சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.053 குழல்வலங் கொண்ட

திருச்சிற்றம்பலம்

குழல்வலங் கொண்ட சொல்லாள் 
  கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக் 
  கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான் 
  அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான் 
  தோன்றினார் தோன்றி னாரே.   1 
 
 
நாகத்தை நங்கை அஞ்ச 
  நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் 
  வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் 
  திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம் 
  அடங்கும்ஆ ரூர னார்க்கே.   2 
 
 
தொழுதகங் குழைய மேவித் 
  தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார் 
  அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த 
  மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் 
  புதுமுகிழ் சூடி னாரே.   3 
 
 
நஞ்சிருள் மணிகொள் கண்டர் 
  நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி 
  விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி 
  வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள் 
  அணியும்ஆ ரூர னாரே.   4 
 
 
எந்தளிர் நீர்மை கோல 
  மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன 
  படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந் 
  தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும் 
  வடிவர்ஆ ரூர னாரே.   5 
 
 
வானகம் விளங்க மல்கும் 
  வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து 
  தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில் 
  உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும் 
  அடிகள்ஆ ரூர னாரே.   6 
  
 
அஞ்சணை கணையி னானை 
  அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை 
  அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி 
  ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர் 
  ஆதரித் திடங்கொண் டாரே.   7 
 
  
 
வணங்கிமுன் அமரர் ஏத்த 
  வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த 
  பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர் 
  மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி 
  ஆரூரெம் அடிக ளாரே.   8 
  
நகலிடம் பிறர்கட் காக 
  நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும் 
  புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங் 
  கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த 
  அடிகள்ஆ ரூர னாரே.   9 
   
		
ஆயிரந் திங்கள் மொய்த்த 
  அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் 
  அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித் 
  தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த 
  அடிகள்ஆ ரூர னாரே.

  

சுவாமி:புற்றிடங்கொண்டார்;அம்பாள்:அல்லியம்பூங்கோதை.10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : ஆரூர்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.