சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

கதிர்காமம்

   

மருவும் அடியார்கள் மனதில் விளையாடுபவன் முருகன், அம்முருகனுக்கு ஈழத்திலே அருள் நிறைந்த புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் கதிர்காமம் தலையாய யாத்திரைத் தலமாகும். அது ஈழத்தின் தென்கீழ்ப் பகுதியில் உள்ளது. கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை சென்று, அங்கிருந்து “திசைமகாறாம” வரை சென்றால், அடுத்த பன்னிரண்டு கல் தொலையில் தெரிவது புண்ணிய நதியான மாணிக்ககங்கை. அதன் அருகில் இருப்பதுதான், கதிர்காமம். நாற்றிசையும் கொடிய மிருகங்கள் வாழும் காட்டின் நடுவேயுள்ள கதிர்காமத் தலத்தில், மிக்க அற்புத மகிமையோடு பொற்புடன் கோயில்கொண்டிருக்கின்றான் முருகன்.

கதிர்காமம் செல்வோர். கதிர்காம முருகனைக் கோயிலில் வழிபட்டு விட்டுச் செல்லக்கதிர்காமம் செல்வர். அங்குள்ள மாணிக்கப் பிள்ளையாரை வணங்கியபின், திரும்பக் கதிர்காமம் வந்து கங்கையில் நீராடிவிட்டு, குன்றுதோறாடும் குமரன் – கொலுவிருக்கும் கதிரைமலை உச்சிக்கு செல்வர்.

“கதிர்காமம்” என்பது கடவுள் தன்மையுடைய ஒளியும் அன்பும் நிறைந்த இடம், மேலும் இது முருகப்பெருமானின் படைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சூரனை வென்ற பிறகு, வேலானது வாகூரமலையைப் பிளந்து, மூன்று கதிர்களைச் சிந்தியதாகவும், அக்கதிர்கள் உகந்தமலை, திருக்கோணமலை வெள்ளை நாவல் மரம், மற்றும் மண்டூர் தில்லை மரம் ஆகிய இடங்களில் விழுந்ததால், அந்த இடங்களில் வேலாயுதசுவாமி கோவில்கள் அமைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக, கதிர்காமத்திற்கு யாத்திரை செல்லும் அடியவர்கள், இந்த ஞானசக்தி பீடங்களை தரிசித்துவிட்டு, பின்னர் மூலவரான முருகப்பெருமானைக் காணச் செல்கின்றனர்.

அடுத்தபடியாக, “கதிர்காமம்” என்பதற்குத் தினை நிறைந்த ஊர் என்றும் பொருள் விரிப்பர். இப்பகுதியைச் சுற்றி வேடர்களினால் செய்கை பண்ணப்படும் தினைப் பயிர்கள் அதிகமாகக் காணப்பட்டதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் காரணம் கூறப்படும். ஆலயத்தின் சுற்றுப்புறங்களில் வேடர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வழிபாட்டு கடவுள் கதிர்காமப் பெருமானே என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது ஆலயத்திற்குப்பூசை செய்பவர் வேடர் வழிவந்த “கப்புறாளை” எனப்படுபவரே. இது ஆகம முறைப்படி பூசை நடைபெறும் கோயிலல்ல. பூசை புரிபவர் வாயைச் சீலையால் கட்டிக்கொண்டு மௌனமாக நின்று பூசைசெய்வதே இங்குள்ள வழக்கம். இந்நேரம் அங்குள்ள தெய்வசக்தி அடியாரை நெஞ்சுருக செய்து தன்வயப்படுத்தி நல்லறிவை அகத்துள் ஏற்றி, ஆனந்த பரவசமாக்கி, ஆலயத்தின் அருள் மயத்தை எங்கும் ஒளிவிடச் செய்யும்.

