சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்

   

ஈழத் திருநாட்டில் தொன்மையும் மகிமையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. வடக்கே கீரிமலை–நகுலேசர் ஆலயம், கிழக்கே கன்னியா–கோணேசர் ஆலயம், தெற்கே மாணிக்க கங்கை–கதிரைவெற்பு, மேற்கே பாலாவி–திருக்கேதீச்சரநாதர் கோவில் போன்ற ஐம்பெரும் தலங்கள் ஈழத்தை இயற்கையான அரணாக பாதுகாக்கின்றன. காலத்தால் முற்பட்ட இத்தலங்கள் அனைத்தும் இலங்கையின் பாதுகாப்பு “ஐம்படை வீடுகள்” எனப் போற்றப்படுகின்றன.

குமரிக்கண்டத்தின் ஒரு கூறே ஈழமாக இருந்ததாகப் பல அறிஞர்கள் கூறுவர். கடலால் விழுங்கப்படாமல் சிறுதீவாக இப்பகுதியின் தலங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டுமென இறைவன் அருள்புரிந்ததாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு சிறப்பு பெற்ற தீர்த்தங்களில் ஒன்றின் அருகே எழுந்த திருத்தலமே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்.

இடவமைப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைச் செல்லும் நெடுஞ்சாலையில் 10ஆம் கல்தொலையில் அமைந்துள்ளது. தெல்லிப்பழை, மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகியவை எல்லைகளாகும். ரயில், பேருந்து வசதிகள் உண்டு. அருகில் பலாலி விமானத் திடலும், வடக்கே காங்கேசன்துறையும், மேற்கே கீரிமலைத் தீர்த்தமும் அமைந்துள்ளன.

சிவாகமச் சிற்ப முறையில் அமைந்த கோவில்கள்

ஈழத்தில் முருகன் கோவில்கள் இரண்டு வகை—

  1. சிவாகமச் சிற்ப நூல் முறையில் அமைந்தவை – மாவிட்டபுரம், கந்தவனக்கடவை, இணுவில், நீர்வேலி, அநுராதபுரம்.

  2. மடாலய வகை ஆலயங்கள் – கதிர்காமம், மண்டூர், வெருகல், செல்வச்சந்நிதி, நல்லூர்.

இதனுள் மாவிட்டபுரம் சரித்திரப் பெருமைகொண்டது; பல குடும்பங்களின் குலதெய்வமாகவும் உயர்ந்த தலமாகவும் உள்ளது.

மாருதப்புரவிகவல்லியின் கதையும், தலப்பெயர் தோற்றமும்

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் உக்ரசோழன் எனும் அரசுக்கு மாருதப்புரவிகவல்லி என்ற மகள் பிறந்தார்; அவள் குதிரை முகம் கொண்டவள். சந்நியாசி சாந்தலிங்கரின் அறிவுரையின்படி கீரிமலைக்குச் சென்று நகுல முனிவரிடம் உபதேசம் பெற்று அங்குள்ள நன்னீரூற்று–கடல் கலந்த புனித நீரில் தினமும் நீராடினாள். இறைவன் அருளால் அவளது குதிரை முகம் நீங்கி அழகிய வடிவம் பெற்றாள்.

அவள் நீராடிய இடம் “குமாரத்திப்பள்ளம்”, வழிபட்ட கோயில் “கதிரையாண்டவர் கோவில்”. குதிரை (மா) முகம் விட்டு (விட்ட) நீங்கிய இடம் (புரம்) என்பதால் இந்தத் தலம் மாவிட்டபுரம் எனப்பட்டது.

மற்றொரு கருத்துப்படி, அவளுடன் வந்த தளபதி “மகாவிட்டன்” என்பதன் பெயரே மருவி மாவிட்டபுரம் என அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

முருகப்பெருமானின் தொடர்பு

சூரசங்காரத்திற்குப் பிறகு முருகப்பெருமான் இத்தலத்தில் தங்கியதாகவும் ஒரு ஐதீகம் உண்டு. “மா” என்பது சூரன் மாமர வடிவம், “விட்ட” – அது களைந்தது, “புரம்” – இடம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. தலவிருட்சமாய் மாமரம் இருப்பதும் இதற்கு சான்று.

கோவில் வளர்ச்சி, அரசர்கள் மற்றும் புனரமைப்பு

மாருதப்புரவிகவல்லியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கதிரை ஆண்டவர் கோவிலை அவள் கட்டியதாகவும், உக்ரசோழன் தேவையான பொருட்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது.

