சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நான்காம் திருமுறை பகுதி 01

திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை முதலாம் பகுதி

4.01 திருவதிகைவீரட்டானம்

பன் – கொல்லி
திருச்சிற்றம்பலம்

1கூற்றாயின வாறுவி லக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.1
2நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.2
3பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மனே.
4.1.3
4முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.4
5காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.5
6சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.16
7உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே.
4.1.7
8வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் 
கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.8
9பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.9
10போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.02 திருக்கெடிலவடவீரட்டானம்
*
திருவதிகைவீரட்டானம் என்பதும் இது

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

11சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.1
12பூண்டதோர் கேழல் எயிறும் பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.2
13ஒத்த வடத்திள நாகம் உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும் முளைத்தெழு மூவிலை வேலுஞ்
*சித்த வடமும் அதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. 
(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.
4.2.3
14மடமான் மறிபொற் கலையும் மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம் இருநில னேற்ற சுவடுந்
தடமார் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.4
15பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதென்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.5
16கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர் அறியப் படாததோர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.6
17கொலைவரி வேங்கை அதளுங் குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.7
18ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதோர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.8
19சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை.
4.2.9
20நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4.2.10


இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 03 திருவையாறு

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

21மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.1
22போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.2
23எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.3
24பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.4
25ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.5
26தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.6
27கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாலொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.7
28விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் 
கலந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங் 
கண்டறி யாதன கண்டேன்.
4.3.8
29முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.9
30திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா ரடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.10
31வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
4.3.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொற்சோதீசுவரர், தேவியார் – அறம்வளர்த்தநாயகி.
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே, 
கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 04 திருவாரூர் 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

32பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.1
33நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.2
34நீறுமெய் பூசவல் லானும் நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும் நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.3
35கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.4
36ஊழி யளக்கவல் லானும் உகப்பவர் உச்சியுள் ளானுந்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானுந்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.5
37ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆதிரை நாளுகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.6
38தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்துக் கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.7
39ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.8
40வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.9
41பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 05 திருவாரூர்ப்பழமொழி 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

42மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
4.5.1
43என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே.
4.5.2
44பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே.
4.5.3
45குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகைகாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற் றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல் அருள்செய்யும் ஆரூ ரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீராற் பரவைசெயப் பாவித் தேனே.
4.5.4
46துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே.
4.5.5
47பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட் காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே.
4.5.6
48கதியொன்றும் அறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே.
4.5.7
49பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக் கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்ட ஆரூ ரரைப்
பாவியேன் அறியாதே பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே.
4.5.8
50ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும் ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வச்செற் றக்கு ரோதந்
தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே.
4.5.9
51மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே.
4.5.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 06 திருக்கழிப்பாலை 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

52வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற்
சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.1
53வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.2
54பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.3
55இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர் வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.4
56பழியிலான் புகழுடையன் பால்நீற்றான் ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல மூன்றுளவே என்கின் றாளாற்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.5
57பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலோ டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.6
58முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும் இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும் இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.7
59ஓரோத மோதி உலகம் பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன் சடையானே என்கின் றாளாற்
பாரோத மேனிப் பவளம் அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.8
60வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கோதை திளைக்குந் திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.9
61அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ் அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க் கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணநாதர், தேவியார் – வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 07 திருஏகம்பம் 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

62கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.1
63தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.2
64கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
4.7.3
65அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.
4.7.4
66ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.5
67தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.6
68நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.7
69விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.8
70ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.
4.7.9
71அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.
4.7.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஏகாம்பரநாதர்,
தேவியார் – காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 08 சிவனெனுமோசை 

பண் – பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

72சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
4.8.1
73விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந்
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே.
4.8.2
74தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர் கரிகாடர் காலோர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய மழுவீசி வேழவுரி போர்த்
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும் இதுதா னிவர்க்கோ ரியல்பே.
4.8.3
75வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி வடிதோலும் நூலும் வளரக்
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய லவள்தோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.
4.8.4
76உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை கடவா தமர ருலகே.
4.8.5
77கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம் அவர்வண்ண வண்ணம் அழலே.
4.8.6
78நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு மிதுபோலும் ஈச ரியல்பே.
4.8.7
79ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக எழில்வேத மோது மவரே.
4.8.8
80மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த அழல்நஞ்ச முண்ட வவரே.
4.8.9
81புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர் குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம் எழில்வண்ண வண்ண மியல்பே.
4.8.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 9 திருஅங்கமாலை 

