சமீபத்திய செய்தி
குருவின் சிறப்பு : “குரு” என்றால் பாசத்தை நீக்குபவர் அல்லது அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவர் என்பது பொருள். தீட்சை அளித்தவரும், கல்வி போதிப்பவரும் குரு ஆவார். சைவநெறி தழைத்தோங்கத் தேவார திருவாசகங்களையும், மெய்கண்ட சாத்திரங்களையும் அருளிய சமயகுரவர்களும் சந்தான குரவர்களும் போற்றி வழிபடுதற்குரிய குருமார்களே. வாழ்க்கையில் பரிபக்குவம் ஏற்பட்டதும் பிறவியை ஒழிக்க ஞானாசாரியராக வருபவர் ஞானகுரு எனப்படுவர். யாம் அறியாமல் எமது உள்நின்று நடத்தும் திருவருட்சத்தியே, எமது பக்குவ நிலையில் யாம் கண்டுணர்ந்து வழிபடவும், எம்மை வழிப்படுத்தவும் மானிடப் போர்வையில் குருவாக வந்து, எம்மை ஆட்கொள்கின்றது. சகலராகிய எம்மனோர்க்கு இறைவன் நேராக வராமல், குருவை அதிட்டித்து நின்றே அருள் செய்கின்றான். எனவே குருவே எமது கண்கண்ட தெய்வம் என்பதில் ஐயமில்லை. குருவின் அருளாலேயே இறைவனை அடைய முடியும்.
குரு வழிபாடு : மன, மொழி, மெய்களால் வணங்குதற்குரிய சிவசொரூபமாக இருப்பதோடு குருவானவர் வாழ்வில் பின்பற்றுதற்குரிய சிறந்த இலட்சியமாகவும், ஆன்மிகத்துறையில் சந்தேகங்களைப் போக்கி நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றார். குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும்போது அடக்கத்துடனும், பக்தியுடனும் இருந்து, கவனம் முழுவதையும் சொல்லப்படும் விடயத்திற் செலுத்திக் கேட்க வேண்டும். குருவுக்குச் செய்யும் சேவை மிகச்சிறந்த திருத்தொண்டாகும். குருவின் உபதேசப்படி ஒழுகுதல் அவர்க்குச் செய்யும் வழிபாடுகளுளெல்லாம் முதன்மையானது. அவரவருடைய குருவை உள்ளன்போடு வழிபடுவதுடன், சமய குரவர், சந்தானகுரவர் ஆகியோருக்கும் குருபூசை செய்து வருவது அவசியம். நாயன்மார்களுள் திருமூலார், மங்கையற்கரசியார், குலச்சிறையார், அப்பூதியடிகள் ஆகியோர் குருவழிபாட்டால் வீடுபேறடைந்தோருட் சிலராவர். சந்தானகுரவர் முதலானோர் குருவழிபாட்டினாலேயே உயர்பதம் எய்தியவர்கள். தங்கள் குருவின்பால் தாங்கள் கொண்டிருந்த பக்தியையும் பெருமதிப்பையும் தங்கள் நூல்களிலும் அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
இலிங்க வழிபாடு: சிவலிங்கம் சிவபெருமானின் அருவுருவத் திருமேனி. அது ஞானசோதி வடிவானது. பீடம் சக்தியையும், இலிங்கம் சிவத்தையும் குறிப்பது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்திலுள்ளவர்களும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளை அவரவர் பக்குவத்திற்கேற்ற முறையில் வழிபடுதற்குரியவர். சரியையாளர் இறைவனது உருவத் திருமேனிகளைச் சிவனெனக் கொண்டு வழிபடுவர் கிரியையாளர், அருவமாகிய பரம்பொருளே இலிங்கம் முதலிய திருவுருக் கொண்டருளினார் என்று தெளிந்து மத்திரத்தினால் சிவலிங்கத்தில் சிவபெருமானைப் பதித்து வழிபடுவர். யோகிகள் தமது உள்ளத்தில் நிலைத் இருக்கும் இறைவனே சிவலிங்கத் திருமேனியிலிருந்து பூசை கொண்டருள்வன் எனத் தெளிந்து வழிபடுவர். ஞானிகள் அன்பினால் வழிபடுவர். இவர்களுள் சரியையாளருக்கு வெளிப்படாது நின்றும், கிரியையாளருக்கும் யோகிகளுக்கும் அவர்கள் விரும்பிய வடிவாய்த் தோன்றி நின்றும், ஞானிகளுக்கு அவர்களது அன்பே தாமாக எப்போதும் வெளிப்பட்டு நின்றும் சிவபெருமான் அருள்செய்வார். நாயன்மாருள் சேரமான் பெருமான், சாக்கியநாயனார், கலிக்காமர், பூசலார் முதலானோர் இலிங்க வழிபாடு செய்து வீடு பேறடைந்தவர்.
