சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு வானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும் ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே. 1
ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்று நூலலால் நொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை ஆலலால் அமுத மில்லை ஐயனை யாற னார்க்கே. 2
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லை சுரிபுரி குழலி யோடுந் துணையலால் இருக்கை யில்லை தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலால் அருளு மில்லை அரிபுரி மலர்கொண் டேத்தும் ஐயனை யாற னார்க்கே. 3
தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னார்க்கே. 4
எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லை கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப் பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும் அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே. 5
என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லை புன்புலால் நாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும் அன்பலாற் பொருளு மில்லை ஐயனை யாற னார்க்கே. 6
கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண் தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில் வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா ஆளலாற் கைம்மா றில்லை ஐயனை யாற னார்க்கே. 7
சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை நகமெலாந் தேயக் கையான் நாண்மலர் தொழுது தூவி முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே. 8
உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லை நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க் கமைவிலா அருள் கொடுப்பார் ஐயனை யாற னார்க்கே. 9
மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத் தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை அலையினார் பொன்னி மன்னும் ஐயனை யாற னார்க்கே.
சுவாமி:அக்கினீசுவரர்;அம்பாள்:கருந்தார்குழலியம்மை. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : ஐயாறு
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.