கதிர்காம ஆலயத்தின் கட்டடம் மிகவும் சிறியது. இது மூலத்தானத்தையும், சிறு மண்டபத்தையும் கொண்ட ஒரு சாதாரண சிறிய கட்டடமாகும். மூலத்தான வாயில் ஒருபோதும் திறக்கப்படுவதில்லை. எப்பொழுதும் திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருக்கும். அம்மூலத்தானத்தில் ஓர் இயந்திரப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அது முருகப்பெருமானது இயந்திரத்தை மந்திர வடிவாக அமைத்து, முத்துலிங்கசுவாமிகளால் வணங்கப்பட்ட பொற்றகடு உள்ள பெட்டி எனக் கூறப்படுகின்றது. ஆலயத்திற்குப் பக்கத்தில் தெய்வானை அம்மன் கோயிலும், வள்ளியம்மன் கோயிலும், பிள்ளையார் கோயிலும் அமைந்திருக்கின்றன. இவற்றோடு இங்கிருந்து முருகனைப் பூசித்து அவனடி சேர்ந்து சமாதியான முத்துலிங்க சுவாமிகளுக்கும் கோயில் உண்டு, இக்கோயில் வீதி முருகன் திருக்கை வேல் போல முக்கோணவடிவுடையதாகக் காட்சிதரும்.

கதிர்காமத்தில் ஆடி மாதத்தில், உற்சவ விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடித் திருவோண நாளன்று தீர்த்தம் நடைபெறும். இத்தினம் மகமை மிக்கதாகும். இவ் விழாக்காலத் தரிசனத்திற்காக இலட்சக் கணக்கில் மக்கள் யாத்திரை செல்வர். இக்காலத்தைத் தவிர கார்த்திகை மாதத் திருக்கார்த்திகை, சித்திரை வருடப்பிறப்பு முதலிய நாட்களிலும் சிறப்பான விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. உற்சவ காலங்களில் மூலத்தானத்திலிருக்கும் இயந்திரத் தகடு வைக்கப்பட்ட பெட்டியைக் கோயில் யானைமீது எழுந்தருளச் செய்து, திருவீதி உலாவரப்படும். இங்கு வரும் அடியவர் தேனும் தினைமாவுங் கொண்டு மாவிளக்கிட்டு முருகனுக்கு நிவேதிக்கின்றனர். பலர் காவடி எடுப்பர். வேறுபலர் ஊன் உருக உள் ஒளி பெருக்கும் கர்ப்பூரத் தீபச் சட்டி, ஏந்துவர்; இன்னும் பலர் மெய்மறந்து பாடியாடிக் கூத்துமாடுவர். இவர்களுக்கு மேலாகச் சிலர் மௌனமாக இருந்து யாகம் செய்வர்.

கதிர்காம யாத்திரிகர் தங்குவதற்கு வசதியாகப் பல மடங்கள் கதிர்காமத்தில் உள்ளன. அவற்றுள் இராமகிருஷ்ண சங்கத்தாரின் மடமே பிரபலியத்துடன் விளங்குகின்றது. உற்சவ காலத்தில் கதிர்காமம் செல்வோர் தங்கி ஆறுதலடைந்து செல்வதற்கு மாத்தறை அன்னதான மடமும், கொழும்பு கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபைக் கப்பித்தாவத்தை மடமும் ஆகவேண்டிய உதவிகளை இரவு பகல் பாராது செய்து வருவதும், அடியவர்கள் பலவகையிலும் இவற்றிற்குப் பொருளுதவி செய்து வருவதும் இங்கு குறிப்பிடப்படத்தக்க புண்ணிய விடயமாகும்.

 
அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி 
அன்பொடு சிவாயஎன அருணீறு பூசி 
முதிருமன் பால்நெஞ்ச முருகவிழி 
யருவி முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப் 
புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப் 
பொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக் 
கதிரைமலை காணாத கண்ணென்ன கண்ணே 
கர்ப்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணே” 


என இலங்கை வளம் பற்றி நவாலி, திரு, க.சோமசுந்தரப் புலவர் பாடிய நெஞ்சையள்ளும் கவிமலர்களுள், கதிர்காமம் பற்றிப் பாடிய இதழ் இதுவாகும்.

