சமீபத்திய செய்தி

நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேச்சரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
நகுலேஸ்வரத்தின் தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. இங்கு புராதன சிவத்தலம் ஒன்று உண்டு. இவ் விடத்தின் புராதன பெயர் திருத்தம்பலை கோயில்கொண்டிருந்த பெருமானின் புராதன பெயர் திருத்தம்பலேசுவரர். கீரிமுகமூடைய முனிவர் ஒருவார் இத்துறையில் நீராடி, அருகிலுள்ள பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரிமுகம் மாறப்பெற்றார். இக்காரணங் கொண்டே இவ் விடம் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இதனை வடமொழியில் நகுலகரி என்பர், இங்கு இடங்கொண்ட இறைவனின் இக்காலப் பெயர் நகுலேசர்-நகுலேசுவரர். இறைவி நகுலாம்பிகை-நகுலேசுவரி. கோவில் நகுலேசுவரம்.
இத்தலம் ஆதிச் சோழ மன்னனாகிய முசுகுந்தன், நளன், அருச்சுனன் முதலியோரினால் தொழப்பெற்ற ஒன்றாகும். தீர்த்த-தல யாத்திரைகளுக்குரிய புராதனப் புண்ணிய இடங்களுள் கீரிமலையும் ஒன்று.
வடமொழிச் சைவ புராணத்தினுள் கந்தபுராணம் சிறப்பானது. அதில் உள்ள சூத சங்கதையில் நகுலேசுவரம் பழைமையான யாத்திரைத் தலங்களுள் ஒன்று எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈழத்தில் சைவம் எவ்வளவு தொன்மைக் காலம் தொடக்கம் நிலவி வருகின்றது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
விசயன் இலங்கை அரசனாக இருந்தபோது, இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்ததாக வரலாறு உண்டு.
முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேச்சரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
இப்போது கீரிமலையென்று கூறப்படும் மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையிற் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது. இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகும். மாருதப்புரவிகவல்லி தீர்த்தமாடித் தனது குன்மநோய் நீங்கப்பெற்ற புண்ணிய தீர்த்தம் இதுவேயாம்.
பறங்கியர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய பொழுது இடித்தழித்த சிவாலயங்களுள் கீரிமலைச் சிவன் கோவிலும் ஒன்று. அழிந்த இக்கோவிலை உருவாக்குவதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முயற்சி எடுத்துள்ளார். அவரது முயற்சியைத் தொடர்ந்து, திருப்பணி வேலைகள் நடந்தேறி, இன்று நித்திய நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசமாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.
இவ்வாலயத்தின் தொன்மைபற்றிக் கூறும் நூல்கள்; தட்சணகைலாய புராணம், கைலாயமாலை, நகுலாசல புராணம், நகுலமலைக் குறவஞ்சி, நகுலமலைச் சதகம், நகுலகிரிப் புராணம், நகசுலேசுவரர் விநோத விசித்திரக் கவிப்பூங்கொத்து என்பனவாம்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்டது. ஆலய ஆதீனகர்த்தா நகுலேசுவரக் குருக்களினது அயராத முயற்சியின் பயனாக 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு தை மாதம் சிவ சிரீ நகுலேச்சர குருக்கள் பொறுப்பில் ஆலயத்தில் குடமுழுக்கு இடம்பெற்றது.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.