சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.113 பவளத் தடவரை

திருச்சிற்றம்பலம்

பவளத் தடவரை போலுந்திண் 
  டோ ள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் 
  பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக 
  நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை 
  சூடும் பனிமலரே.   1
 
		
முருகார் நறுமலர் இண்டை 
  தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி 
  னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா 
  னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக் 
  கீழொர் தலைமறைவே.   2 
 
		
மூவா உருவத்து முக்கண் 
  முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு 
  மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி 
  மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க் 
  கழிந்த திரிபுரமே.   3 
 
		
பந்தித்த பாவங்கள் அம்மையிற் 
  செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் 
  னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு 
  முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி 
  லாவிட்ட நன்னெஞ்சமே.   4 
 
		
அந்திவட் டத்திளங் கண்ணிய 
  னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின் 
  றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை 
  யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை 
  வளாவிய நம்பனையே.   5 
 
		
உன்மத் தகமலர் சூடி 
  உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை 
  தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும் 
  பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தொர் இளம்பிறை 
  சூடிய சங்கரனே.   6 
 
		
அரைப்பா லுடுப்பன கோவணச் 
  சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி 
  வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை 
  யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி 
  யாலெங்கள் உத்தமனே.   7 
 
		
துறக்கப் படாத உடலைத் 
  துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும் 
  பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி 
  வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் 
  கிடந்து மறுகிடுமே.   8 
 
		
வேரி வளாய விரைமலர்க் 
  கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை 
  புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற் 
  கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது 
  போலும் இளம்பிறையே.   9 
 
		
கன்னெடுங் காலம் வெதும்பிக் 
  கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் 
  மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ் 
  சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் 
  டீரிப் புகலிடத்தே.   10 
 
மேலு மறிந்திலன் நான்முகன் 
  மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற 
  தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் 
  விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற் 
  கரியான் கழலடியே.

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் நான்காம் திருமுறை முற்றும். 11

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.