சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

சைவ சமயத்தின் தொன்மை

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம், பௌத்தம், இஸ்லாம், கிறீஸ்தவம் என்பன. இவற்றுள், பௌத்த சமயம் 2518 வருடங்களுக்கு முன் கௌதம புத்தராலும், இஸ்லாம் சமயம் 1894 வருடங்களுக்கு முன் முகமது நபியாலும், கிறிஸ்தவ சமயம் 1975 வருடங்களுக்கு முன் கிறிஸ்துவினாலும் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு ஒருவராலே தோற்றுவிக்கப்பட்ட சமயத்துக்கு மாத்திரம் தொடக்ககாலம் கூறலாம். சைவ சமயத்துக்குத் தொடக்க காலம் கூறுவதானால், அது யாரோ ஒருவரால் ஏதோ ஒரு காலத்திலே தோற்றுவிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்ஙனம் அது எவராலேனும் எக்காலத்திலேனும் தோற்றுவிக்கப்படாமையால், அதற்குத் தொடக்ககாலம் இல்லையாம். சிவபெருமான் என்றும் உள்ளவர், உயிர்களும் என்றும் உள்ளவை, என்றும் உள்ள சிவபெருமானை என்றும் உள்ள உயிர்கள் அடைந்து, பேரின்பம் அநுபவிப்பதற்கான வழியும் என்றும் உள்ளது. அந்த வழி சமயம். அதுதான் சிவ சமயம் – சிவத்தை அடைவிக்கும் சமயம் சைவ சமயம். ஆதலால் சைவ சமயம்என்றும் உள்ளது அநாதியானது எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பது தெளிவாம்.

சிவபெருமான் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுச் செய்தருளும் சர்வசங்காரத்தில் எல்லாத் தநு, கரண, புவன, போகங்களும் அழியும் மாயையிலே ஒடுங்கும். உயிர்கள் இளைப்பாறிய பின், ஆணவ மல நீக்கத்தின் பொருட்டுச் சிவனருளால் அவை மீளவும் தோன்றும். இந்தப் புவனமுந் தோன்றும் உயிர்களும் தநு கரணங்கள் பெற்றுத் தோன்றும் அவ்வுயிர்கள் போகங்களை அநுபவிக்கும்போது முன் செய்த தவ விசேடத்தால் நாளடைவிலே அவற்றுக்குச் சமய உணர்வுந் தோன்றும். சர்வ சங்கார காலத்துக்கு முன் இருந்த அந்தச் சைவசமயம் மீளவும் இவ்வாறு தோன்றுதலால், அது இடையிலே வந்தது என்றும், தொடக்கமுடையது என்றேனும் சொல்லுவது பொருந்தாது என்றும் உள்ளதான சைவ சமயத்தை, இன்றுள்ள இப் பூமியிலே தோன்றிய ஆன்மாக்கள் அறிந்தமைக்கும், அதனை அபிவிருத்தி செய்து கொண்டமைக்கும் மாத்திரம் ஒருவாறு கால எல்லை கூறலாம். மக்கள் அறிவு வளர்ச்சியின்றி, உண்டிருந்து, வாழ்வதற்காக வேட்டையாடியும், நாடோடிகளாய் அலைந்து சீவித்த காலத்திலேயும், தமக்கு மேலான ஒரு கடவுள் உண்டென்பதைப் பெரும்பாலும் உணரவில்லை.

காலஞ் செல்லச் செல்ல அவர்கள் ஓரிடத்திலே நிலையாய் இருந்து பயிரிடுதல் முதலான தொழில்களை மேற்கொண்டு, பல நாளுக்கும் போதுமான உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்து வாழத் தலைப்பட்டனர். அப்பொழுது பிற விடயங்கள் பற்றிச் சிந்திப்பதற்கு அவர்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது. அந்தேரத்திலே அவர்கள் தமது முயற்சிகளெல்லாம் தாம் எண்ணியபடி எல்லாக் காலங்களிலும் நடைபெறாமையை நினைந்தும், எதிர்பாராத இன்ப துன்பங்கள் தோன்றுவதை நினைந்தும், நியதி தவறாமலே சந்திர சூரியர் இயங்குதல், மழை பெய்தல், காற்று வீசுதல் முதலியவற்றை நினைந்தும், இயற்கைப் பொருள்களின் அமைப்பு விநோதங்களை நினைந்தும், அவற்றுக்கெல்லாம் மூலகாரணமாய் ஏதோ ஒரு பொருள் இருத்தல் வேண்டும் என்றும் உணர்ந்தார்கள். அந்தப் பொருளே பல இன மக்களாலும் பல பெயரிட்டுக் கூறப்படும் கடவுள் ஆகும்.

