சமீபத்திய செய்தி
உருத்திராக்க மகிமை : உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்தசுரார்களாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றித் தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டபோது, சிவபிரானது மூன்று கண்களினின்றும் சிந்திய மணியே உருத்திராக்கம் என்பர், எனவே, ஆன்மாக்களிடம் இறைவன் கொண்டுள்ள பெருங்கருணையைச் சதா நினைவூட்டும் சாதனமாக உருத்திராக்கம் விளங்குகின்றது. இதனை அணிதல் அவரது திருவருட் பேற்றிற்கு அறிகுறி. பத்தினிப் பெண்களுக்குத் திருமாங்கலியம் எங்ஙனம் புனிதமான ஆபரணமாக விளங்குகின்றதோ, அங்ஙனமே சிவனடியார்களுக்கு உருத்திராக்கம் போற்றி அணிய வேண்டிய புனிதச் சின்னமாகத் திகழ்கின்றது. உண்மையடியார்களைச் சைவநெறியினின்றும் பிறழாமற் காக்கும் இரட்சையாகவும் இது விளங்குகின்றது.
உருக்திராக்க வகைகள் ஒரு முகம் தொடக்கம் பதினாறு முகம் வரை கொண்ட மணிகள் உண்டு. ஒவ்வொருவகை மணிக்கும் ஒவ்வொரு அதி தேவதை கூறப்படுகின்றது. பொன்னிறம், கருநிறம், கபில நிறம் ஆகிய நிறங்களில் உருத்திராக்க மணிகள் உள்ளன. ஒரே இன மணிகளாலான மாலைகளே அணியத்தக்கன.
உருத்திராக்கத்தின் மறுபெயர்கள் கண்டி, அக்கு, கண்மணி, சிவமணி, தாழ்வடம், திருஅடையாளம் போன்றவையாகும்.
உருத்திராக்கம் அணிந்தார் பெறும்பேற்றைச் சம்பந்தப் பெருமான் கீழ்க்காண் பாடலில் விளக்குகின்றார்.
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்க னாம நமச்சி வாயவே.
முறையாக உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடுவாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும் மறு உலகில் ஆண்டவன் அடியிணை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர்.
உருத்திராக்க தாரணம்: சந்தியாவந்தனம், சிவபூசை, செபம், தேவார திருவாசக பாராயணம், புராணபடனம், சிவாலய தரிசனம் போன்ற சாதனைகள் செய்யும் காலங்களில் உருத்திராக்கம் தரித்தல் அவசியம். உறங்கும்போதும், மலசலங் கழிக்கும்போதும், ஆசௌச காலத்திலும் தரித்தலாகாது. ஆசாரமற்றோரும் தரித்தலாகாது. சிகை, சிரம், காது, மார்பு, தோள்கள், கைகள் ஆகியவை உருத்திராக்கம் தரித்தற்குரிய இடங்கள். எத்தனை முகங்கொண்ட மணிகளை எவ்வெவ் விடங்களில் அணியலாம் என்றும், ஒவ்வொரு அங்கத்திலும் எத்தனை மணிகள் கொண்ட மாலைகள் அணியலாம் என்றும், ஒவ்வோர் இடத்திலும் தரிக்கும் மாலை எந்த அளவினதாய் இருக்கவேண்டுமென்றும் விதிகள் உண்டு. செபம் செய்ய உபயோகிக்கும் மாலை 108 அல்லது 54 மணிகளைக் கொண்டதாயிருக்கும். செபமாலை மனத்தை இறைவனிடம் செலுத்தும் சிறந்த சாதனமாகும். “சிவம் செய்தல்” என்னுஞ் சொல்லே மருவி “செபஞ் செய்தல்” என வழங்குவதாகவும் கூறுவர்.
குறிப்பு : பரமேசுவர பல்லவன் சிறந்த சிவபக்தன். கி. பி. 670-685 வரை ஆட்சி புரிந்தவன். தன் நாட்டில் பல சிவன் கோவில்களைக் கட்டியவன். “கூரம்” என்ற ஊரில் கல்லால் சிவன்கோவில் கட்டியவன். தமிழ்நாட்டில் கல்லால் கட்டப்பட்ட முதல் கோவில் இதுவே எனக் கருதுகின்றனர். இப்படியான சிறப்பு வாய்ந்த மன்னன் சைவர்களினது போற்றலுக்குரிய இன்னோர் சிறப்புக்கும் உரியவனாகின்றான். உருத்திராக்க மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் கயல் தரித்திருந்தமையே அதுவாகும்.
பல துறைகளிலும் தமிழ் சைவம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகக் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள அறக்கட்டளைகளை ஏற்பாடு செய்திருக்கும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம், உருத்திராக்க மணிகளை வாங்கிச் சிவ அடியார்க்கு அளிப்பதற்குப் பயன்படுத்தும் வகையில், ஐம்பதினாயிரம் ரூபா அறக்கட்டளை ஒன்றை 21-2-1955இல் “காஞ்சிபுரத்தில் திருக்கச்சியேகம்பன் உருத்திராக்கத் தேவார நிதி ” என்ற பெயரில் ஏற்பாடு செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய செய்தியாகும்,
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.