சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத் திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப் பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே. 1
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் என்றுவந் தாயென்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே. 2
கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே நன்மன வர்நவில் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே. 3
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. 4
வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின் பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர் கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை யம்பலத்துக் கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங் கூழைமையே. 5
பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந் தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக் கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே. 6
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்புந் துடிகொண்ட கையுந் துதைந்தவெண் ணீறுஞ் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே. 7
படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன் இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன் அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே. 8
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகள் மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கவேடச் சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே. 9
சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந் தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.