஸ்வஸ்தி ஸ்ரீமதுரை கொண்ட கோபர கேசரி வர்மற்கு யாண்டு 25ஆவது திருமுனைப்பாடித் திருநாவலூர் திருக்தொண்டீசுவீரம் இருக்கற்றவி செய்வித்த ராஜாதித்த தேவர் தாயார் நம்பிராட்டியார் சேக்கழானடிகள் பரிவாரத்தான் இத்திரகோமளம் வைத்த நந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த சாவா முறைப்பேராடு தொண்ணூறு, ஈழவிளக்கு ஒன்று என்பதாம்.

அந்நாளில் அரச பரிவாரங்களால், தமிழ்நாட்டுத் திருக்கோவிலுக்கு, விளக்கெரிக்க ஈழத்து விளக்கு வழங்கப்பட்டதென்றால், அரசமாளிகையிலுள்ளோரையும், கவரக்கூடிய கவின்பெறு கைவினைஞர் ஈழநாட்டில் இருந்திருக்கின்றனர் என்பது தேற்றமாகும்.

5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழத்திற்கு வருகைதந்த சீன யாத்திரிகனாகிய பாகியன் என்பவன் கூறியதாக சாமுவேல் பீல் (Samuel Beal) என்ற பெரியார் கூறுவதாவது, இலங்கை மன்னன் கடுமையான பிராமணிய அநுட்டான ஆசாரங்களால் தன்னைத் தூய்மை செய்து கொண்டான் என்பதாகும். இங்கு அவன் கூறிய அநுட்டான ஆசாரமுறைகள் அக்காலத்தில் இங்கு நிலவி வந்த சைவசமய ஆசார அநுட்டானங்களேயாம்.

பல்லவர் காலம்:

கி. பி. 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழ் நாட்டில் பல்லவர் ஆதிக்கம் தலையெடுத்த காலம். இக்காலத்திற்றான் தமிழ்நாட்டில் சைவநாயன்மார்கள் தோன்றிச் சையத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்கள் இங்குள்ள திருத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணேசுவரம் ஆகிய திருத்தலங்கள்மீது தேவாரம் பாடி வழிபட்டனர். இதிலிருந்து யாம் அறியக்கூடியது தேவார ஆரியர்கள் காலத்திலே, தேவாரம் பாடக்கூடிய பெருமையும் சிறப்பும் பெற்ற நிலையில் ஈழத்தில் திருக்கோவில்கள் விளங்கியிருக்கின்றன என்பதும், அத்தகைய உன்னத நிலைக்கு அவற்றை வைத்திருப்பதற்கேற்ற முறையில் ஈழத்தில் சைவமக்கள் சமயத்தைப் போற்றி வந்திருக்கின்றனர் என்பதுவுமேயாம்,

மேலும், மகேந்திரபல்லவன் சமணத்திலிருந்து சைவத்திற்குக் கொண்டுவரப்பட்டவன். அவனும் அவன் சந்ததியாரும் சைவத்திற்கு அருந்தொண்டாற்றியவர்கள். அவன் காலத்தில் இலங்கையை ஆண்ட மானவர்மன் கி. பி. 691 இல் தனது அரச பதவியை இழந்து தமிழ்நாட்டிற்கு ஓடினான். அங்கு ஓடியவன், நரசிம்மவர்மபல்லவனிடம் தஞ்சம் புகுந்தான். அங்கு பல்லவருடன் சேர்ந்து இரண்டாம் புலிகேசியுடன் போர்புரிந்து, புலிகேசியைத் தோற்கடித்தனர். அதன் பின்னர், நரசிம்மன் மானவர்மன் இலங்கையைக் கைப்பற்ற உதவி செய்தான். ஈழநாட்டவர் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைப் பல்லவர்களிடம் கற்றுக்கொண்ட காலம் இதுவேயாகும். தமிழ்நாட்டிலிருந்து மானவர்மனுக்கு உதவிசெய்ய வந்த போர்வீரரில் பலர் இந் நாட்டில் தங்கிவிட்டனர். அவர்கள் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டவைகளே நாலந்தாவில் காணப்படும் கெடிகைகள் எனக் கூறப்படுபவை ஆகும்.

மாணிக்கவாசக சுவாமிகள் காலத்திலும் சைவமக்கள் ஈழத்தில் செழித்திருந்தனரெனக் கருத இடமுண்டு. மாணிக்கவாசக சுவாமிகள் வரலாற்றில் ஈழநாட்டுப் புத்தரை வாதில் வென்ற பகுதி ஒன்று வருகின்றது. வாதில் தோற்றவர்கள் சைவத்திற்குத் தாங்களாகவே மாறினர் எனக் கூறப்படுகின்றது, அப்படி மாறியவர்கள் பரம்பரையில் வந்தவர்கள் தான் தாமென யாழ்ப்பாணத்திலுள்ள ஊர் ஒன்றில் வாழும் சைவ வேளாளச் செட்டிகள் கூறுகின்றனர்;.

மாவிட்டபுரகாலம்:

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 9ஆம் நூற்றாண்டின் முறிபகுதியிலும் உக்கரசிங்கன் என்னும் அரசகுமாரன், இன்று ‘கந்தரோடை” என வழங்கும் பண்டைய “கதிரமலை” ” என்னுமிடதிலிருந்து இலங்கையின் வடபாகத்தை ஆண்டனன். இவனே குதிரைமுகம் மாறப்பெற்ற சோழ அரசகுமாரியாகிய மாருதப்புரவிகவல்லியைத் திருமணஞ் செய்தவனாவான். அவள் வேண்டுதலின்படி அவளுக்கு உதவியாக விருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலைக் கட்டுவித்தவன் இவனேயாம். கதிரமலையிலிருந்து பின்னர் சிங்கை நகருக்கு (வல்லிபூரக் குறிச்சி) தன்னரசிருக்கையை மாற்றிக் கொண்டனன். மாருதப் புரவிசகுவல்லி வயிற்றில் பிறந்தவன் பாலசிங்கன். “மணற்றி” என்ற பெயரில் இருந்த யாழ்ப்பாணத்தை இசையிலும் கவிதையிலும் வல்லவனாகிய வீரராகவன் என்றழைக்கப்படும் யாழ்பாடிக்குப் பரிசிலாக வழங்கியவன் இப் பாலங்கனேயாம். யாழ்பாடியாகிய வீரராகவனும், அந்தகக்கவி வீரராகவனாகிய கவிஞனும் ஒருவரல்லர் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த இருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சோழர் காலம்:

சோழரின் செல்வாக்கும் ஆதிக்கமும் தென்னாட்டில் மட்டுமன்றித் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் பரவியிருந்த காலம் கி. பி. 10, 11ஆம் நூற்றாண்டுகளாகும், அக்காலத்தில் இராசராசசோழன் இலங்கையின் பெரும்பகுதிக்கு அரசனாக விளங்கியவன். இவனைத் தொடர்ந்து இவன் மகன் இராசேந்திரசோழன் இலங்கை முழுவதையும் தனது ஆட்சிக்குக் கொண்டுவந்தவன். கி. பி, 1017 இல் இலங்கை சோழ சாம்ராச்சியத்தின் ஒரு கூறாக இருந்தது. அச்காலத்திற்றான் அநுரதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்குத் தலைநகர் மாற்றப்பட்டதாகும். “ஜெனனாதபுரம்” என்ற பெயர் பொலன்னறுவைக்கு ஏற்பட்டதும் இக்காலத்திற்றான்.

சோழர், ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் பல பாகங்களிலும் பல சிவாலயங்களைக் கட்டினர். அவர்கள் காலத்தில் சைவம் இந்நாட்டில் உச்சநிலையில் வளர்ச்சி பெற்றிருந்தது. சோழர் புலத்தும நகராகிய பொலன்னறுவையைத் தலைநகராக்க அரசாட்டு நடத்திவந்தகாலத்தில், பொலன்னறுவையில் மாத்திரம் பத்துச் சிவாலயங்களைக் கட்டியுள்ளார்கள். இவற்றுள் இரண்டாம் சிவாலயம் எனப் புதை பொருளாராய்ச்சிப் பகுதியினரால் கூறப்படும் சிவாலயம், இன்றும் நன்னிலையில் இருக்கக் காணலாம், இச்சிவாலயம் இராசராசன் மனைவி பெயரால் கட்டப்பட்டு வானவன்மாதேவி ஈசுரம் என்னும் பெயர். கொண்டழைக்கப்பட்டதாகும். இந்நகரில் காணப்படும் இன்னொரு சிவாலயம் பாண்டிய காலத்தில் கட்டப்பட்டதெனக் கருதப்படுகிறது.

இலங்கைக்கு வந்து அரசு செலுத்திய சோழ இலங்கேசுவரதேவன் என்ற சோழ இளவரசன், கோணேசுவரத்தின் மீது கவனம் செலுத்தினான் என்பதை அவனுடைய மானாங்கேணிக் கல்வெட்டின் மூலமாக அறியமுடிகின்றது. இக்காலப்பகுதியேலே கோணேசுவரம் “மச்சேசுவரம்” எனக் குறிப்பிடப் பெற்றது என்பதைச் சாசனச் சான்றின் மூலம் அறிய முடிகின்றது. நிலாவெளியில் உள்ள சோழர் காலத்துக்கல்வெட்டொன்று கோணேசுவரத்துக்கு 250 வேலிநிலம் நிவந்தமாகக் கொடுக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிடுகின்றது. கந்தளாய்ச் சிவன் கோயில், பழமோட்டைச் சிவன் கோயில், மாதோட்ட இராசராச ஈசுவரத்து மாதேவர் கோயில், பதவியா. சிவன்கோயில் போன்றவை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டவையேயாகும். இவற்றுள் மாதோட்டக்கோயில் இராசராசனது படைத்தலைவருள் ஒருவனாகிய தாழிக்குமரனால் கட்டப்பட்டதாக கொழும்பு நூதனசாலையில் காணப்படும் சாசனம் கூறுகின்றது.

“சோழ மண்டலத்துச் சத்திரய சிகாமணி வளநாட்டுச் சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிக்குமரன் என்போன் மாதோட்டமான இராசராசபுரத்திலே இராசராசேசுவரம் என்னும் கோவிலை அமைத்து அதற்கு நிலம் வழங்கியதோடு, அருண்மொழித் தேவ வளநாடு என்ற பகுதியின் அரசிறை வருமானங்களையும் தானம் பண்ணியிருந்தான் என்றும், மடமொன்றினை நடாத்துவதற்கும் வைகாசி விசாகம் முடிய ஏழுநாட்களாகத் திருவிழா நடத்துவதற்கும் இதிகாச நூல்கள் அங்கு படிப்பதற்கும் அதனால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் திருவிராமீசுவரம் என்ற கோயிலொன்றும் மாதோட்டத்திலேயிருந்தது என்பதனையும், பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றின் மூலம் அறியமுடிகின்;றது.

இராசேந்திர சோழனின் அதிகாரிகளுள் ஒருவனாகிய சிறுகுளத்தூருடையான்தேவன் என்பவன் கோயிலிலே சந்தி விளக்கெரிப்பதற்காக நாலு காசு நிவந்தங்கொடுத்திருந்தான். கோயிலுக்குத் தேவையான பொருட்களைக் கோயிலுக்குரியோர் இலகுவிலே பெற்றுக் கொள்வதற்காக வெற்றிலை வாணிகர், வாழைக்காய் வாணிகர், சங்கரபாடியர் என்ற சிறு வாணிகர் குழாங்கள் மாதோட்டத்திலே குடியிருத்தப்பட்டார்கள் என்பதையும் இக்கல்வெட்டின் மூலம் ஊகித்தறிய முடிகின்றது.

பதவியாவிலே சோழர் காலத்திலே பல சிவன் கோயில்கள் எழுந்தன. அவற்றின் அழிபாடுகள் அண்மைக்காலங்களிலே அகழ்ந்தெடுக்கப்பெற்றுள்ளன. அங்கு முதலாம் இராசராசனுடைய காலத்திலே கட்டப்பெற்ற கோயில்களுள் இரவிகுலமாணிக்க ஈசுவரம் என்பதும் ஒன்றாகும். சோழராட்சியில் சேவைபுரிந்த அதிகாரிகளும் படைத்தலைவர்களும் வணிகரும் இக்கோயிலுக்குக் கொடுத்த பொன், காசு, மணி, விளக்கு முதலிய நன்கொடைகளைப் பதவியாவிலே கண்டெடுக்கப்பெற்ற இராசராசனுடைய சாசனமொன்று குறிப்பிடுகின்றது.

மட்டக்களப்புப் பிரதேசத்தையும் உள்ளடக்க பொலன்னறுவையிலிருந்து ஆட்சிசெய்த கலிங்க மாகனுடைய காலத்தது (1215 – 1255) என்று கருதப்படக்கூடிய முத்திரையொன்று கிரந்த எழுத்துக்களிலுள்ள வடமொழிச் சாசனத்தைக் கொண்டுள்ளது. அது பிராமணர் வாழுகின்ற ஸ்ரீபதி (பதவியா) கிராமத்திலே எழுந்தருளிய மகேசரைப் பற்றிக் கூறுவதாகும். எனவே மாகனது காலத்திலே பதவியாவிலே சிவத்தலமொன்று சீர்பெற்றிருந்ததோடு, முத்திரை வழங்கக்கூடிய விதத்திலே. ஆட்சிச் சிறப்புப்பெற்றிருந்தது எனவும் யாம் ஊகிக்க இடமுண்டு,

பொலன்னறுவையில் கண்டெடுக்கப்பட்டு கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் நடராசர், பார்வதி, நால்வர் திருச்சிலைகள் உலகப் பிரசித்தமானவை. பொலன்னறுவைக் காலத்தில். ஈழத்தில் சைவம் இரண்டாந்தரச் சமயமாக இருக்கவில்லை. மன்னரதும், மக்களதும் சிறப்புகளும் மரியாதைகளும் பெற்று வரலாற்றில் மற்றெவ்விடத்துங் காணாத பேரொளியாக ஈழத்தில் சைவம் விளங்கியது.

கந்தளாய்க்கு அண்மையிலுள்ள பழமோட்டையில் சோழர்காலச் சிவன்கோhவிலின் அழிவுகளை இன்றும் காணலாம். கோவில் மட்டுமன்றி, தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டையும் காணலாம். இதன்படி இக்கோவிலின் பெயர் தென்கைலாசம். இதற்கு நாகைச்சாணி என்ற பிராமணப் பெண்ணொருத்தி தன் கணவன் பெயரால் நித்திய பூசைக்கும், நந்தவன பரிபாலனத்திற்கும், இரவு விளக்கு எரிப்பதற்கும், தேவ அடியப் பெண்களை வைத்துப் பரிபாலிப்பதற்குமாகப் பொன்னும் பொருளும் வழங்கியதாகக் கூறப்படுகின்றது. கந்தளாய்ப் பகுதி ஸ்ரீ விக்கரமசோழ மேகன் தெரிந்த “வேளக்காரன்” பொறுப்பில் விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

கந்தளாயில் இருந்த பார்வதி அன்னசத்திரம் சோழர் காலத்தது என்பது ஒருசாரார் கொள்கை. இதனைக் கட்டியவன் கீர்த்திஸ்ரீ நிசங்கமல்லன் என்பர் இன்னோர் சாரார்.

கி. பி. 1185 – 1198 வரை பொலன்னறுவையிலிருந்து அரசு செய்த கீர்த்தி நிசங்கமல்லன் ஆணைப்படி செதுக்கப்பட்ட ஒரு கற்சாசனம் கற்தளாயில் 1921ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.

அவ்வெழுத்துகளின்படி, ஆதிகாலத்தில் கந்தளாய் “சதுர்வேத பிரமபுரம்” என்றழைக்கப்பட்டதென அறியக்கிடக்கின்றது. “நாலு வேதகங்களையும் கற்ற பிராமணர்களின் உறை நகரம்” என்பது இதன் கருத்தாகும்;.

மேலும், சோழர்காலத்தில் சைவம் இலங்கையில் செழித்திருந்தபடியினால், அவர்களுக்குப் பின்வந்த சிங்கள அரசர்களும் அதை ஆதரித்து வந்தார்களேயன்றி அழிக்க முன்வரவேயில்லை. சோழர்களைத் தோற்கடித்து சிங்கள அரசை மீண்டும் நிலைநாட்டிப் பௌத்த மறுமலர்ச்சிக்குப்பாடுபட்ட முதலாம் விஜயபாகு (1070-1114) சோழார் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்களுக்குக் காணிக்கை செலுத்திவந்தான். “தென்கைலாசம்” என்ற கந்தளாய்க் கோவிலையும் இவன் ஆதரித்து வந்தான். பிராமணக் குடிகளையும் ஆதரித்து வந்திருக்கின்றான். அவன் காலத்தில் இக்கோவில் “விஜயராச ஈசுவரம்” எனச் கூறப்பட்டதாகும்.

பழமோட்டைக் கல்வெட்டு :

திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாயில் பழமோட்டை என்ற கிராமத்தில் 1933ஆம் ஆண்டில் அழிந்த சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்பட்ட கல்வெட்டு ஒன்றின் மூலம் இக்கோவிலின் பெயர் விஜய இராசேசுவரம் எனவும், கந்தளாயின் பெயர் விஜய இராச சதுர்வேத மங்கலம் எனவும் அறியக்கிடக்கின்றது. கி. பி. 1244 வரை நான்மறைவல்ல பிராமணர் பலர் வசித்த இடமாகவே கந்தளாய் விளங்கி இருக்கின்றதாக ஆராய்ச்சிப் பேரறிஞர் கூறுகின்றனர்.

