சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம் கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 1
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண் முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 2
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் களையார்தரு கதிராயிரம் உடையவ்வ வனோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 3
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் அரசார்வர1 வணிபொற்கல னவைகொண்டு பன் னாளும் முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
பாடம் : 1அரசாரர 4
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு முறையால்மிகு முனிவர்தொழும் முதுகுன்றடை வோமே. 5
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் கோவாதஇன்னருள் செய்தஎம் மொருவற்கிடம் உலகில் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 6
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர் மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை முழவோடிசை நடமுன்செயும் முதுகுன்றடை வோமே. 7
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில் மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா முதுவேய்கள் முத்துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 8
இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 9
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார் கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 10
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும் பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்; அம்பாள் : விருத்தாம்பிகை. 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : நடுநாடு
தலம் : முதுகுன்றம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.