உக்கிரசிங்கன் என்ற இளவரசன் அவளை மணந்தபின்னர் தன் அரசிருக்கையான கதிரைமலையை நெல்வயல்களாக மாற்றி, அவற்றை கந்தசுவாமி கோவிலின் நித்திய பூசைக்குப் பரமாக விட்டார். அப்பெயர் “கதிரைமலை” → “கந்தரோடை” என மருவியது.

போர்த்துக்கேய காலத்தில் கோவில் முற்றிலும் அழிக்கப்பட்டது. திருவுருக்கள் கிணற்றில் மறைத்து காப்பாற்றப்பட்டன. 1782ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சி இறுதியில் சிவஸ்ரீ சபாபதி ஐயர் அவர்கள் கோவிலைப் புனர்திர்மாணம் செய்தார். பின்னர் மரபு வழி அறங்காவலர்களும் பக்தர்களும் பல பராமரிப்புகள் செய்து பெரு வளக் கோவிலாக மாற்றினர்.

 

முக்கிய மூர்த்திகள்

முருகப்பெருமான் வள்ளி–தெய்வயானையுடன், விநாயகர், நடேசர், சந்திரசேகரர், ஆறுமுகர், முத்துக்குமாரசுவாமி, சுப்பிரமணியர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, வைரவர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள், சண்டேசுரர்.

ராஜகோபுரம்

மேற்கே உயர்ந்து நிற்கும் ராஜகோபுரம் கோயிலின் வரலாற்றை மெய்ப்பிக்கும் சிறப்புப் படைப்பாகும். இதனை அமைக்க இரங்கூன் பண்டாரம் நாகலிங்க தேசிகர் பெரும் உதவி செய்தார். பரிபாலனத்திற்கென நாகலிங்கேசுவர மட நிர்வாக அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

மகோற்சவம்

ஆனி உத்திரத்தில் கொடியேற்றம்; 25 நாள் திருவிழா; ஆடி அமாவாசையில் தீர்த்தம்.
சப்பரம், பட்டுக் குடை, வேட்டைப் பெருவிழா, ஆறுமுகர் திருநடனத் திருவிழா – அனைத்தும் பிரபலமானவை.

தேரில் வரும் பஞ்சமூர்த்திகள்—விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர், ஆறுமுகர், சண்டேசுரர்.

ஆடி அமாவாசை அன்று நடைபெறும் பன்னீராட்டு மிகப்பெரும் திருவிழா.

ஆதி சைவ மரபில் வந்த அர்ச்சகர்களே கோயில் பரிபாலன உரிமையுடையவர்கள். கோயிலுக்கு மூன்று சுற்றுவீதிகளும், பல மடங்களும், நந்தவனமும் உள்ளன.

தலவிருட்சம் – மா மரம்
தீர்த்தம் – கீரிமலைக் கடல்
நட்சத்திரம் – சுவாதி

மாவைக்கந்தன் மீது செஞ்சொற்பாமாலை பாடியோர்
பெயர் விவரம்:

பாடியவர் பாடல் பெயர்
1.முத்துக்குமார கவிராயர் மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்
2.இருபாலை சேனாதிகவிராயர் மாவைப்பதிகம், மாவைக ஊஞ்சல்
3.சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் மாவைப் பதிகம், மாவை இரட்டை மணி மாலை, மாவைக் கலி வெண்பா
4.வறுத்தலைவிளான் க.மயில்வாகனப் புலவர் மாவைப் பதிகம், மாவைக் கந்தரகவல், மாவை கந்தர் சிங்காரம்
5.க. சரவணமுத்துப் புலவர் மாவைப் பதிகம், மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் மாவை ஊஞ்சல் பாக்கள்
6.ம. சரவணமுத்துப் புலவர் மாவை ஊஞ்சற் பாக்கள்
7.வே. அப்பாக்குட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி பேரில் பதிகம்
8.பூநகரி முருகேசர் கனகசபை போற்றித் திருவகவல், மாவைப் பதிகம்
9.கரணவாய் தி.செவ்வந்திநாத தேசிகர் மாவை மும்மணிமாலை
10.சபாபதி நாவலர் மாவை அந்தாதி
11.தா.மூ.பூ. பொன்னம்பலபிள்ளை மாவை யமகவந்தாதி, மாவை திருவிரட்டை மணிமாலை ஆறெழுத்துப்பத்து
12.மாவை குமாரசுவாமிக் குருக்கள் மாவை புராணம், மாவைப் பதிகம்
13.பொ.சபாபதிப்பிள்ளை மாவிட்டபுரம் தோத்திரப் பாமாலை
14.க. சச்சிதானந்தம் மாவை முருகன்
15.நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் மாவை நகர முருகவேள் பதிகம்
16.ஆசுகவி வயாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை மாவை தோத்திர விருத்தம், மாவை கந்தரஞ்சலி
17.மயிலிட்டி சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் மாவைக் கீர்த்தினைகள், மாவைப் பதிகம்
18.மகாவித்துவான் சிவஸ்ரீ சி. கணேசையர் மாவை சுப்பிரமணியர் தோத்திர விருத்தம்
19.ந. சிவப்பிரகாசன் மாவை முருகன் கீர்த்தனைகள்
20.அருட்கவி சீ. விநாசித்தம்பி மாவிட்டபுரம் தண்டபாணிக் கந்தன் திருப்பதிகமும், தோத்திரப் பாமாலையும்
21ஏழாலை பண்டிதர் மு. கந்தையா மாபை பிள்ளைத் தமிழ்
22.விசுவாத சாத்திரியார் மாவைக் குறவஞ்சி
23.இ.சி.கந்தையா ஆச்சாரி மாவைக் கந்தர் தோத்திரமாலை