பண் – சாதாரி 
திருச்சிற்றம்பலம்

82தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்தலையே நீவணங்காய்.
4.9.1
83கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்கண்காள் காண்மின்களோ.
4.9.2
84செவிகாள் கேண்மின்களோ – சிவன்எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ.
4.9.3
85மூக்கே நீமுரலாய் – முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீமுரலாய்.
4.9.4
86வாயே வாழ்த்துகண்டாய் – மதயானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னைவாயே வாழ்த்துகண்டாய்.
4.9.5
87நெஞ்சே நீநினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனைநெஞ்சே நீநினையாய்.
4.9.6
88கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்கைகள் கூப்பித்தொழீர்.
4.9.7
89ஆக்கை யாற்பயனென் – அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் வாக்கை யாற்பயனென்.
4.9.8
90கால்க ளாற்பயனென் – கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.
4.9.9
91உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்குற்றார் ஆருளரோ.
4.9.10
92இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கிறுமாந் திருப்பன்கொலோ.
4.9.11
93தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
4.9.12


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 10 திருக்கெடிலவாணர் 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

94முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.
4.10.1
95ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே.
4.10.2
96விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.
4.10.3
97விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே.
4.10.4
98குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே.
4.10.5
99அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.
4.10.6
100கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.
4.10.7
101கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
4.10.8
102வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.
4.10.9
103பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.
4.10.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 11 நமச்சிவாயப்பதிகம் 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

104சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
4.11.1
105பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.2
106விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
4.11.3
107இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4.11.4
108வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.5
109சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
4.11.6
110வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
4.11.7
111இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
4.11.8
112முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
4.11.9
113மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
4.11.10


இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 12 திருப்பழனம் 

பண் – பழந்தக்கராகம் 
திருச்சிற்றம்பலம்

114சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
4.12.1
115கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.
4.12.2
116*மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. 
* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
4.12.3
117புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.
4.12.4
118மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.
4.12.5
119பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.
4.12.6
120துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.
4.12.7
121*கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே. 

*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் 
பொருந்திய முத்துக்கள் – அவையாவன – 
யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், 
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள 
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு 
முத்துக்களாம்.
** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து 
எனக்கொள்க. அவை – சங்கு, இப்பி, மீன், தாமரைமலர் 
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை 
“சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த” எனத் 
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 
2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.
4.12.8
122புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.
4.12.9
123வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
4.12.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.13 திருவையாறு 

பண் – பழந்தக்கராகம் 
திருச்சிற்றம்பலம்

124விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.1
125செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.2
126நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.3
127ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.4
128சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.5
129நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.6
130கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 
* அருத்தனாயென்பதற்கு – உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது.
4.13.7
131மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.8
132முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.9
133கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.14 தசபுராணம் 

பண் – பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம்

134பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவா னெழுந்த விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவனண்டர் அண்ட ரரசே.
4.14.1
135நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட நிலநின்று தம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை யிருபாலு நின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.
4.14.2
136காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு குறளாயோ ராலின் இலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.
4.14.3
137நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ டுலகேழு மெங்கு நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம் அவையா நமக்கோர் சரணே.
4.14.4
138நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத்தன் அருளாற்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள லவனா நமக்கோர் சரணே.
4.14.5
139நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும் அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த உயிர்வவ்வு பாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர் தொழுதோது சூடு கழலே.
4.14.6
140உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி கமியென் றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை கழல்கண்டு கொள்கை சரணே.
4.14.7
141நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் அவனா நமக்கோர் சரணே.
4.14.8
142கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் எரியென் றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே.
4.14.9
143தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த அவனா நமக்கோர் சரணே.
4.14.10
144கடுகிய தேர்செலாது கயிலாய மீது கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் நினைவுற்ற தென்றன் மனனே.
4.14.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.15 பாவநாசத்திருப்பதிகம் 

பண் – பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம்

145பற்றற் றார்சேற் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
*வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே. 

* வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.
4.15.1
146ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
4.15.2
147மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
4.15.3
148புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
*உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத் 
தரிமான் ஏற்றை அடைந்தேனே. 

* உறந்தையென்பது உறையூர்.
4.15.4
149கோலக் காவிற் குருமணியைக் *குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே. 