இலிங்க வகைகள் : சிவலிங்கம் பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிங்கம் எனவும், ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனவும் இருவகைப்படும். யாவரும் வழிபடுவதற்காகத் திருக்கோயில்களில் நிலையாகத் தாபிக்கப்படுவது பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிங்கம். தானே தோன்றியதாயின் இது சுயம்புலிங்கம் எனப்படும். தாபிக்கப்பட்டதாயின் தாபித்தோருக்கேற்பப் பெயர்பெறும். விநாயகர் முதலிய கணர்களால் தாபிக்கப்பட்டது காணலிங்கம் தேவர்களால் தாபிக்கப்பட்டது தைவிகலிங்கம்; திருடிகளால் தாபிக்கப்பட்டது ஆரிடலிங்கம், மானிடரால் தாபிக்கப்பட்டது மானுடலிங்கம், பரார்த்தலிங்கத்தில் சிவபெருமான் சங்காரகாலம் வரை சாந்நித்தியராயிருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகம் செய்வார். ஆதிசைவ மரபில் உதித்து, மூவகைத் தீட்சையும் ஆசாரிய அபிடேகமும் பெற்று, வேதாகமங் கற்று வல்ல பண்டிதர்களே பரார்த்தலிங்கத்திற்குப் பூசை, திருவிழா முதலியன செய்தற்குரியோர் ஆவர். இனி, விசேட தீட்சை பெற்றவர்கள் தாமே சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி வழிபட்டு இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால், தமது விசேட தீட்சாகுருவிடமிருந்து பெற்று, அவரது உபதேசப்படி பூசிக்கும் சிவலிங்கம் ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனப்படும். அது சுவர்ணலிங்கம், படிகலிங்கம், இரத்தினலிங்கம், சைலலிங்கம் எனப் பல வகைப்படும். ஆன்மார்த்த பூசை ஆயுட்காலம் முழுதும் செய்தற்குரியது. அங்கவீனம், பிணி முதலியன இல்லாதவர்களாயும், சிவபூசா விதிகளையறிந்து அனுட்டிக்க வல்லவராயும் உள்ளவர்களே முற்கூறிய இலிங்கங்களைப் பிரதிட்டை செய்து வழிபடுவதற்குரியவர்கள். ஏனையோர், பூசித்தவுடன் ஆற்றிலேனும் குளத்திலேனும் விடப்படும் சணிகலிங்க பூசையே செய்தற்குரியவர். சணிகலிங்கம் என்பது மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், சர்க்கரை, மா முதலியவற்றுள் ஒன்றால் சிவலிங்க வடிவாய் அமைத்துப் பூசிக்கப்படுவது.
சங்கம வழிபாடு: சிவனடியார் திருக்கூட்டம் சங்கமம் எனப்படும். சிவபெருமானிடம் மெய்யன்பு பூண்டொழுகுவோர் சிவனடியார் ஆவர். அவர்கள் சிவபெருமானை நினைத்தாலும், அவரைப்பற்றிக் கேட்டாலும், அவரது தெய்வத் திருமேனிகளைக் கண்டாலும் தம்வசமிழப்பர்; சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தும், அவரது புகழ் பாடியும், திருவைந்கெழுத்தை ஓதியும் இன்புறுவர் சிவபெருமானை நினைக்கச் செய்யும் சிவசின்னங்களணிந்த திருமேனியுடையவராக இருப்பர்; அடியார்க்குரிய பாவனை, செயல், வேடம் இவற்றையுடைய எவரும் சிவமாகக் கருதி வழிபடுதற்குரியவரேயாவர். சிவனடியார்களைக் காணச் செல்லுங்கால் கையில் யாதேனும் கொண்டு செல்லுதலும், அதனை அவர்முன் வைத்து. வணங்கலும், அவர் அனுமதியுடன் இருந்து அவர் கூறும் நல்லுரைகளைக் கேட்டலும் முறையாகும்; நமது இல்லத்துக்கு வரும் அடியாரை எதிர்கொண்டு வரவேற்று, இன்சொல் கூறி, ஆசனத் இருத்து உபசரித்து வணங்கி, அவர் செல்லுங்கால் வழியனுப்பி வருதல் வேண்டும். நாயன்மாருள் திருநீலகண்டர், இயற்பகையார், திறுத்தொண்டர், இளையான்குடிமாறனார் முதலியோர் சிவனடியார்களை வழிபட்டு வீடுபேறு எய்தியவர்களாவர்.
சங்கம வழிபாட்டின் சிறப்பு : “ஆடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்” என்று வேண்டுகின்றார் மணிவாசகப்பெருமான் “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே” என்கிறார் அப்பர்பெருமான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகையில் ஒவ்வொரு நாயன்மாரையும் விதந்தோதி, அவர்களுக்குத் தாம் அடியாரெனக் கூறியதோடு, அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கெல்லாம் தம்மை அடியாரெனளவும் கூறிக்கொள்கிறார். சிவபிரானிடம் உள்ள அன்பு, அவரது அடியாரிடமும் பரவுவதால், அவர்மேலுள்ள அன்பு மேலும் வளர்ந்து உறுதிப்படுத்துகின்றது.
சிவனடியார் சங்கமம் எமது உள்ளத்திலுள்ள கீழ்த்தர எண்ணங்களையகற்றி, உயர்தர எண்ணங்களை உண்டாக்குகின்றது. உலகப் பற்றை நீக்கத் தெய்வப்பற்றை வளர்க்கின்றது. சிவனடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டும், வழிபாடும் உள்ளத்தை விரைவில் தூய்மைப்படுத்திப் பத்தியையும் வைராக்கெயெத்தையும் வளர்க்க உதவுகின்றன.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.