மாவைக்கந்தன் வரலாறு கூறும் நூல்கள்.

ஆசிரியர் பெயர் நூற் பெயர்
1.முத்துராச கவிராயர் கைலாயமாலை
2. — வையா பாடல், ஈழமண்டல சதகம்
3.திருமலை மாசிலாமணி முத்துக்கமாருப்
புலவர்
திருக்கோணாசல புராணம்
4.நா. கதிரைவேற்பிள்ளை சுப்பிரமணிய பராக்கிரமம்
5.மாதகல் ஏரம்பையர் நகுலாசர புராணம்
6.கா. அப்பாசாமி ஐயர் நகுலகிரப் புராணம்
7.மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை
8.வட்டுக்கோட்டை விசுவநாத சாத்திரியார் நகுலமலைக் குறவஞ்சி
9.கல்லடி வேலுப்பிள்ளை யாழ்ப்பாண வைபவ கௌமுதி
10.செ. இராசநாயக முதலியார் யாழ்ப்பாணச் சரித்திரம்
11.ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச சரித்திரம்
12.வண. ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
13.எஸ்.டபிள்யு. குமாரசுவாமி இடப்பெயர்ச்சி ஆராய்ச்சி
14.கா. மதியாபரணம் யாழ்ப்பாண பூர்விக வைபவம்

திக்குத் திசைகெட்டு, இடத்துக்கிடங்கிடந்த மேற்கூறிய புலவோர் பாடல்களையும், வரலாற்ற நூல்களையும், ஏனைய குறிப்புக்களையும் அரிதில் முயன்று தேடி எடுத்து “மாவை முருகன் கவிப் பூங்கொத்து” என்ற பெயரில் தொகுப்பு நூல் ஒன்றை 1977இல் பதிப்பித்துள்ளார் இளவாலை மயிலங்கூடல் வாழ் சைவப்புலவர் 
சி. அப்புத்துரை, இந்நூலுக்கு அரும்பதக் குறிப்புக்கசோடமைந்த உரையொன்று செய்யப்பெறின் இவ்வாலயத்தினதும் நூலினதும் சிறப்புக்கள் மேலும் பெருமை பெற்றோங்கும் என்பதுறுதி.

குறிப்பு :
மாவிட்டபுரம் முருகப்பெருமான் வேட்டைத் திருவிழா நாளன்று திருவுலா வருங் காட்சியை, நாமாந்தரிகை என்னும் பிரகேளிகை வகையமைத்து, உடுவிற்பதி வாழ்ந்த முத்துக்குமார கவிராயர் அவர்களினால் பாடப்பட்ட பாடல்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுதல் சாலப் பொருத்தமானதேயாம்.

“பிரகேளிகை” ஆவது சொல்லக் கருதிய பொருளை ஆழ்ந்து இடக்குமாறு மறைத்து, வெளிப்படையில் வேறொன்றுபோற் காட்டிப் புலவர்களை மயக்க விநோதம் புரிதற்குரிய சொற்களால் பாடப்படுவது. “நாமாந்தரிகை” ஆவது வெளிப்படையில் நாமம் வேறொன்றைக் காட்டிக் கருதிய பொருளை மறைத்திருப்பது. பாடல்களின் பாங்கைப் பார்க்கவும்.