கி. பி. 1070இல் சோழராட்டு மறைந்தாலும், அவர்களுடன் வந்த வேளைக்காரப் படையும், அகம்படியர் என்ற போர்வீரர்களும், மற்றும் தமிழ்க் குடிகளும் கந்தளாய், பொலன்னறுவை பிரதேசத்தில் குடி இருந்தனர். இதற்கு ஆதாரங்கள் அப்பிரதேசத்தில் இன்றும் இருக்கக் காணலாம்.

முதலாம் விசயபாகுவிற்குப் பின் அரசாண்ட அரசருள் பெரும்பாலானோர் கலிங்க அல்லது பாண்டிய மரபின் வழித்தோன்றல்களாதலின், அவர்கள் சைவத்திற்குப் பேராதரவு கொடுத்துச் சைவ ஆலயங்கள் பலவற்றைக் கட்டியிருக்கின்றனர்.

சமயத்துறையில் சோழர் ஆட்சியின் பயனாக ஏற்பட்ட மாறுதலை ஜீ. ஈ. மில்ரன் என்பவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.

பொலன்னறுவையில் தூய பௌத்தக் கொள்கைக்கு மேலாகச் சைவம் எங்கும் தலைதூக்கி நிற்பதைக் காணலாம். தென்னிந்தியாவில் இருந்து வந்த படைஎழுச்சிகள் அதிகரித்ததினாலும், இப்படைகளோடு வந்தவர்களில் பலர் நிரந்தரமாக இங்கு தங்கியதனாலும், இப்படித் தங்கியவர்களது கொள்கைகள் நாட்டில் செல்வாக்குப் பெற்றதனாலும் சைவர்களுடைய தெய்வங்களுக்கு வழிபாடு மேலோங்க வந்தது என்பதாகும்.

கி. பி. 1153-1186 வரை ஆட்சிபுரிந்த முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் சைவக்கிரியைகள் நடந்ததாகக் கூறப்படுகின்றது. இவன் 13 சைவ ஆலயங்களை நிறுவியதோடு, 79 பாழடைந்து அழிந்துபோன சைவ ஆலயங்களைப் புனருத்தாரணஞ் செய்தானென்றும் சூளவம்சம் கூறுகின்றது.

கி. பி. 1186 – 1197 வரை ஆட்சியிலிருந்த கீர்த்திஸ்ரீ நிசங்கமல்லன் இராமேசுவரத்தில் “நிசங்கமகேசுவரம்” என்ற கோயிலைக் கட்டியதாகவும், இராமேசுவரத்தில் திருப்பணி வேலைகள் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

தம்பதெனியா, குருநாகல், கம்பளை, கோட்டை, இறயகம அரசர்கள் ஆட்சிக்காலங்களிலும் சைவசமயம் வளர்ச்சபெற்றதென்றே சொல்லலாம். இக்காலத்துச் சைவநிலை பற்றிய விளக்கத்தை டாக்டர் ஜி..சி.மென்டிஸ் எழுதிய “இலங்கைப் பூர்விக சரித்திரம்” என்ற நூலிற் கண்டுகொள்ளலாம்.

வன்னியர் காலம் :

வன்னியர் மான்மியம் பற்றிக் கூறும் நூல் சிலை எழுபது, சோழராட்சி வீழ்ந்த பின்னர் அவர்களுடைய படைத்தலைவர்களாகிய வன்னியாகள் இப்பொழுது வன்னிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் தங்கள் ஆட்சியை நிலைநாட்டினர். இவ் வன்னியர் அக்கினி குலத்தவர் என்று கூறப்படுவர், பனங்கமம், குமாரபுரம், ஓமந்தை, தம்பலகமம் என்னும் ஊர்களே இவர்களின் பிரதான இடங்களாகும்;.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், இவ்வன்னியர்கள் ஆதிக்கம் மேலிட்டுத் தாம் வாழ்ந்த பகுதிகளில் சைவசமய வளர்ச்சியில் ஈடுபடலாயினர். இதனால் இப்பிரதேசங்களில் அநேக சைவ ஆலயங்களைக் கட்டினர். இப் பகுதியிலுள்ள “குமாரபுரம்” முருகன் கோயில் பெருமை வாய்ந்த ஒன்றாகும் இவ்விடங்களில் வாழ்ந்த வன்னித் தலைவர்கள் குடும்பங்களுக்கும் அராலி, மூளாய், தொல்புரம், சுளிபுரம், நவாலி, சங்கானை, கோப்பாய், இருபாலை, தெல்லிப்பழை, மறவன்புலம், உடுப்பிட்டி, கோவிலாக்கண்டி ஆகிய இடங்களிலுள்ள சைவக் குடும்பங்களுக்குள்ளும் மாற்றுத் திருமணத் தொடர்புகள் இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாண்டியர் காலம் :

பாண்டிய அரசர்களாகிய சடாவர்மன் சுந்தரபாண்டியனும் (1253 – 1270) மாறவர்மன் குலசேகரனும் (1270 – 1210) இலங்கையைத் தங்களாணைக்குட்படுத்தியவர்களாவர். இவர்களாட்சியாலும் சைவம் இங்கு செழிப்புற்றிருக்கின்றது. சுந்தரபாண்டியன் திருக்கேதீசுவரம் புனருத்தாரண வேலையிலும், சைவசமய வளர்ச்சியிலும் கருத்துச் செலுத்தியவனாகக் கூறப்படுகின்றது. திருக்கோணமலையிலுள்ள பிரடறிக் கோட்டை வாயிலில் உள்ள நிலைக்கல்லில் காணப்படும் மீன் முத்திரையைப் பொறித்தவன் இவனே எனவும் பேசப்படுகின்றது.

இவ்வாறு சிவ வழிபாடு செழித்து ஓங்கி இருந்த சிவபூமி எனப் பெயர் கொண்ட, இந்நாட்டில், பிறமத வருகை சிவ ஆலயங்களை அழியச் செய்துள்ளது. இவற்றால் புராதன சிவத்தலங்கள் பல அழிந்தன. சிலகாடு மண்டிவிட்டன. இன்னும் சில பேச்சிலும் எழுத்திலும் இருக்கின்றனவே தவிர, இருந்த இடமே காணவில்லை. இதைப்பற்றிய புராதன வரலாறுகளையும், மகிமைகளையும் – இவற்றைப் பழுதுபார்த்த மன்னர்கள் – இவற்றின் பரிபாலன பாதுகாப்பிற்கு வழங்கப்பட்ட விளைநிலங்கள், பொன் முதலானவை பற்றிய விளக்கங்களைத் திருக்கேதீசுவரம், திருக்கோணேசுவரம், முன்னேசுவரம், நகுலேசுவரம் முதலான திருத்தலங்களாலும், ஆங்காங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களாலும், தட்சண கயிலாயபுராணம், தட்சணகயிலாய மான்மியம், தேவாரம், திருவாசகம், இராமாயணம், மகாவம்சம், யாழ்ப்பாண வைபவமாலை, இலங்கைச் சரித்திரம் முதலிய நூல்களாலும் பிற ஏதுக்களாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

யாழ்ப்பாணத்தரசர் காலம் :

கி. பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கைச் சரித்திரத்தில் தனி இடம் பெறுபவர்கள் யாழ்ப்பாணத்தரசர்கள். இவர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கூறப்படுபவர்கள். இவர்கள் தமிழுக்கும், சைவத்திற்கும், சித்தவைத்தியத்திற்கும் அருந்தொண்டாற்றியவர்கள், இவ்வரசர்கள் திருக்கேகச்சரம், திருக்கோணேசுவரம், இராமேசுவரம் ஆகிய மூன்று தலங்களினதும் நித்திய நைமித்தியங்களிலும், திருப்பணிகளிலும் கூடிய கவனஞ் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

கி. பி. 1410இல் அரசோச்சிய குணசிங்க. ஆரியன் திருகோணமலையிலிருந்து கொண்டு சென்ற கருங்கற்களால் இராமேசுவரக் கர்ப்பக் கிரகத்தைக் கட்டுவித்தவனாவன். கோயிற் கர்ப்பக்கிரகத்திற் பதிக்கப்பட்டிருக்கும் சாசனமூலம் இதனை அறிந்துகொள்ளலாம். மேலும் இவ்வாரியச்சக்கரவர்த்திகளுக்கும், இராமேசுவரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததனாலன்றோ இவர்கள் “சேதுகாவலர்” என்ற விருதுப்பெயர் கொண்டழைக்கப்பட்டு வந்தனர்.

இராமேசுவரம் இவ்வரசர் ஆணைக்குட்பட்டிருந்ததாகவும், அத் தலத்துச் சிவாலயத்தில் இவ்வரசர்கள் பத்தி பூண்டோராயும், சேது தீர்த்தத்தை அதிசரத்தையோடு காவல் செய்வோராயும், இன்று யாம் “சிவமயம்” “திருச்சிற்றம்பலம்” எனும் மங்களச் சொற்களுடன் எழுதத் தொடங்குவதுபோல், இவ்வரசர்கள் “சேது” எனும் மங்களச் சொல்லிட்டுத் தங்கருமங்களை ஆரம்பிப்பவராயும் “சேது” எனும் வாசகத்தையே தம் முத்திரைக் காசுக்கு வழங்குவோராயும் இருந்தமை பற்றி வரலாறு பேசுகின்றது. மேலும், சங்கிலியன் தன் வெண்சங்கக் கேடயத்தில் “சேது” என்றே பொறித்திருந்தான் என வண. குவிறோஸ் கூறுகின்றார், இன்னும் இவர்களது முத்திரைக் காசுகளில் “சேது” என்ற எழுத்துடன், சிவபெருமானது ஊர்தியாகிய “நந்து” உம் இருக்கக் காணலாம்.

பரராசசேகர மன்னன் தனது மகனாகிய சங்கிலிக்குத் தெரியாது தன்னிடத்துள்ள திரவியங்களையும், பொன்முடி முதலிய அணிகலங்களையும், பிலத்துவாரத்தில் (தொண்டைமானாற்றிலுள்ள பகுதி ஒன்று) பாதுகாப்பாகச் சேமித்து வைத்துவிட்டு, ஒரு தொகைத் திரவியத்துடன் திருக்கேதீச்சரஞ் சென்று வழிபாடாற்றிக்கொண்டு இராமேசுவரத்துக்குச் சென்றதாகவும், இராமேசுவரத்தில் அப்பொழுது பழுதுற்றிருந்த சித்திரக்கான் மண்டபத்தையும், கர்ப்பக் கிரகத்தையும் புதுக்குவிக்குமாறு தான் கொண்டுசென்ற திரவியத்தைத் தனது மந்திரி ஒருவனிடங் கொடுத்து, அவ்வேலைகளைக் கவனிக்க அவனை அங்கே அமர்த்தி மீண்டதாக யாழ்ப்பாண வரலாறு கூறுகின்றது. இது நடந்த காலம் கி.பி. 1540 என்பர்.

செகராச சேகர மன்னனால் இராமேசுவரத்தில் ஒரு அன்னசத்திரம் அத் நாளில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது,

இங்கு இவை யாவற்றையும் ஊன்றி நோக்கும்போது, யாழ்ப்பாணத்தரசர்களே ஆதிச்சேதுகாவலர் என்று தெளிய இடமுண்டு.

கண்டியரசர் காலம்:

கண்டியரசர் காலத்திலும் சைவம் ஈழத்தில் வளர்ச்சியுற்றிருந்தது. இவ்வரசர்களில் பலர் தமிழ் நாட்டிலிருந்தே தங்கள் பட்டத்தரசிகளைத் தெரிந்தெடுத்து வந்தனர். அப்பட்டத்தரசிகளும், அவர்களுடைய துணைக்கென அனுப்பப்பட்டோரும் சைவசமயத்தவர்களாகவே இருந்தனர். இதனல், இவர்களது வணக்கத்திற்காகவும் இம்மன்னர்கள் கண்டியில் சிவாலயங்களை அமைத்தனர். கோணேசுவரம், முனிசுவரம், கதிர்காமம், கண்டிக் கதிரேசன் கோயில் போன்றவை இம் மன்னர்களது பேராதரவைப் பெற்றிருந்தனவாகும்.

தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் படிப்படியாக வளர்ந்துவந்த சைவ சமயச் செல்வாக்கு, 16ஆம் நூற்றாண்டில் இப்பிரதேசங்களில் உச்சநிலையை அடைந்திருந்தது. போர்த்துக்கேசரைக் கடுமையாக எதிர்த்துப் போர் புரிந்த சீதாவாக்கை மன்னனாகிய முதலாம் இராசசிங்கன் தனது பாரம்பரிய சமயத்தை விட்டுச் சைவத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. அரண்மனையில் சைவம் பெற்றிருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டும் நல்ல உதாரணம் இதுவாகும். மேலும் சைவப் பற்றுடைய இம்மன்னன் ‘பைரவ ஆண்டி’ என்றழைக்கப்படும் ஒரு சிவாலயத்தை சிதாவாக்கையில் விசயநகரக் கட்டட அமைப்பு முறையில் கட்டியுள்ளான். சிவனொளிபாதயாத்திரை வருமானங்களைக் கூடச் சைவத் துறவிகளுக்கு வழங்கினான் என்று சூளவம்சத்தில் கூறப்படுகிறது.

இரண்டாம் இராசசிங்கன் கோணேசர் கோயிலையும், கதிர்காமத்தையும் திருத்தியமைப்பதில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது.

ஆறாம் விஜயபாகு மன்னன் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாக இங்கு கிடைத்த தமிழ்க் கல்வெட்டொன்றின் மூலம் அறியக்கிடக்கிறது.

கோட்டை அரசின் தலைநகரான ஜயவர்த்தன புரத்திற்கு வெளியே ஈசுவரன் கோயில் ஓன்று அமைந்திருந்தது. அக்கோவிலை பல்வகை வாத்தியங்களும் இசைக்கத் தமிழ் மொழித் தேவாரங்கள் ஓதப்பட்டு வந்ததாகச் சிங்கள நூலாகிய பஸலகி ஹினி சந்தேச என்ற நூலின் 12ஆவது செய்யுள் கூறுகின்றது.

விடைக்கொடி :

பாண்டியர் படைத்தலைவனென மாகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட “ஆரியச் சக்கரவர்த்தி” எனக் கருதப்படும் யாழ்ப்பாணத் தமிழ் அரசர்களுள் ஒருவராகிய குலோத்துங்க சிங்கை ஆரியச் சக்கரவர்த்து காலத்தில் ஈழம் எங்கும் சிங்கை அரசன் விடைக்கொடியே (சிவனது வாகனம்) விளங்கியது என யாழ்ப்பாண வைபவமாலை கூறும்.

நாயன்மார்க்குத் திருமடம்:

யாழ்ப்பாணத்து அரசர்கள் (ஆரியச் சக்கரவர்த்திகள்) சைவசமயத்தவர்களாகவே விளங்கினர். இவர்கள் பல சிவாலயங்களைக் கட்டியுள்ளனர். அவற்றுள் சிறப்புவாய்ந்த சிவத்தலம் நல்லூர் சட்டநாதர் கோயிலாகும். யாழ்ப்பாணத்து அரசர் ஆட்சி ஐரோப்பியர் கைக்குப் போகும் வரைக்கும் இந்நாட்டுத் தமிழர் யாபேரும் சைவசமயத்தவர்களாகவே இருந்தனர். யாழ்ப்பாணத்து அரசர் காலத்தில் அவர்களின் அமைச்சராக விளங்கிய அடியார்க்கு நல்லார் நல்லூருக்கு அருகே சைவநாயன்மார் அறுபத்து மூவருக்கும் திருமடம் அமைத்து வழிபாடாற்றச் செய்தார். இதனால் இந்த இடத்தின் பெயர் நாயன்மார்கட்டு என இன்றும் விளங்குகின்றது. திருக்கோவில் வழிபாட்டோடு மாத்திரம் நிற்காது, அடியார் வழிபாட்டிலும் இந்நாட்டவர் மிக்க பத்திமையுடையவர்களாக இருந்தனர் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

புராண படனம்:

இந்நாட்டில் உள்ள சிவாலயங்களிலும் விநாயகர் ஆலயங்களிதும், சுப்பிரமணியர் ஆலயங்களிலும் கட்டளைப்பிரகாரம் நித்திய நைமித்தியங்கள் வழுவாது நடந்து வருவதுடன், பெரும்பாலான ஆலயங்களில் ஆண்டு தோறும் திருத்தொண்டர் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், காசிகாண்டம் முதலிய புராணங்கள் எவ்வெப்புராணம் எவ்வெக்காலத்திற் படித்து முடிக்க வேண்டுமோ, அவ்வப்புராணத்தை அவ்வக்காலத்தில் பொருள் சொல்வதோடு படித்து முடித்து, புராணம் நிறைவேறும் காலங்களில் அன்னதானமும் பிற பல தானங்களும் ஈத்து வரும் நியமம் இந்நாட்டில் பண்டுதொட்டு இருந்துவருpன்றது. இப் புராணபடனம் படிக்கும் முறை ஈழநாட்டைத் தவிர்ந்த வேறெந்த நாட்டிலும் சைவ உலகிற் காணமுடியாத தனிச் சிறப்புடையதாகும்.