இவ்வாறு “கடவுள்” என்றதோர் எண்ணமும், அக்கடவுள் தமக்கு எவ்வகையாலும் நன்மையே செய்யும் சிவம் ஆவர். என்ற தெளிவும் உண்டான காலமே, இப்பூமியிற் சைவ சமயத்தின் தொடக்க காலம் எனலாம் அதன்பின் மக்கள் கடவுளின் செயல்கள் இயல்புகள் பற்றி ஆராய்ந்து, சைவ சமய உண்மைகளை அறிந்து, நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்துச் சைவ வாழ்வு வாழத் தலைப்பட்டனர்.

இம் மக்களுள் ஒரு பகுதியினர் இந்தியாவிலுள்ள இந்துவெளிப் பிரதேசத்திலே மிகப் பழைய காலத்தில் வாழ்ந்தனர் எனவும், அவர்கள் சைவ சமயிகளாயிருந்தனர் எனவும், அப் பிரதேசத்திலுள்ள “மொஹஞ்சதாரோ ஹரப்பா’ என்னுமிடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தோர் கூறுவர்.

சைவ சமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற் தோன்றிய சமயம். இதுவேயாம். புராதன காலத்தில் இச் சமயம் உலகில் பல பகுதிகளிலும் விளங்கியுள்ளது. இதன் தொன்மைக்குப் பழம்பெரும் நூல்கள், வழிபாட்டு முறைகள், வரலாற்றுக் குறிப்புகள், தொல்பொருள்கள், அகழ்வாராய்ச்சிகள் என்பன சான்றாக உள்ளன. சைவம் சிவ சம்பந்தமானது. சிவம்-கடவுள். சமயம்-நெறி.

வேதாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மைக்குச் சான்றாவன. வேதங்களின் காலம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் என வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ் வேதங்களிலும் பழைய வேதங்கள் இருந்தன எனத் தொல்காப்பியப் பாயிர உரையில் நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார். வேதங்களையும், ஆகமங்களையும் சிவபிரான் அருளினார். எனச் சமய நூல்கள் கூறுகின்றன.

சிவபுராணங்கள் உலகத் தோற்றங்களையும், பழைய வரலாறுகளையும் கூறுவன. உலகத் தோற்றம். பற்றி எமது புராணங்கள் கூறும் காலக் கணிப்பும், நிலநூநாலாராய்ச்சியாளரின் காலக் கணிப்பும் ஒன்றோடொன்று ஒத்து இருக்கின்றன. பழைய காலத்தில் மதுரையில் நிகழ்ந்தனவாகத் திருவிளயாடற் புராணம் கூறும் செய்திகள், வரலாற்றினோடு தொடர்புள்ளன. கடல்கொண்ட தென்நிலப்பரப்பில் வாழ்ந்த சூரன் முதலியோரும், ஏனைய பகுதிகளில் வாழ்ந் தோரும் சிவ வழிபாட்டினார் எனக் கந்தபுராணம் கூறும்.

இராவணனும், வாலியும் நாள்தோறும் சிவ வழிபாடு செய்தனர் எனவும், இராவணனைக் கொன்றபின் இராமர் சிவவழிபாடு செய்தார் எனவும், பழைய இதிகாசமாகய இராமாயணம் கூறுகின்றது. இவர்கள் வழிபட்ட தலங்கள் முறையே திருக்கோணேசுவரம், குரங்காடுதுறை, திருஇராமேச்சுரம் என்பனவாகும். அருச்சுனன் தலயாத்திரை செய்து சிவ வழிபாடு செய்ததையும், அவன் தவமிருந்து சிவபிரானிடம் பாசுபதம் என்னும் படைக்கலத்தைப் பெற்றதையும், கண்ணனோடு திருக்கைலை சென்று வழிபட்டதையும் இன்னோர் இதிகாசமான பாரதம் கூறுகிறது. (இராமாயண பாரத காலங்கள் முறையே கி. மு. 3000, கி.மு. 1500 என ஆராய்ச்சி ஆறிஞர் கூறுவர்).