*குடமூக்கென்பது கும்பகோணம்.
4.15.5
150மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
4.15.6
151எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
4.15.7
152மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
4.15.8
153சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
4.15.9
154புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே *மாத்தூர் மேய மருந்தையே. 

* மாத்தூரென்பது – திருவாமாத்தூர்.
4.15.10
155முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.
4.15.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4. 16 திருப்புகலூர் 

பண் – இந்தளம் 
திருச்சிற்றம்பலம்

156செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.1
157மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.2
158பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.3
159அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.4
160ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.5
161தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.6
162உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.7
163கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.8
164ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.9
165கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அக்கினீசுவரர்,
தேவியார் – கருந்தார்குழலியம்மை.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.17 திருவாரூர் – அரநெறி 

பண் – இந்தளம் 
திருச்சிற்றம்பலம்

166எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.
4.17.1
167வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே.
4.17.2
168தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.
4.17.3
169விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.4
170துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
4.17.5
171கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
தாடர வத்தர் அரநெறி யாரே.
4.17.6
172கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே.
4.17.7
173பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.
4.17.8
174முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.
4.17.9
175பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.10
176பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வன்மீகநாதர், தேவியார் – அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம் 

பண் – இந்தளம் 
திருச்சிற்றம்பலம்

177ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
4.18.1
178இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.
4.18.2
179மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.
4.18.3
180நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.
4.18.4
181அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.
4.18.5
182ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
4.18.6
183ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.
4.18.7
184எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.
4.18.8
185ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.
4.18.9
186பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
4.18.10


இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.19 திருவாரூர் 

பண் – சீகாமரம் 
திருச்சிற்றம்பலம்

187சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
4.19.1
188பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.
4.19.2
189சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
4.19.3
190ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.
4.19.4
191தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.
4.19.5
192எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.
4.19.6
193போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
4.19.7
194வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
4.19.8
195காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
4.19.9
196தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
4.19.10
197மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
4.19.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.20 திருவாரூர் 

பண் – சீகாமரம் 
திருச்சிற்றம்பலம்

198காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
4.20.1
199கடம்படந்நட மாடினாய்களை கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந் தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி அணியாரூ ரம்மானே.
4.20.2
200அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.
4.20.3
201பூங்கழல்தொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன் என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிப வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந் திருவாரூ ரம்மானே.
4.20.4
202நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய் அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் திருவாரூ ரம்மானே.
4.20.5
203அளித்துவந்தடி கைதொழுமவர் மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத் திருவாரூ ரம்மானே.
4.20.6
204திரியுமூவெயில் தீயெழச்சிலை வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி யணியாரூ ரம்மானே.
4.20.7
205பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய் ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூ ரம்மானே.
4.20.8
206முளைத்தவெண்பிறை மொய்சடையுடை யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன் வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித் திருவாரூ ரம்மானே.
4.20.9
207நாடினார்கம லம்மலரய னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூ ரம்மானே.
4.20.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் 

பண் – குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம்

208முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.1
209நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.2
210வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள் 
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.3
211குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.4
212நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.5
213விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.6
214செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.7
215முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.8
216துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.9
217பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.22 கோயில் – திருநேரிசை 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

218செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடைச் சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
4.22.1
219ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே.
4.22.2
220சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில் உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
4.22.3
221பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே.
4.22.4
222ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே.
4.22.5
223ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே.
4.22.6
224முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகும்
மதத்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே.
4.22.7
225மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
4.22.8
226விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே.
4.22.9
227பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம் நீண்டெரி யாடு மாறே.
4.22.10
228மதியிலா அரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
4.22.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் – சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.23 கோயில் – திருநேரிசை 

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

229பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.
4.23.1
230கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.
4.23.2
231கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.
4.23.3
232சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.
4.23.4
233கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த இறைவநீ யாடு மாறே.
4.23.5
234பார்த்திருந் தடிய னேன்நான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.
4.23.6
235பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தி
வையகந் தன்னில் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநின் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.
4.23.7
236மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான் அடியனேன் வந்த வாறே.
4.23.8
237நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ யாடு மாறே.
4.23.9
238மண்ணுண்ட மால வனும் மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.
4.23.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.24 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை 

239இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொற் காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
4.24.1
240கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க எய்தார் அதிகைவீ ரட்ட னாரே.
4.24.2
241விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தவெண் ணீறு பூசி
உடையுங்கொப் பளித்த நாகம் உள்குவார் உள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரார் அதிகைவீ ரட்ட னாறே.
4.24.3
242கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
4.24.4
243நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதை கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாதம் இமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
4.24.5
244வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி அதிகைவீ ரட்ட னாரே.
4.24.6
245சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பில் நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாறே.
4.24.7
246நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளார் அதிகைவீ ரட்ட னாரே.
4.24.8
247பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்டர் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
அரவுகொப் பளித்த கையர் அதிகைவீ ரட்ட னாரே.
4.24.9
248தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.
4.24.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.25 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை

249வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரர் வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.1
250பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி அதிகைவீ ரட்ட னாரே.
4.25.2
251ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.3
252துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.4
253பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்திஐந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.5
254வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழலாள் துடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.6
255நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.7
256எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே.
4.25.8
257ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத் தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும் நான்முகன் நாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.9
258தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரலான் முருகமர் கோதை பாகத்
தடக்கினார் என்னை யாளும் அதிகைவீ ரட்ட னாரே.
4.25.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.26 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை 

திருச்சிற்றம்பலம்

259நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.1
260பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.2
261நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.3
262தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.4
263அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
4.26.5
264உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.6
265கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.7
266மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.8
267பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன் தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.9
268திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.
4.26.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.27 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை


திருச்சிற்றம்பலம் 

269மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
4.27.1
270சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
4.27.2
271கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
4.27.3
272மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ்
செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடி
பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.
4.27.4
273நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே.
4.27.5
274புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளும் அதிகைவீ ரட்ட னாரே.
4.27.6
275நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்குங்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
4.27.7
276காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலார் ஐவ ரோடும் இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே.
4.27.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.4.27.9
277தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.
4.27.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.28 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

278முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.28.1
279கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலைக் கண்டேன் நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னாரே.
4.28.2
280நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.
4.28.3
281சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.
4.28.4
282மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத் தாரே.
4.28.5
 இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள் 
சிதைந்து போயின.
4.28.6-9
283மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.
4.28.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.29 திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

284ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.1
285நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.2
286வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடுந்
தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.3
287தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.4
288ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங் கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.5
289ஞாலமும் அறிய வேண்டின் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.6
290புரிகாலே நேசஞ் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.7
291காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.8
292ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற் றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.9
293அங்கங்க ளாறு நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ் சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சொர்னபுரீசர், தேவியார் – சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.30 திருக்கழிப்பாலை – திரு நேரிசை 


திருச்சிற்றம்பலம்

294நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.1
295விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.2
296வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.3
297அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.4
298கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.5
299உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.6
300ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே
4.30.7
301கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.8
302சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக் கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.9
303மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினால் ஊன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணவீசுவரர், தேவியார் – பொற்பதவேதநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.31 திருக்கடவூர் வீரட்டம்– திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

304பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.1
305மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க் கென்றுங்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.2
306பொருத்திய குரம்பை தன்னுட் பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீர் உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.3
307பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.4
308தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.5
309பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.6
310மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன் நீதனே நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.7
311பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளேன் என்செய் கேன்நான் இடும்பையால் ஞான மேதுங்
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.8
312சேலின்நேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய் யோடு பலபல ஆட்டி யென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.9
313முந்துரு இருவ ரோடு மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர் இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகடேசுவரர், தேவியார் – அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.32 திருப்பயற்றூர் – திரு நேரிசை 


திருச்சிற்றம்பலம்

314உரித்திட்டார் ஆனை யின்றோள் உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்திருப்பயற் றூர னாரே.
4.32.1
315உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
4.32.2
316நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.
4.32.3
317பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
4.32.4
318மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந் திருப்பயற் றூர னாரே.
4.32.5
319ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.
4.32.6
320ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
4.32.7
321தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென் றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.
4.32.8
322புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.
4.32.9
323மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.
4.32.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருப்பயத்தீசுவரர்,
தேவியார் – காவியங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.33 திருமறைக்காடு – திரு நேரிசை


திருச்சிற்றம்பலம்

324இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும் மாமறைக் காட னாரே.
4.33.1
325தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும்
பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலும் மாமறைக் காட னாரே.
4.33.2
326அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார் மாமறைக் காட னாரே.
4.33.3
327கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
4.33.4
328விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காட னாரே.
4.33.5
329அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
4.33.6
330கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி இட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
4.33.7
331கனத்தினார் வலி யுடைய கடிமதில் அரணம் மூன்றுஞ்
சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலுந்
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே.
4.33.8
332தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை என்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காட னாரே.
4.33.9
333பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.
4.33.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதாரணியேசுவரர்,
தேவியார் – யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.34 திருமறைக்காடு – திரு நேரிசை 