சைவநூல் உரையாசிரியர்கள்:

செய்யுள் நடையிலுள்ள நூற்கருத்துக்களைத் தெளிவாக்கி, மூல நூலாசிரியர் கருத்துகளுக்கு இணங்க ஐயந்திரிபறக் கூறுந் திறமை பெற்றோர். உரையாசிரியர் எனப்படுவர், உரையாசிரியரானவர் ஆழமான இலக்கணப் பயிற்சி பலவகை இலக்கியப் புலமை, நிகண்டு நெட்டுருவால் நிபுணத்துவம், புராண இதிகாசத் தேர்ச்சி, உலக அறிவு போன்றவற்றில் கரைகண்டிருக்கவேண்டும். ஈழத்தில் சைவ அறிவும், அருள் இயல்பும், இதிகாச அறிவும் வளர்ச்சியுற்றமைக்குக் காரணமாயிருந்தோர் பலருள், மேற்கூறிய வன்மைபெற்ற ஆசார சில உரையாசிரியர்களுக்கும் (நூலுக்கு உரைசெய்யும் உரையாசிரியார்கள், புராணங்களுக்குப் பொருள் கூறும் உரையாசிரியர்கள் பயன் சொல்பவர்கள்) பிரசங்கிகள், சொற்பொழிவாளர்கள், புராண இதிகாசங்களை ஒட்டி எழுதிய நாடகங்களையும் – கூத்துக்களையும் இடத்துக்கு இடம். காலத்திற்குக் காலம். நடத்திவந்த எழுத்தாளர்கள், அண்ணாவிமார்களுக்கும் பெரும்பங்கு உண்டு. சைவநூல்களுக்கு உரை செய்து பெரும்புகழ் படைத்த பெரியோர் பலர் அன்று இங்கு இருந்தனர். இன்றும் சிலர் உளர்;. எப்பொழுதும் இருந்தே ஆவர்.

சைவநூல்களுக்குப் புத்துரை செய்த ஈழத்து உரையாசிரியர் சிலரின் விவரங்கள் இதன் கீழ்த் தரப்படுகின்றன

உரையாசிரியர் பெயர் உரைநூற் பெயர்
1. நல்லூர் ஞானப்பிரகாச 1, சிவஞானடத்தியார் சுபக்கம் முனிவர் (சித்தாந்தப் பேராசிரியர் இணுவில் நடராச ஐயர் இவ்வுரை நூலைத் தனி நூலாக அச்சிட்டுள்ளார். பரராச சேகர மன்னனின் மருகனாகிய அரசகேசரி சால்த்துக்குப் பின், ஈழத்திற்குப் பெரும் புகழ் ஈட்டிக் கொடுத்த உரையாசிரியர் ஞானப்பிரகாச முனிவராவர்;)
2. ஆறுமுகத் தம்பிரான் 1. பெரியபுராணம் (பெரியபுராணத்துக்கு முதன் முதல் எழுதப்பட்ட உரை தம்பிரானுடையதாகும்) 1885-1889ஆம் ஆண்டுகளில் பகுதி பகுதியாக வெளிவந்தது.
2. திருமுறை கண்ட புராணம்
3. சேக்கிழார் புராணம்
4. அற்புதத் திருவந்தாதி
5. மூத்தநாயனார் இரட்டை மணிமாலை
3. நீர்வேலி சங்கர பண்டிதர் 1. சிவபூசையந்தாதி
4. வல்வை ச. வைத்திலிங்கம்பிள்ளை 1. கந்தபுராணம் அண்டகோசப்படலம்
2. தெய்வானை அம்மை திருமணப் படலம்
3. வள்ளியம்மை திருமணப்படலம்
4. கல்வளையந்தாதி
5. கந்தரலங்காரம்
5. வித்துவசிரோமணி ந.ச.பென்னம்பல பிள்ளை (நாவலர் மருமகன்) 1. மயூரகிரிப்புராணம் (உரை சொல்வதில் திலகமாகத் திகழ்ந்தவர். இவரிடம் பாடங் கேட்டோர் பெரியபுராணம், கந்தபுராணம் என்பனவற்றுக்கு எழுதி வைத்திருந்த குறிப்புகள் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் கையெழுத்துச் சுவடியாகப் பரவியுள்ளன.
6. இணுவில் அம்பிகைபாகப் புலவர் 1. தணிகைப்பராண நகரப்படலம் வரையான உரை – முழுவதற்கும் பொழிப்புரை
7. புலோலி நா. கதிரைவேற்பிள் 1. கூர்மபுராணம்
2. பழனித்தல புராணம்
8. உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் 1. மறைசையந்தாதி
2. கந்தபுராணம்
3. வள்ளியம்மை – திருமணப்படலம்
4. சேதுபுராணம் (அச்சிடப்படாதது)
9. நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர் 1. திருச்செந்தூர்ப் புராணம்
10. வழக்கறிஞர் மு.திருவிளக்கம் 1. சிவப்பிரகாசம் பதிப்பு ஆண்டுகள் – 1918, 1938, 1941, 1974
2. சிவஞானசித்தியார் – 1925, 1971
3. கந்தரலங்காரம்
4. திருப்புகழ்
11. சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் 1. திருவாதவூரடிகள் புராணம்
2. மறைசையந்தாதி
12. காசிவாசி செந்திநாத ஐயர் 1. திருநீலகண்ட பாஷிணம் (தமிழ் உரை)
2. தேவாரம் வேதசாரம்
3. கந்தபுராண நவநீதம்
13. மட்டுவில் க.வேற்பிள்ளை 1. திருவாதவூரணடிள் புராணம்
2. புலியுரந்தாதி
3. அபிராமி அந்தாதி
14. மகாவித்துவான் புலோலியூர் சிவஸ்ரீ ம. முத்துக்குமாரசுhமிக் குருக்கள் 1. கந்தபுராணம் – உற்பத்தி காண்டம்
2. அசுர காண்டம்
3. மகேந்திர காண்டம்
15. வே.சிதம்பரப்பிள்ளை 1. கந்தபுராண – சூரபன்மன் வதைப் படலம்
16. சாவகச்சேரி ச.பென்னம்பலபிள்ளை 1. கந்தபுராணம் – மார்க்கண்டேயர் படலம்
17. புலோலி வைத்தியலிங்க தேசிகர் (முத்தமிழ் பெரும்புலவர் விபுலாநந்த அடிகளின் ஆசிரியர்) 1. பிள்ளையார் புராணம்
18. ஏகாம்பரப் புலவர் 1. கந்தரந்தாதி
19. தும்பளை சுப்பிரமணி சாஸ்திரிகள் 1. கந்தபுராணம்
2. கந்தரநுபூதி
20. சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரம் 1. திருவருட்பயன் – 1918
2. திருவாசகமணிகள்
3. கந்தபுராண விளக்கம்
21. பண்டிதமணி மாவை சு. நவநீதகிருஷ்ண பாரதியார் 1. திருவாசகம் – பேருரை
22. திக்கம் சி.செல்லையாபிள்ளை (தீட்சாநாம் ஈசான சிவன்) 1. சீகாழி சிற்றம்பலநாடிகள் துகளறு போதம் – 1950
23. காரைநகர் பண்டிதர் சு.அருளம்பலம் 1. திருமுருகாற்றுப்படை – 1936
2. திருவாசகம் பகுதி ஐ பகுதி ஐஐ 1967 – 1973
24. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை 1. கந்தபுராணம் – தட்சகாண்டம்
25. பண்தடிமணி இ. பரமேசுவர் அம்மையார் 1. ஈழத்துச் சிதம்பர புராணம் – 1971. சருக்கம் 10. பாடல்கள் 806. இப் புராணம் பாடியவர் நாவலியூர் சோ.இளமுருகனார். உரையாசிரியர் நூலசிரியர் மனைவியார். இந் நூலின் தனிச்சிறப்பு, மூலமும் உரையும் ஒன்றிய முறையில் வெளியானமையும், ஒரே குடும்பத்தினரால் ஆக்கம் பெற்றமையும், பெண்பாற் புலவர் ஒருவரால் உரை செய்யப்பட்டிருப்பதுமாம்.
26. கொக்கவில் வை. நல்லையா 1. கந்தபுராணம் – முழுவதும்
2. பெரியபுராணம் – முழுவதும்
27. யோகி க. கார்த்திகேசு 1. கந்தபுராணம் – யுத்தகாண்டம்
2. அபிராமி அந்தாதி
3. கந்தரநுபூதி

சைவக்குருக்கள் பரம்பரை :

திருவெண்ணெய் நல்லூரில் ஆரூரரின் பாட்டனார் எழுதிக்கொடுத்த மூல ஓலைக் கைச்சாத்தை அவையொர் ஆராய்ந்தனர். அதற்காக அரண்தருகாப்பில் (Safe Custody)இருந்து வேறோர் ஆவணம் கொண்டு வந்து காட்டப்பட்டது. அவ் “ஆசிலா எழுத்தை” (Genuine and Admitted Signature and Handwriting) அவையோர்நோக்கி, முதியவன் தந்த மூல ஓலையுடன் ஒப்பு நோக்கி உண்மையை உணர்ந்தனர். இவ்வாறு ஓலைகளை எழுத்துவந்து தருவதற்கும், அவையின் அலுவல்களைக் கவிப்பதற்கும், அந்நாளில் அலுவலன் ஒருவன் இருந்தான். “அருள் பெறு கரணத்தான்” (Clerk of the Court) என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தான். இக் கரணத்தார் மூதறிவினராகவும், அனைத்து நூலுணர்ந்தவராகவும், பரம்பரைச் சைவராகவும் இருந்து வந்தனர், அன்று அங்கு பேசப்பட்ட அக் கரணத்தார் பரம்பரையினர் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் மரபில் வந்த சங்கலி மன்னனது ஆட்சிக்காலத்தில் இங்கு கணக்கர்களாக இருந்ததாக அறிகின்றோம். அவர்கள் இங்கு “கருணிகர்” என்று அழைக்கப்பட்டனர். “கருணிகர்” என்றால் “கணக்கர்” என்பது பொருளாகும்,

அக்காலத்தில் காடாகக் இடந்த கரணவாயை சங்கிலிமன்னன் அவர்களுக்குக் கொடுத்தான். கொடுத்ததுடன் உடுப்பிட்டியைச் சார்ந்த 12 குறிச்செளுக்கும் அவர்களைக் கருணிகர்களாக்கியதாக வரலாறுண்டு, “கருணிகர் வாயில்” என்ற அந்நாட் பெயர் மருவியே “கரணவாய்” என இன்று விளங்குகின்றதாகக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழரசு மறைந்த பின்னர், இக்கருணிகர்கள் சைவக் குருக்கள்மாராக, ஆலய அர்ச்சகர்களாகவும், ஊர்ப்புரோகிதர்களாரகவும் மாறிச் சைவத் தகொண்டாற்றி வருஇன்றனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் குருக்கள் வளவு, குருக்கள் மடம், குருக்கள் கோவில் என்ற பெயர்களில் இருக்கும் இடங்கள் இச் சைவப்பரம்பரையினர் பெயரால் உண்டாகிய காரண இடுகுறிப் பெயர்களேயாம், இப்பரம்பரையில் வந்தவர்தான் வரணி இல்லைநாதத்தம்பிரான் சுவாமிகள் ஆவார்.

“திருவாரூர்த் தேரழகு” என்பது முது மொழி, திருவாரூருக்கு அடுத்தபடியான தேரழகு மிக்க தலம் இருமறைக்காடாகும் (வேதாரணியம்), இத் திருமறைக்காட்டு ஆலய ஆட்டிப்பொறுப்பு அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருபவர்கள் கரணவாய் – வரணிச் சைவக் குருபரம்பரையினரேயாவர். இவ்வுரிமை, வரணி தில்லைநாதத் தம்பிரான் சுவாமிகள் காலத்தில் அவருக்குக் கிடைத்ததாகும்.

27-10-49 இல் இவ்வாலயம் சென்னை அறநிலையப் பாதுகாப்புப் பகுதியின் நேரடி நிர்வாகத்துக்கு வந்துள்ளது. அப்படி வந்தும், அவர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியும், வரணி ஆதீனத்தைச் சோர்ந்த மரபுவழி அறங்காவலருமே (Hereditary Trustee) கோவிற் கருமங்களைக் கவனித்து வருகின்றனர்.

பராபவ ஆண்டு ஆவணி 12இல் (28-8-66) பரம்பரை அறங்காவலர் ஸ்ரீலஸ்ரீ கதிர்காமபண்டார சந்நிதி அவர்களின் முயற்சியால் திருக்குடத்திருமஞ்சனம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆங்கிலத்தில் சைவக் கொள்கை:

சைவத்தைப் பற்றிப் பிற இனத்தவர்களும், சமயத்தவர்களும் அறிந்துகொள்ளும்பொருட்டு நம்நாட்டு ஆங்கிலப் புலமை படைத்த சைவப் பெரியோர் சிலர் ஆங்கிலத்தில் சைவ நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். கீழ்க்காண்போர் அவ்வரிசையில் குறிப்பிடத்தக்க முக்கிய சிலராவர்.

கி. பி. 7857இல் சேர். கு முத்துக்குமாரசுவாமி அவர்கள் உறோயல் ஏசியற்றிக் கழக இலங்கைக் கிளைச் சஞ்சிகையில் “Synopsis of Saiva Siddhanta” (சைவசித்தாந்தச் சுருக்கம்) என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை ஒன்றெழுதியுள்ளார்கள். ஆங்கிலத்தில் சைவ. சித்தாந்தம்பற்றி முதன் முதலாக வெளியாகிய ஆராய்ச்சி விளக்கக் கட்டுரை இதுவேயெனக் கூறப்படுகின்றது.

யேர்மன் நாட்டைச் சார்ந்த சமயப் பிரசாரகராகிய எச். டபிள்யூ சோமறஸ் (H.W.Schomerus) என்னும் பெரியார் தான் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் “சைவசித்தாந்தம் (Saiva Siddhanta) என்னும் தலைப்பில் யோர்மன் மொழியில், 1918இல் நூல் ஒன்று செய்தனர். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் டாக்டர் ஆர்தர் பிச் (Dr.Arthur Fiz), சைவசித்தாந்தம் பற்றிய சகலவற்றையும் நிறைவாக உள்ளடக்கி ஐரோப்பிய மொழியில் எழுதப்பட்ட நூல் இது ஒன்றே. என அறிஞர் உலகம் கூறுகின்றது. இப் பெருமைபெறு நூல் செய்த ஆசிரியரர்கிய சோமறஸ் என்பவர் “The Culture of the Soul among the Western nations (மேலை நாட்டார் உள்ளத்தின் பண்பு நிலை) என்ற சேர் பொன் இராமநாதனது நூல் சைவசித்தாந்த அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றாகும் எனத் தனது நூலில் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் அழைப்பிற்கு இணங்க அங்கு சென்ற சேர். பொன். இராமநாதன் ஆற்றிய சொற்பொழிவுகள் யாவும், சைவசித்தாந்த அடிப்படையில் அமைந்தவை என்பது முக்கியமாக இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சித்தாந்த சைவ அறிவைப் பரப்பி வளர்க்கும் பொருட்டு “சித்தாந்த தீபிகை” என்ற ஆங்கிலச் சஞ்சிகை ஒன்றைத் தென்னாட்டில் திறம்பட நடத்தி வந்தவர் சைவத் திரு. ஜே. எம். நல்லசாமிப்பிள்ளை அவர்களாவர். அச்சஞ்சிகையில் எமது பெரியாராகிய கொக்குவில் குகதாசர் ச.சபாரத்தின முதலியார் சைவம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அவ்வெழுத்து மூலம் அந்நாட்டுப் பிரபல சைவப் பெரியோர் பலரது நட்பு முதலியார் அவர்களுக்கு உண்டாகியுள்ளது. இவர் 1913இல் சைவத்தாந்தப் பார்வையில் எழுதிய “Exxentials of Hinduism” (இந்து மதத்தின் பிரதான அம்சங்கள்) என்ற நூலும், பண்டைத்தமிழர் சமயம் “வைதிக சைவமே” என்ற கொள்கையைத். தக்க பல ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டி எழுதிய “Religion of the Ancient Tamils” (பண்டைத் தமிழர் சமயம்) என்ற நூலும் சைவ உலகம் முன் வரிசையில் வைத்தெண்ணப்பட வேண்டிய நூல்களாகும்.

புலோலி சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு இலண்டனில் அச்சிடப்பட்டு வெளியாகிய “saiva School of Hinduism” (இந்து சமயத்தில் சைவக்கொள்கை) என்ற நூலும், “Glories of Saivaism” (சைவத்தின் மாட்சி) என்ற யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வெவளியீட்டு நாலும் ஈழத்துச் சைவ வளர்ச்சியின் இரு கண்களாகப் போற்றக்கூடிய நூல்களாகும். 1948இல் இப் பெரியாரைத் தருமபுர ஆதீனத்தினர் தமிழ்நாட்டிற்கு அழைப்பித்து, சைவத்திரு ஜே. எம். நல்லசாமிப்பிள்ளை அவர்களது சிவஞானூத்தியார் மொழிபெயர்ப்பைத் திருப்பிப் பார்வையிடுவித்துத் திருத்தியும், புதுப்பித்தும் வெளியீடு செய்தனர். “An Outline of Sivagnana Botham with a Rejoinder to a Christan Critic – என்ற இவரது வெளியீடு, சமய தத்துவம் பயிலும் இக் காலத்தோர் கட்டாயமாகக் கற்கவேண்டியதாகும்.