பண்டைய சித்தர்களும், முனிவர்களும் சிவ வழிபாட்டினராவர், ஆதிசோழ அரசனான முசுகுந்தன் பல இடங்களில் சிவலிங்கங்களைத் தாபித்தான் என வரலாறு கூறுகிறது. இருக்கைலை, காச, காளத்தி, காஞ்சி, சதம்பரம், திருவண்ணாமலை, மதுரை ஆகியவை மிகப் புராதன மான சிவத் தலங்கள் என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பழைய சங்க நூல்களில் சிவனைப் பற்றிக் கூறுஞ் செய்திகள் சைவத்தின் தொன்மைக்குச் சான்றாக இருக்கின்றன. கடல் கொண்ட தென்னாட்டில் இருந்த தலைச்சங்கத்தில் சிவபிரான்-திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் புலவராக இருந்து தமிழாய்ந்தார் எனக் கடைச் சங்க காலத்து இறையனார் களவியலுரை தெரிவிக்கின்றது. சங்ககால மன்னர்களும், மக்களும் சிவ வழிபாட்டினர் எனச் சங்கநூற் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. “முது முதல்வன்”, “ஈர்ஞ்சடை அந்தணன்” காரியுண்டிக் கடவுள்” “ஆலமர் கடவுள்”, நீரும் நிலனும், தீயும் வளியுமாக விசம்பொடு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன், நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகழ்ந்தன முறையே, இமையா முக்கண் மூவெயில் முருகிய முரண்மிசு செல்வன், ஆனேற்றுக் கொடியோன், சூலம் பிடித்த காலக் கடவுள் தொன்றொழுகு மரபில் தம் இயல்பு வழாது அருந்திறற் கடவுள் பழிச்சிய பின்றை, நீல மணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும, பணியியரத்தை நின்குடையே முனிவர் முக்கட் செல்வர் கோயில் நகர் வலஞ் செயற்கே. பிறவாயாக்கைப் பெரியோன், முக்கட் பகவன் அடி தொழார்க்கு இன்னா” எனச் சிவபிரானின் பெயர்களையும் முதன்மையையும் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரும், அவர் பின் வந்த சமய குரவர்களும் சைவத்தின் தொன்மையைத் தெளிவாக்கியுள்ளனர். “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே”, “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என மாணிக்கவாசக சுவாமிகளும், அப்பாலும் அடிசார்ந்தார்.அடியார்க்கும் அடியேன்” எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும், “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்” என அருணந்தி சிவாசாரியாரும், “பல பல மதமு மீற்றி னொருவழிப்படலும் போலும்” என சிவஞான சுவாமிகளும், சைவசமயமே சமயம் எனத் தாயுமானவரும் அருளிய வாக்குக்கள் எமக்குச் சான்று பகர்கின்றன.

கடவுட் திருவுருவங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவைகளின் – அமைப்புகளின்படி சிவ வழிபாடு புதிய கற்காலத்திற்கு முன்பே உருவாகியது என அறிஞர் கூறுவர். பழைய கற்காலத்தில் காடுகளில் வாழ்ந்த மக்கள் இயற்கையின் தாக்கங்களினால் கடவுள் ஒருவர் உளர் என உணர்ந்து, தனிக்கல்லை மரத்தின் கீழ் வைத்து வழிபட்டார்கள். புதிய கற்காலத்தில் இத் தனிக்கல் சதுர பீட அமைப்பைப்பெற்றுச் சிவலிங்கமாகியது. அதே காலத்தில் கல்லிலும் மரத்திலும் திருவுருவம் அமைக்கும் முறை தோன்றியது. இத் திருவுருவத்திற்குச் சூலம் – மழு என்பன ஆயுதங்களாகவும், பாம்பு அணியாகவும், புலி யானை ஆயவற்றின் தோல்கள் உடையாகவும், மரங்கள் தல விருட்சங்களாகவும், காடுகளின் பெயர்களே தலங்களின் பெயர்களாகவும் அமைந்தமை இதற்குத் தக்க சான்றுகளாகும். கடம்பவனம் (மதுரை), இல்லைவனம் (சிதம்பரம்), இருமறைக்காடு, இருவெண்காடு, இருவாலங்காடு என்னும் தலப் பெயர்கள் இதற்குச் சான்றாக உள்ளன. மேலும், சைவ வழிபாடு பல படிகளைக் கொண்டிருப்பதும் அதன் தொன்மைக்குச் சான்றுகும்.

