சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1
தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப் படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன் இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. 2
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல் எங்கோனுறை கின்ற இடைமரு தீதோ. 3
அந்தம்மறி யாத அருங்கல முந்திக் கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல் வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன் எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 4
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப் பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ. 5
வன்புற்றிள நாகம் அசைத்தழ காக என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி அன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய் இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. 6
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால் ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. 7
பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்ப ஓவாதடி யாரடியுள்1 குளிர்ந் தேத்த ஆவா அரக் கன்றனை ஆற்ற லழித்த ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.
பாடம் : 1யாரடிகள் 8
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப் பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 9
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல் எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 10
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல் பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள் விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.சுவாமி : மகாலிங்கேசுவரர்; ; அம்பாள் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : இடைமருதூர்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.