1942இல் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வெளியீடாக “விஞ்ஞானப் பட்டதாரி” ஒருவரது ஆக்கம் எனப் பிரசுரஞ் செய்யப்பட்ட, “The Elements of Saiva Siddhantam” (சைவசித்தாந்தக் கருவூலம் என்ற நூல், சித்தாந்த சைவம் கற்கப் புகுவோர்க்கு வழிகாட்டியாக அமைந்த நல் விருந்து நூலாகும். இதனது மறுபிரசுரம் 1955ல் வெளியாகியுள்ளது. “விஞ்ஞானப் பட்டதாரி” என்ற பெயரில் இந் நூலைச் செய்த பெரியார் கொழும்பு விவேகாநந்தசபையின் ஆரம்பகால முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகிய அராலி அ.செல்லப்பாபிள்ளை அவர்களது. சகோதரராகிய நீராவியடி அ. விசுவநாதபிள்ளை அவர்களாவர்.

ஆங்ககிலத்தில் திருவாசகத்தை முதன்முதல் 1900ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தவர் டாக்டர் ஜி. யு. போப் இதன் மறுபதிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தாரால் வெளியிடப்பட்டது. 1934இல் வேதமுத்து என்பவரினால் திருவம்மானையும், திருச்சாழலும் மொழிபெயர்க்கப்பட்டன. இதனை வெளியிட்டவர்கள் சென்னை கிறீத்தவ சங்கத்தார். 1958இல். கே. எம். பாலசுப்பிரமணியத்தின் மொழிபெயர்ப்பு வெளியாகியது. இவ்வரிசையில்,

1963 இல் எமது நாட்டு ஆங்கிலப் புலவராகிய திருமதி இரத்தினா நவரத்தினம் – முன்னாள் கல்விப் பணிப்பாளர் (Director of Education) அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 256 பக்கங்களைக் கொண்ட “திருவாசக விளக்கம்” என்னும் நூல் பாம்பாய். பாரதிய வித்தியாபவனில் வெளியிடப்பட்டது. சில பாடல்களின் மொழி பெயர்ப்பும், பிறபாடல்களின் விளக்கமும் சேர்ந்து திருவாசகம் எவ்வாறு சிறந்த ஒரு பத்திநூல் ஆகின்றது என்பதனை நயம்படச் சிறப்பாக எடுத்துக்காட்டும் நூல் இதுவாகும். இவ்வம்மையாரது A New Approach to Tiruvacagam” 1971இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2 ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 1923இல் தொடக்கப்பட்ட ஒரு கிறித்தவக் கல்லூரி. இக்கல்லூரியில் அந்நாளில் கற்பித்தவர்கள் ஆங்கிலேயர். அங்கு கற்பித்த அப்படியான கிறித்தவ ஆங்கிலேய ஆசியர்கள், சைவ நூல்களைக் கற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாக அறிகிறோம். ஹென்றி நிச்சாட் ஹோய்சிங்ரன் (Hentry Richard Hoisigton) என்னும் இக்கல்லுரியைச் சேர்ந்தபாதிரியார், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்று இவற்றிலுள்ள சில சைவநூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

மேலும் டாக்டர் டாசீல் (Dr. Dashiel) என்பர் 1846-49ஆம் ஆண்டுகள் வரையான காலத்தில் உவைமன் கதிரவேற்பிள்ளை அவர்களது உதவியுடன் சிவப்பிரகாசம், சிவஞானபோதம் போன்ற சித்தாந்த நூல்களை மொழிபெயர்த்துள்ளார்,

மெய்கண்ட சாத்திரங்கள் பதின்னான்கையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதுடன், சுவாமி விவேகாநந்தர் வேதாந்தக் கொள்கைகளை மேலை நாட்டில் பரப்பியது போன்று, சைவ சித்தாந்தக் கொள்கைகளையும் அங்கு பரப்பும் பணிகளில் ஈடுபட்டுழைக்கும்படி தருமை ஆதீனத்தில் அருளாட்சி புரிந்துவந்த 25ஆவது குருமுதல்வர் கைலைக் குருமணி அவர்கள், விபுலாநந்த அடிகளை 1944 இல் கேட்டிருந்தார்கள். அடிகளும் அப்பணி நிற்க இசைவுபட்டு அதற்கேற்ற முயற்சிகளில் ஈடுபட இருந்தனர். ஆயின்….. பொல்லாக்காலன் அவரை நீண்டதொண்டாற்ற நீண்டநாள் வாழவைக்காது எம்மிடமிருந்து பிரித்துக்கொண்டனன். அவர் மேற்கொள்ள இருந்த முயற்சி கைகூடியிருப்பின், சைவசித்தாந்த அடிப்படையிலமைந்த விபுலாநந்த சபைகள் பல் உலக நாடுகளில் தோற்றியிருக்கக் கண்டு சைவ உலகம் களித்திருக்கும்.

19 ஆம் நூற்றாண்டு:

1814 இல் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 329 சைவ ஆலயங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. டாக்டர் வண. பாலடிஸ் 1816இல் எழுதிய யாழ்ப்பாணப் பட்டனத்தின் சுருக்க வரலாறு tuyhW (A short Account of Jaffna Patanam – 1816 by Dr. Rev. Baldaeus) என்ற நூலில் இவ் விவரங்கள் உள. சைமன் காசிச் செட்டியின் லோன் கசற்ரீர் (Ceylon Gazetteer) என்ற நூலில் தீவின் ஏனைய பகுதிகளில் உள்ள கோயில்களின் விவரங்கள் இருக்கின்றன.

19ஆம் நூற்றாண்டின் மத்தியகாலத்தில் ஏற்பட்ட சைவசமய விழிப்புணர்ச்சி, ஆரம்பத்தில் கிறித்;தவம் பரவுதலைத் தடைசெய்து சைவசமயக்கோட்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது, இவ் வியக்கத்தைக் கொண்டுநடத்த முன்னின்றுழைத்த அக்காலப் பெரியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலராவர். ஆயின், இதுபற்றி இவர் கூடுதலாகச் சந்திக்க முன்னரே வண்ணார் பண்ணையில் 30-9-1842 இல் நடைபெற்ற சைவக்கூட்டம் ஒன்றில் சைவப்பாடசாலை ஒன்று கட்டுவதுபற்றியும், அச்சுக்கூடம் ஒன்று நிறுவிச் சைவப்பத்திரிகை ஒன்று வெளியிடுவதுபற்றியும் கலந்துரையாடினர். இச்செய்தி, 20-10-1848இல் வெளியான உதயதாரகை என்ற கிறித்தவப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

அர்சாங்க உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வடமொழி தமிழ் மொழிப் பாடசாலை அமைப்பதற்கு அந்நாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதம அர்ச்சகராக இருந்த சிவஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் (1806 – 1811) முயற்சிகள் மேற்கொண்டார். ஆயின், கல்விபற்றி அக்கால அரசாங்கத்திடம் திட்டமான கொள்கை எதுவுமில்லா இருந்ததனால் அவரது முயற்சி தோல்வி கண்டது. 1834 இல் யாழ்ப்பாணத்தில் 239 சைவப்பாடசாலைகள் இருந்ததாகவும், காலப்போக்கில் இவைகள் கிறித்தவர்களது கைக்கு மாறிவிட்டதாகவும், இதனால் சைவப்பிள்ளைகளுக்குப் புறம்பான பாடசாலைகள். நிறுவவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இப் பாடசாலைகள் பெரும்பாலும் திண்ணைப்பள்ளிக்கூடங்களாக விளங்கி இருக்கவேண்டுமெனக் கருதப்படுகன்றது(The Hindu Board for the Promotion of Education Jaffna : 1930 by Hon. S, Rajaratnam)

சமய சின்னங்களாயய திருநீறு சந்தனம் போன்றவற்றை கிறித்தவ பாடசாலைகளில் பயின்றுவந்த அந்நாட் சைவ மாணவர்கள் அணிந்து செல்வது வழக்கம். அப்படிச் செல்வோரை அங்கு அவற்றை அகற்றும்படி. வற்புறுத்துவார், அகற்ற மறுத்த சைவ மாணவர்கள். வெசிலியன் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டதனாற்றான் 1872இல் நாவலர் சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றை ஆரம்பித்தார். ஆயின். பணமுடைமையாலும், அரச அங்கோரமின்மையாலும் 1876 இல் இது மூடப்பட்டது. 1880 இற்குப் பின் சைவசமய வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டோர் ஆங்கெக் கல்வியின் பயனாக உயர் தொழில்கள் புரிந்தோராவர். இதில் சட்டவல்லுனர். இளைப்பாறிய நீதிபதிகள், சைவ அரசியல்வாதிகள் முதலானோர்க்குப் பெரும் பங்குண்டு.

முதற் சைவப்பாடசாலை :

நாவலர் பெருமானது சைவப்பிரகாச வித்தியாசாலை தோன்றுவதற்கு முன்னரே சைவப்பிள்ளைகளது கல்வி வளர்ச்சியை முன்னிட்டுக் தனது பொறுப்பில் ஒரு சைவப்பாடசாலையை 1820ஆம் ஆண்டளவில் உடுப்பிட்டியில் சைவத்திருவாளர் அருளம்பல முதலியார் அவர்கள் நிறுவியுள்ளார்கள், இவருக்குப்பின் இப்பாடசாலை இவரது மகன் அம்பலவாண முதலியார் அவர்களினால் சிறப்பாக நடத்தப்பட்டுவந்ததாக, 25-9-1851இல் வெளியாகிய “உதயதாரகை” என்ற கிறித்தவ வார இதழின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

பக்தி இலக்கியம்:

19ஆம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டிலும் ஆக்கம்பெற்ற செய்யுளிலக்கியங்களில் பெரும்பாலானவை சமயச் சார்புடையனவாகும். இக்காலத்தில் சைவசமய உட்பொருள்களை விளக்கிப்பாடிய பாடல்கள் பல. ஊர்கள் தோறும் உள்ள திருக்கோவில்களில் கோவில்கொண்டிருக்கும் மூர்த்திகள் மீது அந்தாதி, வெண்பா, ஊஞ்சல், அகவல் மான்மியம் முதலிய பிரபந்தங்கள் பாடப்பட்டன. இவற்றுள்ளும் அந்தாதி, ஊஞ்சல் ஆகிய இருவகைப் பிரபந்தங்களையுமே மிக்க விருப்புடன் புலவர்கள் பாடிவந்தனர்.

ஈழத்தில் சைவத்தமிழ் மக்கள் வாழும் இடங்களில் கோயில் இல்லாத ஊரே இல்லை. எனலாம். அத்தோடு ஏதோவொரு வகைப்பாடலும் பெறாத கோவிலுமில்லை என்றும் கூறலாம். எனவே, ஈழத்தில் சைவம் தூய்மையுடன் வளர்வதற்குக் காரணமாயமைந்தவை மேற்கூறிய பிரபந்தவகைப் பாடல்கள் என்பதும் தேற்றம்; ஈழத்தில் சைவசமய வளர்ச்சியின் பொருட்டு நூற்றுக்கணக்கான பத்தி இலக்கியங்களைப் பாடுவதற்கமைவான சூழ்நிலையை உண்டாக்கி வைத்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானேயாம்

அவரால் உருப்பெற்ற புலவர் பரம்பரை இன்றும், ஈழத்தில், சுடர்விட்டொளி கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

நாவலர் மாணவ பரம்பரையில் அசப்படாத ஈழத்துத் தமிழ்ப் புலவர்களை இன்று காண்பதரிது. இக்காரணத்தினாற்றான் 19ஆம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்னரும் பாடப்பட்ட நாவலர் பரம்பரையினர் பாடல்கள் சைவசமயச் சார்பு பற்றி அமைந்திருக்கக் காண்கின்றோம்.

சமயதாபனத் தோற்றம் :

சமய முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கும் எல்லோரையும் ஒன்றுபடுத்தி அதில் ஈடுபாடு கொள்ளச்செய்து ஊக்கமளிக்கத் தாபன அமைப்புத் தேவைப்பட்டது, இந்நோக்கால். ஏற்பட்டவையே அகில இலங்கைச் சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை, கொழும்பு விவேகாநந்த சபை போன்ற தாபனங்களாகும்.

சைவசமயக் காற்றோட்டம் பாடசாலைகள் முழுவதும் பரவவேண்டும், மேலைநாட்டு உயர் கல்விக்கூடங்கள் போல இவை வளர வேண்டும் என்ற பாங்கில் உருவாக்கப்பட்டனவே சைவப்பாடசாலைகளும் சைவப் பெருங்கல்லூரிகளுமாம்.

சைவர்களுக்கென ஆசிரிய பயிற்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கு 1913இல் சபை ஒன்று தாபிக்கப்பட்டது. காரைநகர் அருணுசல உபாத்தியார், ஏரம்பையர் போன்றோர் இதில் ஊக்கம் காட்டி வந்தனர்.

இக்காலத்தில் இழக்கு மாகாணத்தில் சைவக் கல்வி வளர்ச்சி இயக்கத்தினை ஆரம்பித்து நடத்தியோர். அரசாங்க உத்தியோகத்திலுள்ளோராவர். ஆயின், மிசனரிகளின் ஏவுதலினால் அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களைத் தடைசெய்து வந்தது. (Hanzard 1913 – 16, பக். 306-309).

அறநிலையக் கட்டளைச் சட்டம்:

1889இல் பௌத்த அறநிலையச் சட்டம் இந்நாட்டில் இயற்றப்பட்டது. இதுபோன்ற சட்டம் ஒன்று இந்நாட்டுச் சைவர்களுக்கும் வேண்டுமென்ற முறையீடொன்றை 1890இல் பொன். இராமநாதன் சட்ட நிரூபண சபையில் சமர்ப்பித்தார். “தேசாபிமானி” போன்ற பத்திரிகைகள் ஆசிரியத் தலையங்கங்கள் எழுதின. சீர் திருத்தம் வேண்டி நின்றவர்களையும், திருத்தப்பட வேண்டியவர்களையும் கூட்டி ஆலய நிருவாக ஒழுங்குகளைச் செய்ய அக்கால அரசாங்க அதிபர்கள் முயன்றனர். இவ்வுத்தேசத் திட்டத்திற்கு எதிர்ப்புங் கலவரங்களுந்’ தலைகாட்டின. எனவே சைவாலயங்கள் அறநிலையக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டுமென அரசாங்க அதிபர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்தனர்.

1906இல் திரும்பவும் கௌரவ அ. கனகசமை மூலம் முறையீடு செய்யப்பட்டது. சகல சைவர்களும் ஒருமித்துக் கோயில் நிருவர்கத்தைச் செவ்வனே நடத்தக்கூடிய திட்டம் ஒன்றைத் தயாரித்துத் தந்தால், அதனை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய உதவுவதாக அரசாங்கம் உறுதியளித்தது. 1910 வரை சைவர்கள் இதுபற்றி எம் முடிவுக்கும் வராமையால், அறநிலையக் கட்டளைச் சட்டத்தின்கீழ் சைவாலயங்களின் நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. 1950ஆம், 1975ஆம் ஆண்டுகளிலும் இக்கோரிக்கை வலுப்பெற்றமையும், கடும் எதிர்ப்பால் அது தணிந்தமையும் நினைவுகொள்ளத்தக்கதாகும்.

சைவத்தோன்றல்கள் :

இந்நாட்டில் பல சிவாநுபூதியுடையோர் வாழ்ந்து, சைவ உலகிற்கும் பெரும் வழிகாட்டிகளாகவும் விளங்கியுள்ளனர். இவர்களது. சைவசமய சாத்திர தோத்திர அறிவுகளையும், ஆசார முறைகளையும் தொண்டுகளையும் பாராட்டித் தமிழ்நாட்டவரும் – தமிழ்நாட்டுச் சைவ ஆதீன முதல்வர்களும் – அரசர்களும் மதிப்புக்கள் செய்திருக்கின்றனர். இத்திறத்தோரில் தலையாயவர்கள் பறங்கியர் காலத்தில் கோவதைக்கஞ்சிச் சிதம்பரஞ் சென்று துறவு பூண்டு வாழ்ந்தவரும், சித்தியார். சுபக்கத்திற்கு உரை கண்டவருமான ஞானப்பிரகாச சுவாமிகள், இதே காரணத்திற்காக ஊரைவிட்டோடிய வரணி தில்லை நாதர் (பின்னாளில் தில்லைநாதத்தம்பிரான் என்னுந் தீட்சாநாமதிதுடன் வாழ்ந்தவர்). அளவெட்டி வைத்தியநாத முனிவர், நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சுன்னாகம் அ. வரதபண்டிதர், நீர்வேலி சங்கர பண்டிதர், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சுன்னாகம் முருகேச பண்டிதர், கோப்பாய் சபாபதி நாவலர், கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதர், திருவண்ணாமலை. ஆதனத்தவராகச் சென்னையில் வாழ்ந்த் ஸ்ரீசரவண சுவாமிகள், ஆறுமுகத் தம்பிரான், செம்பறை சிதம்பர சுவாமிகள், இலக்கணசுவாமி எனப்படும் முத்துக்குமாரசாமித் தம்பிரான் (பழனி ஈசான சிவாசாரியர், சிவக்கவிமணி கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் என்போரின் சித்தாந்த பாட ஆசிரியர்); கொக்குவில் குகதாசர் சபாரத்தின முதலியார், நல்லூர் சிற். கைலாசபின்ளை. காரை-கார்த்திகேயப் புலவர், ந.ச.பொன்னம்பலபின்ளை. புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, மட்டுவில் க. வேற்பின்ளை, இணுவில் நடராசஐயர், ஏழாலை காரிவாச செந்தநாதஜயர், தெல்லிப்பழை வித்துவான் சிவாநந்த ஐயர், அளவெட்டி சுப்பிரமணியத் தம்விரான், திருவண்ணாமலை ஆதனத்து வித்துவானாக இருந்த வண்ணார்பண்ணே கணேச பண்டிதர் வட்டுக்கோட்டை. அம்பலவாணநாவலர், கொழும்பு வழக்கறிஞர்-மானிப்பாய் மு. திருவிளங்கம், விபுலாநந்த அடிகள், வதிரி வித்துவான் தாமோதரம்பிள்ளை அவர் சகோதரர் ச. நாகலிங்கம் பிள்ளை, நவாலியூர் க, சோமசுந்தரப்புலவர், வே. க.இராமலிங்கம்பிள்ளை மோன்றோராவர்.