சிந்து வெளியின் அகழ்வாராய்ச்சியின்போது உடைத்த சிவலிங்கங்களும், அதனோடு தொடர்புபட்ட ஏனைய தொல் பொருட்களும், சிவ வழிபாடு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை உலகுக்குத் தெளிவாக்குகின்றன. பரதகண்டத்திற்கு அப்பால் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் உலகன் பல பகுதிகளிலும் சிவ வழிபாடு நிலவிய தென்பதற்குப் போதிய சான்றுகள் பல கிடைத்துள்ளன.

ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் உள்ள ஆதி மக்களின் மொழிகளில் “இலிங்கம்” என்னும் சொல் காணப்படுகிறது. நியூகினியாவில் காணப்படும் கிரியை முறைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் ஆகும். சுமாத்திராவிலும், ஜாவாவிலும், போர்னியோவிலும் பழைய சிவ வழிபாட்டிடங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன் பாலித்தீவில் சிவ வழிபாடும், கோவில்களும் இன்றும் உள்ளன.

சீயத்திலும், கம்போடியாவிலும் பழைய சிவ வழிபாட்டு உருவங்கள் கிடைத்திருக்கின்றன. சீயத்தில் பழைய ஆலயம் இருந்த ஓர் இடத்தில் மத வேறுபாடின்றி இன்றும் பொங்கல் பூசை செய்து வழிபடுகின்றனர்.

“யப்பானிய சன்டோயிசிம்” என்னும் மதத்தில் சிவலிங்க வழிபாடு முதன்மையானது. பிற் காலத்தில் அவை நீக்கப்பட்டாலும், சில இடங்களில் இன்றும் இவை இருக்கின்றன, இவர்கள் குறிப்பிடும் “சிவோ” என்பது சிவனேயாம். திபெத் சீனாவினூடாகவே இவ்வழிபாடு யப்பானுக்குப் பரவியிருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர்.

பாபிலோனில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது, ஆறாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த சிவலிங்கமும் ஆலயத்தின் சிதைவுகளும். கிடைத்தன. இச் சிவ உருவம் மழுவுடனும், இருபுறமும் தலை உள்ள சூலத்துடனும் இடபத்தின்மீது காணப்படுகிறது. இங்கு கண்டெடுத்த களிமண் பட்டயத்தில் “வன்” என்னும் இடப்பெயர் காணப்படுகிறது: இவர்களின் மாதம் ஒன்றிற்கும் “இவன்” எனப் பெயர் கூண்டு. சுமேரியரின். கடவுளுக்கு “எல்” எனப் பெயர். தமிழில் “எல்” என்பது சூரியனைக் குறிக்கின்றது.

சீரியாவில் சிவன் சிலையும், சிவ உருவம் பொறித்த வெண்கலத் தட்டும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவம் பாபிலேஈனியச் சிவ உருவம் போன்றது. பழைய ஏற்பாடுகள் கூறும் வழிபாடுகள் சைவத்துக்கு ஒத்தனவாக உள்ளன. சின்னாசியாவில் சிவன் – சக்தி – கோயில் என்பவைகளின் உருவங்கள் பொறித்த நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.

எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்க உருவங்கள் காணப்படுகின்றன. லிபியப் பாலைவனத்தில் உள்ள பசுந்தரை ஒன்றிற்குப் பெயர் சிவன். இங்கு பழைய ஆலயமும் வழிபாடும் இன்றும் உண்டு. கிறீட்தீவில் “சிவன்” என்னும் இடம் இருக்கிறது. இங்கு சிவன், சக்தி உருவங்களும், இவ்வுருவங்களுள்ள நாணயங்களும், சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. இச் சிவ உருவமும் பாபிலோனியச் சிவ உருவம் போன்றதேயாம். இங்கு சிவ ஆலயங்கள் பண்டை நாட்களில் இருந்திருக்கின்றன. என்பதை மேற்கூறிய விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கிரேக்கு நாட்டில் சிவ வழிபாட்டுத் தொடர்பான கிரியைகள் “விசா” என்னும் இடத்தில் இன்றும் நடைபெற்து வருகின்றது. இவர்கள் சிலிங்கங்களைப் பொது இடத்தில் வைத்து எண்ணெய் இட்டு வழிபட்டனர் என கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான தியோபிரேசியஸ் கூறியுள்ளார்.

உரோம நாட்டிலும் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. உரோமர் சிவலிங்க வழிபாட்டை மேற்கு ஐரோப்பாவில் பரப்பியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர் முதலில் சென்றபோது மெக்சிக்கோ, பெருகெயிற்றி ஆகிய நாடுகளிலுள்ளவர்கள் சிவ வழிபாடு உள்ளவர்களாக இருந்ததைக் கண்டனர். அங்கு பல இடங்களில் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. கலிபோர்னியாவில் கொலரடோர் நதிக்கு அயலில் உள்ள சிவன் என்னும் பழைய பீடபூமியிலுள்ள மலையில், பழைய ஆலயம் இருக்கிறது. இது பத்தாயிரம் ஆண்டுப் பழைமையானது எனத் தொல்பொருளியலார் கூறுகின்றனர். சிவ வழிபாடு பல நாடுகளில் பரவியிருந்தமையைத் தெளிவுபடுத்துவதில் ஆதர் லில்லி, டெயிலர், பல்பூர், கில்பேர்ட், சிலாற்றர், கெலொனல் டொட்வடல், ஸ்ரீபன்சன், கிரையர்சன், முகர்சி ஆகிய அறிஞர்கள் உதவியுள்ளனர். இவ்வாறு பண்டு உலகின் பல நாடுகளிலும் சைவம் பரவியிருந்தமையை இவர்கள் எடுத்துக்காட்டுவதுடன், அதனது தொன்மை பற்றியும் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

சிவன் வழிபாடு மேற்காசியா, கிறீஸ், உரோம் முதலிய நாடுகளில் மிகப் பழைய காலத்தில் பரவியிருந்தது. பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போனமையின், தம் தேசத்துக்கும், மனப்பான்மைக்கும் பொருந்தாத பழங்கதைகளைப் புனைந்து விட்டனர் என அறிஞர் ஆதர் லில்லி கூறுவார்.

சிவலிங்க வணக்கம் உலகில் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. சீனா, யப்பான், பசுபிக் கடற் தீவுகள் முதலிய இடங்களில் இவ் வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை என, முகர்சி என்பவர் கூறுகின்றார்.

இங்கு நாம் அறிந்தவற்றால் சைவ சமயம் எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பதும், அது சிவபெருமானைப் போல அனாதியானது என்பதும், சர்வசங்கார காலத்தின் பின் உலகம் மீளப் படைக்கப்படும்போது ஆன்மாக்களது அறிவிலே இறைவனருளால் அது தோன்றுமென்பதும், அவ்வாறு தோன்றிய சைவ சமய உணர்வையே இந்து வெளிப் பழங்குடி. மக்களும், சங்ககால மக்களும் பெற்றிருந்தார்களென்பதும், அவர்கள் சிவபெருமானின் அருள் மூர்த்தங்கள் பலவற்றை வழிபட்டார்களென்பதும் தெளிவாம்.

குறிப்பு : “இந்து மதம்” என்ற சொல் இன்று இந்திய நாட்டிலுள்ள வெவ்வேறு கடவுட் கொள்கைகளையுடைய சைவம், வைணவம். சாக்தம் முதலிய பல பிரிவுகளையும் சேர்த்துக் கூறும் பொதுச் சொல்லே தவிர, தனியான ஒரு சமயத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்பது இங்கு, விளங்கக்கொள்ளவேண்டிய விடயமாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.