திருச்சிற்றம்பலம்

334தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே.
4.33.1
335முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே.
4.33.2
336மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.
4.33.3
337அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.
4.33.4
338தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே.
4.33.5
339நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.
4.33.6
340பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே.
4.33.7
341பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே.
4.33.8
342நாணஞ்சு கைய னாகி நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே.
4.33.9
343கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே.
4.33.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.35 திருவிடைமருது – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

344காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி இடைமரு திடங்கொண் டாரே.
4.34.1
345முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார் இடைமரு திடங் கொண்டாரே.
4.34.2
346காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கும் இடைமரு திடங் கொண்டாரே.
4.34.3
347விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமரு திடங் கொண்டாரே.
4.34.4
348வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமரு திடங் கொண்டாரே.
4.34.5
349பொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி இடைமரு திடங் கொண்டாரே.
4.34.6
350படரொளி சடையி னுள்ளாற் பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார் இடைமரு திடங் கொண்டாரே.
4.34.7
351கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமரு திடங் கொண்டாரே.
4.34.8
352பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த இடைமரு திடங் கொண்டாரே.
4.34.9
353மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித் திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி இடைமரு திடங் கொண்டாரே.
4.34.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.36 திருப்பழனம் – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

354ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாலைக்
கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.
4.35.1
355போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார் குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
4.35.2
356கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.
4.35.3
357நீரவன் தீயி னோடு நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார் பழனத்தெம் பரம னாரே.
4.35.4
358ஊழியா ரூழி தோறும் உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.
4.35.5
359ஆலின்கீழ் அறங்க ளெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.
4.35.6
360ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ் சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.
4.35.7
361காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.
4.35.8
362கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.
4.35.9
363குடையுடை அரக்கன் சென்று குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.
4.35.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.37 திருநெய்த்தானம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

364காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
4.37.1
365காமனை யன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.
4.37.2
366பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.
4.37.3
367வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப ஆடுமெம் அண்ண லாரே.
4.37.4
368காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார் அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.
4.37.5
369வானவர் வணங்கி யேத்தி வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும் சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.
4.37.6
370காலதிற் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.
4.37.7
371பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.
4.37.8
372சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார் யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.
4.37.9
373இலையுடைப் படைகை யேந்தும் இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும் நின்றநெய்த் தான னாரே.
4.37.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெய்யாடியப்பர், தேவியார் – பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.38 திருவையாறு – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

374கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.1
375பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.2
376உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.3
377தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னாரே.
4.38.4
378வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.5
379சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.6
380பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.7
381ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.8
382பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.9
383இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
4.38.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.39 திருவையாறு – திருநேரிசை

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

384குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ் சொல்லிநான் திரிகின் றேனே.
4.39.1
385பீலிகை இடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த வாறே.
4.39.2
386தட்டிடு சமண ரோடே தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே உம்மைநான் உகந்திட் டேனே.
4.39.3
387பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.
4.39.4
388கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே அருந்தவஞ் செய்த வாறே.
4.39.5
389துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும் உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.
4.39.6
390பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம் நினைந்தபோ தினிய வாறே.
4.39.7
391மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.
4.39.8
392குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.
4.39.9
393அறிவிலா அரக்க னோடி அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான் திருவையா றமர்ந்த தேனே.
4.39.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.40 திருவையாறு – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

394தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே.
4.40.1
395ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை ஐயனை யாற னார்க்கே.
4.40.2
396நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந் துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும் ஐயனை யாற னார்க்கே.
4.40.3
397தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னார்க்கே.
4.40.4
398எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே.
4.40.5
399என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை ஐயனை யாற னார்க்கே.
4.406
400கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை ஐயனை யாற னார்க்கே.
4.40.7
401சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே.
4.40.8
402உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார் ஐயனை யாற னார்க்கே.
4.40.9
403மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும் ஐயனை யாற னார்க்கே.
4.40.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.41 திருச்சோற்றுத்துறை – திருநேரிசை