சைவத்தின் வளர்ச்சிக்காகத் தங்களையும், தங்கள் பொருள்களையும் அர்ப்பணித்து, அடக்கவிலைகளிலும் இலவசமாகவும் சமய மெய்ந் நூல்களை எளிமையான முறையில், படிப்படியாக வெளியிட்டு இத்நாட்டவரதும், தென்னாட்டவரதும் உள்ளங்கவர்ந்த ஈழத்து அண்மைக்காலப் பெரியோரில் சைவப்பெரியார். சு. சிவபாதசுந்தரம், சைவப் புலவர் தேகமணி ௧. அருணாசலம், சிவஸ்ரீ அச்சுவேலி ச. குமாரசாமிக்குருக்கள் ஆகிய மூவரும் என்றும் சைவசமயத்தவர்களது நினைவில் நிற்கவேண்டியவராவர்.

விரிவுரையாளர்

மேற்கூறியோர் வழியில் “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப. மொழிவதாஞ் சொல்” என்னும் பாங்கலமைந்த சைவ விரிவுரைகள்-சொற்பொழிவுகள் ஆற்றும் பேரறிவும், பேராற்றலும்-நா-நலமும் படைத்த, பெரியோர் பலர் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ரார்கள்.

எம். எஸ், இளையதம்பி, சித்தவைத்தியர் சித்தாந்தம் ஐயம்பிள்ளை பொன்னையா (தீட்சாநாமம் அருளாநந்தசிவம்), குருகவி ம. வே. மகாலிங்கசிவம், ம. வே, திருஞானசம்பந்தபிள்ளை, சங்கானை நாகலிங்க பரதேசிச் சாமியார், திக்கம் செல்லையா, கலாநிதி சு.நடேசபிள்ளை, வித்துவான் க. கார்த்துகேசு, பண்டிதர் சோ. இளமுருகன், வழக்கறிஞர் வே, – நாகலிங்கம், “பிரசங்க இரத்தின தீபம்” என்னும் நூலாசிரியர் உடுவில் பண்டிதர் சிவஸ்ரீ வ. மு. இரத்தினேசுவர ஐயர், வித்துவான் க. வேந்தன் போன்ற உலகவாழ்வை ஒருவிய பெருமக்களும், இலக்கிய கலாநித பண்டிதமணி சி. கணபதப்பிள்ளை, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வித்துவான் சு.கி. நடராசன், முதலியார் செ. சின்னத்தம்பி மானிப்பாய் மு.வைரமுத்து, பண்டிதர் கா. பொ. இரத்தினம், சபா ஆனந்தர், வித்துவான் சி. ஆறுமுகம், க. சிவராமலிங்கம், வித்துவான் பொன். முத்துக்குமாரன், பண்டிதர் வி. ச. கந்தையா, கலாநிதி ஆ. கந்தையா, இவஸா வ, குகசர்மா, வழக்கறிஞர் நம. இவப்பிரகாசம், கவிஞர் செ. கதிரேசர்பின்ளை, ஆத்மசோதி நா, முத்தையா, வறுத்தலைவிளான் திருமுறைச் செல்வன் ச.விநாயகமூர்த்தி, மதுரகவி (சோ. பத்மநாதன் போன்றோர் முதிர்ச்சபெற்ற வாழும் சைவச் சொற்பொழிவாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “கற்றோர் கனமறிவர்” என்பதற்கமைய ஈண்டு இவர்கள்பற்றி அதிகம். எழுதாது விடப்படுகின்றது.

சைவ உலகம் மெச்சிப் பேசுந் தலைசிறந்த சைவசமயச் செஞ்சொல்லரசிகளும் உளர் என்பதும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டிதர் திருமதி. பத்மாசனி இராசேந்திரம், பண்டிதர் இருமதி அமிர்தாம்பிகை சதாசிவம், பண்டிதர் திருமதி சத்துயதேவி துரைங்கம், திருமதி மகேசுவரி மகாதேவா, சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி, பண்டிதர் – திருமது கங்கேசுவரி கந்தையா, வித்துவான் வசந்தா வைத்தியநாதன், செல்வி புஷ்பா செல்வநாயகம் போன்றோர் குறிப்பிடத்தக்க சில பெண் பேச்சாளர்களாவர்.

1950இல் கொழும்பில் நடைபெற்ற சித்தாந்த மாநாட்டு-மாதர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் பண்டிதர் திருமதி பத்மாசனி இராசேந்திரம்.

1962இல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் சார்பில் நடைபெற்ற திருமுறை விழாவில் கலந்துரையாற்றிய பெருமைக்குரிய பெண்பாற்புலவர் பண்டிதர் திருமதி சத்தியதேவி துரைசங்கம்.

தமிழ்நாடு-சிங்கப்பூர்-மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பன் முறை சென்று, பற்பல சமயச்சொற்பொழிவுகளாற்றிப் பல விருதுகள் பெற்றிருப்பவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலின் இன்றைய பொலிவு, அம்மையார் அவர்களது. சமயச் சொற்பொழிவுகளின் உயர்வால் வந்த உயர்வு எனக் கூறலாம்.

இறைவனோடிசைந்த இன்பம் பண்ணோடிசைபாடல்:

தேவாரத் திருக்கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலிய திருமுறைப் பாடல்களைத் திருவிழாக் காலத்தில் சுவாமிக்குப் பின்னாக ஓதுவதால் அடியார்களுக்கு உண்டாகும் பத்தியையும் இந்நாட்டவர்களுக்குக் காட்ட நினைந்த நாவலர் பெருமான், திருவாவடுதுறையினின்றும் ஒதுவார் சிலரை அமைப்பித்து, திருவிழாக் காலங்களில் சுவாமி திருவீதியிலே எழுந்தருளும்போது, சுவாமிக்குப் பின்னாக ஓதுவார்களைக்கொண்டு தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓதுவித்து வந்தனர். இதே வழிமுறையில் அந்நாளில் பயிற்சிபெற்று வந்தோரைப் பின்பற்றி, இன்று எல்லா இடங்களிலும் சுவாமி வீதிவலம்வரும்போது தனித்தும் – கூட்டாகவும் திருமுறைப்பாடல்கள் பாடிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் பண்ணோடு பாடல்கள் பாடவேண்டும் என்ற எண்ணத்தினால், சிலர் பண்முறைகளை நன்கு கற்றும், தாம் கற்றவற்றைப் பிறர்க்குக் கற்பித்தும் வருகின்றனர். இதனால் இன்று இங்கு இருபாலாரும் போட்டியிட்டுத் திருமுறைப் பண்ணிசை பயின்று வருவதைக் காணலாம்.

கொக்குவில் திரு. த. குமாரசாமிப்புலவர் (16ஆண்டு காலம் திருவாவடுதுறையில் வாழ்ந்தவர்), கரிமலை செல்லையா தேசிகர் போன்றோர் பண்ணிசை தெரிந்த எம் தலை முறைப் பெரியோரரவர், தலையாளி திரு. சு.கனகசுந்தரம், புங்குடுதீவு தா. இராசலிங்கம் போன்ற சங்கத பூஷணங்கள் அண்ணாமலைத் தமிழ் இசைக் கல்லூரியில் பண்ணிசையில் சிறப்புப் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்றவர்களாவர், இத்துறையில் அறிவு பெருத-ஆயின், பண்ணோடு பாடவல்ல தரமான இசைவாணர் பலர் ஊர்கள் தோறும் இந்நாட்டில் இன்று இருக்கக் காண்கிறோம். இத்தகையோரும், ஏனைய நாட்டமுள்ளவர்களும் பண்ணிசைப் பயிற்சியை நிறைவான முறையில் கற்றுக் கொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து மெய்கண்டாரா தீனப் பண்ணிசைமணி பி. ஏ. எஸ். இராசசேகரன் என்ற ஓதுவாமூர்த்தியை கொழும்பு விவேகாநந்த சபையார் அநுசரணையுடன் 1966இல் அகில இலங்கை இந்துமாமன்றம் அழைத்திருந்தது. கொழும்பு, மட்டக்களப்பு, மாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இவ்வோதுவார் நாயகத்தின் வகுப்புக்கள் நடைபெற்றன. இவற்றால் நன்மை அடைந்தோர் பலர். இவ்வகுப்புக்களில் நான்கு ஆண்டுகள் பயிற்சிபெற்றோர்க்கு இறுகத் தேர்வு ஒன்று நடைபெற்றது. இத்தேர்வு சென்னை தமிழ் இசைச் சங்கத் திருமுறை ஆசிரியர் இரு, வே.சோமசுந்தரம் அவர்களால் கல்வி அமைச்சு அதிகாரிகள் உதவியுடன் 1972 யூன் 12ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள்வரை நடத்தப்பட்டது. இப்பரீட்சையில் சித்தியடைந்தோர் தொகை 49. இவார்களுக்குச் சான்றிதழ்களுடன் பண்ணிசைமணிப் பட்டமும் வழங்கப்பட்டது. பாடசாலைகளில் பண்ணிசை பயிற்றும் தகுதி இப் பண்ணிசை மணிகளுக்கு உண்டு என அந்நாளில் பேசப்பட்டது.

இன்று பிரபல பண்ணிசையாளர்களாக. நாட்டில் கணிக்கப்பட்டு வரும் திருவாளர்கள் வ. பரமசாமி, அ.சோமசுந்தரம், சி.க.சிவபாலன், மா, தங்கராசா, வீ, ரீ. வீ. சுப்பிரமணியம் போன்றோர் இத்தேர்வில் சித்தயடைந்தோரேயாம். இப்பண்ணிசைமணிகள் இறைவனோடிசைந்த இன்பம் – பண்ணோடிசைபாடல் என்ற குறிக்கோளுடன் நாளும் இன்னிசையால் இந்நாட்டில் இன்று பண்ணிசை பரப்பி வருகின்றமை, பண்ணிசை வளர்ச்சிக்கு மேலும் நல்லூக்கம் அளிப்பதாக அமைந்திருக்கின்றது.

இந்நாட்டுத் திருக்கோயில்களில் உபசார முடிவில் நாள்தோறும் திருமுறைப் பாடல்கள் ஓதப்படுகின்றன. நாளாந்தம் அதிகாலையில் திருவனந்தலுக்கு முன் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டே திருக்கதவுகள் திறக்கப்படுகின்றன. சூர்ணோத்சவகாலத்தில் திருப்பொற்சண்ணம் ஓதப்படுகன்றது. மார்கழித் திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை ஓதப்பட்டுத் தீபதரிசனஞ் செய்யப்படுகின்றது. திருவிழாக் காலங்களில் வேதபாராயணத்தோடு தமிழ்மறைப் பாராயணமும் நடைபெற்றுவருpன்றது. திருமுறைகளுக்கெனத் தெற்குத் திருச்சுற்றில் திருக்கேதீச்சரத்தில் கோவிலுமுண்டு. நாளொன்றிற்கு திருமுறை இவற்றிற்குப் பூசை நடைபெற்று வருகின்றது. இன்னும். இங்கு மகோற்சவகால இறுதிநாள் சண்டேசுரா விழாவன்று பகல் திருக்கேதீச்சரப் பெருமானுக்குத் திருமுறை அர்ச்சனை நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. திருமுறை அர்ச்சனைக்கு இங்கு இவர்கள் எடுத்துக்கொள்ளும் பதிகங்கள்,

1. கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
2. வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
3. பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
4. பாட்டான நல்ல தொடையாய் போற்றி

எனத் தொடங்கும் அப்பர் சுவாமிகளது போற்றித் திருத்தாண்டகங்கள் நான்கும், மணிவாசகப்பெருமான் அருளிய போற்றித் திருவகவலுமாகும். இத்திருமுறை அர்ச்சனை இங்கு தொடங்கிய ஆண்டு 1977.

கதாப்பிரசங்கிகள் :

சமய அறிவைச் சாதாரண மக்களுக்கு மிகவும் எளியமுறையில் விளக்கப் பயன்படுவது கதாப்பிரசங்க முறையாகும். கதாப்பிரசங்கியானவர் பல்துறை அறிவோடு பல்துறைச் சுவையுணர்வுகளும் கைவரப்பெற்ற இசைஞானமும், ஈசுவரபத்தியுமுடையவராக இருக்கவேண்டும்;. மேற்கூறிய இயல்புகளுடைய சைவசமயக் கதாப்பிரசங்கிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கின்றனர் இன்று வாழ்ந்துகொண்டுமிருக்கின்றனர். இன்னுஞ் சிலர் அப்படியான வாழ்வுபெறப் பயிற்சிபெற்றுக்கொண்டும் வருகின்றனர்.

“சச்சிதாநந்த ராசயோகி” என்ற துறவுப் பெயருடன் பின்னாளில் வாழ்ந்த வட்டுக்கோட்டை சங்கரசுப்பையர், நாகலிங்க பரதேசிச்சாமியார், மாணிக்கத்தியாகராசா, குப்பிளான் செல்லத்துரை, கொக்குவில் த. குமார சுவாமிப்புலவர், இரத்தினபுரி வழக்கறிஞர் க.சிதம்பரநாதன், சீ.சீ. எஸ், மணிஜயர் (இன்றைய நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர், ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக பரமாசாரிய சுவாமிகள்), அளவெட்டி அருட்கவி ச. விநாசித்தம்பி, கல்வயல் விநாசித்தம்பி, திருப்பூங்குடி வீ. கே. ஆறுமுகம், புங்குடதவு க. செல்லத்தம்பி, திருகோணமலை பண்டிதர் வடிவேல், சிவஅன்பு போன்றோர் இந்நாட்டில் நன்கு அறிமுகமான சைவக் கதாப்பிரசங்கிகள் ஆவர்.

இவர்களுள் சச்சிதாநந்த யோகிகள் தமிழ்நாடுவரை புகழ்பூத்த கதாப்பிரசங்கியாவர். சீ.சீ.எஸ். மணிஜயரும், இந்துசாதன இதழின் உதவி ஆசிரியராக இருந்த நீர்வேலி கு. சிற்சபேசனும் இவரது சீடர்களாவர்.

கொழும்புப் புரோக்கர் ஆ. செல்லமுத்து, புரோக்கர் சிவ. தியாகராசா போன்ற பல செல்வந்தர்களது உதவியுடன் தென்னாட்டுப் பழம்பதியாகிய திருவாலங்காட்டுத் தேர்த்திருப்பணி செய்து முடித்தவரும் இப்பெரியாரேயாம். மேலும், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் மக்களுள் தமிழ்ப் பேச்சுக்கு ஒரு மறைமலை, ஆங்கிலப் பேச்சுக்கு ஒரு பொன். இராமநாதன், சைவக் கதாப்பிரசங்கத்திற்கு ஒரு சங்கர சுப்பையர். என்ற பெரும் பெயர் ஒன்று அடிபட்டுலாவியமை இங்கு சிறப்பாகக் கூறத்தக்கதாகும்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசக பரமாசாரிய சுவாமிகள் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஆண்டுதோறுங் கதாப்பிரசங்கத்தின் பொருட்டுச் சென்று வருவதும், பெரும்பகுதிக் காலத்தை இந் நாடுகளில் இப் பணிக்காக இன்று செலவு செய்துவருவதும் எம்நாட்டுச் சைவர் பெருமைகொள் பணியேயாம்.

சைவங்காத்த நிறுவனங்கள்:

ஐரோப்பியர் வருகையால் இந்நாட்டில் நலித்திருந்த சைவ சமயத்தை ஆங்கிலேயர் காலத்தில் நலியவிடாது காத்தவை, ஆறுமுகநாவலரைத் தொடர்ந்து சைவசமய வளர்ச்சிக்கெனவே இங்கு தோன்றிய அகில இலங்கைச் சைவபரிபாலன சபை (1887), யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை (1888), கொழும்பு விவேகாநந்த சபை – (13-7-1902 அனுஷநட்சத்திர ஞாயிற்றுக்கிழமை ), சைவவித்தியாவிருத்திச் சங்கம் (1928) ஆகிய நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் சில சைவப் பெரியோரினால் நிறுவப்பட்ட சைவப்பாடசாலைகளும், கல்லூரிகளுமேயாம். இக்காலத்தில் கிழக்கிலங்கையில் சைவத்தைக் காக்க அரும்பாடுபட்டவர்கள் கா. வ, மார்க்கண்டன் முதலியார், வீ. வல்லிபுரம்பிள்ளை. அருட்திரு, விபுலாநந்த அடிகள் போன்றோராவர். அவர் தொண்டைத் தொடர்ந்து அங்கு இராமகிருஷ்ண சங்கம் செய்து வந்தமை நினைவு -கொள்ளற்பாலதாகும்.