கதிர்காமத்தின் மறுபெயர்கள் ஏமகூடம், கார்த்திகேயபுரம், கதிர்வேலன் மலை, மாணிக்க நகர், மணிபுரம், கந்தவேள் கோயில் முதலானவையாம். கதிர்காமத்திற்குரிய தீர்த்தம், “மணிதரளம் வீணியணிவி” எனப் போற்றப்படும் மாணிக்ககங்கை, அருணகிரிநாத சுவாமிகளது திருப்புகழில் இடம்பெற்ற திருத்தலம் இதுவாகும். சீதையைத் தேடிவந்த அநுமானால் வணங்கப்பட்ட தலமும் இதுவாகும்,

கதர்காமத்தையொட்டிப் பல கந்தசுவாமி கோலில்களும், ஊர்களும் கிழக்குப் புறத்திலும், தெற்குப் புறத்திலும் தோற்றியுள்ளன. கழுத்துறைக்குத் தென்பாலுள்ள “வேலபுரம்” மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள கடற்றுறையான கந்தமாணன்துறை (இன்றைய திருக்கோவிலின் பழைய பெயர் கந்தபாணன்துறை) போன்றவை இவற்றுள் சிலவாம். அவையாவற்றையுங் கொண்டு வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் சைவத்தமிழர் இவ்விடங்களில் வாழ்த்திருக்கின்றனர் என்பதை யாம் உணர்ந்து கொள்ளலாம்.

கதிர்காமச் சிறப்புப்பற்றிக் கூறும் நூல்கள்

நூலின் பெயர் நூலாசிரியர் பெயர்
1) கதிர்காமப் பிள்ளைத்தமிழ் புலவர் சிவங்கருணாலய பாண்டியனார்
2) கதிர்காமவேலவர் தோத்திர மட்டக்களப்பு வித்துவான்
மஞ்சரி அ. சரவணமுத்து
3) கதிர்காம நான்மணிமாலை வண்ணை நெ. வை. செல்லையா
4) கதிர்காம புராணம் வதிரி சி. நாகலிங்கம்பின்ளை
5) கதிரைமலை வேலவர் பதிகம்
கதிரைச் லேடை வெண்பா
தங்கத் தாத்தா நவாலியூர்
க. சோமசுந்தரப் புலவர்
6) கதிர்காமவேலர் திருவருட்பா சுழிபுரம் திருஞானசம்பந்த உபாத்தியாயர்
7) கதிர்காமசுவாமி பதிகம்
கதிர்காமசுவாமி கீர்த்தனம்
வயாவிளான் ஆசுகவி க.வேலுப்பிள்ளை
8) கதிரை யாத்திரை விளக்கம் வண்ணை விநாயகமூர்த்திச் செட்டியார்

 

குறிப்பு :

சைவ ஆலயமாகிய கதீர்காமம் சைவ மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகப் பரிபாலிப்பதற்குச் சைவ மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் ஒன்று, 1908ஆம் ஆண்டு முதன் முதலாக சேர் பொன். அருணாசலம் தலைமையில் கொழும்பில் இயங்க வந்த அகில இலங்கைச் சைவபரிமாலனசபையினால் விடுக்கப்பட்டது. இதே வேண்டுகோளுடன் ஆலயத்திற்குச் சேரும் வருவாய்கள் கோயிற் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோனளொன்றை மேலும் கூடச் சேர்த்த விண்ணப்பம் ஒன்று செய்யவேண்டுமென சேர் அருணாசலம் மகாதேவா தலைமையில் 18-3-1938இல் கொழும்பு விவேகாநந்த சபையில் கூட்டப்பட்ட சைவப்பெரியார்களதும், சைவதாபனங்களதும் கூட்டத்தில் ஒரு மனதான தீர்மானஞ் செய்யப்பட்டது. ஆயின், அக்காலத்தில் ஏற்பட்ட 2ஆம் உலகப்போர் நெருக்கடி காரணமாக இவ்வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. அதன்பின் இதுபற்றிக் கேட்கப்பட்டதாக எட்டவில்லை.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.