சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 1
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. 2
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. 3
நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடின தாமே. 4
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. 5
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. 6
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. 7
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. 8
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே. 9
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம் நீங்கும்படி அருளிச்செய்தது. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.