சைவப் பெண்பிள்ளைகள் பயில்வதற்கெனத் தனியான கல்லூரிகளும், சைவ அநாதை இல்லங்களும் சைவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலை போன்றவைகளும் இந் நிறுவனங்களினால் நடத்தட்பட்டு வந்தமை இந்நாட்டில் உள்ளோர் சைவத்திற் கொண்டிருக்கும் சமயப்பற்றை எடுத்துக்காட்டுபவையாகும்,

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தைப்பற்றிக் கூறும்போது 1960ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அரசாங்கம் தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும்வரை, இச்சபை நிருவகித்து வந்த 180இற்கு மேற்பட்ட சைவப் பாடசாலைகளும், இவற்றின் வளர்ச்சிக்காக இரவு பகலாகப் பாடுபட்ட பெரியோரும், அவர்களுள்ளும் சைவத் திருவாளர் சு.இராசரத்தினம் (இந்து போட்) அவர்களும் சைவமக்கள் மனதில் தலைமுறை தலைமுறையாக நீங்கா இடம் பெறுவர்.

மேற்கூறிய நிறுவனங்களினால் நடத்தப்பட்டுவரும் சைவ சாத்திர தோத்திர வகுப்புகளும் வெளியீடுகளும் – சொற்பொழிவுகளும், இதன் தலைமையகம் கொழும்பு,பரீட்சைகளும் சமயத்தைப்பற்றி யாவரும் அறிந்துணரக்கூடிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்களினால் நிறுவப்பட்ட பாடசாலைகள் சைவ ஆசார அநுட்டானப் பயிற்சி நிலையங்களாக விளங்கயெமையினாற்றான், இன்று இந்நாட்டிற் சைவப்பொலிவும், சைவ அறிவும், சைவ உணர்வும் மிக்க பெருமக்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொழும்பு விவேகாநந்த வித்தியாலயம் (24-3-1926), பம்பலப்பிட்டி பிள்ளையார் பாடசாலை (இன்றைய பம்பலப்பிட்டி இத்து கனிட்ட பாடசாலை (12-2-1951), இரத்மலானை இந்துக் கல்லூரி (20-4-1953), வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம், கப்பித்தாவத்தை தொண்டர் வித்தியாலயம், உனுப்பிட்டி இந்து சன்மார்க்க பாடசாலை, நீர்கொழும்பு விவேகாநந்த வித்திமாலயம் (10-8-1954), சிலா{மருதங்குளம் சைவப்பிரகாச வித்தியாசாலை, சலா{குசலை ஞானசம்பந்த வித்தியாசாலை, சிலா{முந்தல் கமலாம்பிகை வித்தியாசாலை. அநு{அநூராதபுரம் விவேகாநந்த வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயம் (30-10-1924), கண்டி இந்து சிரேட்ட பாடசாலை, மாத்தலை பாக்கயம் வித்தியாலயம் (18-5-1927இல் கல் நாட்டியவர் மகாத்மாகாந்தியடிகள்; தாபகர் திரு. எஸ் எஸ். கந்தசாமி. 9-8-1929இல் பாடசாலையைத் திறந்து வைத்தவர் சேர், பொன், இராமநாதன்.) மாத்தளை கந்தசாமி வித்தியாலயம், புசல்லாவை சரசுவது வித்தியாலயம், பதுளை சரசுவதி வித்திமாலயம் (பதுளைச் சைவபரிமாலன சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை) போன்ற பாடசாலைகளும், கொழும்பு சைவபரி பாலன சபை என்ற பெயரில் இருந்து 1897இல் “இலங்கைச் சைவபரிமாலன சபை” என்ற பெயருக்கு மாறிய சபை, கொழும்பு கொச்சிக்கடை தம்பையா முதலியார் சத்திரம் 1880, கொழும்பு கதிர்காமம் யாத்திரிகர் தொண்டர் சபை 1925, கொழும்பு சைவமங்கையர் கழகம் 1930, கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம், கொழும்பு இந்து வித்இயாவிருத்திச் சங்கம் 5-2-1951, வடகொழும்பு சைவபரிபாலன சங்கம், அனைத்து இலங்கை இந்து வாலிபர் சங்கம் 11-9-1957, அகில இலங்கை இந்து மாமன்றம் 1955, அப்பர் அருள்நெறி மன்றம் 17-8-1962, அனைத்து இலங்கை இந்து இளைஞர் பேரவை, திருநெறிய தமிழ் மன்றம் 1972, நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம், சிலாபம் இந்து வாலிபர் சங்கம், புத்தளம் சைவமகாசபை, குருநாகல் சைவ மகாசபை, அநுராதபுரம் விவேகாநந்தசபை, மாத்தளை சைவமகாசமை 1954, கண்டி சைவமகாசபை 1926, நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்கம் 13-4-1919, பதுளை. சைவபரிபாலன சங்கம் 1926, இரத்தினபுரி சைவபரிபாலன மகாசபை போன்ற சங்கங்களும், மன்றங்களும், சபைகளும் சைவசமய அபிவிருத்தி கருதி இந்நாட்டுப் பெரியோர்களால் காலத்துக்குக் காலம் தோற்று விக்கப்பட்ட நிறுவனங்களேயாம். இவையாவும் ஈழத்தில் சைவத்தின் எழுச்சியைச்சைவத் தமிழர்கள் கூடுதலாக வாழும் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பிரதிபலிக்கச் செய்யத் தோன்றிய நிலையம்களாகும்.

யாழ்ப்பாணம் சைவபரிமாலன சபை:

தொடக்க நாள்: சர்வதாரி ஆண்டு இத்திரைத் திங்கள் (29-1-1988) ஞாயிற்றுக்கிழமை

திதி : கிருஷ்ணபக்க சதுர்த்து நட்சத்திரம் : மூலம்.
நேரம் : சித்தயோகமும், கௌலவகரணமும் கூடிய நல்லோரை.
கூடிய இடம் : நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
சபையின் பெயர் : யாழ்ப்பாணம் சைவசமய பரிபாலன சபை
முதற் தலைவர் : திரு. ந.ச.பொன்னம்பலபிள்ளை
முதற் செயலாளர் : திரு. த. கைலாசபிள்ளை
முதற் பொருளாளர் : திரு. கு. சபாபதிச் செட்டியார்

சபையின் தொடக்க நோக்கங்கள்

1. சைவசமயத்தை வளர்த்தல், பிறசமயத்தில் (அத்திய) நம்ம வரைச் சேரவிடாது தடுத்தல்.
2. சைவமுறைப்படி, சைவப்பிள்ளைகள் தமிழையும், ஆங்கிலத்தையும் பயின்றுகொள்வதற்கான வகையில் பாடசாலைகளை வேண்டிய ஊர்தோறுந் தாபித்து நடத்துதல்.
3. கல்வி, அறிவு ஒழுக்கமுடைய பெரியோரைக் கொண்டு சைவ சமய விருத்தி கருதிப் பிரசங்கங்கள் செய்வித்தல்.
4. சைவ மக்களுக்குச் சிறப்பாகவும். தமிழ் மச்சளுக்குப் பொதுவாகவும் நலன்தரும் பத்திரிகைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுதல்.
5. அழிந்திருக்கும் சைவாலயங்கள், திருமடங்கள் முதலிய பழைய தரும தாபனங்களைப் புதுப்பித்து, ஒழுங்காக இயக்கம் பெறச் செய்தல். கோயில்கள், திருமடங்கள் முதலியவற்றுக்குரிய அசைவுள்ள, அசைவற்ற பொருள்களைப் பிறர் கவராதிருக்கத் தாமே அவற்றைப் பொறுப்பேற்றுப் பாதுகாத்துச் சேர வேண்டிய தாபனங்களுக்குச் சேரவைத்தல்.
6. வாசிகசாலை, நூல்நிலையம் தாபித்து நடத்தல்.
7. இன்னுஞ் சைவத்தையும் தமிழையும் பங்கமின்றி வளர்த்தற்கு என்னென்ன தேவையோ அவற்றைத் தவறாது செய்தல்.
8. சபையின் நோக்கங்களை நிறைவுசெய்யச் சைவப் புத்தகங்களை வெளியிடல் முதலானவைகளாகும்.

மேற்கூறப்பட்ட “யாழ்ப்பாணம் சைவசமய பரிபாலனசபை” என்ற பெயர், விகிர்தி வருடம் கார்த்திகை க-ஆம் நாள் (15-17-1890) திருத்தப்பட்ட பிரமாணங்களுக்கமைய “யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை” என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.

முதல் ஆண்டுப் பொதுக் கூட்டம். 1889ஆம் ஆண்டு வைகாசி 24ஆம்நாள் நடைபெற்றது.

விரோதி ஆண்டு ஆவணி 28 ஆம் நாள் (11-9-1889) புதன்கிழமை கிருஷ்ணபக்கத் துதியையும் உத்தரட்டாதியும் கூடிய நல்ரோரையில் இரு கிழமைக்கு ஒரு வெளியீடாகத் தமிழில் “இந்துசாதனம்” ஆங்கிலத்தில் “ர்iனெர ழுசபயn” என்னுஞ் செய்தி இதழ்கள் வெளியாகின.

நாவலர் பெருமானது சொற்பொழிவுகள் வாயிலாகச் சைவநன் மக்கள் அடைந்த பயனை நன்மைகளை உணர்ந்த சபையார், அவர் வழியில் அவரது மாணவர்களையும், அறிஞர்களையும் கொண்டு ஊர்கள் தோறுஞ் சொற்பொழிவுகள் செய்வித்துவந்தனர். சபையாரின் அக்காலப் பிரசாரச் சொற்பொழிவாளர்கள் சிவஸ்ரீ க, சுப்பையர், அ. முத்துக்குமாரசாமிக்குருக்கள், சு. ஏரம்பையர், க. இராமலிங்க வன்னியனார் முதலியோராவர்.

பின்னாளில் சங்கரகப்பையர் என்று கூறப்பட்ட சச்சிதாநந்த இராசயோகிகளும் கௌரவ பிரசாரகராகச் சபையார்க்குப் பணிபுரிந்து வந்தனர்.

சொற்பொழிவுகள் பாடசாலை திருக்கோவில் திருமடம் ஆகிய இடங்களில் நடைபெற்றுவந்தன.

தத்துவப் பிரகாசப் பதிப்பு

பொய்கண்டகன்ற மெய்கண்டதேவர் சந்தானத்துள் சீகாழி சிற்றம்பல நாடிகளின் மாணாக்கராய் விளங்கியவர் சீகாழி தத்துவப் பிரகாச சுவாமிகள். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருஞ் சிவஞானி. இவர் செய்த நூல் தத்துவப்பிரகாசம்.

சிவபெருமானாலே அருளப்பட்ட சிவாகமங்களில் காணும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றையுடைய தந்திர, மந்திர உபதேசக் கலைகள் மூன்றும் மிகவும் விளக்கமாக அமைந்த நூல் இதுவாகும்.

சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலான ஆதார சாத்திர நூல்களில் சொல்லப்படாத பல விடயங்கள் இதனுள் நன்கு சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

சைவக்கிரியைப் பகுதி விளக்கங்களைத் திருத்தமாகவும், தெளிவாகவும் சிறப்பாகத் தமிழில் கூறும் நூல் இதுவாகும். எனவே, சைவ மக்களது விலைமதப்பிலாப். பெருஞ் சைவக்களஞ்சியம் என இதனைக் கூறிக்கொள்ளலாம்.

மெய்கண்டாருக்குப் பின்னர் சைவசித்தாந்த சாத்திர நூல்கள் பலதுறைகளிலும் விரிவாக வளர்ந்தன. ஆயின், சிவஞான போதத்தை அடுத்துவந்த சிவஞானூத்தியாருடன் அளவிலும், பொருட்சிறப்பிலும் ஒருங்கு வைத்து எண்ணத்தக்க நூல்கள். மிகச்சிலவே. அவற்றுள் முதலிடம் பெறுவது தத்துவப்பிரகாசமேயாம்,

இப்பெருநூலை மிக்க சிரத்தையோடு திருத்தமான முறையில் முதன்முதல் அச்சில் பதிப்பித்தவர் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபதி சைவத்திரு வி. கந்தப்பிள்ளை ஆவார். பதிப்பு ஆண்டு -நந்தன ஆண்டு மாசி மாதம் (1093. அச்சகம்-கொக்குவில் சோதிடப்பிரகாச அச்சுயந்திரசாலை.

அடங்கள் முறைப் பதிப்பு :

முவர் தேவாரங்களையும் (அடங்கன்முறை) பல ஏட்டுச் சுவடிககளுடன் ஒப்புநோக்கிப் பரிசோதித்து, சென்னையில் தன்னால் நிறுவப்பட்டிருந்த அச்சுக்கூடத்தில் முதன்முதல் பதிப்பித்தவர்; நாவலரின் மாணவர் மரபில் வந்த கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதர் ஆவர், இப்பிரதிகளுக்கு நாள்தோறும், மலரிட்டிறைஞ்சி வருபவர்களை இன்றும், இந்நாட்டில் யாம் காணலாம்.

திருவாசகம் :

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை “நாவலர் கோட்டம்”. ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை அவர்களினால் “திருவாசகம்” என்ற நூல் 1920ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூற்கு 30 பக்கங்களைக்கொண்ட ஒரு முகவுரை உண்டு, இம்முகவுரையில் தேவாரம், திருவாசகம், உபநிடதம் முதலானவைகளிலிருந்து திருவாசக உண்மைக்கும் பெருமைக்கும் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. உபநிடதப் பிரமாணங்கள் பெரும்பாலும் சிவஸ்ரீ உபயவேதாகமப் பண்டிதர் ந. வே. கனகசபாபதி ஐயர் அவாகளால், பிள்ளை அவர்கட்கு உபகரிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

“திருவாசகம்” என்பது அருட் பொலிவினையுடைய வாசகம் எனப் பொருள் விரிக்கப்படும். “வாசகம்” ஆவது வேதத்துப் பொருளை எடுத்து விரித்துரைக்கும் ஒரு மொழியாகும். வேதத்துப் பொருளாவது பிரணவத்துப் பொருளாகிய சிவமாம். ஆகவே, பிரணவமே வாசகம், பிரணவப் பொருளாய சிவமே ழூவாச்சியம். எனவே, சிவத்தினதியல்பையும் சிவனைத் தலைப்படு முபாயத்தையு முணார்த்துர் நூல் திருவாசகம் என்பது முடிந்த பொருள் என்று முகவுரை சொல்கின்றது. இந்நூல் சிறந்த நூற்பதிப்புக்கான வெள்ளி விருதும் சான்றிதழும் பெற்ற ஒன்றாகும்.

யா. கூ. த. நா. ப வி. கழகம் :

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடக்கப்பட்ட. யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், கடந்தகால நம்நாட்டுப் பெரியோர்களது வளமான பழம்பெரும் சைவநூல்களையும், வேறு பல தொகுப்பு நூல்களையும் திருத்தமான முறையில் அச்சிட்டு, அடக்க விலைக்கு வழங்கிவருகன்றது. வேறு யாருஞ் செய்யமுன்வரா இத்தெய்வப்பணியைத் தம் தலையாய சைவப் பெரும்பணியாகக் கருதிச் செய்துவருந் தொண்டைப் பாராட்டுவதுடன், அவர்கள் சைவநூற்பிரசுர ஊக்கம் மென்மேலும் வளர்ந்தோங்க உதவ வேண்டியது சைவர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

அறக்கட்டளைகள்:

இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்கு உதவுமுகமாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், புண்ணியநாச்ரி, மழவராயர், தொல்புரம் மானா முதலியார், சேர். பொன், இராமநாதன் ஆகியோரினால் உபகரித்து ஏற்பாடு செய்யப்பட்ட அறக்கட்டளைகளும், வேறுபல கட்டளைகளும் உள. இவை யாவற்றையும் வரையறை செய்து சமய வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கேற்ற முறையில் சமயப்பெரியோருடன், சபைகளும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகின்றன, இவர்கள் இம்முயற்சியில் காணும் சித்தி, சைவசமயத்தின் பெருமுன்னேற்றத்திற்கு வழி திறக்கும் என நம்ப இடமுண்டு.

சைவசித்தாந்த அறிவுச்சுடராகவும், சைவுசித்தாந்த நூல்கள் பலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசானாகவும், சைவ சித்தாந்த சமாசத்தை நிறுவ உழைத்தவரும், பெருங்கல்விமானாகத் திகழ்ந்த பெரியாருமாகிய ஜே, எம். நல்லசாமிப்பிள்ளை அவர்கள் ‘உலகில் சைவ சித்தாந்தத்துற்கு எங்கேனும் ஓர் உயர்பீடம் இருக்குமேயானால், அது கொழும்பு விவேகாநந்த சபையாகவே இருக்கும்” என இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் கூறியுள்ளார்கள். மேலும் 29-5-1938இல் நடைபெற்ற மேற்படி சபையின் ஆண்டுவிழாவில், தூத்துக்குடி சைவத் திருவாளர் நா, சிவகுருநாதபிள்ளை அவர்கள் இச்சபை பற்றிக் கூறிய கருத்தும் இங்கு நோக்கற்குரியதாகும்.

“சைவபரிபாலனத்துக்கென நிறுவப்பெற்ற எமது விவேகாநந்தசபையையும், ஏனைய சைவச் சபைகளையும் நாம் ஆதரிக்கவேண்டும், இனி நமது விவேகாநந்த சபையார் நம் மாணவர்களுக்குச் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்பிப்பதுடன் பரீட்சைகளும் ஏற்படுத்த இருப்பதாக அறிகிறேன். இப்படியான சிவதருமம் ஆற்றிவரும் நமது விவேகாநந்தசபை நீடூழி நிலைபெற்று என்றும். சைவ வான்பயிரை வளர்த்துக்கொண்டிருக்கும் வண்ணம் எம்மை ஆளுமைத் திருஞானசம்பந்தப் பெருமான் பொன்னடிகளைப் போற்றுகின்றேன். என்பதாம். இவற்றிலிருந்து நாம் அறியக்கூடியது, பிறநாட்டுச் சைவர்களையும் கவரக்கூடிய தன்மையில் ஈழத்தில் சைவம் வளருகின்ற தென்பதேயாம்.

