சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டார் அமரர்வெம் பூசல் எனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால் அட்டான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 1
பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு தேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான் மூவான் இளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 2
தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த எரியார் இலங்கிய சூலத்தி னான்இமை யாதமுக்கட் பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை அரியான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 3
வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையோர் பால்மகிழ்ந்து வெடிகொள் அரவொடு வேங்கை அதள்கொண்டு மேல்மருவிப் பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார் அடிகள் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 4
பொறுத்தான் அமரர்க் கமுதரு ளிநஞ்ச முண்டுகண்டங் கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேற் செறுத்தான் தனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால் அறுத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 5
காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினாற் பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னும் ஒள்ளழலால் மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 6
உளைந்தான் செறுத்தற் கரியான் றலையை உகிரொன்றினாற் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி வளைந்தான் ஒருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றளைந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 7
முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாம்முடி வேந்தர்தங்கள் பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையு நக்கசென்னி அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் ஆருயிரே. 8
மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன் முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த அகத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 9
பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக் கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுள்முக்கண் எம்மான் இவனென் றிருவரு மேத்த எரிநிமிர்ந்த அம்மான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.