சமீபத்திய செய்தி

ஆறுமுக நாவலர் பெருமான் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் சைவ நெறியையும் தமிழ் மொழியையும் வளர்ப்பதற்குப் பெரும் பணிபுரிந்தவர். அவரின் கல்விப் புலமை நாவன்மை சைவத் தமிழ்ப் பணி என்பவற்றிற்காகத் திருவாவடுதுறை ஆதினத்தால் நாவலர் என்ற பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். அவ்வாறே சைவம் காத்த அவர் சைவ மக்களால் ஐந்தாம் குரவர் எனவும் போற்றப்படுகின்றார்.
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும்.
ஆறுமுக நாவலர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் மூதுரை முதலிய நீதிநூல்களையும், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பயின்றார். சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராச முதலியாரிடம் உயர்கல்வி பயின்றார். தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றார்.
நாவலர் பெருமான் சைவம், தமிழ் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணம் செய்தவர். அவர் சிவபக்தி உடையவர்; சிவனடியார் மீது பக்தி கொண்டவர்; தமிழ்ப் புலமை மிக்கவர்; சிறந்த கல்விமான்; பிரசங்கத்தில் வல்லவர்; வாக்குச் சாமர்த்தியம் உள்ளவர்; நல்லொழுக்கம் உடையவர். அப்பண்புகள் அவரிடம் இளமைக்காலந் தொட்டுக் காணப்பட்டன. அவை, அவர் சமயப் பணியைத் திறம்படச் செய்ய உதவியாக அமைந்தன.
நாவலர் சைவ சமயத்தை வளர்க்க, பல வழிமுறைகளைக் கையாண்டார். அவற்றில் முதல்வழி சைவப் பிரசங்கமாகும். அவரது பிரசங்கத்தின் பொருளாக சிவசின்னங்கள், திருமுறைகள் முதலானவை அமைந்திருந்தன. அதன் மூலம் மக்களிடையே சமய விழிப்புணர்ச்சியை ஊட்டினார்; புறச்சமயம் போகாமல் மக்களைச் சைவத்தில் நிலைத்திருக்கச் செய்தார். சைவ மக்கள் திருநீறு முதலிய சிவசின்னங்களை அணியவும் சைவத் திருமுறைகளைப் பாடவும் விரதங்களை அனுட்டிக்கவும் ஆலய தரிசனம் செய்யவும் சமய மரபுகளைப் பேணவும் அவர் தூண்டுகோலாக விளங்கினார்.
தமிழகத்திலும் இலங்கையிலும் சைவசமயத்தையும் தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர் எல்லோராலும் நன்கு போற்றப்பட்டார். அவர், சிதம்பரத்திலும், யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவினார். அச்சு இயந்திரசாலைகள் அமைத்து, பல நூல்களைத் தமிழில் வெளியிட்டார். பழைய நூல்களைப் புதுப்பித்தும், புதிய நூல்களை எழுதியும் சைவத்திற்கும் தமிழுக்கும் பல தொண்டுகள் செய்தார். அவர் கந்தபுராண வசனம், பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான வசன நூல்களை எழுதினார். அவை எளிமை மிக்கவை. அதனால், வசனநடைக்கு ஆறுமுகநாவலரே தந்தை என்பர்.

சைவத்தையும் தமிழையும் நன்கு பாதுகாத்த நாவலர், 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21 ஆந் திகதி இறையடி சேர்ந்தார். அவரது குருபூசைத் தினம் கார்த்திகை மாதம் மக நட்சத்திரமாகும். நாவலரது பணிகளைப் பணிகளைப் பெரியோர் பின்வருமாறு போற்றுவர்.
நல்லைநக ராறுமுக நாவலர்பிறந்திலரேற்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்க ளெங்கேபிர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே யறை.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.