சித்தாந்த மாநாடு :

சித்தாந்த சைவத்தையும், அதன் தத்துவ சாத்திர முடிபுகளையும், அவற்றிற்கேற்ற சமய ஒழுக்க வாழ்க்கையையும் உலகல் பரவச்செய்யும் நோக்குடன் 17-7-1905இல், திருப்பாதிரிப்புலியூர்மடத்தில் ஞானியார் சுவாமிகளது ஆசியுடன் சைவசித்தாந்த சமாசம் நிறுவப்பட்டது. இச்சமாச அமைப்பில் சேர்.பொன் இராமநாதனுக்கும் பெரும்பங்குண்டு. இதில் செய்துகொண்ட தீர்மானங்களில் ஒன்று, ஆண்டுக்கொரு சித்தாந்த மாநாடு கூட்டப்படவேண்டும் என்பதாகும். 1905இல் தொடக்கப்பட்ட இச்சித்தாந்த சமாச மாநாடு ஈழத்தில் மூன்று முறை கூட்டப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சமாசத்தின் 43வது சைவசித்தாந்த மாநாடு 1948 திசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மாநாட்டின் பெருந்தலைவர் திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார். மாநாட்டைக் கூட்டியவர்கள் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார்.

44ஆவது மாநாடு கொழும்பில் 1950 ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் நாட்களில் நடைபெற்றது. மாநாட்டின் பெருந்தலைவர் திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தரம்பிள்ளை. நடத்தியவர்கள் கொழும்பு விவேகாநந்தசபையார். இதில் 7ஆம், 9ஆம் நாள் மாநாடுகள் விவேகாநந்தசபை மண்டபத்திலும், 8ஆந் திகதி நடைபெற்ற சைவ இளைஞர் மாநாடு சைவமங்கையர் மாநாடு ஆகியவை வெள்ளவத்தை செம்மாங்கோட்டார் மாணிக்கப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலும் நடைபெற்றன. இம்மாநாட்டை நடத்திய கொழும்பு விவேகாநந்தசபை பற்றி 1950ஆம் ஆண்டு பெப்ரவரி மாத “சித்தாந்தம்” என்ற சமாச இதழ் கூறியவை “சைவசமய உணர்ச்சியின் பயனாகப் பல ஊர்களிலும் பல சங்கங்கள் தோன்றின. அவைகள் நாளது வரையில் மிகுந்த ஊக்கத்தோடு வேலைசெய்து வருகின்றன. சைவசமயத்தை இலங்கையில் நிலைநிறுத்த இச்சங்கங்களே பெருத்த ஆதாரபூதங்களாகத் திகழ்கின்றன. அவைகளில் ஒன்று கொழும்பு விவேகாநந்தசபை. அதன் அங்கத்தினர் சமயத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர். மக்கள் மதிகெட்டுப் புறச்சமயப் பிரவேசஞ் செய்துவருவதை ஒருவாறு தடுத்து வைப்பது இச்சபையேயாகும்” என்பதாகும்.

54ஆவது மாநாடு பாடல்பெற்ற திருத்தலமாகிய திருக்கேதீச்சரத்தில் 1960 இசம்பர் 30ஆம், 31ஆம் நாட்களிலும், 1961 ஜனவரி. 1961 முதலாம் நாளும் நடைபெற்றது. மாநாட்டின் பெருந்தலைவர் பெரியார் திரு.ச.சச்சிதாநந்தம்பிள்ளை. நடத்தியவர்கள் திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச் சபையார். இதனை இங்கு நடத்தப் பாடுபட்டுழைத்தவர் சேர். கந்தையா வைத்தியநாதன். இம்மாநாடு தொடர்பாக “திருக்கேதீச்சரம் சைவ மாநட்டு மலர்” என்ற பெயரில் ஒரு மலரும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இம்மாநாடுகள் நடக்கும் போதெல்லாம் இங்குள்ள அறிஞர்களையும் அழைத்து உரைசெய்வித்தும், தலைமை தாங்குவித்தும் சிறப்புச் செய்து வருகின்றனர். ஈழநாட்டுச சைவ வளர்ச்சிக்கும், சைவப் பெரியோர்க்கும், தமிழ்நாட்டவர் செய்துவரும் மதிப்பை எடுத்துக்காட்டுவன இவையாகும். ஈழத்தினர் தலைமை வகித்த மாநாடுகள் – நடைபெற்ற கல – இடப் பெயர் விவரங்கள் :

மாநாடு ஆண்டு இடம் தலைவர் பெயர்
1ஆவது 1906 சிதம்பரம் சேர். பொன். இராமநாதன்
4ஆவது 1909 திருச்சிராப்பள்ளி பன்னாலை சேர்.அ.கனகசபை பிள்ளை
7ஆவது 1912 காஞ்சிபுரம் திரு.ரீ.பொன்னம்பலபிள்ளை
10ஆவது 1915 தஞ்சாவூர் வட்டுக்கோட்டை க.அம்பலவாண நாவலர்
11ஆவது 1916 மயிலாப்பூர் குகதாசர் – கொக்கவில், ச.சபாரத்தின முதலியார்
13ஆவது 1918 திருக்குடந்தை கந்தர்மடம் திரு.சுவாமிநாத பண்டிதர்
15ஆவது 1020 மயூரம் பகந்தர்மடம் திரு.சி.சுவாமிநாத பண்டிதர்
17ஆவது 1922 சென்னை சேர். பொன் இராமநாதன்
20ஆவது 1925 சென்னை சேர். பொன் இராமநாதன்
30ஆவது 1935 திருவண்ணாமலை விபுலாநந்த அடிகள்
48ஆவது 1953 சென்னை வட்டுக்கோட்டை திரு.வே. நாகலிங்கம்
49ஆவது 1954 விருதுநகர் சேர். கந்தையா வைத்தியநாதன்
50ஆவது 1955 சிதம்பரம் திரு.க.நடேசபிள்ளை
51ஆவது 1956 பெண்ணாகடம் திரு.சு.நடேசபிள்ளை

சைவ இளைஞர் மாநாடு :

26, 27-12-1915 ஆகிய இரு நாட்களிலும் கீரிமலையில் சிறாப்பர் மடத்தில் சைவ இளைஞர் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. நாட்டின் பல இடங்களிலிருந்தும் முந்நூறுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இம்மாநாடு கூட்ட உயிர் நாடியாக இருந்தவர் சைவப்பெரியார் எம். எஸ். இளையதம்பி. ஆவார், இவர் கீர்த்தி வாய்ந்த ஒரு நியாயவாதி, இந்துசாதன இதழ் ஆசிரியர். சைவத்தின் புதுயுகம் காண்பதற்குத் துடித்தவர். தனது வாழ்க்கையைச் சைவத்திற்காகவே செலவுசெய்து வந்தவர். கொழும்பு விவேகாநந்த சபையை 1902இல் உருவாக்க முன்னின்றுழைத்த – மூக்கிய மூவரில் (திரு. ச. எம். குமாரவேலுப்பிள்ளை , திரு. எம். எஸ், இளையதம்பி, திரு. சி. எஸ். ஜம்புசாமி) ஒருவர். இப்படியான நல்லிலக்கணங்கள் பலவும் ஒருங்கே அமைந்த இப் பெரியாரின் தூண்டுதலால் கூட்டப்பட்ட இம்மாநாட்டின் தலைவர் ஸ்ரீமத் சார்வாநந்த சுவாமிகள். சொற்பெருக்காற்றியோர் சைவத்துறைதோய்ந்த பெரியோராகிய மறைமலை அடிகள், ஸ்ரீமத் நாகலிங்கசுவாமிகள், சைவப்பெரியார் சங்கரசுப்பையா போன்றோராவர். இவர்களோடு கௌரவ அ.கனகசபை (சட்டமன்ற உறுப்பினர்), திரு. ச. சபாரத்தின முதலியார் போன்றோரும் உரையாற்றினர். இம் மாநாட்டிற் செய்து கொண்ட தீர்மான எதிரொலியர்கத் தோற்றியவையே இன்று. ஊருக்கு ஊர் காணப்படும் பழம் பெரும் சைவ இளைஞர் சங்கங்களாம்.

திருமுறை விழா :

சைவசமயத் தோத்திர சாத்திரவகை நூல்களை ஒட்டிச் சைவ மாநாடுகள் ஈழத்தில் நடைபெற்று வருவது வழக்கம். இவற்றுள் 1955இல் வேலணையில் நடைபெற்ற திருமுறைவிழா இற்றைவரை ஈழத்துச் சைவ வரலாற்றில் காணாத ஒரு பெருவிழாவாகும். தமிழ்நாட்டுப் பெரும் பேரறிஞர் பலர் இவ்விழாவுக்கு வரவுதந்து சிறப்புச்செய்திருந்தனர். அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தீவுப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்ய முன்னோடியாக நடந்த நிறைவு விழா இது என அந்நாளில் பேச்சடிபட்ட பெருநல்விழா இதுவாகும்,

வேலணை விழாவைத் தொடர்ந்து, 1963 ஏப்பிரல் 7, 8, 9ஆம் நாட்களில் கொழும்பு விவேகாநந்த சபையாரினால் நடத்தப்பட்ட திருமுறை விழாவும், இந்நாட்டுச் சைவர்களது கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். சபையார் இது முதலாகப் பின்னரும் பல திருமுறை விழாக்கள் எடுத்துள்ளனர். ஆயின் 29-6-75இல் நடைபெற்ற சபையாரின் திருமுறைவிழா இந்நாட்டுச் சைவ வரலாற்றில் முக்கியமான இடம்பெறும் ஒரு விழாவாகும். இவ்விழா ஆரம்பத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோவிலில் இருந்து. திருமுறை ஓசை நாற்றிசையும் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, கொழும்பு மாநகர வீதிகள் ஊடாகத் திருமுறை ஏட்டுச்சுவடிகளைப் புனிதபீடத்தில் வைத்து யானைமீது எழுந்தருளச்செய்து, விழாமண்டபத்திற்கு ஊர்வலமாக இவர்ந்து கொண்டுவரப்பட்டன. இந்நாட்டில் இதற்குமுன் ஒருபோதும் இவ்வண்ணம் திருமுறை ஊர்வலம் யானைமீது இவர்ந்து, கொண்டுவரப்பட்டதில்லை என்பது முக்கியமாக இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று ஈழத்தில் ஆண்டாண்டாகத் திருமுறை விழாக்கள் இடம், பொருள். ஏவலுக்கு அமைய ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன. ஆயின், எதுவித இடையீடுமின்றிப் பல ஆண்டுக்கணக்கில், தப்பாது ஆண்டுக்கொரு திருமுறைவிழா நடந்துவரும் இடம் தொண்டர் திரு. இ. சண்முகராசா அவர்களினால் இயக்கப்பட்டுகரும் திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றமாகும்,

9-7-1956 :

ஈழத்துச் சைவவரலாறு 9-7-1956இல் பெரிய ஒரு முன்னேற்றங் கண்டது. சைவத்தைத் தழுவி வந்த எம் இனமக்களில் ஒரு பகுதியினருக்கு இந்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஆலயத்தினுட் செல்லும் உரிமை மறுக்கப்பட்டுவந்தது. இந்தப் பாரம்பரிய கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தற்காகப் பற்பல இடங்களில், பல கூட்டங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இவற்றின் பயனாக உரிமை குறைந்தவர்களெனக் கருதி ஒதுக்கப்பட்டு வந்த ஆண்டவனின் குழந்தைகளாகிய அம்மக்களும் ஆலயத்தினுட் சென்று பண்ணனேர் மொழியாளுமைபங்கரைக் கண்ணினால் கண்டு வலஞ்செய்து வழிபட நம்நாட்டு ஆலயக் கதவுகள் முதன் முதலாகச் சமரசமாகத் திறந்தருள் செய்த நாள் 9-7-56 ஆகும்.

வேதசவாகம பாடசாலைகள் :

சைவ. அறிவு, ஒழுக்கம், ஆற்றல், இறைபத்தி முதலானவை நிறைந்த சைவ ஆசாரியர்களை ஈழத்தில் உருவாக்கும் நோக்குடன் 1961ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்களில் திருக்கேதீச்சரத்தில் தொடக்கப்பட்டு, 1974இல் யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இன்று நடேசர் கோவில் வளவில் நடைபெற்றுவரும் சிவாநந்த குருகுலத் தோற்றத்திற்கு முன்னரே, சுன்னாகம் கதிரைமலைச் சிவன்கோவிலுக்கு அண்மையில் இந்த நோக்குடன் முகாந்திரம் சிவஸ்ரீ சதாசிவஜயர் அவர்களினால், 1920இல் பிரான பாடசாலை ஒன்று தொடக்கப்பட்டது. அதன் முதற் தலைமை ஆசிரியராக இருந்தவர் மகாவித்துவான் சிவஸ்ரீ சி.கணேச ஐயர் அவர்கள் ஆவர். இதற்குப் பல ஆண்டுகளுக்கு முற்பட இற்றைக்கு முக்கால் நூற்றாண்டுக்குமுன் சங்குவேலியில் (உடுவில்) சத்தங்கேணி.

யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் இருந்தி தமிழ்ச்சங்கப் புலவர்க்கு அரசர்களினால் வழங்கப்பட்ட ஊர் சங்கவேலி என்ப, அது மருவியே இன்று சங்குவேலி ஆனதாம். வைத்திலிங்கம் அவர்களால் வழங்கப்பட்ட பொருள் கொண்டு அந்தணச் சிறார்கள் சிவாகம முறைகளையும், சைவசமய தத்துவ விளக்கங்களையும், சாத்திர தோத்திர அறிவைத் தமிழிலும்வடமொழியிலும் நன்கு கற்று, நித்திய நைமித்திய சைவக்கிரியைகளை சைவ ஆலயங்களிலும், மற்றும் சைவத் தாபனங்களிலும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடத்தக் கூடியவர்களாகப் பயிற்றுவதற்கான சிவாகம பாடசாலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

12- 9-1957இல் கொழும்பில் தொடக்கப்பட்ட அகில இலங்கைச் சிவப் பிராமண சங்கமும் மேற்கூறப்பட்ட அடிப்படையிலான வேத சிவாகம வகுப்பொன்றை ஒழுங்காக நடத்தி வருகின்றது. இதனோடு தொடர்புபட்ட இதே வகுப்பொன்று இணுவில் சிவஸ்ரீ மகாதேவக் குருக்களினால் நடத்தப்பட்டு வருகின்றது. .

ஆறுமுகநாவலர் பெருமான் தமிழ்மொழி, வடமொழி ஆகிய இருமொழிகளினதும் கருவி நூலுணர்ச்சியும் சிவாகம அறிவும் விருத்தியடைய வேண்டும் என்று பல சாதனங்களைச் செய்து வைத்துள்ளார்கள். அவற்றைத் தொடர்ந்தே அவர்களது திருவுளப் பாங்கன்படி அவர்களது அண்ணர் மகனாகிய திரு. த.கைலாசபிள்ளை காவிய வகுப்பு நடைபெறச்செய்தும், சிவாகம சாரமான நூல்களை அச்சிடுவித்தும், சிவாசாரியார்களுக்கான வகுப்புக்களை நடத்துவித்தும் வந்தனர்.

சுன்னாகத்தில் பிறந்து, நீர்வேலியில் வாழ்ந்து வந்த சைவவேளாள மரபைச் சார்ந்த திரு. சி.சங்கரபண்டிதர் அவர் மகன் நீர்வேலி திரு. ச.சிவப்பிரகாசபண்டிதர் ஆகியோர் சிறந்த வடமொழி, – தென்மொழிப் புலமை மிக்கோராவர். இவர்கள் வடமொழிச் சிவாகமங்களிலும், தமிழ் மொழிச் சித்தாந்த நூல் அறிவிலும் வல்லவர்கள். இவர்களிடம் கற்ற பல அந்தணர் பிற்காலத்தில் சிறந்த சிவாசாரியர்கள் என மதிக்கப்பெற்றவர்களாவர், இவர்களுள் சங்கரபண்டிதரிடங் கற்ற கீரிமலை சிவஸ்ரீ சபாபதிக்குருக்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சிவாசாரியராவர், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வடமொழிப் பண்டிதர்களுள் முதன்மை பெற்றவர் சங்கரபண்டிதரேயாம். இன்றும் இதே தன்மையான அந்தணர் குலத்தோரல்லாத சைவநெறியொழுக்கங்களில் சிறந்த வடமொழி தென்மொழிப் புலமைமிக்க பெரியோர் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிரலில் ஏழாலை வாசிகளாகிய சைவத்திரு மு. ஞானப்பிரகாசம், பண்டிதர் மு.கந்தையா, ஆவரங்கால் பண்டிதர் ச. சுப்பிரமணியம் போன்றோர் இங்கு குறிப்பிடத்தக்கோராவர்.

வண்ணார்பண்ணை வைத்தீசுவரன். கோவிலுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அந்நாளில் தருவிக்கப்பட்ட அர்ச்சகர்கள் சிவாகம விற்பன்னர்களாக இருந்தார்களெனவும், இந்நாட்டில் வேதாத்தியயனமும், சிவாகம ஞானமும் பரவுவதற்கு அவர்களே காரணர்களாக இருந்தார்களெனவும் கூறப்படுகின்றது.