  1. “மல்லாக மாதகலான் மருகன் சுன்
    னாகத்தான் மதன்பா வாணர்
    சொல்லாச்சீர் ஈவினையான் துன்னாலை
    யானத்தான் சுரும்ப ரோதி
    சில்லாலை யிருள்வென்ற குறக்கொடிகா
    மத்தானைச் சிகண்டி மாவூர்
    வல்லானை மாவிட்ட புரநகரத்
    திடைப்பவனி வரக்கண்டேனே,”

இங்கே கருதிய பொருளை மறைத்துக்கொண்டு வெளிப்படையிலே வேரொன்றாகத் தோன்றும் பெயர்களாவன: மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் என்னும் ஏழு ஊர்ப்பெயர்களாகும். இவ்வூர்ப்பெயர்களில் மறைந்து நிற்கும் பொருள்கள் ஆவன: மல் ஆகம் மாது அகலான் மருகன் – வலிமை மிக்க திருமார்பிலே திருமகள் நீங்காததிருக்கப் பெற்றவராகிய திருமாலுக்கு மருகரும், (சுல் £ நாகம் – சுன்னாகம்) சுல் – வெள்ளி, நாகம் – மலை, சுன்னாகத்தான் மகன் – வெள்ளியங்கிரியில் வீற்றிருக்கும் பரமேசுவரமூர்த்தியுடைய திருக்குமாரரும், பாவாணர் சொல்லாச்சர் ஈவினையான் – தம்முடைய மெய்யன்பராய் உள்ளவர்களுக்கு யாவற்றிலும் சிறந்ததாகிய முத்தியின்பத்தனை இடையீடின்றிக் கொடுக்குந் தொழிலையுடையவரும், துன்னாலையான் அத்தான் – நெருங்கிய கரும்பு வில்லையுடைய மன்மதனுக்கு மைத்துனரும், சுரும்பர் ஓது ஓல்லாலை ஐ இருள் வென்றான் – வண்டு வீழ்கின்ற கூந்தலில் உள்ள தகட்டணியால் செறிந்த இருளை வெற்றி கொண்ட, குறக்கொடிகாமத்தானை – வள்ளிநாயகியின் மீது இச்சையுடையவரும், சிகண்டிமா ஊர்வல்லானை – தோகைமயில் என்னும் புரவியைச் செலுத்த வல்லவருமாகிய முருகக் கடவுளை, மாவிட்டபுர நகரத் இடைப் பவனிவரக் கண்டேனே மாவிட்டபுர நகரத்திலே திருவுலா வரக் கண்டேன்.

  1. முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
    முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவக்
    தடையை வோர்பெண் கொடிகாமத் தாளசைத்
    தானைக் கோட்டை வெளிகட் டுடைவிட்டாள்
    உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
    உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
    தடைவி டாதணை யென்றுப லாலிகண்
    சார வந்தனள் ஓரிள வாலையே,”

இங்கே சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை ஆகிய பதினொரு ஊர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன.

“சுன்னாகம்” என்பதைச் சுல்£நாகம் என்று பிரிக்கலாம் சுல் – வெள்ளி, நாகம் – மலை. சுன்னாகம் – வெள்ளிமலை. வழி-பிள்ளை முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி – ஆதியும் அந்தமுமில்லாத வெள்ளிமலையாகிய கைலாசத்தில் இருக்கின்ற சிவபெருமானுடைய பிள்ளையாகிய கந்தசுவாமி, முந்தித் தாவு (அடிக் கொக்குவில் மீது வந்து அடைய – (கொக்கு என்பது குதிரை) முந்தித் தாவுகின்ற (அடி-கால்) கால்களுடைய குதிரை வாகனத்தில் பவனிவர, ஓர் பெண் கொடிகாமத்தாள் – ஒரு பெண்கொடி (தலைவி) காதல் கொண்டவளாய், அசைத்து ஆனைக்கோட்டை வெளிகட்டு உடை விட்டாள் – தன்நிலையைக் குலைத்து மார்பிற் கட்டிய உடையையும் நெகழவிட்டாள். உடுவிலான் வர – அந்தச் சமயத்திலே, (உடு-நட்சத்திரம், இல்-மனைவி) நட்சத்திரத்தை. மனைவியாகக்கொண்ட சந்திரன் உதயம் ஆனான் ஆக, பன்னாலையான் மிக உருத்தனன் – (ஆலை – கரும்பு) கரும்பு வில்லையுடைய மன்மதன் கோபித்தான்; ஓர் இளவாலை – அந்த ஒப்பற்ற இளம்பெண் கந்தசுவாமியைக் காதலித்தவள் கடம்பு உற்ற மல் ஆகத்தில் – கடப்பமாலை அணியப்பெற்ற மல்யுத்தம் செய்கின்ற மார்போடு, தடைவிடாது அணையென்று – இடையீடு இன்றி அணைத்தருள வேண்டுமென்று, பல ஆலி – பல நீர்த்துளிகள், கண்சார வந்தனள் – கண்ணினின்றும் சொரிய, கந்தசுவாமிக்கு எதிரே – திருவடியே சரணமென்று, வீதியிலே பவனியை எதிர்கொண்டாள். இது பாட்டின் உரைவிளக்கம்;. முருகக் கடவுள் குதிரையில் பவனிவருதலைக் கண்ட பெண்களுள்ளே ஒருத்தி ஆடை சோரப்பெற்றாள் எனவும், மற்றொருத்தி கண்ணீர் உதிர்த்தனள் எனவும், கடவுள் முயக்கம் விரும்பிய மானிடப் பெண்கள் இருவர் கொண்டநலிவு கூறிய பாடாண் திணை இதுவாகும்.