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

404பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.1
405கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.2
406கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே ஏகாந்த மாக ஏத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.3
407கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.
4.41.4
408பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.5
409பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த அலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.6
410கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.7
411அங்கதி ரோன வனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன் வழியே போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குஞ் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.8
412ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் றன்னை
நீதியால் நினைக்க மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.9
413மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டிற்
பெற்றதோர் உபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலைஎ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தொலையாச்செல்வர், தேவியார் – ஒப்பிலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.42 திருத்துருத்தி – திருநேரிசை 

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

414பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.1
415சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும் அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.2
416உன்னியெப் போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.3
417ஊன்றலை வலிய னாகி உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.4
418உடல்தனைக் கழிக்க லுற்ற உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.5
419அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.6
420பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.7
421சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்டா வாறே.
4.42.8
422குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.
4.42.9
423பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால் ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
4.42.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதேசுவரர்,
தேவியார் – முகிழாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.43 திருக்கச்சிமேற்றளி – திருநேரிசை 

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

424மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே.
4.43.1
425மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை இலங்குமேற் றளிய னாரே.
4.43.2
426விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே.
4.43.3
427சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.
4.43.4
428ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டார் இலங்குமேற் றளிய னாரே.
4.43.5
429மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.
4.43.6
430மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.
4.43.7
431செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
4.43.8
432வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறிய லாக வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை இலங்குமேற் றளிய னாரே.
4.43.9
433தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
4.43.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமேற்றளிநாதர், தேவியார் – திருமேற்றளிநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.44 திருஏகம்பம் – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

434நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட் செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.
4.44.1
435ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே.
4.44.2
436மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.
4.44.3
437பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.
4.44.4
438மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.
4.44.5
439தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே.
4.44.6
440கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.
4.44.7
441படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்ந்த வாறே.
4.44.8
442பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார் இனியர்ஏ கம்ப னாரே.
4.44.9
443துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.
4.44.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.45 திருவொற்றியூர் – திருநேரிசை 

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்

444வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.1
445வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்த வத்தால் ஆன்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.2
446தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.3
447காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையி ராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள் ஒளிய தாகும் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.4
448சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த இனிதினங் கிருந்த ஈசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலும் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.5
449ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டான் உலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.6
450பிணமுடை உடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளால் நினைக்குமா நினைக்கின் றார்க்கு
உணர்வினோ டிருப்பர் போலும் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.7
451பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ளத் துள்ளார் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.8
452முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்று
உள்குவார் உள்ளத் துள்ளார் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.9
453வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக் குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தேர் உடையானை அடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தார் ஒற்றியூ ருடைய கோவே.
4.45.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாணிக்கத்தியாகர், தேவியார் – வடிவுடையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.46 திருவொற்றியூர் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

454ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.
4.46.1
455மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே.
4.46.2
 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.4.46.3-10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.47 திருக்கயிலாயம் – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

456கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.1
457கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும் அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.2
458கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.3
459கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.4
460கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.5
461களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும் நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.6
462கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.7
463கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.8
464கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும் ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.9
465கற்றனன் கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.10


இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கைலாயநாதர், தேவியார் – பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.48 திருஆப்பாடி – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

466கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி மன்னும்ஆப் பாடி யாரே.
4.48.1
467ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே.
4.48.2
468எண்ணுடை இருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்க னாகிக்
கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப் பேணும்ஆப் பாடி யாரே.
4.48.3
469அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர்ஆப் பாடி யாரே.
4.48.4
470சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத அடிகள்ஆப் பாடி யாரே.
4.48.5
471வன்னிவா ளரவு மத்தம் மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்தஆப் பாடி யாரே.
4.48.6
472உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தஆப் பாடி யாரே.
4.48.7
473மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித்
தியக்கமாய் ஒருக்க மாகிச் சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி எண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய ஐவர்ஆப் பாடி யாரே.
4.48.8
474ஆரழல் உருவ மாகி அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானைப் பிரமனும் மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார் பேணும்ஆப் பாடி யாரே.
4.48.9
475திண்டிறல் அரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிறல் இலனு மாகி எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட்டு கந்த பரமர்ஆப் பாடி யாரே.
4.48.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பாலுவந்தநாயகர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.49 திருக்குறுக்கை – திருநேரிசை 

476ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.1
477நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.2
478தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.3
479சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.4
480ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.5
481கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.6
482காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.7
483நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.8
484அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.9
485எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டேசுவரர், தேவியார் – ஞானாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.50 திருக்குறுக்கை – திருநேரிசை

486நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.50.1
487ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன் சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
4.50.2
 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.4.50.3-10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்.

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.