சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் இருளவா அறுக்கும் எந்தை இணையடி நீழ லென்னும் அருளவாப் பெறுத லின்றி அஞ்சிநான் அலமந் தேற்குப் பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 1
மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 2
எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங் கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் என்னி னல்லால் என்செய்கேன் ஏழை யேனே. 3
காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய வாட்டிப் பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 4
வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி அஞ்சலென் றாண்டு கொண்டாய் அதுவுநின் பெருமை யன்றே நெஞ்சகங் கனிய மாட்டேன் நின்னையுள் வைக்க மாட்டேன் நஞ்சிடங் கொண்ட கண்டா என்னென நன்மை தானே. 5
நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவ மார்த்த அமுதனே அமுத மொத்து நீயுமென் னெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க நோயவை சாரு மாகில் நோக்கிநீ அருள்செய் வாயே. 6
விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே உள்ளத்தே நிற்றி யேனும் உயிர்ப்புளே வருதி யேனுங் கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனங் காணு மாறே. 7
ஆசைவன் பாச மெய்தி அங்குற்றே னிங்குற் றேனாய் ஊசலாட் டுண்டு வாளா உழந்துநான் உழித ராமே தேசனே தேச மூர்த்தி திருமறைக் காடு மேய ஈசனே உன்றன் பாதம் ஏத்துமா றருளெம் மானே. 8
நிறைவிலேன் நேச மில்லேன் நினைவிலேன் வினையின் பாச மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான் சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக் குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 9
நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அடுவன அஞ்சு பூதம் அவைதமக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.