  1. “பன்னி ரண்டு கரகந்தனை எட்டுப்
    பானை யைத்துண் டதரக் குயவனை
    முன்னி ரண்டு குடங்கையில் ஏந்தியை
    முட்டி முட்டிமல் லாய்மாவைச் சாடியைப்
    பொன்னி ரண்டு பெறும்பெருஞ் செட்டியைப்
    போற்று வீர்புல வீர்சக ரந்தனை
    முன்னர் வைத்த கலசம்பத் தும்பெறீஇ
    முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்மையே.”

இங்கு கருதிய பொருளை மறைத்துக்கொண்டு வெளிப்படையில் வேறு பொருளாகத் தோன்றும் பெயர்களாவன : கரகம், பானை, முட்டி, குடம், சாடி, கலசம், சால் என்னும் பாத்திரப் பெயர்கள். இவற்றுள்ளே சில பன்னிரண்டு கரகம், எட்டுக் குடப்பானை, இரண்டு குடம், கலசம் பத்து எனத் தொகை பூண்டும் நிற்கின்றன. செட்டி என்பது வணிகர் மரபில் உதித்த காரணம் பற்றி முருகனுக்கு வந்த பெயர்.

இங்கே மறைந்து நிற்கும் பொருள் பன்னிரண்டு கரகந்தனை பன்னிரு திருக்கரங்களையுடைய கந்தசுவாமியை, எள், தும்பு, ஆனை, ஐதுண்டம், அதரம், சூயம், அனை, முன் இரண்டு குடங் கையில் ஏந்தியை எட்டுப் பூவினையும், பவளத்தினையும், யானையையும் முறையே நிகர்த்த அழகிய மூக்கு, அதரம், முலை என்பவற்றினை உடைய உலக மாதா வாயை உமாதேவியாரால் முன்னரே உள்ளங்கை இரண்டினாலும் ஏந்தி வளர்த்தருளப்பட்டவரை, முட்டி முட்டி மல்லார் மாவைச் சாடியை பலமுறை எதிர்த்துப் போராடி, வலிநிறைந்த மாமரவடிவாக நின்ற சூரபன்மனைக் கொன்றருளியவரை, பொன்னிரண்டு பெறும் பெருஞ் செட்டியை தெய்வானை வள்ளியம்மை என்னும் மகளிரிருவரையும் மனைவியராகப் பெற்றுக்கொண்ட உருத்திரசன்மராகிய முருகப்பெருமானை, புலவீர் போற்றுவீர் புலவீர்காள் போற்றக்கடவீர். இப்படிப் போற்றின்; சகரம் தனை முன்னர் வைத்த கலசம் பத்தும் பெறீடு. கலசம் பத்தும் என்ற சொல்லின் முன் “ச” என்ற எழுத்தை வைத்தால் “சகல சம்ப்த்து” என நிற்கும், சகலசம்பத்து என்பது, வலி, ஆண்மை, கல்வி, பொருள், புகழ் முதலியவாய் இம்மையில் பெறும் பெரும் செல்வங்கள் பெற்று, முதன்மைசால் பெருவாழ்வுறன் மெய்ம்மையே – முதன்மை நிறைந்த பெருவாழ்வை அடைதல் உண்மை என்பதாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.