கொழும்பிலுள்ள பொன்னம்பலவாணேசுவரர் கோவில் அர்ச்சகர்கள் சிவாகமக் கிரியைகளில் மேன்மையுடையவர்களாக இருக்கவேண்டுமென்ற நோக்கத்தில், அவற்றிற்காக வேண்டிய வசதிகளையெல்லாம் சேர். பொன். இராமநாதன் அவர்கள் அக்காலம் அக்கோவிற் குருமார்களுக்குச் செய்துகொடுத்துதவியுள்ளார்.

இன்னும், புலோலி சிவஸ்ரீ ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், சங்கானை அ. அருணாசலசாத்திரிகள் ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் வடமொழிக் காவியம், வியாகரணம், ஆகமம், பத்ததிகள் முதலியவற்றைப் பாடஞ்சொல்லிக் கொடுப்பதில் போக்கிய பெரியோராவர். இவ்வாறே மாதகல் சிவஸ்ரீ சு.ஏரம்பையர், கீரிமலை சிவஸ்ரீ ச. குருசாமிக்குருக்கன், அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக்குருக்கள் முதலியோர் அர்ச்சகர்களுக்குப் பயிற்ச அளிப்பதற்காகச் செய்த முயற்சிகளும் சேவைகளும் சொல்லிலடங்காதன. இதே வகுப்புக்கள் யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையால் யாழ். இந்துக் கல்லூரியிலும், கொழும்பு சட்டத்தரணி சைவத்திரு.சு. இவசுப்பிரமணியம் அவர்கள் முயற்சியால் நல்லூர் கைலாயபிள்ளையார் கோவில் அறங்காவலர்களது இணக்கத்துடன் அவ்வாலய மண்டபத்திலும் நடைபெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கனவாகும்.

மு.கு.வேதசிவாகம பாடசாலையில் இன்று பயின்றுவரும் மாணவர்கள் நல்ல முறையிலான தேர்ச்சிபெற வேண்டின், இப்பாடசாலை முறைக்கல்விப் பயிற்சியை விடுத்து, ஐந்து ஆண்டுகளேனும், ஏழு ஆண்டுகளேனும், பன்னிரண்டு ஆண்டுகளேனும் குருகுலவாச முறையில் பயிற்சி பெறவேண்டும். அங்கும் வடமொழி வேதசிவாக பயிற்சியுடன் மாத்திரம் நிற்காது, தமிழ் இலக்கண இலக்கியம், சைவத்திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றிலும் நல்ல அறிவு பெறக் கற்கவேண்டும். அப்படியான வகையிலமைந்த குருமாரது அறிவே சோபிக்கும் என்பது திண்ணம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பணி :

நாட்டுக்கோட்டைச் செட்டிகளை “நகரத்தார்” என்றழைப்பது வழக்கம். தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் இவர்கள் வாணிப நோக்கில் இந்நாட்டிற்கு வந்திருக்கறார்கள். வந்தவர்கள் தம் சென்ற இடமெல்லாம் தங்கள் சமயமாகிய சைவத்தின் வளர்ச்சி கருதிப் பல புண்ணிய கைங்கரியங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் இருந்த இடங்களாகிய யாழ்ப்பாணம்; கொழும்பு, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, பண்டாரவளை, இரத்தினபுரி, மாதம்பை, புத்தளம், குருநாகல், நீர்கொழும்பு, காலி ஆகிய இடங்களில் சைவத் திருக்கோயில்களையும் இருமடங்களையும் கட்டி, ஊழி ஊழியாக அவற்றைப் பரிபாலிப்பதற்கு வேண்டிய பல இலட்சம் ரூபா பெறுமதியான நிவந்தங்களையும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இன்று நகரத்தார் தொகை அருகிக்கொண்டு வந்தாலும், அவர்கள் கட்டிய கோயில்களும், அவற்றில் நடைபெற்று வரும் சிறப்பு விழா நிகழ்ச்சிகளும் இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்காக அவர்கள் செய்த தொண்டுகளை என்றும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கவே செய்யும்.

கி. பி. 1820ஆம் ஆண்டு ஆவணி தொடக்கம் கொழும்பில் நகரத்தாரால் அதிசிறப்பாக நடத்தப்பட்டுவரும் “வேல்விழா” இந் நாட்டுத் தேசிய விழாக்களில் ஒன்றாகும். இவ்விழா நாள் கி.பி. 1937 தொடக்கம் கி. பி. 1956 வரையான ஆண்டுகளில் அரசாங்க விடுமுறை நாளாக இருந்து வந்ததென்பது இங்கு நினைவுகொள்ளற்பாலதாகும்.

கட்டாயக் கல்வி :

இன்று இந்நாட்டில் ஒவ்வொரு சமய மாணவர்க்கும் அவரவர் சமயம் கட்டாய பாடமாகப் படிப்பிக்க வேண்டுமென அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இதன்படி, கல்வி பயிலும் சைவ மாணவர்கள் தம் சமயத்தை எதுவிதத்திலும். கற்றே ஆகவேண்டும். சமயத்தைப் பரீட்சைக்குக் கற்பதோடு நில்லாது, கற்ற வழி அவர்கள் நிற்பரேல் அவர்கள் யாபேரும் சிவபுரம் சேர்வர் என்பதில் யாதுமோர் ஐயுறவுமில்லை. இப்படியான நிலைபேற்றிற்கு ஆளாவதற்கேற்ற சூழ்நிலை இந்நாட்டில் சைவ மக்களுக்கு இருப்பது சிவநெறி பேணுவோர் தவப்பயனேயாம்.

பத்திரிகைகள் :

ஈழநாட்டில் சைவசமய வளர்ச்சி தொடர்பாக இற்றைவரை வெளிவந்த வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை – சஞ்சிகை மூதலானவற்றின் பெயர், அவற்றின் ஆரம்பகால ஆண்டு ஆரம்பகால ஆரியர் பெயர் போன்ற விவரங்கள் கீழ்க்கண்டவாறு.

1977 – இலங்கைநேசன் திரு.எச். எம், சின்னத்தம்பி
1880 – சைவஉதயபானு ஊரெழு சரவணமுத்துப்பிள்ளை சைவப்பிரகாச சமாச வெளியீடு
1881 – சைவம்போதினி கையெழுத்துப் பிரதி உடுவில் சிவஸ்ரீ வைத்திஸ்வர ஐயர்
1882 – விஞ்ஞானவர்தனி மூத்தம்பிச் செட்டியார்
1884 – சைவாபிமானி இயற்றமிழ் போதனாசிரியர் வல்வை. ச.வைத்திலிங்கம்பிள்ளை
1886 – உதயபானு 11-9-1998 (விரோதி ஆண்டு ஆவணி 28ஆம் நாள் கிருஷ்ண பக்கத் துதியையுடன் கூடிய உத்திராட்டாதி புதன்கிழமை) தமிழில் “இந்துசாதனம்” – நல்லூர் கைலாசபிள்ளை காரைதீவு கார்த்திகேயப் புலவர்
“Hindu Organ” இளைப்பாறிய திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி தா.செல்லப்பா பிள்ளை. யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வெளியீடு
12-2-1907 – ஞானசித்தி மாம் இரண்டு வெளியீடு வதிரி வித்துவான் சி.தாமோதரம் பிள்ளை. யாழ்ப்பாணம் விவேகாந்த அச்சகப் பதிப்பு. இவ் வச்சக அந்நாள் உரிமையாளரும் அவரே.
1908 -சைவசூக்குமார்த்த போதினி திரிபதார்த்த இலட்சணம், சித்தாந்தம் என்னும் நூல்களின் ஆசிரியர் – வேலணை செ.கனக சபாபதிபிள்ளை. வெளியீட செய்துதவியவர் – வேலணை வீ. கந்தப்பிள்ளை


மு.கு. : “சித்தாந்தம்” என்ற இவ்வாசிரியர் நூலில் வேதாந்த சித்தாந்தம் என்னும் இரண்டினதும் தொடர்பைத் தெளிவுறச் சுருக்கமான விவரித்துள்ளார். ஈண்டு “வேதாந்தம்” என்பது யோகப்பெயராக எடுத்துக் கூறும் வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களையேயாம். ஊரூடிப் பெயராக எடுத்துக்கூறும் ஏனான்மவாதத்தைச் சாதிக்கும் நூற்கருத்தை அன்றாகும்.  

1910 சைவபாலிய சம்போதினி
1910 ஞானப்பிரகாசம்
1910 பாலச்சந்திரன்
1911 கலியுகவரதன்
1911 சண்முகநாதன்
1911 சைவாபிமானம் காரணமாகச் சைவ உண்மைகளைத் துண்டுப் பிரசுர மூலம் கிழமைக்கொன்றாக மாதம் நான்கு வெளியீடு. இலங்கை இந்து சபையார் வெளியீடு, கொழும்பு பிரசுரம்.
1917 – The Young Hindu
1924 – சைவசித்தாந்தபானு
1924 – பலாமித்திரன் மாத வெளியீடு கொழும்பு கலா அபிவிருத்தி சங்கம்
1924 – தமிழர் போதினி ஆசிரியர் கு. விஜயரத்தினம், யாழ்ப்பாண வெளியீடு
1925 திசம்பர் – விவேகாந்தன் முதல் ஆசிரியர் விபுலாந்த அடிகள் – கொழும்பு விவேகாந்த சபை வெளியீடு
1933 – வித்திகம் வார இதழ் ஆசிரியர் கு. விஜயரத்தினம், யாழ்ப்பாண வெளியீடு
1935 – சிவதொண்டன் யாழ்ப்பாணம், சிவயோகசுவாமிகள் அருளாணை வெளியீடு வித்துவான் க.கி.நடராசா
13-4.1938 (வெகுதானிய ஆண்டு சித்திரைப் பிறப்பு சைவபோதினி) மாத இதழ். பருத்தித்துறை சைவப் பிரகாச சபை வெளியீடு. சைவ போதினி அச்சகப் பிரசுரம்
1939 ஆவணி – சைவாத்திர பரபாலனம் அச்சவேலி, சிவஸ்ரீ ச. குமாரசாமிக குருக்கள்
ஆறுமுகநாவலர் ஆவெளியீடு யாழ்ப்பாணம் வேதாகம சைவசித்தாந்த சபை. ஆசிரியர் சிவஸ்ரீ ச. குமாரசாமிக்குருக்கள்
16-11.1948 கௌரவ ஆசிரியர் க. இராமச்சந்திரா பதிப்பாசிரியர், நா. முத்தையா வெளியீடு, நாவலப்பிட்டி ஆத்ம ஜோதி நிலையம்
13-12.1959 – இந்த இளைஞன் மூன்று மாதங்களளுக்கு ஒன்றாகத் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வளர்ந்து, 1961 மே தொடக்கம் மாத இதழாக வெளிவந்தது. ஆசிரியர் சோ.பத்மநாதன் வெளியீடு கொழும்ப இந்த வாலிபர் சங்கம்
1964 (குரோதி ஆண்டு சித்திரை) சிவாயவாசி மாத இதழ் கொழும்பு வெளியீடு
1965 – சைவக்குரல் மாத்தளை சைவ மகாசபை வெளியீடு
1966 – சைவக்காவன்
1967 – இலங்கை இந்து வெளியீடு அகில இலங்கை இந்து மாமன்றம்
1972 – மெய்காண்டார் நெறி வெளியீடு தொண்டை மண்டலம் மெய்கண்டார் ஆதினம் குருமகா சந்நிதானம் அவர்கள் ஆணைப்படி ஈழத்து திருநெறி தமிழ் மன்றம்
1974 – அருளமுதம் வெளியீடு நல்லை ஆதினம்
13-6-1977 – சந்திரதீபம் கொக்கவில உயரப்புலம், வை.நல்லையா, இலங்கைமணி சைவநூற் பதிப்பக மாத வெளியீடு.

கோப்பாய் சபாபதி நாவலர் அவர்கள் சைவசித்தாந்த பரிபாலனத்தின் பொருட்டு, சென்னையில் சித்தாந்த வித்தியானு பாலன என்னும் அச்சகத்தை நிறுவி “ஞானாமிர்தம்” என்னும் பத்திரிகையை வெளியீடு செய்துவந்தார்.

ஏழாலை காசிவாசி செந்திநாதஐயர் அவர்கள் சேலம் மாவட்ட திருப்புற்றூரில் இருந்து “அமிர்த போதினி” என்ற பத்திரிகையை 1888இல் ஆரம்பித்து வெளியீடு செய்து வந்தார்.

ஆலய – குடிசனத் தொகை :

அரசாங்க ஆணைப்படி 1951 யூனில் வெளியாகி ஏ ஆம் பருவ மடலாகிய “சைவசமய அறநிலையங்கள் முதலியவை பற்றிய விசேட விசாரணைச் சபையின் அறிக்கை” என்ற தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாகாண – மாவட்ட ஈழத்துச் சைவலாய விவரங்கள் பின்வருமாறு :

மாகாணம் மாவட்டம் ஆலயங்கள் தொகை 1946ஆம் ஆண்டு குடிசனத் கணிப்புப்படி மாகாண அடிப்படையான சைவமக்கள் தொகை
மேல் கொழும்பு
கழுத்துறை
33
15
1,16,529
மத்தி கண்டி
மாத்தளை
நுவரெலியா
122
12
70
3,96,416
தெற்கு காலி
மாத்தறை
அம்பாந்தோட்டை
05
17
04
17,753
வடக்கு யாழ்ப்பாணம்
வவுனியா
மன்னார்
1196
87
43
3,83,855
கிழக்கு மட்டக்களப்பு
திருகோணமலை
182
55
1,24,736
வடமேல் குருநாகல்
புத்தளம்
17
33
21,733
வடமத்தி அநுராதபுரம் 32 9,774
ஊவா பதுளை 139 1,34,576
சப்பிரகமுவா இரத்தினபுரி
கேகாலை
91
34
1,14,980
2187 13,20,352

1871 – 1971 வரையான கால ஈழத்துச் சைவக் குடிசனத் தொகையும், மொத்தத் குடிசனத் தொகையில் சைவர்கள் விகிதாசாரமும், சைவர்கள் தேசிய விகிதாசாரப் பெருக் விகிதமும் :

ஆண்டு மொத்தத் தமிழர் தொகை நாட்டு மொத்தக் குடிசனத்தில் தமிழர் % மொத்தச் சைவர்கள் தொகை நாட்டு மொத்தக் குடிசனத்தில் சைவர்கள் %
1871 5,37,818 22.4 4,65,944 19.4 *
1881 6,87,248 24.9 5,93,630 21.5 27.4
1891 7,38,853 24.1 6,15,932 20.5 03.2
1901 9,51,740 26.7 8,26,826 23.2 34.2
1911 10,59,007 28.8 9,38,260 22.8 13.5
1921 11,20,059 24.9 9,82,073 21.8 04.7
1946 15,14,320 22.7 13,20,352 19.8 34.4
1953 18,58,807 23.0 16,10,561 19.9 21.9
1963 22,93,160 21.7 19,45,210 18.3 21.6
1971 26,10,935 20.5 22,39,310 17.6 14.3

1971ஆம் ஆண்டு இந்நாட்டில் எடுக்கப்பட்ட குடிசனக் கணக்கில், மாவட்ட அடிப்படையிலான சைவமக்கள் குடிசனத் தொகையம், மாவட்ட மொத்தச் சைவர்களின் விகிதாசார விவரங்களும் :

மாவட்டம் மாவட்டக் குடிசனத் தொகை மாவட்டச் சைவ மக்கள் தொகை மாவட்டத்தில் சைவமக்கள் விகிதம் நாட்டு மொத்த சைவர்களில் மாவட்டச் சவை மக்கள் விகிதம்
கொழும்பு 26,72,620 1,45,567 5.4 6.5
கழுத்துறை 7,31,824 40,578 5.5 1.8
கண்டி 11,87,170 3,08,717 26.0 13.8
மாத்தளை 3,16,342 54,420 17.02 2.4
நுவரெலியா 4,52,243 2,36,947 x 52.3 10.6
காலி 7,37,451 16,549 2.2 0.7
மாத்தறை 5,88,254 18,549 3.1 0.8
அம்பாந்தோட்டை 3,41,005 1,381 0.4 0.1
யாழ்ப்பாணம் 7,04,350 5,85,418 83.1 26.1
மன்னார் 77,882 23,278 29.9 1.0
வவுனியா 95,536 62,436 65.4 2.8
மட்டக்களப்பு 2,58,104 1,67,597 64.9 7.5
அம்பாறை 2,77,790 57,346 21.0 2.5
திருகோணமலை 2,91,989 62,828 32.7 2.8
குருநாகல் 10,28,107 17,493 1.7 0.8
புத்தளம் 3,79,787 18,200 4.8 0.8
அநுராதபுரம் 3,89,207 9,303 2.4 0.4
பொலன்னறுவை 1,63,858 4,664 2.8 0.2
பதுளை 6,16,315 2,14,506 34.0 9.6
மொனறாகலை 1,91,5,5 13,728 7.2 0.6
இரத்தினபுரி 6,61,710 1,11,648 17.3 5.2
கேகாலை 6,52,094 67,393 10.3 3.0

•முதற்கணக்கெடுப்பிலிருந்து அடுத்த கணக்கெடுப்பிற்குள்ளான காலப் பெருக்க விகிதம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.