சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 1
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந் தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 2
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. 3
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத் தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே. 4
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப் பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 5
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற் பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண் வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம் ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 6
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம் வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச் சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும் இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 7
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத் தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும் எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 8
ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப் பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே. 9
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.
இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.
சுவாமி : ஏகாம்பரநாதர்; அம்பாள் : காமாட்சியம்மை. 10
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.